வாழ்க்கையே நேசம் - 17: கடமையைப் பாராட்டுவது அவசியமா?

வாழ்க்கையே நேசம் - 17: கடமையைப் பாராட்டுவது அவசியமா?

இன்சொல்லையும் பாராட்டையும் எப்படித் தெரிவிப்பது எப்படிப் பெற்றுக்கொள்வது என்பதைப் பற்றி சென்ற வாரம் பார்த்தோம். அதே நேரத்தில் மிகச் சமீபத்தில் யாராவது உங்களைப் பாராட்டினார்களா என்று கேட்டால் தலையை வேகவேகமாக இடமும் வலதுமாக அசைப்போம். நீங்களாவது யாரையாவது மனமாரப் பாராட்டினீர்களா என்றால் இல்லையே என்று இழுப்போம்.

நாம் ஒவ்வொருவருமே பாராட்டு வறுமையில் உழல்கிறோம், அதற்காக ஏங்கித் தவிக்கிறோம். தவறுகள் உடனடியாக சுட்டிக்காட்டப்படும் அளவுக்கு சரியான விஷயங்கள் செய்யப்படும்போது அவற்றை ஒருவரும் கவனிப்பதில்லை என்பதுதான் நிதர்சனம்.

பாராட்டும் குணம்

‘உங்களின் எந்தச் செயலைப் பாராட்டினால் நிறைவான மகிழ்ச்சியை ஏற்படுத்தும்?’- யாராவது இந்தக் கேள்வியைக் கேட்டால் என்ன பதில் சொல்வேன் என்று யோசித்தேன். ஒரு பட்டியலே இருந்தது. ஆனால் அவற்றில் எந்தெந்த விஷயத்துக்குப் பாராட்டு கிடைத்துள்ளது என்று பார்த்தால் உதட்டைத்தான் பிதுக்க வேண்டும். ஆனால் ஒன்றுமட்டும் நிச்சயம். நம்மை யாராவது எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் மனதார பாராட்டினால் நெகிழ்ந்துவிடுவோம். ஆனால் அதையே நாம் செய்கிறோமா என்றால் பதில் இருக்காது. ஒன்றுமில்லை, தினமும் நமக்குச் சமைத்துப்போடும் அம்மாவிடமோ மனைவியிடமோ பாராட்டையோ நன்றியையோ தெரிவிக்கிறோமா? ஏதாவது சரியில்லை என்றால் உடனே குறை சொல்வோம்.

குழந்தைகளிடமும் அப்படித்தான் நடந்துகொள்கிறோம், நம்மைப் பார்த்து அவர்களும் கற்றுக்கொள்கிறார்கள். இன்னொன்று, எத்தனையோ பேர் பாராட்டினாலும் யாராவது சில பேர் குறைசொன்னால் மனம் துவள்கிறோம். பிள்ளைகளும் அப்படித்தான். அவர்களின் நன்னடத்தையைப் பாராட்டும்போது அது மேலும் வலுப்படுகிறது, அதைத் தொடர்ந்துசெய்ய அவர்களுக்கு ஊக்கமளிக்கிறது. குறைசொல்லிக்கொண்டே இருந்தால் சலிப்படைவார்கள், மனமுடைவார்கள்.

இன்று முழுவதும் மற்றவர்களின் செயல்களை மனமாரப் பாராட்டுவேன் என்று முடிவெடுத்து அதைச் செயல்படுத்த முயன்று பாருங்களேன். அவர்கள் செய்வது எத்தனை எளிதான இயல்பான கடமையாக வேண்டுமானாலும் இருக்கட்டும். அந்தச் செயலை அவர்கள் செய்வதால் உங்களின் எந்தத் தேவை நிறைவேறுகிறது என்பதைச் சொல்லி மனம் திறந்து பாராட்டுங்கள். அதைச் செய்கையில் உங்களிடம் தோன்றும் உணர்வுகளைக் கூர்ந்து நோக்குங்கள். எதிரில் இருப்பவரின் முகத்தில் தோன்றும் புன்னகையையோ வேறு உணர்வுகளையோ கவனியுங்கள்.

பாராட்டை விரும்பும் மனம்

நண்பரின் உறவினர் ஒருவர். உடன்பிறந்தவர்கள் இருந்தாலும் கிராமத்தில் தன்னுடன் வசித்த பெற்றோரை அவர்களின் முதுமைக் காலத்தில் மிகுந்த அக்கறையுடன் பாசத்துடன் கவனித்துக்கொண்டார். வசதியான அண்ணனும் அக்காவும் மாதாமாதம் செலவுக்கான பணத்தைக் கொடுப்பார்கள். ஆனால் வயதானவர்களைப் பார்த்துக்கொள்வதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அதையெல்லாம் தாண்டி கொஞ்சமும் முகம் சுளிக்காமல் வயதான தாய்க்குச் செய்யும் பணிவிடை தனக்கு கிடைத்த பேறு என்பது போல நடப்பார். எதையும் புன்னகையோடு சலித்துக்கொள்ளாமல் செய்வார். அப்படிப்பட்ட மனிதரை வெளிவட்டாரத்தில் இருப்பவர்கள் பாராட்டுவார்கள். குடும்பத்தினரும் வெளியில் இருப்பவர்களிடம் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் அவரிடம் நேரிடையாகப் பாராட்டை ஒரு நாளும் சொல்லியதில்லை.

