வாழ்க்கையே நேசம் - 21: எதிர்த் தரப்பினரைப் புரிந்துகொள்வது எப்படி?

வாழ்க்கையே நேசம் - 21: எதிர்த் தரப்பினரைப் புரிந்துகொள்வது எப்படி?

“நான் வன்முறையை எதிர்க்கிறேன். பார்ப்பதற்கு நன்மை பயப்பதைப் போலத் தோன்றினாலும் அதனால் விளையும் பலன் தற்காலிகமானது. தீமையோ நிரந்தரமானது” என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

போரும் வன்முறையும் மனித வாழ்க்கையின்மீது அவை தொடுக்கும் கொடூரத் தாக்குதலும் தினசரி நிகழ்வாகிவிட்டது. தொலைக்காட்சியிலும் செய்தி ஊடகத்திலும் காணொலிகளையும் படங்களையும் பார்க்கையில் பதறுகிறோம், கலக்கமுறுகிறோம். இன்னொரு புறம் இவற்றைத் தொடர்ந்து பார்க்கையில் மனம் மரத்துப் போவதால் வன்முறையின் வலியையும் நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் மானுடத்தையும் உணரும் தன்மையை இழந்துவிட்டோம்.

இன்னொன்றையும் சொல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் நம்மையொத்தவர்களாக இருந்தால் அவர்களின் நிலைமைக்குப் பரிதாபப்படுகிறோம். ஆனால் அவர்கள் நமக்கு ஒவ்வாத சித்தாந்தத்தைக் கடைப்பிடிப்பவர்களாக இருந்தாலோ அவர்களின் இழப்பையோ உயிரின் மதிப்பையோ கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. மனிதர்களில் ஒரு சாராரை மனிதத்தன்மை அற்றவர்களாகவும் உயிரற்ற சடப் பொருட்களாகவும் இட்டுக்கட்டுவது மனித இனம் முழுவதையுமே அழிவை நோக்கித் தள்ளும் என்ற உண்மையை நாம் அறிந்துகொள்ளாதது துயரம். வன்முறைக்கு எதிரான கருத்தை முன்வைக்கத் தயங்கும்போது சமத்துவமும் அமைதியும் சகோதரத்துவமும் நிலவும் எதிர்காலத்தைக் கட்டமைக்கும் வாய்ப்பை இழக்கிறோம்.

உலக அளவில் சமத்துவமும் அமைதியும் சகோதரத்துவமும் நிலவச் செய்ய முதல்படி தினந்தோறும் பேசிப் பழகும் மனிதர்களிடம் பேசும்போது சொற்களை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதும் எப்படிச் செயலாற்றுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்வது முக்கியம். வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையானது அமைதி (peace) என்னும் மொழியில் பேச உதவுகிறது. இந்தச் செயல்முறை இரண்டு முக்கியமான கேள்விகளைச் சார்ந்து இருக்கிறது: நமக்குள் உயிர்ப்புடன் இருக்கும் விஷயம் என்ன? வாழ்க்கையை அற்புதமானதாக மாற்ற நாம் என்ன செய்யலாம்? இவற்றை மையமாகக் கொண்டு பேசும்போது இயல்பாகவே நமக்குள் உறையும் பரிவுணர்வு வெளிப்படுகிறது. இது சிறிய குடும்பங்கள் முதல் நாடுகளுக்கு இடையே நடக்கும் போர்களையும் தீர்க்க வல்லது. இந்தச் செயல்முறையைப் பின்பற்றினால் முரண்பாடுகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம், இதன் வழியாக உறவுகளிடையே பிணக்கு ஏற்படும் சாத்தியம் குறைகிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு முதலில் நம்முடைய மனப்போக்கு, அடுத்தவர்கள் குறித்த நம் பார்வை, நம் தேவைகளை நிறைவேற்ற நாம் கையாளும் வழிமுறை ஆகியவற்றைச் சீர்ப்படுத்த வேண்டும். நாம் வாழும் உலகைக் குறித்த பார்வையையும் அதில் நாம் எப்படி இயங்குகிறோம் என்பதையும் பெருமளவில் மாற்றிக்கொள்ளும் முயற்சி பெரும் சவாலான விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை. ஏனென்றால் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் பேசுவது அவசியம். இவற்றோடு கருத்துகளைக் குறிப்பிட்ட முறையில் வெளிப்படுத்த கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

காலங்காலமாக எந்த ஒரு நிகழ்வையும் அச்சம், கடமையுணர்வு, நன்றிக்கடன், தீர்ப்பு, தண்டனை, வெகுமதி ஆகிய கண்ணாடியின் வழியாகப் பார்க்கவே கற்றிருக்கிறோம். நம் மன அடுக்குகளில் புதைந்திருக்கும் இந்த முன்முடிவுகளைக் களைவது சவாலான செயலென்றாலும் அதைச் செய்துமுடித்தால் நாம் அடையும் வெற்றிகள் பலப்பல.

