வாழ்க்கையே நேசம் - 11: மாற்றத்தின் முதல் படி

வாழ்க்கையே நேசம் - 11: மாற்றத்தின் முதல் படி

உளமாரப் பேசுவது, தேவைகளை வெளிப்படுத்துவது, வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் - இவை எல்லாமே உணர்வு சார்ந்த செயல்பாடுகள். இதுவரையில் புறவய உறவுகளும் சமூகமும் வேறு மாதிரியான செயல்பாட்டைக் கற்றுக்கொடுத்திருக்கும் நிலையில் இவற்றை மாற்றி அமைத்துக்கொள்வதற்குப் புரிந்துணர்வும் விழிப்புணர்வும் விடாமுயற்சியும் அவசியம். திரைப்படங்களில் பார்ப்பது போல ஒரே நொடியில் இந்த மாற்றம் ஏற்பட்டுவிடாது. படிப்படியான கட்டங்களையோ நிலைகளையோ கடக்க வேண்டியிருக்கிறது. இதை எப்படிச் செய்யலாம் என்பதை இந்த வாரம் பார்ப்போம்.

எதிர்மறை விளைவுகள்

முதலில் அடுத்தவர்களோடு நம்மை எப்படித் தொடர்புபடுத்திக் கொள்கிறோம் என்பதின்மீது கவனம் செலுத்த வேண்டும். நம்மில் பெரும்பாலானோர் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு நம் செயல்களே காரணம் என்று நம்புவோம். எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பது நம் கடமை என்று நினைப்போம். யாராவது சுணக்கம் கொண்டால் அதை நேர் செய்வதற்கும் அவர்களின் முகத்தில் புன்னகை மலர்வதற்கும் நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

உள்ளே எரிச்சலோ பயமோ வெறுப்போ தோன்றினாலும் அந்த உணர்ச்சிகளை மறைத்துக்கொண்டு அடுத்தவர்களின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க தேவையானவற்றைச் செய்வோம். பெரும்பாலும் நெருக்கமான உறவுகளில் இதைக் கூடுதலாகவே செய்வோம். ஆனால், இப்படி நடந்துகொள்வது நாளடைவில் நமக்கு அழுத்தத்தையும் பாரத்தையும் ஏற்படுத்தும், உறவுகளை பலப்படுத்துவதற்கு பதிலாக விரிசலை உண்டாக்கும் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

விழிப்புணர்வு அவசியம்

முதலில் அன்பை எந்தெந்த வழிகளில் வெளிப்படுத்தலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். நம்முடைய தேவைகளைக் குறைத்துக்கொள்வதோ முற்றிலும் மறைத்துக்கொள்வதோ அன்பு, பாசம், காதலைக் காட்டுவதற்கான வழியல்ல. உறவுகளுடைய தேவைகளை மட்டுமே முதன்மைப்படுத்துவது அன்போ பாசமோ காதலோ அல்ல. திருமணம், காதல் போன்ற பந்தங்களில் தொடக்கத்தில் ஒருவருக்கொருவர் தேவைகளை நிறைவேற்றுவது மகிழ்ச்சியைத் தரலாம். இது தொடரும்போது காலப்போக்கில் இணையரின் உணர்வுகளுக்கு நாம் ஒன்றைச் செய்வதோ செய்யாமல் இருப்பதோதான் காரணம் என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.

இப்படி ஒரு பொறுப்பை ஏற்றுக்கொள்வது எவ்வளவு சுமையான விஷயம். உறவு என்பது பூதாகரமாக உருவெடுத்து நம்மையே விழுங்கிவிடுகிறது. இதைப் புரிந்துகொண்டால் உறவு, தேவை, சுயம் இவற்றை எல்லாம் தள்ளிவைத்து மூன்றாம் நபரின் கோணத்தில் இருந்து பார்க்க முடியும். இதைச் செய்யும் அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படவில்லையென்றால் இணையரையோ காதலரையோ குற்றம்சொல்லத் தொடங்குவோம். "இந்த மனுஷனுக்கும் அவன் குடும்பத்துக்கும் உழைத்துக் கொட்டியே என் காலம் போகிறது" என்று புலம்பும் எத்தனை பெண்களைப் பார்த்திருப்போம். இதுபோன்ற நிலைமையை எதிர்கொள்ளும் ஆண்களும் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய இந்தக் குற்றச்சாட்டை இணையரோ காதலரோ குடும்பமோ ஏற்றுக்கொள்வதே இல்லை.

