வாழ்க்கையே நேசம் - 10: நம் தேவைகளைத் தெரியப்படுத்துவது எப்படி?

வாழ்க்கையே நேசம் - 10: நம் தேவைகளைத் தெரியப்படுத்துவது எப்படி?

நம்முடைய தேவைகளை வெளிப்படுத்துவதில் இருக்கும் சவால்கள் குறித்து சென்ற வாரம் பேசினோம். குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி அறிந்துகொண்டோம். நாள் முழுவதும் உழைத்துக் களைத்த பெண் ஒருத்தி சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டுமென்றால் ஆயிரம் காரணங்களை சொல்லி நியாயப்படுத்த வேண்டி இருக்கிறது.

"காலையில இருந்து ஒரு நிமிஷம்கூட உட்காரலை. துணியைத் துவைச்சு, சமையலை செஞ்சு எல்லாருக்கும் சாப்பாடு கட்டி, பால் கணக்கு, தண்ணி கணக்கு பார்த்து, மளிகைக் கடைக்கு போன் போட்டு… இன்னும் ராத்திரி சாப்பாட்டுக்கு வேற ஏற்பாடு செய்யணும்… நீங்க கொஞ்சம் இதைச் செய்ய முடியுமா?"

இப்படி நாள் முழுவதும் செய்த, இனி செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு உதவி கேட்டு மன்றாடினாலும் "முடியாது!" என்ற பதில்தான் பெரும்பாலான வீடுகளில் வரும். உதவி வேண்டும் என்று கெஞ்சி கேட்கும்போது பரிவோடு நடந்துகொள்வதற்கு பதில் எதிர்ப்பைத்தான் தெரிவிப்பார்கள். அந்தக் கெஞ்சலுக்கும் மன்றாடலுக்கும் பின்னால் இருக்கும் தேவைகளின் நியாயத்தை காது கொடுத்துக் கேட்கவோ புரிந்துகொள்ளவோ சிரமப்படுவார்கள்.

பெரும்பாலான பெண்கள் வலிமையிழந்த நிலையில் இருந்தபடி தனக்கு இன்னது வேண்டும் என்றும் அதைப் பெறுவதற்கு தான் ஏன் தகுதியானவர் என்றும் விவரிக்கிறார்கள். அதைக் கேட்பவர்கள் முடியாது என்ற மறுமொழியைத் தருகிறார்கள். இறுதியில் பெண்கள் தங்களுடைய தேவைகள் முக்கியமில்லை என்று நம்பவைக்கப்படுகிறார்கள். இந்த நிலைமையை எப்படிச் சரி செய்வது? பெண்கள் தங்களின் தேவைகளை எப்படி நிறைவேற்றிக்கொள்ளலாம்?

முதலில் நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்கும் விஷயங்களை மாற்றுவது குறித்து சிந்திப்பதுதான் நடைமுறைக்கு ஒத்துவரும். எனவே, தேவைகளை வெளிப்படுத்திய விதம் மறுப்பு சொல்ல வைத்ததா என்பதை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியம்.

“இதுவரை உங்களுடைய தேவைகள் நிறைவேறி உள்ளனவா?" என நாம் சந்திக்கும் எந்தப் பெண்ணிடமும் இந்தக் கேள்வியைக் கேட்டால், எல்லோரும் ஒரே பதிலைத்தான் சொல்வார்கள்: "என்னுடைய தேவைகளைப் பற்றி பேசவே பயமாக இருக்கிறது."

இதே கேள்விக்கு நீங்கள் என்ன விடை சொல்வீர்கள்? ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தேவைகள் என்ன என்பதை யாரிடமாவது வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறீர்களா? இல்லை என்பதுதான் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். என்ன தேவை என்பதை கோடு காட்டுவோம். புதிர் போடுவோம். சுற்றிவளைத்துப் பேசுவோம். பக்கத்து இலைக்குப் பாயசம் கேட்போம். ஆனால் நறுக்குத் தெறித்தாற்போல நேரிடையாக நம்முடைய தேவை இதுதான் என்று சொல்லியிருக்கிறோமா என்று சிந்தியுங்கள்.

எதனால் இப்படி நம்முடைய தேவைகளை யாரிடமும் சொல்ல முடியவில்லை? அடக்குமுறை, பெற்றோரின் கண்டிப்பு, சுயமரியாதை இழப்பு, தன்னம்பிக்கை குறைவு, வறுமை, பற்றாக்குறை - இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கும். நம் தேவைகளை வாய்விட்டுக் கேட்டாலும், அவை மறுக்கப்படும் போதோ சுயநலமாக இருக்கிறாயே என்று யாராவது குற்றம் சொன்னாலோ அந்தச் சொல் வாழ்க்கை முழுவதும் நம்மை பாதிக்கிறது.

