வாழ்க்கையே நேசம் - 20: குற்றம்சாட்டுவதை எப்படித் தவிர்க்கலாம்?

வாழ்க்கையே நேசம் - 20: குற்றம்சாட்டுவதை எப்படித் தவிர்க்கலாம்?

வீடோ பொதுவெளியோ உறவுகளோ புதியவர்களோ - இருதரப்பினருக்கு இடையே தோன்றும் கருத்து முரண்பாடும் சச்சரவும் தீர்க்கவே முடியாத பெரும்பகையாகவோ வெறுப்பாகவோ போராகவோ வளர என்ன காரணம்? தீராப்பகை கொண்டு மனிதர்களும் இனங்களும் நாடுகளும் ஒருவரையொருவர் அழிப்பதே எல்லாவற்றுக்கும் தீர்வு என்ற எண்ணம் கொள்வது எதனால்? அரசியல், ஆதாயம் என ஆயிரம் புறக் காரணிகள் இருந்தாலும் மனிதனுக்கு மனிதன் முகம்கொடுத்து செவிசாய்த்து மனம்திறந்து பேச முடியாமல் போவது எதனால்? யாரும் தன்னுடைய தேவையைத் தெளிவாக எடுத்துச்சொல்லும் திறனைப் பெற்றிருக்கவில்லை. அல்லது அடுத்தவரின் தேவையை அறியும் புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ளவில்லை.

மனதை உறுத்தும் முள்

பல வீடுகளில் பார்த்த விஷயமாகத்தான் இருக்கும். திருமணமாகி இருபது, முப்பது, நாற்பது வருடங்கள் என ஒன்றாகக் குடும்பம் நடத்துவார்கள். பொறுப்பான இணையராக, பெற்றோராகக் குடும்பத்தினரின் எல்லாத் தேவைகளையும் நிறைவேற்றுவார்கள். ஆனால் ஏதோ ஒரு விஷயத்தில் மனத்தாங்கல் ஏற்பட்டிருக்கும், அது காலத்துக்கும் மனதை உறுத்தும் முள்ளாக இருக்கும். சொல்லப்போனால் பல சந்தர்ப்பங்களில் அந்த ஒற்றை விஷயமே உறவின் தன்மையைத் தீர்மானிக்கும். வாழ்நாள் முழுவதும் இப்படி ஒரு பாரத்தைத் தூக்கிக்கொண்டு அலைய வேண்டுமா என்ற கேள்வி எழும். ஆனால் எப்படித் தீர்வு காண்பது என்ற உத்தி தெரியாமல் திணறுவார்கள்.

இந்தக் கதையைக் கேளுங்கள். அவர்களுக்குத் திருமணமாகி 35 வருடங்களாகிறது. இருவருக்கும் இடையே இருக்கும் ஒரே பிரச்சினை பணம். மணமாகி ஒரு வருடம் நிறைவுறுவதற்கு முன்னால் வங்கிக் கணக்கில் இருக்கும் பணம் முழுவதையும் செலவழித்துவிடுகிறார் மனைவி. அன்று முதல் வங்கிக் கணக்கையும் வீட்டின் வரவு செலவையும் தானே பார்க்கத் தொடங்குகிறார் கணவர். அவரைக் கேட்டுத்தான் எதையும் செய்ய முடியும் நிலைமையில் இருக்கிறார் மனைவி. அப்புறம் புகையாமல் என்ன செய்யும்? முப்பத்தைந்து வருடமாக வாதமும் வழக்கும்தான். கணவரோ அசைந்துகொடுப்பதாக இல்லை.

தடைக்கற்கள்

இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியுமா எனக் கேட்டால் கணவன், மனைவி இருவரும் தங்களின் தேவைகளைத் தெளிவாக எடுத்துச்சொல்ல முடிந்தால் நிச்சயம் பிரச்சினை மாயமாக மறைந்துவிடும். ஆனால் நம்மால் அடுத்தவரைக் குற்றம்சாட்டாமல் அவரைப் பற்றிய முன்முடிவுகளையும் தீர்ப்புகளையும் குத்திக்காட்டாமல் பேச முடிய வேண்டும். ஆனால் பெரும்பாலும் இதுபோன்ற பேச்சுவார்த்தைகளை தலைகுப்புறக் கவிழ்ப்பதே இந்தத் தடைக்கற்கள்தான்.

