வாழ்க்கையே நேசம் - 22: புரிந்துணர்வைத் தெரிவிப்பது எப்படி?

வாழ்க்கையே நேசம் - 22: புரிந்துணர்வைத் தெரிவிப்பது எப்படி?

உங்களுக்கு நன்கு அறிமுகமான ஒருவர் தான் எதிர்கொள்ளும் சவால்களையும் சிரமங்களையும் துயரத்தையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறார். அதை எப்படி எதிர்கொள்வீர்கள்? என்ன சொல்வது என்று புரியாமல் சங்கடத்தில் நெளிவீர்களா? நீங்களும் அவரோடு சேர்ந்து கண்ணீர் விடுவீர்களா? அவரின் உணர்ச்சிப் பெருக்கைப் புரிந்துகொண்டு சொல்வதை முழுமையாகக் கேட்பீர்களா? இந்த எதிர்வினை இருவருக்கிடையே இருக்கும் நெருக்கத்தைப் பொறுத்து மாறுபடும். என்றாலும் எப்படி ஆறுதல் சொல்ல வேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பதை உளவியல் வல்லுநர்கள் விளக்குகிறார்கள்.

வலியைப் பகிர்ந்துகொண்ட நண்பர்

பெரும்பாலான நேரத்தில் என்ன நடக்கிறது என்பதை முதலில் பார்க்கலாம். என் சொந்த அனுபவத்திலிருந்து இதைச் சொல்கிறேன். நண்பர்களின் கூடுகை. இரண்டொருவர் குழுவில் இருந்து விலகி தனியே அமர்ந்து மனம்விட்டுப் பேசிக்கொண்டிருந்தோம். எளிய குடும்பத்திலிருந்து வந்து வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கடுமையாகப் போராடி வெற்றியை எட்டிப்பிடித்தவர் அந்த நண்பர். நிறைய பேருக்கு வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் இருப்பவர். இத்தனை வருட நட்பில் அன்றுதான் தன்னுடைய நெருங்கிய உறவில் பல ஆண்டுகளாக எதிர்கொள்ளும் சிக்கலை விலாவாரியாகப் பகிர்ந்துகொண்டார்.

உணர்ச்சிவயப்பட்டதாலும் தன்னுடைய நிலைமை குறித்த சுய இரக்க உணர்வாலும் கண்ணில் நீர் சுரந்தது. சட்டென நெருங்கி அமர்ந்து அவருடைய தோளை ஆறுதலாகப் பற்றினேன். உடன் இருந்த இன்னொரு நண்பர் முதலாமவரின் நிலைமையைப் பார்த்துக் கண்கலங்கினார். "எங்களுக்கெல்லாம் பக்கபலமாக இருக்கும் உன்னை இப்படியொரு நிலைமையில் பார்க்க முடியவில்லை. இப்படியெல்லாம் பேசாதே” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொன்னார்.

நான் நண்பரைப் பார்த்து அமைதியான குரலில், “உன் நிலைமை புரிகிறது. தொடர்ந்து சொல்” என்றேன். தொடர்ந்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார் நண்பர். இடையில் நானும் சில அனுபவங்களைச் சொன்னேன். தனது துயரம் குறித்து முழுமையாகக் கேட்டு முடித்த பிறகு அதை எப்படி எதிர்கொள்ளலாம் எனக் கேட்டார் நண்பர். எனக்குத் தெரிந்த சில வழிமுறைகளைச் சொன்னதோடு தேவையென்றால் தொழில்முறை உளவியல் வல்லுநரைத் தொடர்புகொள்ளுமாறு கூறினேன். உரையாடல் சில நிமிடங்கள் தொடர்ந்தது. பேசி முடித்ததும் கொஞ்சம் தெளிவு ஏற்பட்டிருப்பதாகச் சொன்னார் நண்பர்.

வேதனையை வெளிப்படுத்துவது தவறா?

இந்த நிகழ்வை இதுவரை நாம் பேசிவந்த வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையின் கோணத்தில் இருந்து அணுகலாம். அப்போதுதான் எப்படிப் புரிந்துணர்வைத் தெரிவிக்கலாம் எதைச் செய்யக்கூடாது என்பது தெளிவாகும்.

முதலில் வலிமையானவர்கள் தங்களின் எளிதில் வடுப்படும் பக்கத்தை வெளிக்காட்டிக்கொள்ளவோ (vulnerability) உணர்ச்சிவயப்படவோ (emotional) கூடாது என்பது ஒரு கட்டுக்கதை. மாறாக, உள வலிமை கொண்டவர்களே தங்களின் எளிதில் வடுப்படும் பக்கத்தை வெளிக்காட்டுகிறார்கள் என்பது உண்மை. தன்னுடைய வாழ்க்கையில் ஏற்படும் எல்லாவற்றுக்கும் தானே காரணம், அவை தனக்கு மட்டுமே ஏற்படும் தனிப்பட்ட சிரமம் என்ற எண்ணம் அவமான உணர்வைத் (shamefulness) தோற்றுவித்து குறுகிப் போகச் செய்கிறது. தொடர்ந்து இதைச் செய்வதால் தன்னம்பிக்கை குறைகிறது. அச்சம் ஏற்படுகிறது. எனவே யாராவது தங்களது பிரச்சினைகளை நம்மிடம் பகிர்ந்துகொள்ள முயல்கையில் அவர்களைப் பேசவிடுவது அவசியம்.

