வாழ்க்கையே நேசம் - 25: தன்முக அன்பு செய்வது சுயநலமா?

வாழ்க்கையே நேசம் - 25: தன்முக அன்பு செய்வது சுயநலமா?

ஊராருக்கு நல்லது செய்ய வேண்டும், எல்லோரிடமும் பரிவோடும் புரிதலோடும் பழக வேண்டும், பெரியவர்களிடம் மரியாதையாக நடக்க வேண்டும், இன்னா செய்தாருக்கு நன்னயம் செய்ய வேண்டும் என்பன போன்ற அறிவுரைகளைப் பல பேர் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் தன்முக அன்பு செய்தல் தனக்குத் தானே புரிதலைக் காட்டுதல் (self love and understanding) ஆகியவை குறித்து அதிகம் கேட்டிருக்கவோ படித்திருக்கவோ மாட்டோம்.

உள்ளுறை விமர்சகர்

நமக்கு நாமே அன்பு செலுத்துவதா? நமக்கு நாமே புரிதலைத் தெரிவிப்பதா? இது என்ன புதுக்கதை என்று கேட்கிறீர்களா? வாழ்க்கை முழுவதும் நம் கூடவே வரும் நபர் நாம் மட்டுமே. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த நபரிடம் அன்பையும் பரிவையும் புரிதலையும் காட்டுவது அவசியம். ஆனால் பாருங்கள், அடுத்தவரிடம் வெளிப்படுத்தும் பரிவிலும் புரிதலிலும் நூறில் ஒரு பங்கைக்கூட நமக்கு நாமே காட்டிக்கொள்வதில்லை.

நண்பரோ தெரிந்தவரோ தவறு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதுகுறித்து கோபம் ஏற்பட்டாலும் அவர்களின் செயலால் பாதிக்கப்பட்டாலும் போனால் போகிறது என்று மன்னித்துவிடுவோம். வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால், ‘அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் விடு!’ என்போம். ஆனால் இதே தவறை நாம் செய்தாலோ உள்ளே ஒரு சிறிய குரல் நம்மைக் குற்றம் சொல்லிக்கொண்டே இருக்கும், இடித்துரைக்கும். இப்படிப் பேசிவிட்டாயே என்றோ இப்படிச் செய்துவிட்டாயே என்றோ ஒலித்துக்கொண்டே இருக்கும். இந்தக் குரலை உள்ளுறை விமர்சகர் (inner critic) என்று அழைக்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். வெளியில் இருந்து ஒலிக்கும் மற்றவர்களின் குரலைக் காட்டிலும் உரத்துப் பேசும் ஆற்றல் வாய்ந்தது இந்தக் குரல். பெரும்பாலான நேரத்தில் நம்மை நிலைகுலையச் செய்துவிடும். இந்தக் குரலின் சாடலால் உறக்கமின்றித் தவித்திருப்போம்.

இந்த உள்ளுறை விமர்சகரின் குரல் நம்மை வழிநடத்த உதவும் நன்மை பயக்கும் மனசாட்சி அல்ல. நம்மைக் குறை சொல்லும் இந்தக் குரல் வயதில் மூத்த உறவினர் அல்லது நெருங்கிய மனிதரின் குரலாக இருக்கும். இளவயதில் நம்மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அச்சமூட்டிய குரலாக இருக்கும். இந்தக் குரல் பல சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்று புரியாமல் உறைந்து நிற்கவும் செய்யும்.

சுய ஆறுதல் அவசியம்

இந்தக் குரலை மழுங்கடிக்க என்ன செய்ய வேண்டும்? அதற்கு முதல் படி நமக்கு நாமே ஆறுதலாகப் பேச வேண்டும். அடுத்தவருக்குக் கூறும் புரிதலை நமக்கு நாமே சொல்லிகொள்ள வேண்டும். நம்முடைய முன் அனுபவங்களும் கடந்தகாலமும் இணைந்தே நிகழ்காலச் செயல்களுக்கு அடித்தளமாக இருக்கின்றன. எனவே, ‘பரவாயில்லை, அன்று அப்படி நடந்ததால்தானே இப்படிச் செய்தாய்!’ என்று தட்டிக்கொடுக்கலாம். இப்படியான புரிதலை நமக்கு நாமே காட்டும்போது தன்முக அன்பு வெளிப்படுகிறது.

