வாழ்க்கையே நேசம் - 40: வன்முறையைத் தவிர்க்கும் வழிகள் என்ன?

வாழ்க்கையே நேசம் - 40: வன்முறையைத் தவிர்க்கும் வழிகள் என்ன?

மனநிம்மதி, நிறைவு, அமைதியான வாழ்க்கை ஆகியவற்றைத் தேடி அலையாத மனிதனே இல்லை. ஆனால் இவற்றை வெளியே தேட வேண்டாம், வாழ்க்கை முறையில், அடுத்தவர்களோடு பேசுவதிலும் பழகுவதிலும் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துகொண்டால் போதும் என்பதைத்தான் வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறை என்கிறோம். என்னென்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்கு முன்னால் அன்றாட வாழ்வில் நம்மை அறியாமல் எந்தெந்த வழிகளில் வன்முறையை வெளிப்படுத்துகிறோம் என்பதை அறிந்துகொள்வது அவசியம். அதைத்தான் கடந்த வாரங்களில் செய்தோம்.

வீட்டிலும் பணியிடத்திலும் பொதுவெளியிலும் பல மனிதர்களைச் சந்திக்கிறோம். இவர்கள் எவருடனும் காரசாரமான விவாதம், சண்டை, சச்சரவு செய்ய வேண்டும் என்று யாருமே நினைப்பதில்லை. இணக்கமாக நட்புறவாக நடந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் எப்படியோ ஏதோ ஒரு வகையில் முரண்பாடும் ஒவ்வாமையும்,அதன் தொடர்ச்சியாக இழுபறியான உறவும் சில இடங்களில் உறவு முறிவும் ஏற்படுகின்றன.

நாம் சந்திக்கும், பார்த்துப் பழகும் மனிதர்களின் உள்ளே உறையும் உயிர்ப்பான மனிதத்தோடு பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வது மூலம் இதுபோன்ற உறவுச் சிக்கல்களைத் தவிர்க்கலாம். வன்முறையில்லாமல் ஒருவரோடு ஒருவர் தகவல் பரிமாற்றம் செய்துகொள்ளும்போது நமக்குள் பல மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதைத் தெளிவாக உணர முடிகிறது. இது நாம் பழகும் மனிதர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்கள் மாற மாற நாம் வாழும் அமைப்பிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இந்த மாற்றம் ஒரு சில நாட்களில் ஏற்படுவதில்லை. இதற்கு நீண்ட காலம் பிடிக்கும். என்றாலும் சில சூழல்களில் உடனடியான பலனைப் பார்க்க முடிகிறது.

அன்றாட வாழ்வில் நாள்தோறும் சேவை வழங்கும் எளிய பணியாளர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையிலும் வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையைப் பயன்படுத்துவதன்மூலம் என் தேவைகளைச் சிறப்பாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன். ஒரு முறை இந்த மாநகரின் மற்றொரு கோடியில் இருக்கும் வணிக மையத்தில் ஆடைகள் வாங்கி வந்தேன். வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தால் அவற்றில் இரண்டு உடுப்புகள் வேறு அளவில் இருந்தன. இப்போதெல்லாம் பெரிய வணிக மையங்கள் ரசீதில் தொலைபேசி எண்ணை அச்சடிப்பதில்லை. இணையத்தில் தேடி எடுத்து அந்தக் கடையின் உரிமையாளரை அழைத்தேன். அவர் ஏதோ முக்கியமான வேலையாக இருப்பதாகவும் பிறகு அழைப்பதாகவும் சொன்னார். அவரிடம் இருந்து கடைப் பொறுப்பாளரின் எண்ணைப் பெறுவதற்கு மேலும் இரண்டு நாட்களாகிவிட்டது. ஒரு வழியாகப் பிரச்சினையை விளக்கியதும் கடைக்கு வந்தால் ஆடையை மாற்றிக்கொள்ளலாம் என்றார்கள். அத்தனை தூரம் வர முடியாது என்பதால் வீட்டுக்கே அனுப்பி வைத்தால் நல்லது என்றேன். இத்தனை உரையாடலும் இங்கே எழுதிக்கொண்டிருந்த வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையின் படியே நடந்தது. ஒரே நாளில் அல்ல. சில நாட்கள் ஆனது. அடுத்த சில நாட்களில் நான் கேட்டுக்கொண்டபடி ஆடைகள் வீடு தேடி வந்தன. என்னிடம் இருந்த ஆடைகளை சுமார் ஒரு வாரம் கழித்து அருகில் இருந்த வேறு ஒரு வணிக மையத்தில் திருப்பிக்கொடுத்தேன். ஒன்றல்ல, இதுபோன்ற பல நிகழ்வுகள் இந்தச் செயல்முறையில் எனக்கிருக்கும் நம்பிக்கையை வலுப்படுத்தின.

