வாழ்க்கையே நேசம் - 14: அறைவது அறச்சீற்றமாகிவிடுமா?

வாழ்க்கையே நேசம் - 14: அறைவது அறச்சீற்றமாகிவிடுமா?

கோபம், எரிச்சல், சோகம், வெறுப்பு, விரக்தி போன்ற உணர்வுகள் எதிர்மறையானவை என்றும் மகிழ்ச்சி, களிப்பு, மனநிறைவு போன்ற உணர்வுகள் நேர்மறையானவை என்றும் காலங்காலமாக வகைப்படுத்தி உள்ளோம். எதிர்மறை உணர்வுகளை மறைத்து மூடி நேர்மறையாக நடந்துகொள்வதே சரியான வழிமுறை என்றும் நம்பி வந்தோம்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் உணர்வுகளை வெளிப்படுத்துவதே சரியானது என்ற எண்ணம் வலுப்பெற்று வருகிறது. மனதில் என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லிலும் செயலிலும் வெளிப்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை என்று நினைக்கிறோம். ஒரு வகையில் இது சரியான அணுகுமுறைதான் என்றாலும் நம் உணர்வுகளுக்கான காரணத்தை முழுமையாகப் புரிந்துகொள்ளாமல் செயலாற்றுவதும் எதிர்வினையாற்றுவதும் இன்னும் அதிகக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

எது சரி?

வில் ஸ்மித் கிறிஸ் ராக்கை அறைந்த சம்பவத்தில் இதுதான் நடந்தது.

“தன் மனைவியை ஒருவன் கேவலப்படுத்தும்போது பார்த்துக்கொண்டு சும்மா இருக்கச் சொல்கிறீர்களா? அவரும் மனிதர்தானே. அந்த நேரத்தில் கோபத்தை வெளிப்படுத்திவிட்டார்."

"வில் ஸ்மித் விட்ட அறை உருவ கேலி, பெண்களைக் கேலி பேசுவது போன்ற கீழ்த்தரமான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இப்படி நடந்துகொள்ளும் எல்லா ஆண்களுக்குமான தண்டனை அது."

“கிறிஸ் ராக் பேசியது வன்முறை இல்லையா? இப்படி ஒரு அறை விட்டால்தான் அவரைப் போன்றவர்கள் வழிக்கு வருவார்கள்."

“வில் ஸ்மித் திரையில் மட்டும் நாயகனில்லை, நிஜ வாழ்விலும்தான்."

இப்படி பல கருத்துக்களை இணையவெளியில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்கர் விருது வழங்கும் மேடையில் நடந்தது எல்லாமே உண்மை, சித்தரிக்கப்பட்ட காட்சி அல்ல என்ற கோணத்தில் இருந்து அதை மீண்டும் அணுகினால் நம் கோபத்தைத் தூண்டும் வகையில் யாராவது நடந்தால் நாம் எப்படி எதிர்வினை ஆற்றலாம் என்பது பற்றிய தெளிவு பிறக்கும் என்று நினைக்கிறன்.

மறந்துவிடுங்கள்!

பொதுவாகவே அடக்குமுறை, பாரபட்சம் போன்றவற்றை எதிர்கொள்ளும் மக்களும் குழுக்களும் மாற்றத்தைக் கொண்டுவரும் ஆற்றலும் அதிகாரமும் தங்கள் கையில் இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி ஒரு சூழலில் வாழும் அவர்களிடம் வன்முறையற்ற தகவல் பரிமாற்றம், அகிம்சை, பரிவு காட்டுவது எனப் பேசினால் சங்கடம் ஏற்படுவது இயல்புதான். ஆனால் அவர்கள் யாரையும் கோபத்தை அடக்குங்கள், அமைதியாக இருங்கள், நிலைமையை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை என்பதை விளக்குவது அவசியமாகிறது.

கோபம் என்பது தேவையற்ற உணர்வு அதைத் தொலைத்து தலைமுழுகுங்கள் என்று சொல்லவில்லை. வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்ற வாழ்வியல் முறையில் கோபத்தைக் கண்டுகொள்ள வேண்டாம் என்றோ நசுக்கிவிடுங்கள் என்றோ மென்று முழுங்கிவிடுங்கள் என்றோ உளவியல் வல்லுநர்கள் பரிந்துரை செய்வதில்லை. மாறாக, கோபத்தை முழுமையாகவும் மனதாரவும் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்துகிறார்கள்.

இதை எப்படிச் செய்யலாம். முதலில் கோபத்தைத் தூண்டிய நபரை மறந்துவிடுவது அவசியம். அந்த நபரின் பேச்சோ செய்கையோ நம் கோபத்தைத் தூண்டியது என்ற எண்ணத்தைக் களைவோம். அந்த நபரைப் பழிசொல்லவோ குற்றம்சாட்டவோ வேண்டும் அவரைத் தண்டிக்க வேண்டும் போன்றவை மிகவும் மேலோட்டமான எதிர்வினைகள். மற்றவர்களின் செயலோ பேச்சோ நம் உணர்வுகளைத் தூண்டலாம் ஆனால் அவை அந்த உணர்வுகளுக்கான காரணம் அதுவல்ல என்ற ஆழ்ந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தத் தெளிவைப் பெறவும் நிலையை அடையவும் தூண்டுகை (stimulus) காரணி (cause) ஆகிவற்றுக்கு இடையே உள்ள வித்தியாசத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

“நீ எனக்குக் கோபமூட்டும் வகையில் பேசினாய்.”

