வாழ்க்கையே நேசம் - 24: இணக்கமான உரையாடலை நிகழ்த்துவது எப்படி?

வாழ்க்கையே நேசம் - 24: இணக்கமான உரையாடலை நிகழ்த்துவது எப்படி?

பொதுவாகவே ஒருவரோடு பேசும்போது நேர்மறையான இணக்கமான புரிதலோடு கூடிய உரையாடலை நிகழ்த்துவது ஒரு கலை. ஆனால் நம்மில் பெரும்பாலானோர் செய்வது என்ன? இயல்பான உரையாடலுக்கு நடுவே வம்பை வளர்த்தும் விதமாகப் பேசி வீண் பிரச்சினைகளைக் கிளறி அடுத்தவரின் மனதைப் புண்படுத்துகிறோம். இப்படிப் பேசுவதற்கு பேசாமல் இருக்கலாமே என்றுகூட சில நேரம் தோன்றும்.

தாயை இழந்து கொடுந்துயரில் உழன்றுகொண்டிருந்தார் நண்பர். பெற்றோரைப் பார்த்துக்கொள்ள உடன்பிறந்தோரின் ஒத்துழைப்பு இல்லை. அதுமட்டுமின்றி சொத்தைச் சுருட்ட திட்டம் போடுகிறார் என்று ஊரெல்லாம் நண்பரின் மீது குற்றச்சாட்டைப் பரப்பியிருந்தார்கள் உடன்பிறந்தோர். தாயை இழந்த துயரத்தோடு இந்தக் கேள்விக்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டிய கொடுமைக்கு ஆளானார் நண்பர். அந்த நேரத்தில் தூரத்து உறவினரின் அழைப்பு. தாயின் மறைவு குறித்து விசாரித்ததோடு உடன்பிறந்தோரின் குற்றச்சாட்டைப் பற்றியும் பேசினார் உறவினர். மனம் வெதும்பிப் போயிருந்த நண்பர் மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்துவிட்டார். உடன்பிறந்தோர் செய்த சில விஷயங்களைப் பற்றியும் பேசினார்.

இது நடந்து கிட்டத்தட்ட மூன்று நான்கு வருடங்கள் கழித்து வேறு ஏதோ விஷயத்துக்காக நண்பரை அழைத்தார் அதே உறவினர். பேசத் தொடங்கியதும் அடுத்த கேள்வியே இப்போது உங்கள் உடன்பிறந்தவர்களோடு உறவு எப்படி இருக்கிறது என்பதுதான். இதை எதற்கு இப்போது கேட்கிறார் என்று நண்பருக்குத் தோன்றியது. ஒருவாறாகச் சுதாரித்துக்கொண்டு பதில் சொன்னார். தாயை இழந்த நேரத்தில் உடன்பிறந்தோரின் செயல்களைப் பற்றி ஊரெல்லாம் பேசியபோது நீங்களும் அதைப் பற்றிப் பேசினீர்கள். நானும் துயரத்தை உங்களிடம் கொட்டியிருக்கலாம். அதற்காக அதைப் பற்றி இப்போது கேட்பது சரியாகப் படவில்லை. அந்தக் காலத்தையும் விஷயத்தையும் நான் கடந்துவிட்டேன், அது குறித்து இப்போது பேசுவதில் விருப்பமில்லை என்றார் நண்பர். நட்பு அல்லது உறவின் எல்லையைத் தெளிவாகவே சுட்டிவிட்டார் என்றாலும் உறவினரின் பேச்சு நண்பரின் மனதைப் பாதித்தது.

நம்மில் பலரும் நண்பரின் நிலைமையில் இருந்திருப்போம். கடந்தகால விஷயங்களைக் கிளறிவிடுவது போல யாராவது பேசினால் என்ன சொல்வது எப்படி எதிர்வினையாற்றுவது என்று புரியாமல் திணறுவோம். ஆனால் அந்தத் தவறை நாமே செய்வோம். அடுத்தவரின் தனிப்பட்ட பிரச்சினை குறித்து அவர்களாகவே சொன்னால் ஒழியக் கேட்கக் கூடாது என்பது அடிப்படை நாகரிகம். ஆடை, உணவு விஷயத்தில் புதிய நாகரிகத்தை மனம் உவந்து ஏற்றுக்கொள்ளும் நாம் மனித மனங்களைப் புரிந்து நடப்பதில் பின்தங்கி இருக்கிறோம் என்பது உண்மை.