"ஹூம்... அந்த மனுஷனைப் பற்றி எனக்குத் தெரியும். இத்தனை வருஷம் கூடவே இருந்திருக்கிறேன். பணம் பற்றிய எங்கள் இருவருடைய பார்வையும் தேவையும் வேறு வேறு. அதனால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கவே முடியாது. விடுங்கள்” என்பது மனைவியின் கூற்றாக இருக்கும்.

இந்த விஷயத்தில் கணவரின் தேவை என்னவாக இருக்கும் என்பதை பெரும்பாலும் மனைவியால் சொல்ல முடிவதில்லை. மாறாக அவர் நடந்துகொள்ளும் விதத்தைப் பற்றிச் சொல்கிறார். "வேறு என்னவாக இருக்கும். நான் எனக்குப் பிடித்த வழியில் பணம் செலவு செய்தால் அவருக்குப் பொறுக்காது. அவ்வளவுதான்” எனப் புலம்புவார். "என்ன உளறுகிறாய்?" என்பார் கணவன்.

கூடவே, “இந்த விஷயத்தில் அவருடைய அப்பா மாதிரியே நடப்பார். பணம் செலவு செய்தால் பிடிக்கவே பிடிக்காது” என்பார். இது கணவர் எதனால் எப்படி நடந்துகொள்கிறார் என்பது குறித்த அலசல்.

சரி, உங்களின் தேவை என்ன என நீங்கள்தான் சொல்லுங்களேன் என்று கணவனிடம் கேட்டால், “அவள் ஒரு நல்ல மனைவி, சிறந்த தாய். ஆனால் பண விஷயத்தில் கொஞ்சமும் பொறுப்பில்லை" என்று குற்றம்சாட்டுவார். தன்னுடைய தேவை என்ன என்பது அவருக்கே தெரியவில்லை.

தீர்வை நோக்கி

இது இந்த இணையரின் தனிப்பட்ட தவறில்லை. நாம் எல்லோருமே ஒருவரைப் பார்த்து மற்றொருவர் இதுபோல சிந்திக்கவும் பேசவும்தான் கற்றுக்கொண்டிருக்கிறோம். இதுபோன்ற உரையாடல்கள் சிறியது முதல் பெரியது வரை எந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண முடியாத நிலைமையை உருவாக்குகின்றன. ஆனால் வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறை இந்த இக்கட்டான நிலைமைக்குத் தீர்வளிக்கும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

குடும்பத்தின் வரவுசெலவை முழுவதுமாகத்தானே கையாளும் முடிவை எதனால் எடுத்திருப்பார் கணவர். பொருளாதார ரீதியாகக் குடும்பத்தைப் பாதுகாக்கும் தேவை அல்லது அவசியம் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அந்த உணர்ச்சியையும் தேவையையும் இன்னதென்று தெளிவாகப் புரிந்து முடியவில்லை, அதனால் மனைவியிடம் விளக்கிச் சொல்ல இயலவில்லை.

ஆக, நம்முடைய தேவை என்ன என்பதைத் தெளிவாக உணர்ந்து அடுத்தவர்களிடம் எடுத்துக்கூறும் பயிற்சியைப் பெறுவது நம் நடத்தைக்கான காரணத்தைத் தெளிவாக்கும். இருதரப்பினரிடையே ஏற்பட்டுள்ள முரண்பாட்டைக் களையும். அதைச் செய்யத் தெரியாதபோது ஒருவரையொருவர் குற்றம்சாட்டுகிறோம். கூடவே அடுத்தவர்களின் தேவையைப் புரிந்துகொள்வது மட்டுமே அவர்களுக்கு நாம் தரும் மிகப் பெரிய பரிசாக இருக்க முடியும்.

மனிதர்கள் எல்லோருக்கும் தேவைகள் ஒன்றுபோலத்தான் இருக்கின்றன. அவர்களின் உணர்ச்சிகளும் ஒன்றேதான். இந்தச் சூத்திரத்தை நினைவில் இருத்தினால் புரிந்துணர்வு எளிதாக ஏற்படும். எதிர்தரப்பின் தேவை என்ன என்பது தெரிந்த பின்னால் அதை நிறைவேற்ற முடியுமா, முடியாதா, இல்லை இருவருக்கும் ஒப்புதலான வேறு ஒரு தீர்வை அடைய முடியுமா எனப் பல திறப்புகள் ஏற்படுகின்றன. உறவுகளின் பிணைப்பைப் பலப்படுத்த புரிந்துணர்வைத் தவிர வேறென்ன வேண்டும்!

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in