எடுத்துக்காட்டாக இந்தத் தொடரில் நாம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் கோட்பாட்டை எடுத்துக்கொள்வோம். 'நாம் பேசும் செய்யும் எதுவுமே நம்முடைய உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் நோக்கம் கொண்டவை' என்ற கருத்தை முழுமையாக நம்பத் தொடங்கினால், இந்தக் கோணத்தில் இருந்து நாம் சந்திக்கும் மனிதர்களைப் பார்த்தால் நமக்கு எதிரிகள் என்று எவருமே இல்லை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நாம் ஒவ்வொருமே நமக்குத் தெரிந்த வழியில் நம்முடைய தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறோம்.

இந்த எண்ணத்தை வலுவாகப் பற்றிக்கொண்டால் நாமோ எதிர்த்தரப்பினரோ இதுவரை தெரிந்துவைத்திருக்கும் வழியை விடவும் சிறப்பான பலன்தரும் வேறு பல வழிகள் இருப்பதை எடுத்துச்சொல்லும் மனநிலையைப் பெறுவது சுலபம். யாரும் ஒருவரையும் குற்றம்சாட்டாமல், அவமானப்படுத்தாமல், வெறுக்காமல் இதைச் செய்ய முடிவது கூடுதல் சிறப்பு.

வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையில் ஆழ்ந்த அகநிலைத் தன்மை (spirituality) பொதிந்திருப்பதை நீங்கள் உணரலாம். ஆனால் இது மனிதர்களிடையே இறையுணர்வை ஏற்படுத்தவோ ஆன்மிகத்தை வளர்க்கவோ முயல்வதில்லை. நமக்குள்ளும் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடத்திலும் உறையும் உயிர்ப்பான வாழ்க்கை ஆற்றலை (life energy) உணர்ந்து செயல்பட உதவுகிறது.

மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியல் ஆய்வாளரான மில்டன் ரோகீச் ஒரு ஆய்வை மேற்கொண்டார். உலகின் முக்கியமான 8 மதங்களைச் சேர்ந்தவர்களில் நடைமுறை வாழ்வில் பரிவுணர்வை அதிகமாகக் கடைப்பிடிப்பது யார் என்ற கேள்விக்கு விடை தேட முற்பட்டார். முதலில் எல்லா மதங்களும் ஒன்றுபோலத்தான் பரிவுணர்வை போதிக்கின்றன என்பது தெரியவந்தது.

அடுத்த கட்டமாக, மத நம்பிக்கை கொண்டவர்களை மதச் சார்பற்றவர்களோடு ஒப்பிட்டுப் பார்த்தார். மதச் சார்பற்றவர்கள் இன்னும் அதிகமான புரிந்துணர்வோடும் பரிவோடும் நடந்துகொண்டார்கள் என்பதை ஆய்வின் முடிவில் தெரிந்துகொண்டார். இந்த ஆய்வு முடிவுகளை நுட்பமாக கவனிக்க வேண்டும் என்கிறார் மில்டன் ரோகீச். ஏனெனில் ஒவ்வொரு மதத்திலும் முற்றிலும் மாறுபட்ட இரண்டு குணாதிசயங்களை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். ஆக மொத்த மக்கள் எண்ணிக்கையில் 12 சதவீதம் என்ற அளவில் இருக்கும் மதச்சார்பற்ற சிறுபான்மையினர் மத நம்பிக்கை கொண்டவர்களை விடவும் பரிவுணர்வு மிகுந்தவர்களாக இருக்கிறார்கள்.

மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் போரும் வன்முறையும் மிகுந்திருக்கும் தற்காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியமான உண்மையை எடுத்துக்காட்டுகிறது. மதம், இனம், மொழி என்று வாழ்க்கையையையும் மனதையும் குறுக்கிக்கொள்ளாத ஒரு மக்கள் கூட்டம் மானுடத்தை தழைக்கச் செய்கிறது. முன்னெப்போதையும்விட இந்தக் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்வது நாம் வாழும் காலத்தின் தேவையாகிறது.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in