வாழ்க்கையே நேசம் - 23: துயரத்துக்கு முதலுதவி தருவது எப்படி?

வாழ்க்கையே நேசம் - 23: துயரத்துக்கு முதலுதவி தருவது எப்படி?

ஒருவர் தன்னுடைய துயரங்களையும் வாழ்க்கைச் சிக்கல்களையும் நம்முடன் பகிர்ந்துகொள்ளும்போது புரிந்துணர்வை எப்படித் தெரிவிக்கலாம் என்பதைப் பற்றி இந்தத் தொடரின் முந்தைய கட்டுரையில் பார்த்தோம். அனுதாபம் கொள்வதற்கும் (sympathy), புரிந்துணர்வைத் தெரிவிப்பதற்கும் (empathy) இடையே இருக்கும் வித்தியாசத்தை அறிந்துகொள்வது அவசியம். கூடவே, அடுத்தவர் என்ன சொல்கிறார் என்பதைக் கூர்ந்து கேட்பது முக்கியம். அந்தக் கணத்தில் அவர் சொல்லவருவதைக் கேட்கும் இருத்தல் (presence) என்ற நிலை எல்லோருக்கும் கைவருவதில்லை.

என்ன காரணம்?

இருத்தல் என்பது எளிதான விஷயமல்ல. பெரும்பாலும் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசுகையில் அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்களிடம் மனம் தாவும் அல்லது ஒன்றை விளக்குவதற்காகச் சொல்லும் எடுத்துக்காட்டைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து வெவ்வேறு பாதைகளில் பயணிக்கும். மீண்டும் முதலில் பேசத் தொடங்கிய விஷயத்துக்கு வருவதற்குச் சிரமப்படும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். பேசும்போது நடக்கும் அதே விஷயம்தான் கேட்கும்போதும் நிகழ்கிறது.

அடுத்தவர் சொல்வதற்கு என்ன பதில் சொல்லலாம் என்பது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் மனம் பழைய நிகழ்வுகளை அசைபோடத் தொடங்கும். இந்தக் காரணங்களோடு முக்கியமான இன்னொரு காரணமும் இருக்கிறது: அடுத்தவரின் வலிமிகுந்த அனுபவத்தைக் கேட்கும்போது நாம் பாதிக்கப்படுகிறோம். உடல் வலியைப் போலவே உள வலியையும் நம்மால் தாங்க முடிவதில்லை. அந்த வலியை உணராமல் இருப்பதற்காக கவனத்தைச் சிதறவிடுகிறோம்.

இன்னொரு விஷயத்தையும் நினைவில் கொள்ளவேண்டும். பேசாமல் கேட்டுக்கொண்டிருப்பதை விடவும் அந்தச் சூழலுக்கு ஏற்றவாறு பதில் சொல்வதும் பேசுவதும் ஆறுதலைத் தரும். "உன் நிலைமை புரிகிறது" என்றோ "உன் பிரச்சினை மிகுந்த வேதனையைத் தருகிறது," என்றோ சொல்வதில் தவறில்லை. அது இருவருக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துகிறது. நடந்ததைத் தெளிவுபடுத்திக்கொள்ள மேற்கொண்டு சில கேள்விகளும் கேட்கலாம், தவறில்லை. ஆனால் இவற்றை எல்லாம் ஏதோ ஒரு வழிமுறையைச் செயல்படுத்துவது போல இயந்திரத்தனமாக இல்லாமல் இயல்பான புரிந்துணர்வோடு செய்வது முக்கியம். பல நேரத்தில் இப்படித் தெளிவுபடுத்திக்கொள்வது நாம் கவனமாகக் கேட்கிறோம் என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தருகிறது. இப்படி புரிந்துணர்வைத் தெரிவிக்கும்போது அவருடைய பிரச்சினைகளை நம்முடையதாக ஆக்கிக்கொள்வதில்லை. மாறாக, அவருடன் இணைந்திருக்கிறோம்.

நிதானம் முக்கியம்

துயரத்தைப் பகிர்ந்துகொள்பவர் முழுமையாகப் பேசி முடிக்கும் வரையில் பொறுமையாக இருப்பது அவசியம். இடையிடையே பேசுவதை நிறுத்தி தன்னுடைய எண்ணங்களை ஒன்று கோர்க்கும் முயற்சியில் அவர் ஈடுபடலாம். அவர் நீண்ட நேரம் மௌனமாக இருந்தால் அதில் விரவி இருக்கும் நிம்மதியை நம்மால் எளிதில் உணர முடியும். அப்படியொரு கணத்தில் சில நொடிகள் காத்திருந்து இன்னும் ஏதேனும் சொல்ல விரும்புகிறாரா என்று கேட்கலாம். அவர் மீது இருக்கும் கவனத்தை திடீரென்று விலக்கக் கூடாது. பெரும்பாலும் தான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கவும் தன்னுடைய நிலைமையை முழுவதுமாகப் புரிந்துகொள்ளவும் ஒருவர் இருக்கிறார் என்பதே பலருக்கு ஆறுதலாக அமையும்.