தெளிவும் குழப்பமும்

நம்முடைய உணர்வுபூர்வமான தேவைகளைப் புரிந்துகொள்ள ஒரே ஒருவர் மட்டுமாவது இருந்தால் அல்லது நாமே அந்த நபராக இருந்தால் இந்தக் குற்றச்சாட்டை எப்படி எதிர்கொள்ளலாம் என்று பார்ப்போம். ஒருவர்மேல் கொண்டிருக்கும் அக்கறையும் அன்பும் கட்டாயமாகவும் கடமையாகவும் பொறுப்பாகவும் மாறும்போது சிறப்பாகச் செயல்பட வேண்டுமே என்ற பதற்றம் ஏற்படுகிறது. நம்முடைய சுதந்திரம் பறிபோகும்போது வெறுமை ஏற்படுகிறது. இவற்றையெல்லாம் புரிந்துகொண்டு சம்பந்தப்பட்ட நபரிடம் வெளிப்படையாகத் தெரிவிப்பது மட்டுமே புரிதலுக்கான முதல் படி.

அடுத்தபடியாக இந்தக் கேள்விகளை நேர்மையோடு நம்மை நாமே கேட்டுக்கொள்வது அவசியம். காதலுக்காக அல்லது அன்புக்காக பிடித்த உணவை எத்தனை நாள் சாப்பிடாமல் இருக்க முடியும்; பிடித்த உடையை அணியாமல் இருக்க முடியும்; பிடித்த பாடலோ ஆடலோ வேறு பணியோ இவற்றைச் செய்யாமல் இருக்க முடியும்; பிடித்த நபரோடு பழகாமல் இருக்க முடியும்; பிடித்த நடிகரின் படத்தைப் பார்க்காமல் இருக்க முடியும்? உறவுக்காக நாம் இழந்தவற்றை எல்லாம் பட்டியலிட்டால் உள்மனம் விம்மி அழுவதை உணரலாம் அல்லது கோபத்தில் பொங்கி எழலாம்.

நாம் எழுதிவைத்த பட்டியலை இணையரிடமோ உறவிடமோ ஒப்புவித்தால் உடனே புரிதல் ஏற்பட்டுவிடுமா என்ன. “உன்னுடைய பிரச்சினைக்கு என்னைக் காரணமாக்குகிறாயா? உன்னுடைய உணர்ச்சிகளுக்கு நான் பொறுப்பு ஏற்க வேண்டுமா?” என்று கேட்கக்கூடும். ஆக, அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு நாம் பொறுப்பேற்க முடியாது என்பது தெளிவாகிறது. ஆனால் அந்த அடிமைத்தளையில் இருந்து எப்படி விடுபடுவது என்று புரியாமல் தவிக்கிறோம். பொறுப்புள்ளவராக நடப்பது எப்படி என்பதில் குழப்பம் ஏற்படுகிறது.

நம் உரிமையின் எல்லை

உணர்வுகளின் கட்டுப்பாட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவிப்பது ஏன் என்ற கேள்விக்கு நம் தேவைகள் குறித்த பயமும் குற்ற உணர்வுமே முதன்மையான காரணங்கள் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள். ஒருவழியாக அந்த பயத்தையும் குற்ற உணர்வையும் எதிர்கொண்டு நம்முடைய உணர்வுசார்ந்த தேவைகளை நிறைவேற்றும் முயற்சியில் இறங்கிவிட்டால் எல்லாம் இலகுவாகிவிடுமா என்ன? ஆரம்பகட்டத்தில் நாம் வெளிப்படுத்தும் குழப்பமும் இறுக்கமும் விறைப்புத்தன்மையும் அடுத்தவர்களை எரிச்சலைடையச் செய்யலாம். நினைத்ததைச் சாதிக்க நினைக்கிறோம் என்ற குற்றச்சாட்டு எழலாம். இதை எப்படி எதிர்கொள்வது? நம்முடைய தேவைகள் அடுத்தவர்களின் உரிமையை மதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதை மனதில் இறுத்திக்கொள்வது அவசியம். 'நம் உரிமை அடுத்தவரின் மூக்கு தொடங்கும் இடத்தில் முடிகிறது' என்ற தொடர் கூறும் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பணியாற்றும் இடத்தில் ஒரு குழுவாக இயங்குவது அவசியம். அங்கே எனக்குப் பிடித்ததைத்தான் செய்வேன் என்று சொல்ல முடியாது. பள்ளியிலோ கல்லூரியிலோ இருக்கும் விதிமுறைகளை மீறுவதும் நடைமுறைக்கு ஒவ்வாத செயல். விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றால் உரிய நபர்களுடன் அதற்கான கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும்.

நம் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ளும் பக்குவத்தை அடைய இப்படிப்பட்ட புரிதல்களை வளர்த்துக்கொள்வது அவசியம். அதே நேரத்தில் அடுத்தவர்களின் தேவையை நிறைவேற்றும்போது கட்டாயம், கடமை போன்ற காரணங்களை ஒதுக்கிவைத்துவிட்டு பரிவோடு அணுக வேண்டும். அப்படிச் செய்யும்போது நம்முடைய செயல்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறோம். அதே நேரத்தில் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு நாம் ஒருபோதும் பொறுப்பல்ல என்ற தெளிவைப் பெறுகிறோம்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.