இதற்கு என்னதான் தீர்வு? நம் தேவைகள் முக்கியமானவை, மதிப்புமிக்கவை என்று நாம் முதலில் நம்ப வேண்டும். அவற்றை நிறைவேற்றிக்கொள்வது நம்முடைய தலையாய கடமை என்ற திடமான உறுதி வேண்டும். ஒரு குடும்பத்தில் இருக்கும் அத்தனை பொறுப்புகளையும் ஒருவரே ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை உணர்வதோடு அவற்றைப் பிரித்துக்கொடுக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். தொடர்ந்து வேலை செய்துகொண்டே இருப்பதும் எல்லா பொறுப்புகளையும் இழுத்துபோட்டுக்கொண்டு செய்வதும் மன அழுத்தத்தை ஏற்படும்.

"மாலையில் ஒரு மணி நேரம் நடைபயிற்சிக்குப் போக வேண்டும். அந்தத் தனிமையும் இயற்கைக் காற்றும் உடற்பயிற்சியும் எனது உடல் உள்ளம் இரண்டும் ஆரோக்கியமாக இருக்க அவசியம்" என்று குடும்பத்தினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

"எல்லோருடைய துணிகளையும் நானே மடித்து வைப்பது கூடுதல் சுமையாக இருக்கிறது. அவரவர் துணியை மடித்து வைத்துக் கொள்ளலாமா?"

"இரவு உணவை நீங்கள் தயாரிக்க முடியுமா? அலுவலகத்தில் இருந்து வந்து அடுப்படியில் நின்றால் கால் வலிக்கிறது."

இப்படி தெளிவாகக் கேட்பதோடு தொடர்ந்து நினைவூட்டுவதும் அவசியம். குடும்பத்தினரால் உதவ முடியவில்லை என்றால் மாற்று ஏற்பாடு செய்வது குறித்து சிந்திக்கலாம். வீட்டுவேலைகளில் உதவ ஒருவரை நியமிக்கலாம்.

பெண்கள் எல்லோருக்கும் அடுப்படியில் வேலைசெய்வதும் வேளாவேளைக்கு விதவிதமாகச் சமைத்துப் போடவும் பிடிக்கும் என்றும் நாமாகவே நினைத்துக்கொள்கிறோம். சமையலறைக்குள் காலெடுத்து வைப்பதை வெறுக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கும் யாராவது சூடாகச் சமைத்து தந்தால் உட்கார்ந்தபடியே சாப்பிடலாம் என்பது ஆசை. சமையலறையோடு பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியில் இருந்து விடுதலை பெற வேண்டும். ஒரு நாளாவது ஓய்வு வேண்டும் என்ற தேவை இருக்கிறது, இருந்தாலும் இதையெல்லாம் சொல்வதில் தயக்கமும் இருக்கிறது. அலுவலகத்தில் பணிபுரிவோருக்குக்கூட பணி ஓய்வு கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்குத் தள்ளாத வயதிலும் ஓய்வு கிடைக்காது.

உலகையே கரோனா புரட்டிப் போட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் ஆகியவற்றில் பகிரப்பட்ட புகைப்படம் ஒன்று, நீங்களும் பார்த்திருப்பீர்கள். ஆக்சிஜன் சிலிண்டரை பொருத்திக்கொண்டு சமையலறையில் நின்றபடி சமைக்கும் பெண்ணொருவரின் புகைப்படம் அது. உண்மையிலேயே அவருடைய குடும்பத்தின் நிலைமை என்ன என்பது நம் யாருக்கும் தெரியாது என்பதால் அதுகுறித்து கருத்து சொல்வது சரியல்ல. என்றாலும் சமையலறை என்றால் பெண்கள் மட்டுமே புழங்கும் இடம் என்பது நம்முடைய மரபணுவில் பதிந்துவிட்டதோ என்னவோ. அதை மாற்றுவதற்கான முயற்சியை இந்தத் தலைமுறையினரோடு தொடங்குவது அவசியம்.

‘நம்முடைய தேவைகள் முக்கியமானவை’. ‘எந்த ஒன்றுக்கும் மாற்றுவழி உண்டு’. இந்த இரண்டின்மீதும் வலுவான நம்பிக்கை கொண்டால் நம் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தலாம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.