வாழ்க்கையே நேசம் - 18: குழந்தை வளர்ப்பு சமூகப் பொறுப்பா?

வாழ்க்கையே நேசம் - 18: குழந்தை வளர்ப்பு சமூகப் பொறுப்பா?

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை மதிக்காமல் வகுப்பறையில் கும்மாளம் போடும் காணொலிகள் தொடர்ந்து பரவிவருகின்றன. மாணவ, மாணவிகள் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் காணொலிகள், சீருடையுடன் பொது இடங்களில் மது அருந்தும் காணொலிகள் போன்றவையும் சமூகவலைதளங்களில் வைரலாகின. இவை ஏதோ தனிப்பட்ட நிகழ்வுகள் அல்ல. அரசுப் பள்ளி மட்டுமில்லாமல் எல்லாப் பள்ளிகளிலும் மாணவர்களின் நடத்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

பொறுப்பை உணர்ந்திருக்கிறோமா?

மாணவர்களின் நடத்தைச் சீர்கேடு பற்றிய காணொலிகள் வெளிவரும்போதெல்லாம் ஊடகங்களில் அனல் பறக்கும் விவாதம் நடப்பது வழக்கமாகிவிட்டது. இந்தச் சீர்கேட்டைத் தவிர்க்கவும் நேர்செய்யவும் மேற்கொள்ள வேண்டிய செயல்முறைத் தீர்வை கல்விப் புலத்திலும் வளரிளம் பருவ உளவியலிலும் நீண்ட நெடிய அனுபவம் கொண்ட ஆசிரியர்களும் அறிஞர்களும் உளவியல் வல்லுநர்களும் எடுத்துச் சொன்னாலும் யாருமே அதன்படி நடப்பதாகத் தெரியவில்லை. சில நேரம் தனிப்பட்ட சிலரின் முன்னெடுப்பு பலனளிப்பதைப் பார்க்க முடிகிறது. ஆனால் ஒரு சமூகமாக நமக்கிருக்கும் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறோமா என்ற சுயவிசாரணையைப் பாரபட்சமின்றி நடத்துவதும் அவசியம்.

ஆங்கிலத்தில் 'இட் டேக்ஸ் எ வில்லேஜ் டு ரெய்ஸ் ஏ சைல்ட்' (It takes a village to raise a child) என்ற சொலவடை உண்டு. ஒரு குழந்தையை வளர்த்து ஆளாக்க சமூகம் முழுவதும் மெனக்கெட வேண்டும் என்பதே இதன் பொருள். கலீல் ஜிப்ரான் சொல்வது போல குழந்தை நம் வழியாக இந்த மண்ணுக்கு வரும் உயிர். அந்தக் குழந்தை நல்ல மனிதனாக வளர வேண்டுமென்றால் அதற்கான பொறுப்பு நம் எல்லோருக்குமே உண்டு. பெற்றோர், குடும்பம், உறவுகள், கல்விச்சாலைகள், ஆசிரியர்கள், நண்பர்கள், சமூகம், அரசாங்கம் என ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளைச் சரிவரச் செய்தால் அந்தச் சூழலில் வளரும் பிள்ளையும் சிறப்பாகத்தானே இருக்க முடியும்!

'அஞ்சு பைசா அடிச்சா என்ன குறைஞ்சு போகும்' என்று கேள்விக்கு 'அந்நியன்' திரைப்படத்தில் சொன்ன பதிலைத்தான் இங்கேயும் சொல்ல வேண்டும். ஒவ்வொருவரும் தத்தம் கடமையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வழுவினால் மொத்தமும் சிதறிப் போகிறது.

பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் இடையே இருப்பது ஒரு சிறப்புப் பந்தம். குழந்தைகளின் நலனை முதன்மையாகக் கொண்டு இயங்குவதே பெற்றோரின் கடமை. ஆனால் பெற்றோரின் பல செய்கைகள் சாதகமான விளைவை ஏற்படுத்தாமல் போகலாம். சில பெற்றோர் பொதுச் சமூகத்தின் சித்தாந்தத்தில் இருந்து மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களாக இருக்கலாம், பொறுப்பற்றவர்களாக இருக்கலாம். சில பெற்றோர் மிகுந்த பொறுப்புடன் தன் குடும்பத்தின் நலனுக்கு மட்டுமல்லாமல் சுற்றத்தின் நலனுக்கும் உழைப்பவர்களாக இருக்கலாம். அன்பும் பாசமும் ததும்பி வழியும் நிறைகுடங்களாக சிலர் இருப்பார்கள். கோபமும் எரிச்சலும் ஆத்திரமும் கொண்ட மனிதர்களாகவே வாழ்ந்து முடிப்பவர்களையும் பார்த்திருப்போம்.

வழிவழியாகத் தொடரும் பழக்கம்

இன்னும் சிலர் சுற்றத்திடமும் பெற்ற பிள்ளைகளிடமும் பற்பல எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள். இந்த உலகமே அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகச் செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். எதிர்பார்ப்பு நிறைவேறாததால் சுடுசொல் பேசி மனதைப் பொசுக்குவார்கள்.