இன்னொரு முக்கியமான செயலையும் நாம் செய்ய வேண்டி இருக்கிறது. எந்த ஒரு விஷயமானாலும் நம்முடைய தேவைக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதுவரை நமக்குச் சொல்லித்தரப்பட்ட பாடத்தில் இருந்து இது பெருமளவில் மாறுபட்ட கருத்தாகத் தோன்றும். ஏனெனில் எப்போதும் மற்றவர்களின் தேவைக்கு முக்கியத்துவம் அளிப்பதுதான் சரியான போக்கு என்றே நம்பச் செய்திருக்கிறார்கள். சிறிய குழந்தை என்றாலும் பெரியவர்களுக்கு விட்டுத்தர வேண்டும். வீட்டுக்கு வரும் விருந்தாளிகளுக்கு உபசாரம் செய்ய வேண்டும். தன்னலமின்றி சேவை ஒன்றையே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் நிலப்பிரபுத்துவ காலத்தின் கோட்பாடுகள். இவை தனிமனிதனின் உரிமை, ஆசாபாசம் ஆகியவற்றை நசுக்கிவிடும்.

மனதில் இருக்கும் ஆசையையும் எதிர்பார்ப்புகளையும் மறைத்துக்கொண்டால் அந்த மனதில் மகிழ்ச்சிக்கு இடமில்லாமல் போகும், அப்புறம் வெறும் நடைப்பிணமாக மட்டுமே இருக்க முடியும். ஆகவே நமக்கு இன்னது பிடிக்கும் பிடிக்காது என்பதை நேர்மையோடும் மரியாதையோடும் தெரிவிப்பது அவசியம். தெரிவிப்பதோடு நின்று விடாமல், நமக்கு மிகவும் பிடித்த விஷயங்களைச் செய்யவும் வேண்டும். நமக்குப் பிடிக்காத ஒன்றை அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதற்காக மட்டுமே செய்வது நம் மகிழ்ச்சியைக் கொன்றுவிடும். உயிர்ப்பில்லாத மனிதனாக வாழ்வது சரியா என்று உங்களை நீங்களே ஒருமுறை கேட்டுக்கொள்ளுங்கள்.

எல்லை தாண்டும் அநாகரிகம்

இன்னொரு முக்கியமான விஷயம், நமக்கும் பிறருக்கும் இடையே ஆரோக்கியமான எல்லைக் கோடுகளை வரையறுப்பது. பெரும்பாலும் இதுகுறித்து நம்முடைய சமூகத்திலோ குடும்பத்திலோ யாரும் சொல்லித்தருவதில்லை. யார் வேண்டுமானாலும் யாரிடம் வேண்டுமானாலும் எதைப் பற்றியும் கேள்வி கேட்கலாம் என்ற திறந்த மனப்பான்மையோடு வாழ்கிறோம். கொஞ்சமும் நாசூக்கின்றி அடுத்தவர்களின் வெளியில் புகுந்து அவர்களின் மனதைப் புண்படுத்துகிறோம். அடுத்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் அத்துமீறி நுழைந்து நம் கருத்துகளே சரியானவை என்று மதிப்பெண் அளிக்கிறோம்.

சமீபத்தில் தமிழ்நாட்டின் பிரபல நடிகர் ஒருவரின் தந்தை தனியே பிறந்தநாளைக் கொண்டாடினார் என்ற செய்தி ஊடகத்தில் வெளியானது. உடனே அது குறித்து பலரும் அலசி ஆராய்ந்தனர். தந்தைக்கும் மகனுக்கும் இடையே என்ன நடந்திருக்கும் என்று ஊகித்தனர். பொது வாழ்வுக்கு வந்துவிட்ட ஒரே காரணத்தால் அந்தத் தந்தை - மகனுக்கு இடையே இருக்கும் உறவின் நுட்பங்கள் பற்றி நமக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பது எவ்வளவு தவறான செயல் என்பது ஒருவருக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை, இப்படித்தான் பல விஷயங்களில் நடக்கிறோம்.

இதையெல்லாம் எப்படிச் சரிசெய்வது. அதற்குத்தான் எல்லைக் கோடுகளை சரியான முறையில் வகுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். பொது வாழ்க்கையில் நம்மைப் பற்றி யார் எப்படி எவ்வளவு பேசலாம் கேட்கலாம் என்று அந்தப் பிரபலம் முடிவுசெய்ய முடியாது. ஆனால் தனிப்பட்ட வாழ்வில் நம்மால் அதைச் செய்ய முடியும். அத்துமீறுபவர்களை மரியாதையோடு அந்தக் கேள்வியைத் தவிர்க்குமாறு சொல்லலாம். எனக்கு அந்தக் கேள்விக்குப் பதில் சொல்லப் பிரியமில்லை என்று சொல்லலாம். வேறு விஷயம் ஏதாவது இருந்தால் பேசலாம் என்று சுட்டிக்காட்டலாம். இவையெல்லாமே தன்முக அன்பைக் காட்டும் செயல்களாகும். நீங்களும் முயற்சித்துப் பாருங்களேன்.

(புதன்தோறும் பேசலாம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in