வாழ்க்கையே நேசம் - 19: தவறு செய்தால் தண்டிப்பது சரியா?

வாழ்க்கையே நேசம் - 19: தவறு செய்தால் தண்டிப்பது சரியா?

குழந்தை வளர்ப்பு பராமரிப்பு வழிநடத்தல் ஆகிய பொறுப்புகளைக் கொண்ட பெற்றோரும் ஆசிரியர்களும் நாளுக்கு நாள் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. வளர்ந்துவரும் தொழில்நுட்பம், அறிவியல் இவற்றோடு குழந்தைகளின் திறப்பு (exposure) ஆகியவை இந்தப் பொறுப்பைச் சிக்கலான ஒன்றாக மாற்றியுள்ளன. இப்படி ஒரு சூழலில் விழுமியங்களை (values) வலியுறுத்துவதோடு அன்போடும் பரிவோடும் கூடிய கண்டிப்பு கலந்த அணுகுமுறை மிகுந்த பலனளிக்கும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

புதிய செயல்முறை

சில நேரம் நாம் விதிகளையும் செயல்முறைகளையும் அதிகமாக வலியுறுத்தும் சமூகமாக மாறிவிட்டோமோ என்ற எண்ணம் ஏற்படும். ஒழுங்குமுறை விதிகள் மனிதர்களை வழிநடத்துவதற்காக வகுக்கப்பட்டவை. மனிதர்களின்பால் பரிவைக் காட்டாத விதிகளும் செயல்முறைகளும் தனிமனிதனுக்கோ சமூகத்துக்கோ பலனளிப்பதில்லை. ஆனாலும் தண்டனைகளால் குழந்தைகளை நல்வழிப்படுத்தலாம் என்ற நம்பிக்கை காலங்காலமாக வேரூன்றி இருப்பதால் இந்தப் புரிதலை எல்லோரிடமும் ஏற்படுத்துவது சவாலாக இருக்கிறது.

இத்தனைக் காலமாக விதிகளை முன்னிறுத்தித்தான் செயல்பட்டிருக்கிறோம். அதில் இருந்து விலகி அன்பு பரிவு ஆகிய புலனாகாத (intangible) உணர்வுகளை முன்னிலைப்படுத்தும் புதிய செயல்முறையைப் பின்பற்றுவது பலனளிக்குமா என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுவது தவறென்று சொல்லிவிட முடியாது.

அன்பையும் பரிவையும் அதே சமயம் கண்டிப்பையும் அடித்தளமாகக் கொண்ட அணுகுமுறை வலியுறுத்துவதற்கு முன்னால் ஒரு கேள்வியைக் கேட்கலாம். குழந்தையோ வளரிளம் பருவத்தினரோ தவறு செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்போது நம் நோக்கம் என்னவாக இருக்கும்? தவறுக்கான தண்டனையைத் தருவதா? அல்லது அவர்கள் மீண்டும் அந்தத் தவறைச் செய்யாமல் இருக்கச் செய்வதா? இந்த இரண்டு கேள்விகளுக்கும் எந்தச் சார்புமின்றி பதில் சொல்வதும் அவசியம். அப்போதுதான் வன்முறையற்ற அணுகுமுறையைச் சரியாக நடைமுறைப்படுத்த முடியும்.

குழந்தைகளிடம் மாத்திரமல்ல, வயது வந்தவர்களிடமும்கூட அன்பும் பரிவும் கண்டிப்பும் கூடிய வன்முறையற்ற அணுகுமுறை பலனளிக்கிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். அவ்வளவு ஏன், போரிடும் நாடுகளுக்கு இடையேயும் அரசியல் அரங்கிலும் நாட்டின் காவல் பணியில் ஈடுபடும் காவல் துறை, ராணுவம் போன்ற எப்பிரிவினரும் வன்முறையற்ற தகவல் பரிமாற்ற அணுகுமுறையின் வழியாகத் தீர்வுகளைக் காண முடியும் என்று வலியுறுத்துகிறார்கள்.