மனைவி மக்களை அடிப்பது மூலம் தங்களின் ஆற்றாமைகளைத் தீர்த்துக்கொள்ள முயல்வார்கள். அல்லது அடிப்பது பிள்ளைகள் செய்யும் தவறுகளைத் திருத்த உதவும் என்ற வலுவான எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

எப்படிப்பட்ட பெற்றோராக இருந்தாலும் பிள்ளைகளின்மேல் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்; குழந்தைகளின் முன்மாதிரி (role model) ஆகிறார்கள். அன்பும் பாசமும் பரிவும் புரிதலும் அதிகமாக உள்ள சூழலில் வளரும் குழந்தைகள் அதே பண்பும் பக்குவமும் கொண்டவர்களாக வளர்கிறார்கள். தங்களுக்குக் கிடைத்த அதே பரிவையும் புரிதலையும் அடுத்தவர்களிடம் காட்டுகிறார்கள். இளவயதில் பெற்றோர், குடும்பம், சுற்றுப்புறம் ஆகியவற்றின் புரிதலும் அரவணைப்பும் இல்லாமல் வளரும் குழந்தைகள் வளர்ந்த பிறகு கடுமையும் இறுக்கமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

குழந்தைகளின் பரிதாப நிலை

பெற்றோரின் செயல்பாடு குழந்தைகளின்மீது ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றி எத்தனையோ உண்மை நிகழ்வுகள் கதைகள் திரைப்படங்களின் வழியாகப் பார்த்திருந்தாலும் அன்றாட வாழ்க்கையில் அன்பு, பாசம், பரிவு, புரிந்துணர்வு ஆகியவற்றை எல்லாச் சூழலிலும் வெளிப்படுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்கிறோம். தொடர்ந்து எள்ளலாகப் பேசியும் திட்டியும் அடித்தும் வன்முறையை வெளிப்படுத்தும் பெற்றோரை விட்டு குழந்தைகளால் விலக முடிவதில்லை. பெற்றோர் என்ன செய்தாலும் அதைத் தாங்கிக்கொண்டு வளர வேண்டிய கட்டாயம். சொல்லப்போனால் இதுபோன்ற வன்முறையை எதிர்கொள்ளும் குழந்தைகள் சரியான முன்மாதிரி இல்லாமல் தவிக்கிறார்கள். பெற்றோரிடம் ஏற்படும் அச்சம் அவர்களின் நெருக்கத்தைக் குறைக்கிறது.

பெற்றோரின் கண்டிப்பு, சுடுசொல், அடி எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு வாழ்க்கைப் பயணத்துக்கான இலக்குகளையும் நிர்ணயித்துக்கொண்டு அதில் வெற்றி காண்பவர்கள் உண்டு. அதே நேரத்தில் இந்த வன்முறைகளை எதிர்கொண்டதால் துவண்டு போய் மன அழுத்தத்துக்கு ஆளானவர்களும் இருக்கிறார்கள். இன்னும் சில பேர் வாழ்க்கையில் எந்த இலக்கையும் அடைய முடியாமல் மனம் போன போக்கில் செல்லும் அவல நிலையும் இருக்கிறது.

தலைமுறை பேரதிர்ச்சி

தொடர்ந்து வன்முறையை எதிர்கொள்ளும்போது பல உளவியல் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சில குடும்பங்களில் வழி வழியாகத் தந்தை, மகன் என்று கோபக்காரர்களாக இருப்பார்கள். மரபணு சார்ந்த குணமாகவோ சுரப்புநீரில் (hormone) ஏற்படும் வேதியியல் மாற்றமோ காரணமாக இருந்தாலும் தலைமுறை பேரதிர்ச்சியே (generational trauma) முக்கியமான காரணம் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். அதாவது தந்தையோ தாயோ இளவயதில் எதிர்கொள்ளும் வன்முறையை அறியாமலே பிள்ளைக்குக் கடத்துகிறார்கள். அடி, அவமானச் சொல் இவற்றை எதிர்கொண்டு வளரும் தந்தை தன் மகனையும் அதேபோல நடத்துவார். அல்லது அளவுக்கு மீறிய செல்லம் கொடுப்பார். இந்த இரண்டுமே சரியல்ல. இப்படி ஒவ்வொருவரும் வெவ்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளும்போது அதன் தாக்கம் உறவுகளை, முக்கியமாகக் குழந்தைகளைப் பெருமளவில் பாதிக்கிறது.

ஒரே பெற்றோருக்கு பிறந்த குழந்தைகள்கூட வெவ்வேறு குணாதிசயங்களைப் பெற்றிருப்பதைப் பார்க்கலாம். வெவ்வேறு காலகட்டத்தில் அந்தப் பெற்றோரின் மன நிலையும் செயல்பாடும் மாற்றம் பெறுவதினால் குழந்தை வளர்ப்பு முறையிலும் அது வெளிப்படுகிறது. எழுத்தாளர் ஆதவன் தனது 'மூன்றாமவன்' சிறுகதையில் இதை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பார்.

யாருமே சிறந்த பெற்றோர் பட்டயப் படிப்பை முடித்துவிட்டு வந்து குழந்தைகளைப் பேணி வளர்க்க முடியாது. குழந்தைகள் வளர வளர பெற்றோரும் கூடவே வளர்கிறார்கள். எந்தச் சூழலிலும் அன்பு, பரிவு, புரிந்துணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்படுவது வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தைக் கடைப்பிடிப்பது என்ற முடிவை எடுத்தால் குழந்தைகளைச் சரியான முறையில் வளர்க்க முடியும்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in