ஆனால் இந்த உலகில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு வகையில் துயரத்தையும் சவால்களையும் எதிர்கொள்கிறோம் என்ற புரிதல் அந்த அவமான உணர்வைக் களைகிறது. கூடவே அதைத் துடைப்பதற்கான உதவியை நாட வைக்கிறது. இதனால் தீர்வு ஏற்பட்டு நிறைவு ஏற்படுகிறது. எனவே ஒருவர் தன்னுடைய கஷ்டங்களை மனம்திறந்து பகிர்ந்துகொள்ளும்போது எந்தவிதமான தீர்ப்பையும் தெரிவிக்காமல் உணர்ச்சிவயப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும்.

செவிசாய்த்தலின் அவசியம்

இந்த நிகழ்வில் முதலாமவரின் பகிர்தலின்போது இரண்டு நண்பர்களும் எப்படி எதிர்வினை ஆற்றினார்கள் என்பதையும் கூர்ந்து கவனிக்க வேண்டும். அனுதாபம் கொள்வது (sympathy), புரிந்துணர்வைத் தெரிவிப்பது (empathy) என்ற இரு வேறு நிலையில் இருந்து நண்பருக்கு ஆறுதல் தர முனைந்தார்கள். பெரும்பாலான நேரத்தில் இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளத் தவறிவிடுகிறோம்.

பிரச்சினையை எதிர்கொள்ளும் ஒரு நபருக்கு நாம் தரக்கூடிய சிறந்த பரிசு என்ன தெரியுமா? அந்தக் கணத்தில் நம் கவனத்தை அவர் மீது குவித்து முழுமையான உணர்வு சார்ந்த தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அவர் என்ன சொல்லவருகிறார் என்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடந்த காலத்தைப் பற்றியோ அடுத்து என்ன பதில் சொல்லலாம் என்றோ சிந்தித்தோம் என்றால் நம்முடைய இருப்பு (presence) முழுமையாக இல்லை என்று பொருள். அத்தோடு அந்தப் பிரச்சினைக்கு அறிவுசார்ந்த விளக்கத்தைத் தர முற்படுவது முழுமையான புரிந்துணர்வு ஏற்படத் தடையாகிறது.

அதே போல, அனுதாபப்படும்போது அடுத்தவரின் உணர்ச்சிகளையும் வலிகளையும் உணரத் தொடங்குகிறோம், நாமும் துயருருகிறோம். இது அவருக்கு எந்த விதத்திலும் உதவிசெய்வதில்லை என்பதோடு கவனத்தை நம் மீது திருப்பிவிடுகிறது. பிரச்சினையைப் பகிர்ந்துகொள்பவர் அனுதாபப்படுபவரின் வலியைப் போக்கும் முயற்சியில் ஈடுபடும் அவலநிலை ஏற்படுகிறது.

மாறாக அடுத்தவர் சொல்வதைப் புரிந்துணர்வோடு கேட்கையில் ஒத்த உணர்வலைகளை ஏற்படுத்தி இருவரையும் பிணைக்கிறது. அந்தக் கணத்தில் அவரின் தேவை என்ன என்ற புரிதலைத் தருகிறது. இந்தப் புரிந்துணர்வை எந்தச் சொல்லையும் பேசாமல் அமைதியின் மொழியிலேயே வெளிப்படுத்திவிடலாம் என்பதுதான் உண்மை. அதுவே அவரின் தேவையையும் நிறைவு செய்கிறது.

புரிந்துணர்வை வெளிப்படுத்தும்போது அடுத்தவர் தான் சொல்ல வந்ததை முழுமையாகச் சொல்லி முடிக்கும் வரை காத்திருப்பதும் அவசியமாகும். பெரும்பாலும் இதை உடல்மொழியின் (body language) மூலம் தெரிவிப்பார்கள். அல்லது அவர்களின் உணர்ச்சிப்பெருக்கும் உளவலியும் தணிந்து இளைப்பாறுவார்கள் (sense of relief). தொடர்ந்து பேசினால் இன்னும் அதிகமான புரிந்துணர்வு தேவைப்படுகிறது என்பது பொருள்.

சில நேரங்களில் அவர் சொல்வதைக் கேட்கும் நம்முடைய எதிர்வினை என்ன என்றும் தெரிந்துகொள்ள அவர் முற்படலாம். அவர்கள் வெளிப்படையாகக் கேட்கும் சந்தர்ப்பத்தில் அதைச் சொல்வதில் தவறில்லை. ஆனால் இங்கேயும் அனுதாபத்தைத் தெரிவிக்காமல் இருப்பது முக்கியம். சில நேரங்களில் உங்களுடைய ஆலோசனையையோ அறிவுரையையோ அவர் எதிர்பார்க்கலாம். அப்படி வெளிப்படையாகக் கேட்டால் அறிவுரை வழங்குவதில் தவறில்லை.

ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நம் குழந்தைகள் ஏதேனும் பிரச்சினை என்று நம்மிடம் வந்தால் அறிவுரை வழங்க வேண்டும் என்ற தணிக்க முடியாத ஆவலைக் கட்டுப்படுத்திக்கொள்வது அவசியம். ஒரு முறைக்கு மூன்று முறை கேட்டுவிட்டு பிறகு வேண்டுமென்றால் சொற்பொழிவு ஆற்றுங்கள். ஏனெனில் நெருங்கிய உறவுகளில் புரிந்துணர்வை விடுத்து நேரடியாக அறிவுரை அல்லது ஆலோசனை வழங்குதல் என்ற இறுதி நிலைக்குச் சென்றுவிடுகிறோம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in