இப்படிப் பொறுமையாகப் பேசமுடியாத இக்கட்டான உடனடித் தீர்வு காண வேண்டிய சூழலில் என்ன செய்வது என்ற கேள்வியைப் பெற்றோர் எழுப்பலாம். அப்படியொரு சூழலில் இந்தக் கேள்வியைக் கேட்டுக்கொள்வது அவசியமாகிறது. வலிமையை (force) எதற்காகப் பயன்படுத்தப் போகிறோம்: தண்டிப்பதற்காகவா? (punitive) பாதுகாப்பளிப்பதற்காகவா? வாகனங்கள் விரையும் சாலையில் தந்தையின் கையை உதறிவிட்டு சாலையின் குறுக்கே குழந்தை ஓடும்போது குழந்தையின் பாதுகாப்புக்காக வலிமையைப் பயன்படுத்த வேண்டியது அவசியமாகிறது. ஆனால் எல்லாச் சூழலும் ஒன்றுபோல இருப்பதில்லை என்பதையும் பெற்றோர் மனதில் கொள்ள வேண்டும்.

யார் பொறுப்பு?

தமிழகத்தின் சிறிய நகரங்களில் ஒன்று அது. அங்கே மூன்று மாடிகளில் பரந்து விரிந்திருந்த ஷாப்பிங் மால் வளாகம். திடீரென்று அந்தத் தந்தைக்குக் குழந்தை தன்னிடத்தில் இல்லை என்பது நினைவுக்கு வந்தது. வேறு தளத்தில் இருந்த தாய்க்குக் குரல் கொடுத்தார். குழந்தை அங்கேயும் இல்லை. தம்பதியர் இருவரையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. குழந்தையைத் தேடி அங்கேயும் இங்கேயும் ஓடினார்கள். பொதுமக்களையும் பதற்றம் தொற்றிக்கொண்டது. நானும் கடையில் இருந்த இன்னும் சிலரும் குழந்தை எங்கேயாவது இருக்கிறானா என்று தேட ஆரம்பித்தோம்.

கடையின் மேல் தளத்தில் குழந்தை இருக்கிறான் என்று தெரிந்ததும் அங்கு ஓடோடிப் போன தாய் குழந்தையைத் தாறுமாறாக அடிக்க ஆரம்பித்தார். குழந்தைக்கு மூன்று அல்லது நான்கு வயதுதான் இருக்கும். வேண்டாம் அடிக்காதீர்கள் என்று பதறினேன். இருந்தாலும் முன்பின் அறியாத ஒருவரிடம் அதற்குமேல் உரிமை எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் அங்கிருந்த பொதுமக்களில் ஓரிருவர் பெற்றோரின் பொறுப்பற்ற நடத்தையைக் குறித்து உரத்த குரலில் அவர்களிடம் நேரிடையாகவே பேசினார்கள், கோபப்பட்டார்கள். குழந்தைக்கு இன்னும் இரண்டு அடி சேர்த்து விழுந்தது.

நடந்தது என்ன? இயல்பாகவே, மூன்று அல்லது நான்கு வயதுக் குழந்தைக்குச் சுற்றுப்புறத்தில் என்ன இருக்கிறது என்பதை ஆராய்வதில் (explore) ஆர்வம் இருக்கும். பெரிய மால் போன்ற இடங்களில் இருக்கும் விதவிதமான பொருட்கள் நமக்கே வியப்பையும் ஆசையையும் ஊட்டும் போது குழந்தையைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். அப்படிப்பட்ட நிலையில் குழந்தையைப் பாதுகாப்பாகப் பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் பொறுப்புதானே!

ஆனால் அந்த நேரத்தில் தாய்க்கு தன்னுடைய உணர்ச்சிகளை நெறிப்படுத்த அவகாசமில்லை. குழந்தை காணவில்லையே என்ற பயம், பொது இடத்தில் பல பேரின் பேச்சைக் கேட்கவேண்டி வந்ததால் ஏற்பட்ட அவமானம், குழந்தையைப் பார்த்துக்கொள்ளாமல் விட்ட குற்றவுணர்வு, கணவர் அல்லது உறவினர்கள், பொதுமக்கள் ஆகியோரின்மீது ஏற்பட்ட கோபம், எரிச்சல். இத்தனைக்கும் வடிகாலாகக் குழந்தையை அடித்துவிட்டார்.