இயல்பான அரட்டையில்கூட குத்தல் பேச்சும் கேலியும் நையாண்டியும் பொங்கப் பேசி அடுத்தவருக்கு மனக்காயத்தை ஏற்படுத்தும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது. இந்தச் சம்பவத்தைக் கேளுங்கள். மாலை நேர நடைப் பயிற்சியின்போது எனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த அந்த இரண்டு பெண்களின் பேச்சைக் கேட்கும் கட்டாயம் ஏற்பட்டது. இருவரின் மகள்களும் அமெரிக்காவில் வசிக்கின்றனர். முதலாமவரின் மகள் குக்கரும் அதற்குள் சோறு பொங்க வைக்கும் பாத்திரமும் கேட்டிருப்பார் போல. “அலைந்து திரிந்து வாங்கினேன்” என்றார். இரண்டாமவரோ, “அவர்கள் என்ன தினமும் சோறா சமைக்கிறார்கள்? தனியாக பாத்திரம் எதற்கு? மூடி இல்லாத சம்படத்தைக் கொடுத்து அனுப்பி விடுவதுதானே?” என்றார். இப்படி முதலாமவர் சொன்ன ஒவ்வொரு விஷயத்துக்கும் ஏதாவதொரு மாறுபட்ட கருத்தைச் சொல்லியபடி இருந்தார் இரண்டாமவர். இதையெல்லாம் கேட்ட எனக்குச் சிரிப்புத்தான் வந்தது. முதலாமவரின் மனநிலை என்பது தெரியவில்லை.

இரண்டாமவர் சொன்னவை எல்லாம் நல்ல உத்தியாகவே இருக்கலாம். இருந்தாலும் அடுத்தவர்கள் சொல்லும் ஒவ்வொன்றுக்கும் எதிர்க்கருத்தைச் சொல்லும் பழக்கம் பலரிடம் இயல்பாகவே இருப்பதைக் கவனித்திருக்கிறேன். கேட்காமலே அறிவுரையை அள்ளி வீசுவது சரியான போக்கா? இப்படி எதிர்க்கருத்துச் சொல்லுவது தேவை இல்லாத எரிச்சலை மன உளைச்சலைத் தருவதோடு நட்பில் உறவில் விரிசலை ஏற்படுத்தும்.

வன்முறையற்ற தகவல் பரிமாற்ற அணுகுமுறையில் கேலி, குத்தல், நையாண்டிப் பேச்சு, அடுத்தவரின் விவகாரத்தில் தேவையற்ற தலையீடு, சங்கடமூட்டும் கேள்விகள் இவை எல்லாமே வன்முறையாகவே பார்க்கப்படுகிறது. உங்களுக்கு வேண்டுமானால் நகைச்சுவையாகவோ இயல்பான பேச்சாகவோ தோன்றலாம். ஆனால் அடுத்தவருக்கு வலியூட்டும் எதுவுமே வன்முறைதான். நாம் எத்தனை விளக்கம் கொடுத்தாலும் அது சரியான போக்கல்ல.

இப்படி ஒரு வழிகாட்டுதலைக் கடைப்பிடிக்கும் கட்டாயம் ஏற்பட்டால் நம்மில் பல பேர் வாயைத் திறக்கவே முடியாது. அந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் குத்தலும் எரிச்சலும் நிறைந்த பேச்சு இயல்பாகிவிட்டது. நாம் ஒவ்வொருவரும் அத்தனைக் காயப்பட்டிருக்கிறோம். அந்த வலியை ஆற்றிக்கொள்ளும் வழி தெரியாததால் வன்முறை நிறைந்த பேச்சின் மூலம் அடுத்தவருக்குக் கடத்துகிறோம் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

இதற்கு என்னதான் தீர்வு? முதலில் நாம் பேசும் ஒவ்வொரு சொல்லையும் அளந்து பேசுதல். இரண்டாவது, சீண்டல், குத்தல் பேச்சைத் தவிர்த்தல். மூன்றாவது தேவையில்லாமல் ஒருவரைக் குற்றம்சாட்டுவது கூடாது.

அதற்காக நம்மை யார் என்ன சொன்னாலும் கேட்டுக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதல்ல. எல்லைக்கோட்டைத் தெளிவாக வரையறுக்க வேண்டும். அந்த எல்லைக்கோட்டை தாண்டுபவர்களிடம் அமைதியாகவும் உறுதியாகவும் அதைச் சுட்டிக்காட்டத் தயங்கக்கூடாது. காலப்போக்கில் இந்தச் செயல்முறையில் மன அமைதி ஏற்படுவதை உணர முடியும். முயற்சித்துப் பாருங்களேன்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in