சில நேரம், “நான் சொல்வது புரிகிறதா?" என்றோ, “என் நிலைமை புரிகிறதா?" என்றோ அந்த நபர் நம்மைப் பார்த்துக் கேட்கலாம். அப்போது வெளிப்படையாகப் பேசுவது அவசியம். புரியவில்லை என்றால் கேள்விகேட்டு தெளிவுபடுத்திக்கொள்வது அவசியம். இல்லையென்றால் அவர்கள் துயரத்தின் தீவிரத்தையோ முக்கியத்துவத்தையோ நாம் புரிந்துகொள்ளவில்லை என்ற எண்ணமும் விரக்தியும் அவருக்கு ஏற்படும். இறுதியாக அவர் இதுவரை நம்மிடம் பகிர்ந்துகொண்ட சிக்கல் குறித்த நம்முடைய கருத்தையோ எண்ணத்தையோ தெரிந்துகொள்ள விருப்பமா என்பதைக் கேட்டு அதன்படி நடப்பதும் அவசியமாகிறது.

தன் பிரச்சினையை உங்களுடன் பகிர்ந்துகொள்பவர், அவராகவே உங்களிடம் ஆலோசனையைக் கேட்டால் ஒழிய ஆலோசனை சொல்ல வேண்டாம். சில நேரங்களில் அதற்கான அனுபவம் இல்லாதபோது தவறான ஆலோசனையை நீங்கள் சொல்லிவிடக்கூடும். இதைப் போன்ற சிக்கலை நீங்களோ அல்லது உங்களுக்கு அறிமுகமானவர்களோ எதிர்கொண்டபோது என்ன செய்தீர்கள் என்ற அனுபவத்தை வேண்டுமானால் பகிர்ந்துகொள்ளலாம். பெரும்பாலான நேரத்தில் அவரவர் வாழ்க்கைச் சூழல் மனநிலை ஆகியவற்றைப் பொறுத்தே அவர்கள் எடுக்கும் முடிவுகளும் அமையும்.

துயரத்தை அதிகப்படுத்த வேண்டாம்

புரிந்துணர்வோடு கேட்கும் நேரத்தில் அவருடைய பிரச்சினையோடு ஒன்றிப்போவதும் சரியல்ல. சில நேரம் நெகிழ்ந்துபோய் நாம் உணர்ச்சிவசப்படலாம், தழுதழுக்கும் குரலில் பேசலாம். ஆனால் இவை எல்லாமே பேசுபவருக்குக் கூடுதல் பாரத்தை ஏற்படுத்துகின்றன. கவனம் நம்மீது திரும்பி நம்மை ஆறுதல்படுத்தும் சுமையை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்த நிலைமையில் இருப்பதை எவரும் விரும்புவதில்லை.

சில வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஒன்று. அந்த நண்பரின் தாய்க்கு உடல்நிலை சரியில்லை. மருத்துவர்கள் கைவிட்ட நிலை. நண்பர் வயதில் இளையவர். வாழ்க்கையில் இன்னமும் காலூன்றாத நேரம். எல்லாமே பறிபோன நிலைமையில் மனம் அலைக்கழிந்தார். குடும்பத்தில் எல்லோருமே துயரத்தில் மூழ்கியிருந்தார்கள். தன்னுடைய துயரத்தை வெளிப்படுத்த முடியாமல் பரிதவித்த நண்பர், நெருங்கிய உறவினர் ஊரிலிருந்து வருவதற்காகக் காத்திருந்தார். வந்ததும் மனதில் இருந்த பாரத்தையெல்லாம் கொட்ட வாயைத் திறப்பதற்கு முன்னர் உறவினர் அழுது புலம்பத் தொடங்கினார், மயங்கி விழுந்தார். எல்லோரின் கவனமும் ஆற்றலும் உறவினரின் உடல்நிலையைச் சரிசெய்வதிலும் அவரை ஆற்றுப்படுத்துவதிலும் கழிந்தது.

பெரும்பாலான நேரத்தில் இதைப் போன்ற ஒரு நிலைமையை நாமும் சந்தித்திருப்போம். நம்முடைய துயரத்தை மறைத்துக்கொண்டு வந்தவருக்கு ஆறுதல் சொல்லும் இடத்தில் இருக்கும் விநோத நிலை ஏற்பட்டிருக்கும்.

அன்றாட வாழ்வின் அவலத்தோடு போரும் வன்முறையும் மனித வாழ்க்கையைக் குலைத்துப்போடும் சூழலில் சிக்கியிருக்கிறோம். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கக் கற்றுக்கொள்வதோடு மனமுதிர்ச்சியுடன் நடக்கும் பக்குவத்தையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்களின் துயரத்தையும் பிரச்சினையையும் புரிந்துணர்வோடு அணுகி அரவணைப்பைத் தருவது உளவியல் முதலுதவியாக அமையும். அந்த முதலுதவியைத் தரும் வழிமுறைகளை நாம் ஒவ்வொருவரும் கற்றுக்கொள்வது வாழ்க்கை அத்தியாவசியங்களில் ஒன்றாகும்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in