இந்த நிகழ்வில் வலிமை குழந்தையைத் தண்டிப்பதற்காக பயன்படுத்தப்பட்டது என்பதைக் கவனிப்பது அவசியம். அடிப்பது குழந்தைக்கு இனி தாயை விட்டு நகரக்கூடாது அச்சத்தை ஏற்படுத்தும் என்றும் நம்பினாரோ என்னவோ. ஆனால் இதில் சிறிதளவும் உண்மையில்லை என்று மீண்டும் மீண்டும் குழந்தை வளர்ப்பு வல்லுநர்கள் வலியுறுத்துகிறார்கள்.

இந்த நிலைமையை எப்படி தவிர்த்திருக்கலாம்? பெற்றோரில் ஒருவர் குழந்தையின் கையை இறுகப் பற்றிக்கொண்டிருக்கலாம். இங்கேயும் வலிமையைப் பயன்படுத்துகிறோம் என்றாலும் அது குழந்தையின் பாதுகாப்புக்காகச் செய்யப்படுவது. இன்னும் ஒரு படி மேலே போய் பெற்றோரில் ஒருவர் பொருட்களை வாங்கும்போது மற்றவர் குழந்தையைத் தன் பார்வையில் வைத்திருக்கலாம். எங்கே போகலாம், எதைத் தொடலாம் என்று வழிகாட்டி போல செயல்பட்டிருக்கலாம். குழந்தையின் பாதுகாப்புக்காக வலிமையைப் பயன்படுத்தும்போது நாம், குழந்தை உட்பட, யாரையும் குற்றம்சாட்டுவதில்லை. குழந்தையின் நடத்தை குறித்த நம்முடைய தீர்ப்பை வழங்குவதில்லை.

தவறான கண்ணோட்டம்

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் குழந்தை தனக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தைக் குறித்து அறிந்திருக்கவில்லை என்பதுதான். நாம் எல்லோருமே அறியாமையினால்தான் நமக்கு ஊறு விளைவிக்கும் செயல்களைச் செய்கிறோம். மனித வாழ்வின் மையக் கோட்பாடே பிழைத்திருத்தல்தான் (survival) என்பது அறிவியல் உண்மை. இனப்பெருக்கமும் (propagation) தாய்மை உணர்வும்கூட இந்த அறிவியல் உண்மையை அடிப்படையாகக் கொண்டவைதான்.

ஆக, இந்தக் கோணத்தில் இருந்து நிகழ்வை அணுகினால் தெளிவு கிடைக்கும். தாயை விட்டுப் பிரிந்தால் என்ன நடக்கும் என்பது குழந்தைக்குத் தெரியாது. சிறிது நேரம் கழித்து தாயோ தந்தையோ அருகில் இல்லை என்பதை உணரும்போது அழத் தொடங்கும். அதே போல அந்தத் தாய்க்கும் குழந்தையைத் தண்டிப்பதற்காக வலிமையைப் பயன்படுத்துவது சரியல்ல என்பது தெரியவில்லை. தன்னுடைய உணர்ச்சியை நெறிப்படுத்துவது குறித்து அவர் அறிந்திருக்கவில்லை. முன்மாதிரியாக (role model) யாருமே இல்லாதபோது, அடிப்பதுதான் சரியான அணுகுமுறை என்ற நம்பிக்கை சமூகத்தில் வேரூன்றி இருக்கும்போது அவர் என்ன செய்வார் பாவம். கூடவே அன்றாட வாழ்வில் அவர் எதிர்கொள்ளும் அழுத்தங்களும் மனக் காயங்களும் சேர்ந்து குழந்தையை அடிப்பதுதான் தீர்வு என்ற நம்பிக்கையை ஊன்றி இருக்கலாம். இது பெண்-ஆண் என இருபாலருக்கும் பொருந்தும்.

குழந்தையை அடிக்கும் உரிமை பெற்றோருக்கு உண்டு என்ற நம்பிக்கை சரியல்ல. தவறு செய்தவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோட்பாடு சரியல்ல. குழந்தை தவறு செய்தால் சொல்லிலோ செயலிலோ வன்முறையைக் காட்டாமல் பரிவோடு அணுகினால் பலனளிக்கும் என்பதை எடுத்துச்சொன்னால் புரிந்துகொள்வார் என்பதில் சந்தேகமே இல்லை.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in