வாழ்க்கையே நேசம் - 16: பாராட்டும் இன்சொல்லும் நன்மை பயக்குமா?

வாழ்க்கையே நேசம் - 16: பாராட்டும் இன்சொல்லும் நன்மை பயக்குமா?

கோபம், எரிச்சல், திட்டு இவற்றையெல்லாம் விடவும் பாராட்டும் இனிய சொல்லும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றுதான் பெரும்பாலானோர் நம்பி இருந்தோம். ஆனால் அந்த எண்ணம் தவறானது என்றால் எப்படி உணர்வீர்கள்? என்ன இது, அப்புறம் எப்படித்தான் பேசுவது என்றுதானே அங்கலாய்ப்பீர்கள். நானும் அதே நிலைமையில்தான் இருந்தேன். வீட்டிலோ பணியிடத்திலோ பாராட்டுகளைத் தொடர்ந்து வழங்குவது சுமுகமான மகிழ்ச்சியான தொடர்ச்சியான இயக்கத்துக்கு அவசியம் என்றுதானே இதுவரை சொல்லப்பட்டது, இப்போதென்ன திடீர் மாற்றம் என்றுதான் எனக்கும் தோன்றியது.

“சிறப்பான வருடாந்திர அறிக்கையைத் தயார்செய்துவிட்டீர்கள்.”

“நீங்கள் சிறந்த அறிவாளி.”

“நேற்று என்னுடன் கடைத்தெருவுக்கு வந்தமைக்கு நன்றி.”

“நீங்கள் கூருணர்வு மிகுந்தவர்.”

இப்படியான பாராட்டுகளைப் பல முறை வெவ்வேறு நபர்களிடம் தெரிவித்திருப்போம் அல்லது அவர்களிடம் இருந்து பெற்றிருப்போம். இவை கொஞ்சமும் வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் செயலைச் செய்வதில்லை. இந்த விதத்தில் பாராட்டைச் சொல்லும்போது நம் மனதில் இருக்கும் உணர்வுகளைத் தெளிவாகத் தெரிவிக்க உதவுவதில்லை. அதுமட்டுமில்லாமல் நம்மை ஏதோ நடுவர் என்ற நிலையில் வைத்து மற்றவர்களுக்குத் தீர்ப்பு வழங்குவதைப் போல இருக்கிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

பாராட்டுகளின் பின்னே...

பொதுவாகப் பணியிடம், பள்ளி போன்ற இடங்களில் மேலாளரோ ஆசிரியரோ பாராட்டுகையில் பணியாளரோ மாணவரோ இன்னும் சிறப்பாகவும் கடுமையாகவும் செயலாற்றுவதைப் பார்க்கலாம். ஆனால் இந்தத் தாக்கம் ஏற்படுத்தும் விளைவு நீண்ட காலம் நீடிப்பதில்லை. இந்தப் பாராட்டுக்கு பின்னால் தங்களைத் திறமையாக கையாளும் (manipulation) எண்ணம் மட்டுமே இருக்கிறது என்பதை உணர்கையில் ஆக்கத்திறன் (productivity) குறைகிறது. அத்துடன் இந்த உள்நோக்கத்தைத் தெரிந்துகொண்டதும் பாராட்டில் இருக்கும் நெருக்கமும் அழகும் குலைகிறது.

நேர்மறையான கருத்தை மற்றவர்களின்மேல் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வழங்கினால் அவர்கள் அதை எப்படிப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் பாராட்டைச் சொல்லும் விதத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது அவசியம் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். அதை எப்படிச் செய்யலாம்? ஒருவரைக் கொண்டாட வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பிரதிபலனை எதிர்பார்க்காமல் பாராட்டை வழங்க வேண்டும். மற்றவர்களின் செயலின் மூலம் நம் வாழ்வு எப்படி வளமாக்கப்பட்டது (enrich) என்பதை எடுத்துச் சொல்வதைவிடவும் சிறந்த செயல் எதுவுமே இருக்க முடியாது.

எப்படிப் பாராட்டுவது?

வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தை பரிந்துரைக்கும் வல்லுநர்கள் பாராட்டை எப்படி வழங்க வேண்டும் என்ற செயல்முறையும் எடுத்துரைக்கிறார்கள். முதலாவதாக, எந்தெந்தச் செயல்கள் நமக்கு நன்மை தருவதாக அமைந்தன என்பதைச் சொல்வது அவசியம். அடுத்ததாக அவை நம் எந்தெந்தத் தேவைகளை நிறைவேற்றின என்பதைக் குறிப்பிடவேண்டும். இறுதியில் அந்தத் தேவைகள் நிறைவேறியதும் நம்முள் ஏற்பட்ட இனிமையான உணர்வுகளை நிச்சயம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

இதே வரிசையில் சொல்ல வேண்டும் என்பதில்லை. சில நேரம் 'நன்றி' என்ற ஒற்றைச் சொல்லேகூட போதுமானதாக இருக்கும். இருந்தாலும் இந்த மூன்று கூறுகளையும் உள்ளடக்கிய பாராட்டு நம் உள்ளத்தில் இருப்பதை முழுமையாக வெளிப்படுத்த உதவும் என்பதில் சந்தேகமில்லை. வெறும் புகழ்ச்சிக்கும் மனமாரப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இப்போது புரிந்துகொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். அடுத்த முறை யாரையாவது பாராட்ட வேண்டுமென்று நினைத்தால் இந்தச் செயல்முறையை ஒரு முறை நினைவுபடுத்திக்கொண்டு பேசுங்கள். பாராட்டைப் பெற்றவர் எப்படி உணர்ந்தார் என்பதையும் தெரிந்துகொள்ள முயற்சியுங்கள்.

பதற்றத்தை ஏற்படுத்தும் பாராட்டு

இன்னுமொரு முக்கியமான விஷயத்தையும் இங்கே பேசுவது அவசியம் என்று நினைக்கிறேன். நம்மில் பல பேருக்குப் பாராட்டை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இயல்பாகவும் நயத்தோடும் பாராட்டைப் பெற்றுக்கொள்வதற்கு மாறாக சங்கடத்தோடு நீட்டி நெளிகிறோம். குறிப்பாக ஆக்கத்திறனை மேம்படுத்துவதற்காக வழங்கும் பாராட்டு பதற்றத்தை ஏற்படுத்துகிறது.

எதையும் பெறுவதற்கு உழைக்க வேண்டும், தகுதியானவராக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை நம் மனதில் வேரூன்றிவிட்டது. இதனால் எளிமையான நன்றியைச் சொல்லவோ பெற்றுக்கொள்ளவோ அசவுகரியமாக உணர்கிறோம். மற்றவர்கள் பேசுவதைப் புரிந்துணர்வோடு கேட்பது போலவே பாராட்டையும் இயல்பாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்களின் நலத்துக்கு நம்மாலான உதவியைச் செய்தோம். அது குறித்த அவர்களின் உணர்வுகளையும் அவர்களின் தேவைகள் எப்படி நிறைவேறின என்பதையும் அவர்கள் சொல்லும்போது அதைக் கேட்பதில் என்ன அசவுகரியம்? நாம் ஒவ்வொருவரும் அடுத்தவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் செயல்களை செய்யமுடியும் என்ற அடிப்படை வாழ்வியல் உண்மையை உணரும்போது இது எளிதாகிறது.

அச்சுறுத்தும் ஒளி

இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். நம்மில் பெரும்பாலானோர் பாராட்டை இந்த இரண்டு நிலைகளில் ஏதேனும் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்கிறோம்: ஒன்று, பாராட்டைப் பெறுவதால் மற்ற எல்லோரைவிடவும் நாம் சிறந்தவர்கள், மேலானவர்கள் என்ற எண்ணத்தைப் பெறுகிறோம். அல்லது, போலியான தன்னடக்கத்தோடு பாராட்டை புறந்தள்ளுகிறோம், "இதிலென்ன இருக்கிறது." "அப்படியென்ன செய்துவிட்டேன்!"

பாராட்டை மனதாரவும் உவகையோடும் பெறுவதற்குக் கற்றுக்கொள்வது அவசியம். அடுத்தவரின் வாழ்க்கையை வளப்படுத்தும் ஆக்கமும் ஆற்றலும் நம் எல்லோரிடமும் இருக்கிறது என்பதை உணர்ந்தால், தன்முனைப்பு, போலியான தன்னடக்கம் இரண்டையும் விலக்குவது எளிது.

“நம் மிகப் பெரிய அச்சம் நாம் போதுமானவர்களாக இல்லை என்பதல்ல, அளவிடற்கரிய ஆற்றலும் வலிமையும் பெற்றவர்கள் என்பதே. நம்மை அச்சுறுத்துவது நம் இருண்மையல்ல, நமக்குள் இருக்கும் ஒளியே” - மேரியான் வில்லியம்சன் என்ற எழுத்தாளரின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்தால் வாழ்க்கைதான் எத்தனை எளிமையானது.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.