“நீ நல்ல மதிப்பெண் பெறவில்லை என்பதால் அம்மாவுக்கு வருத்தமாக இருக்கிறது.”

“நீ அப்படிச் சொன்னதால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டது.”

“நீ அதைச் செய்யாததால் நாள் முழுவதும் நான் வருத்தமாக இருந்தேன்.”

ஒரு நாளில் எத்தனை முறை இதுபோன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறோம். நம் செய்கைக்கு அடுத்தவரைக் காரணம் காட்டும் ஒவ்வொரு முறையையும் கணக்கு வைத்தால் தலைசுற்றும். நம்முடைய உணர்வுகள் அனைத்துக்கும் அடுத்தவர்தான் காரணம் என்ற நம்பிக்கையை விட்டொழித்தால் மட்டுமே கோபத்தை எப்படி கையாள வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள முடியும்.

கோபம் ஏற்படும்போதெல்லாம், குற்றம் செய்துவிட்டார் என்று நாம் நினைக்கும் நபரைத் தண்டிக்க முற்படுகிறோம். அவர் தண்டனை பெறுவதற்குத் தகுதியுடையவர் என்று ஆணித்தரமாக அடித்துச் சொல்கிறோம். அந்த நேரத்தில் நம்மை கடவுளாகவோ நீதி தேவதையாகவோ நினைத்துக்கொள்கிறோம் என்றால் மிகையல்ல.

நமது கோபம் அனைத்தும் அறச்சீற்றமா?

வில் ஸ்மித் - கிறிஸ் ராக் சம்பவத்தில் நடந்ததும் இதுதான். நம்மிடமோ இந்தச் சமூகத்திலோ ஏதேனும் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால், வன்முறையற்ற சமூகமாக நாம் மாற வேண்டும் என்றால் ஒருவருடைய செயலை சரி-தவறு என்று நீதி வழங்கும் மனப்போக்கையும் அதற்கான தண்டனையைத் தரும் உரிமையையும் விட்டொழிக்க வேண்டும்.

அடுத்தவர் செய்த செயலை சரி, தவறு என்று மதிப்பிடுவதற்கு முன்னால் அந்த கணத்தில் நம் தேவை என்ன என்பதை கேள்விக்கு உட்படுத்துவது அவசியம். ஒரு நிகழ்வை எதிர்கொள்ளும் நேரத்தில் நம்முடைய உணர்வுகளையும் தேவைகளையும் என்ன என்பதை, தெளிந்த சிந்தனையோடும் விழிப்புணர்வோடும் பரிசீலனை செய்வது முக்கியம்.

அடுத்தாக, அறச்சீற்றம் என்பது நியாயமான வெளிப்பாடல்லவா என்ற கேள்விக்கான விடையையும் தேடுவோம். அப்போதுதான் இதற்கு முழுமையான தீர்வை அறிந்துகொள்ளமுடியும் ஒருவரின் செயலை நேர்மையற்றது, நியாயமற்றது, கவனக்குறைவு, அறத்துக்கு உட்பதல்ல, பேராசை என்றெல்லாம் எடைபோட ஆரம்பித்தால் அந்தக் கணத்தில் நேரத்தில் நம்முடைய தேவை என்ன என்பதை மறந்துவிடுகிறோம். அடுத்தவரை தக்க முறையில் தண்டிப்பதில் மட்டுமே நம் கவனத்தையும் ஆற்றலையும் குவிக்கிறோம்.

மேடையில் கிறிஸ் ராக் பேசிமுடித்த அந்த நேரத்தில் வில் ஸ்மித்தின் தேவை என்னவாக இருந்திருக்கும் என்று பார்க்கலாம். முதலாவது, அவருடைய மனைவியை மரியாதையோடு நன்மதிப்போடு நடத்த வேண்டும். அடுத்தது, பலரும் கூடி இருக்கும் பெரிய அரங்கில் எல்லோரின் முன்னிலையிலும் மனைவியின் உருவத்தையே உடல்நிலையையோ கேலி பேசக் கூடாது. இறுதியாக, ஒரு கணவனாக அவருடைய மனைவி பாதுகாப்பாக உணர்வதற்கு என்ன செய்யலாம், என்ன செய்ய முடியும் என்ற கணிப்பு.

தன்னுடைய இந்தத் தேவைகளை முழுவதுமாகப் புரிந்துகொள்வதற்கு முன்னால் கிறிஸ் ராக்கின் பேச்சை, செயலை எடைபோட்டு முடித்துவிட்டார். அவர் பேசியது சரியல்ல என்ற முடிவையும் எடுத்துவிட்டார். எனவே அதற்கான தண்டனையை வழங்கும் உரிமையையும் யாரையும் கேட்காமல் அவரே எடுத்துக்கொண்டார். ஆனால் ஒரு கணம் தன்னுடைய தேவையையும் உணர்வுகளையும் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி பின் செயலில் இறங்குவதே சரியான அணுகுமுறை என்பதை அவரே புரிந்துகொண்டிருப்பார்.

எல்லாம் நடந்து முடிந்து அந்த நிகழ்வைப் பொறுமையாக மனதில் ஓட்டிப் பார்க்கும்போது தன்னுடைய செயலில் இருந்த வன்முறையை உணர்ந்த வில் ஸ்மித் மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டார். அது பாராட்டத்தக்க செயல் என்பதில் சந்தேகமில்லை. நாம் எல்லோருமே ஒவ்வொரு நொடியும் நாளும் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். அவரும் நம் எல்லோரையும் போன்றவர்தானே!

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in