வாழ்க்கையே நேசம் - 15: அச்சம் நல்வழிப்படுத்த உதவுமா?

வாழ்க்கையே நேசம் - 15: அச்சம் நல்வழிப்படுத்த உதவுமா?

வில் ஸ்மித் - கிறிஸ் ராக் நிகழ்வு ஏற்படுத்திய அதிர்வுகள் குறைந்துவிட்டாலும், இன்றும் அவ்வப்போது அது குறித்த விவாதங்கள் ஆங்காங்கே நடப்பதைப் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு கருத்து கவனத்தை ஈர்த்தது. ‘அடியும் அடி விழும் என்ற அச்சமும் மட்டுமே கிறிஸ் ராக் போன்றவர்களின் வாய்க் கொழுப்பை அடக்கும்' என்பதுதான் அது. அச்சம் நல்வழிப்படுத்த உதவுமா? இல்லை, இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதைப் பற்பல சான்றுகள் மூலம் உளவியல் வல்லுநர்களும் சட்ட வல்லுநர்களும் நிறுவி இருக்கிறார்கள். என்றாலும் இன்று வரையில் இந்தக் கருத்தில் திடமான நம்பிக்கை வைத்திருக்கிறோம் என்பதுதான் இந்த வாரக் கட்டுரையின் தூண்டுகையாக இருந்தது.

காலங்காலமாக அச்சம் அல்லது பயத்தின் மூலம் கட்டுப்பாட்டையும் ஒழுங்குமுறையையும் நடைமுறைப்படுத்த முயன்றுகொண்டிருக்கிறோம். அதில் வெற்றிபெற்றோமா என்ற கேள்விக்கு ஒவ்வொருவரும் அவரவர் அனுபவம் சார்ந்த பதிலைத் தருவோம். அச்சம் மனிதர்களை சரியான வழியில் நடக்கச் செய்கிறது என்று ஒரு சாராரும் அச்சத்தினால் யாரும் மனம் மாறுவதில்லை என்று இன்னொரு சாராரும் கூறுவார்கள். அச்சம் எனும் உணர்வையும் அதன் தாக்கத்தையும் நாம் மேற்கொண்டிருக்கும் வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்ற வாழ்வியல் முறையின் கோணத்தில் இருந்து அணுகலாம், வாருங்கள்!

உளவியல் பாதிப்புகள்

நீங்கள் 40 வயதைத் தாண்டியவரா? அப்படியானால் அந்த வயதொத்த பெரும்பாலானோரைப் போல சிறு வயதில் வீட்டிலோ பள்ளியிலோ அடி வாங்கி வளர்ந்து இருப்பீர்கள். அடி வாங்கியதே இல்லை என்போர் ஆழ்ந்து யோசித்துப் பாருங்கள். உடன்பிறந்தவருக்கோ பக்கத்தில் இருப்பவருக்கோ விழும் அடியையும் உதையையும் பார்க்கும் அவலநிலைக்கு ஆளாகியிருக்க வாய்ப்பு அதிகம். புகைப்பிடிப்பவர் மட்டுமின்றி அருகில் இருப்பவரின் நுரையீலும் பாதிப்புக்கு உள்ளாவதைப் போலவே உடன்பிறந்தவர்களோ தாயோ வேறு ஒருவரோ அடி வாங்குவதைப் பார்த்து வளரும் குழந்தைகளும் மிகுந்த உளவியல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்கிறார்கள் வல்லுநர்கள்.

அப்படி அடி உதை வாங்கி வளர்ந்தவர்கள் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அந்த நேரத்தில் தோன்றிய உணர்வுகள் என்ன என்பதை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். பெரும்பாலான நேரத்தில் அச்சம், ஆத்திரம், வெறுப்பு, பழிவாங்குதல், சுய கழிவிரக்கம், குறைவான சுய மதிப்பு, வாழ்க்கையில் பிடிமானம் இல்லாமல் இருப்பது போன்ற உணர்வுகள் தோன்றி இருக்கும்.

அடித்தவர் நம்மைவிடவும் அதிகாரமும் பலமும் கொண்டவர் என்றால் அப்போதைக்குத் திருப்பி அடிக்க முடியவில்லை என்றாலும் எப்படிப் பழிவாங்கலாம் என்ற எண்ணம் மனதில் தோன்றும். இல்லையென்றால் அதே கோபத்தையும் ஆத்திரத்தையும் தன்னைவிடவும் அதிகாரமும் பலமும் குறைந்தவரிடம் காண்பிக்க முயற்சிக்கலாம். அல்லது அந்தச் சூழ்நிலையைவிட்டு தப்பிக்க நினைக்கலாம். இதை எழுதும்போது வசந்தபாலனின் 'வெயில்' படத்தின் காட்சிதான் மனக்கண்ணில் ஓடியது, உடலும் மனமும் பதறி கண்களில் நீர் துளிர்த்தது. மகனை தண்டிக்கும் தந்தை எத்தனை குரூரம் நிறைந்தவராக இருந்தார். மகனின் மனதில் அச்சத்தை விதைத்த தந்தை அவனையே இழந்தார், பெற்றோர் என்ற பாத்திரத்துக்கான தகுதியை இழந்தார், இப்படி அவரின் இழப்பைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