ஒரு நாள் அந்த நண்பர் தன் உறவினரிடம் அவரின் தன்னலமற்ற பணியைப் பற்றி பாராட்டிப் பேசியபோது அவர் முகத்தில் தோன்றிய உவகைக்கு அளவேயில்லை. கொஞ்சமும் சங்கடப்படாமல் பாராட்டை ஏற்றுக்கொண்டார். இதைக் கேட்டபோது நாம் ஒவ்வொருவரும் கடமையைச் செய்தாலும் அதற்கான பாராட்டை யாராவது தெரிவித்தால் நிறைவாக உணர்கிறோம் என்பது உறுதிப்படுகிறது.

இந்த மகிழ்ச்சிக்காகத்தானே வீடு, பணியிடம் என்று எல்லா இடத்திலும் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக்கொண்டு மாங்குமாங்கென்று உழைக்கிறோம், உழைக்கிறார்கள். அதைக் கொஞ்சம் கவனித்து மனம் திறந்து பாராட்டினால் என்ன குறைந்துவிடப் போகிறது. விவிலியத்தின் பொன் விதிகளில் ஒன்று: ‘பிறர் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அப்படியே அவர்களை நீங்கள் நடத்துங்கள்.’ அதை மனதில் இருத்துவதோடு அதன்படி நடப்பது இந்த உலகையும் வாழ்க்கையையும் நேசம் மிகுந்தது ஆக்கிவிடும்.

மாற்றம் அவசியம்

எனக்குத் தெரிந்த ஆசிரியர் ஒருவர் சரியாகத் தேர்வு எழுதாத, நன்றாகப் படிக்காத குழந்தையிடம் இருக்கும் வேறு ஒரு சிறப்பான விஷயத்தைப் பாராட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். இது அந்தக் குழந்தையிடம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது, தன் திறமைகள் என்னவென்று தெரிந்துகொண்டு அவற்றை வளர்த்துக்கொள்ள உதவியது.

நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரிடம் இதுபோல நடந்துகொண்டால் எல்லா இடத்திலும் அமைதியும் நிம்மதியும் நல்லிணக்கமும் நிலவும். ஆனால் ஒன்று, இந்த மாற்றம் உடனடியாகவோ ஓரிரவிலோ ஏற்பட்டுவிடாது. ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வுடன் நடந்துகொண்டால் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் ஏற்படும். அதில் சரிவும் ஏற்படும், ஆனால் சுதாரித்துக்கொண்டு மீண்டும் நம் இலக்கை நோக்கி பயணிப்பது அவசியம்.

பெற்றோரும் மற்ற நெருங்கிய உறவுகளும் நம் வாழ்க்கையில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். என்றாலும் ஊரில் உள்ளவர்களுக்கு எல்லாம் நன்றிசொல்வோம், அவர்களிடம் சொல்வதில் மனத்தடை இருக்கும். ‘அப்பா’ என்ற விளியை பயன்படுத்தாமலே வாழ்க்கையை ஓட்டியவர்களை அறிவேன். அதுபோலவே பிள்ளைகளிடம் வெளிப்படையாகத் தங்களின் அன்பைத் தெரிவிக்காத பெற்றோரின் கதைகளும் உண்டு. "பாசம் மனதில் இருந்தால் போதும், ஒரு நாள் நான் செய்தது எல்லாம் அவள் / அவனுக்காகத்தான் என்பதைப் புரிந்துகொள்வாள்/ன்," என்று வசனம் பேசும் பெற்றோரையும் அறிவேன்.

இவர்கள் யாரும் இதை வேண்டுமென்று செய்வதில்லை. அன்பையும் பாசத்தையும் எப்படி வெளிப்படுத்துவது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இதுவரை யாரும் அவர்களிடம் அதை வெளிக்காட்டாத காரணத்தால் அதுகுறித்து தெரிந்துகொள்ளும் வாய்ப்பில்லாமல் போனது. தெரியாத விஷயத்தை எப்படிச் செயல்படுத்த முடியும்? வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தின் அடித்தளமே இந்தப் பரிவோடு கூடிய புரிதல்தானே!

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.