வாழ்க்கையே நேசம் - 26: தன்முக அன்பைக் காட்டும் வழிகள் என்னென்ன?

வாழ்க்கையே நேசம் - 26: தன்முக அன்பைக் காட்டும் வழிகள் என்னென்ன?

தன்முக அன்பு (self-love and caring) என்பது புதுமையான கருத்து போலத் தோன்றினாலும் எளிமையானது. நம் உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் செயல்களைச் செய்வது உள்ளத்துக்கும் உற்சாகம் தரும். உள நலம் வெளியுலகில் நாம் செய்யும் எல்லாப் பணிகளையும் ஈடுபாட்டுடனும் நேர்த்தியாகவும் செய்ய உதவும்.

ஆண் பெண் இருபாலருமே தன்முக அன்பைக் காட்டுவதில்லை என்றாலும் பெண்கள் கூடுதல் சுமையைச் சுமக்கிறார்கள் என்று சொல்லலாம். குடும்பத்தில் ஒருவருக்கு உடம்பு சரியில்லை என்றால் அந்தக் குடும்பத்தின் தலைவி தேவையான உணவு மருந்து போன்றவற்றை வேளாவேளைக்குக் கொடுப்பார். ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லை என்றால் வெளியே சொல்லக்கூடமாட்டார். சொன்னால் பரிவுடன் பேசவோ, 'ஒரு இரண்டு நாட்கள் அடுப்படி, வீட்டு வேலை எதுவும் செய்யாமல் ஓய்வாக இரு' என்று புரிதலையும் பரிவையும் காட்ட ஆள் இல்லை என்ற எண்ணம் மேலோங்க தன்னுடைய உடல் நலத்தையும் ஆரோக்கியத்தையும் கவனித்துக்கொள்ளமாட்டார்.

எத்தனை வீடுகளில் பார்த்திருப்போம். வீட்டில் இருக்கும் எல்லோருக்கும் என்ன உணவு பிடிக்கும், இந்தப் பக்குவத்தில் சமைத்தால் பிடிக்கும் என்பது அம்மாவுக்கு அத்துப்படியாக இருக்கும். பார்த்துப் பார்த்துச் சமைப்பார். ஆனால் எல்லோருக்கும் பரிமாறிவிட்டு கடைசியாகச் சாப்பிடும்போது அம்மாவுக்கு அந்த உணவு இல்லாமலும் போகலாம்.

இன்னும் சில வீடுகளில் எல்லோருக்கும் புதிதாகச் சமைத்த உணவைப் பரிமாறிவிட்டு வீட்டுப் பெண்கள் மீந்துபோன முந்தைய நாள் அல்லது வேளையின் உணவைச் சாப்பிடுவார்கள். இதையெல்லாம் தியாகம் என்ற பெயரில் சிறப்பித்து இதைச் செய்பவள்தான் நல்ல தாய் அல்லது பெண்மணி என்ற சித்திரத்தை மனதில் பதியவைத்துவிட்டார்கள். அதிliருந்து இன்று வரையில் மீள முடியாமல் தத்தளிக்கும் தவிக்கும் பெண்கள் எத்தனை பேர். இவை எல்லாமே தன்முக அன்பு செய்யத் தடையாக இருக்கின்றன.

தங்களுக்கு மிகவும் பிடித்த உணவு, குடும்பத்தில் இன்னொருவருக்குப் பிரியமானதாக இருந்தால் விட்டுக்கொடுப்பவர்களைப் பார்த்திருப்போம் அல்லது விலை அதிகமாக இருந்தால் பணத்தை மிச்சப்படுத்தும் விதமாக எனக்கு வேண்டாம் என்று சொல்வார்கள். இவையெல்லாமே தன்முக அன்பு செய்வதை முறியடிக்கும் செயல்கள். ‘குடும்பத்தில் இருக்கும் மற்றவர்கள் விலை அதிகமான உணவைச் சாப்பிடலாம். ஆனால் நான் அதற்குத் தகுதியானாவள்(ன்) அல்ல’ என்பது எத்தனை வன்முறை மிகுந்த வலியுறுத்தல். நம்மை நாமே ஏன் இப்படி நோகடிக்க வேண்டும். ஒருவர் தியாகிப் பட்டம் கட்டிக்கொண்டு உணவு மேசையில் திரும்பி அமர்ந்திருப்பதை விடவும் எல்லோரும் அந்த உணவைப் பங்குபோட்டுச் சாப்பிடலாமே. அது இன்னமும் சிறப்பான செயல் அல்லவா!