வன்முறையின் எதிர்வினை

நம்மில் சிலர் அது மிகைப்படுத்தப்பட்ட காட்சி என்று நினைக்கலாம். அப்படிப்பட்ட பெற்றோரோடு வாழும் கொடுமைக்கு ஆளான எத்தனையோ பேரை வாழ்க்கையில் சந்தித்து இருப்போமே! தந்தை தினம்தோறும் நிகழ்த்தும் வன்முறையில் இருந்து தப்பிக்க வீட்டை விட்டே ஓடும் அந்த மகனைப் போன்றவர்கள் எத்தனை பேர். அல்லது அப்படி ஒரு தந்தையோடு காலமுழுவதும் வாழ்க்கை ஓட்டி சுயமரியாதை, தன்னம்பிக்கை எல்லாவற்றையும் இழந்து நடைப்பிணமாக வாழ்பவர்கள் எத்தனை பேர். அந்தத் தந்தை வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தைப் பின்பற்றி இருந்தால், தன் தேவை என்ன என்பதையும் அதை மகன் நிறைவேற்றினால் என்ன உணர்வுகளைத் தான் பெறலாம் என்பதையும் சொல்லி இருந்தால் நிலைமை தலைகீழாக மாறி இருக்குமோ.

சமீபத்தில் சுமார் 50 வயதான நண்பர் ஒருவர் சிறு வயது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார், அதில் ஒன்றுதான் இது. அவர் ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது வகுப்பு ஆசிரியர் வீட்டுப் பாடத்தை செய்யாத குழந்தைகளைக் கடுமையாகத் தாக்குவாராம். அடிப்பது, வயிற்றை கிள்ளுவது, சட்டையோடு கொத்தாக தூக்கி மிரட்டுவது என வன்முறையைப் பிரயோகிப்பாராம். ஒரு வளர்ந்த ஆணை, ஆறு அல்லது ஏழு வயதே ஆன குழந்தைகள் என்ன செய்ய முடியும், பாவம்!

வயது, உடல் பலம் இவற்றோடு ஆசிரியர் என்ற அதிகார பலம் வேறு. எந்த வகையிலும் எதிர்க்க முடியாது. ஆனாலும் இந்தக் கொடுமைக்கு தினமும் ஆளான சில குழந்தைகள் ஒன்று சேர்ந்து ஆசிரியரைப் பழிவாங்க முடிவுசெய்தனர்.

பள்ளி வளாகத்தில் இருந்த சருகுகளைச் சேகரித்து வகுப்பறையில் குவித்து நெருப்பு மூட்டும் முயற்சியில் இறங்கினர். வகுப்பறையை எரித்துவிட்டால் ஆசிரியரிடம் அடி வாங்குவதில் இருந்து தப்பிக்கலாம் என்பதுதான் அவர்களின் தலையாய எண்ணமாக இருந்திருக்கும். குழந்தைகள் அந்தந்த கணத்தில் வாழ்பவர்கள், அவர்களுக்கு அதற்குமேல் சிந்திக்கத் தெரியாது. அதற்குள் யாரோ இதைப் பார்த்து நெருப்பு மூளுவதைத் தடுத்து நிறுத்திவிட்டனர். பெரிய சேதாரம் எதுவும் இல்லாமல் போனது. இதில் இந்தக் குழந்தைகளின் உளவியலை நுட்பமாகக் கவனிப்பது அவசியம். பூப்போன்ற மென்மையான சின்னஞ்சிறு மனங்களில் இத்தனை வன்முறையை விதைத்தது யார்? அச்சம் வன்முறையைத் தூண்டும், நல்வழிப்படுத்தாது என்பதற்கு இதைவிடவும் சிறந்த சான்று இருக்கமுடியாதல்லவா.

அச்சம் மூலம் சாதிக்க முடியுமா?

குழந்தை ஒரு செயலைத் திரும்பவும் செய்யக்கூடாது என்றால் அச்சத்தை ஏற்படுத்தலாம் என்ற எண்ணம் நம்மில் பலருக்கு உண்டு. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அச்சமும் அடி உதையும் உடல், உள்ளம் இரண்டிலும் வலியை ஏற்படுத்துவதால் குழந்தை பெற்றோரிடம் இருந்து விலகிச் செல்கிறது. இதற்கு மாற்று குழந்தையோடு புரிந்துணர்வோடு கூடிய உரையாடலை நடத்துவது. நம் தேவைகளும் (needs) விழுமியங்களும் (values) என்ன என்பதை தெளிவாக வன்முறையற்ற தகவல் பரிமாற்ற செயல்முறையைப் பின்பற்றி எடுத்துச்சொல்வது.

அச்சம், அவமானம், குற்றவுணர்வு ஆகிய உணர்வுகள் குழந்தை உளமார நடந்துகொள்ள தடையாக இருக்கின்றன. காலப்போக்கில் அச்சம், அவமானம், குற்றவுணர்வு ஆகிய உணர்வுகளை எதிர்கொள்ளும் வலிமையை அவர்கள் பெறும்போது நம்முடைய தேவைகளை நிறைவேற்றாமல் போகலாம். கூடவே எதிர்மறையான உணர்வுகளான அச்சம், அவமானம், குற்றவுணர்வு ஆகியவற்றை நம் தேவைகளோடு தொடர்புப்படுத்தும்போது அவற்றை நிறைவேற்றுவதற்கான சாத்தியமும் குறைகிறது.

குழந்தைகளோடு இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்; அவர்களின் அன்பையும் பாசத்தையும் மதிப்பையும் பெற வேண்டும் என்றால் வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தை நாம் கற்றுக்கொள்வது இன்றியமையாதது.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.