இதில் இன்னொன்றையும் புரிந்துகொள்ள வேண்டும். "எனக்கு வேண்டாம், நீங்கள் சாப்பிடுங்கள், செய்யுங்கள்" என்று நாம் ஒதுங்க ஒதுங்க காலப்போக்கில் மற்றவர்களும் நம்மை மறந்துவிடுவார்கள். அவருக்கு அதெல்லாம் பிடிக்காது என்ற முன்முடிவுக்கு வந்துவிடுவார்கள்.

'நான் முக்கியம், என்னுடைய உடல் உள்ளம் இரண்டையும் பேணுவது என் உரிமை, என் தேவைகளை நானே நிறைவேற்றிக்கொள்வதில் தவறேதுமில்லை' - இந்த வாக்கியங்களை உரக்கப் படியுங்கள். ஒரு முறை அல்ல, பல முறை. நீங்கள் சொல்வதை உங்கள் உள்ளம் முழுமையாகப் புரிந்துகொள்ளும் வரையில் வாய்விட்டுச் சொல்லுங்கள். நான் முக்கியம் என்ற நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது முதல்படி. அந்த நம்பிக்கையைச் செயல்படுத்துவது அடுத்த படி.

எப்படிச் செயல்படுத்தலாம் என்று கேட்கிறீர்களா? அதற்குப் பல வழிகள் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது தன்முக அன்பை வெளிப்படுத்தும் செயல். முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியத்தை அளிக்கும் சுவையான உணவு, சூரிய ஒளியும் இதமான காற்றும் உடலின்மீது படும்படி நடைப்பயிற்சி செய்தல் எல்லாமே இந்தப் பட்டியலில் அடங்கும். இவையெல்லாம் செய்வதற்கு எளிமையான விஷயங்கள். ஆனாலும் மிகுந்த நன்மையைச் செய்யும்.

செல்லப்பிராணி அல்லது செடிகளை வளர்ப்பது, இசை, ஓவியம், நடனம், கைவேலை, தோட்டவேலை போன்ற பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதும் தன்முக அன்பை வெளிப்படுத்த உதவும். இருபத்து நான்கு மணிநேரத்தில் நமக்கென ஒரு மணி நேரத்தை ஒதுக்குவது அவசியம். அந்த ஒரு மணி நேரத்தில் நமக்கு என்னவெல்லாம் பிடிக்குமோ அதைச் செய்யலாம்.

கணினித் திரையை அதிகநேரம் பார்ப்பது கண்களைச் களைப்படையச் செய்கிறது. தொடர்ந்து வேலை செய்துகொண்டிருக்கும்போது ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை ஐந்து நிமிடம் நடப்பது நல்ல பழக்கம். பெரும்பாலும் உட்கார்ந்தபடி வேலை பார்க்கும் இந்தக் காலத்தில் இது இன்னமும் அவசியம் ஆகிறது. அதுபோலவே அலைபேசியில் செலவிடும் நேரத்தையும் குறைத்து வேறு விஷயங்களில் மனதைச் செலுத்துவது அவசியம்.

பணிக்குச் செல்பவர்களால் தினமும் ஒரு மணிநேரம் ஒதுக்க முடியாது எனும்போது வாரத்தில் ஒரு சில மணிநேரத்தையாவது தனக்கான விஷயங்களுக்காக செலவழிக்க வேண்டும். குடும்பத்தில் யாரும் அந்த ஒரு மணிநேர விடுதலையைக்கூடத் தரமாட்டார்கள். குறிப்பாக பெண்களுக்கு அடுக்கடுக்கான வேலையும் கடமையும் அணிவகுத்து நிற்கும். வலிந்து அந்த ஒரு மணிநேரத்தை ஒதுக்கிக்கொள்ள வேண்டும். சுற்றி இருப்பவர்களின் முணுமுணுப்பையும் சாடலையும் கண்டுகொள்ளக்கூடாது. விடாப்பிடியாக இதைச் செய்தால் காலப்போக்கில் பழகிக்கொள்வார்கள்.

கடமைகளும் பொறுப்புகளும் காலம் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும். இன்னொரு பக்கம் நம்முடைய ஆசாபாசங்களை நிறைவேற்றிக்கொள்வதும் நடக்க வேண்டும். இரண்டில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும் (அல்லது) செய்ய வேண்டும் என்பது தவறான கருத்து. தன்முக அன்பை வெளிப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது ஆண்களைவிடவும் பெண்களுக்குச் சிரமமான விஷயமாக இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு நாள் தொடங்கித்தான் ஆக வேண்டும். அந்த நாள் ஏன் இன்றாக இருக்கக்கூடாது?

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in