அடுத்தவர்களின் குற்றவுணர்வைத் தூண்டாமல் அவமானப்படுத்தாமல் நம் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வது என்பது குறித்து யாருமே நமக்குக் கற்றுத் தந்ததில்லை. இதற்குப் பார்வை மாற்றம், வெவ்வேறு மனிதர்களின் புரிதல் படிநிலை குறித்த அறிவு, எந்த நிகழ்வையும் புரிந்துணர்வோடு அணுகுதல், பரிவை வெளிப்படுத்தும் வகையில் நடந்துகொள்வது, பேசும்போது விழிப்புணர்வோடு சொற்களைத் தேர்ந்தெடுப்பது என்று பல பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறேன். இதனால் பதற்றமும் எரிச்சலும் வெறுப்பும் குறைந்து அமைதி அடைந்திருக்கிறேன்.

வன்முறையற்ற தகவல் பரிமாற்றத்தைக் கடைப்பிடிக்கிறேன் என்பது குடும்பத்தினருக்குத் தெரிய வந்ததும் 'அது என்ன' என்ற ஆவல் அவர்களிடம் தொனித்தது. சில நேரம் கிண்டல், கேலி செய்தல் என்று இருந்தாலும் சில நேரம் ஆச்சரியத்தோடு பார்க்கிறார்கள். நான் நிறைய மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். இன்னும் சில நேரம் என்னுடைய பிழையைச் சுட்டும் கண்ணாடியாக இருக்கிறார்கள். எங்காவது எப்போதாவது தவறினால் அதை உடனே என் பார்வைக்குக் கொண்டு வருகிறார்கள். இதனால் சில சமயம் எரிச்சல் ஏற்பட்டாலும் பல நேரம் தன்னாய்வுக்கு உதவியாக இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அதே நேரம் எல்லா விமர்சனத்தையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதும் அவசியமில்லை.

சில நேரம் செயல்முறையைக் கடைப்பிடிக்க மறந்து போவதுண்டு. பழைய பழக்கம் திரும்புவதுண்டு. வேறு சில நேரங்களில் சொல், செயல் இரண்டிலும் வன்முறையை வெளிப்படுத்தவும் செய்தேன், செய்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் என்ன நடந்தது என்பதையும் என்னுடைய எதிர்வினை எப்படி இருந்திருக்கலாம் என்பதையும் அசைபோடுகிறேன். அடுத்த முறை இன்னும் விழிப்புணர்வோடு இருக்கும் முயற்சியை முழுமனதோடு செய்கிறேன். இப்போது சில விஷயங்கள் அனிச்சைச் செயலாக மாறிவிட்டன.

கடந்த சில வருடங்களில் எனக்குள் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைப் பெருமையோடு பார்க்கிறேன். என்னையே பாராட்டிக்கொள்கிறேன். தவறிய பொழுதுகளுக்காக என்னை நொந்துகொள்ளாமல் தண்டித்துக்கொள்ளாமல் அடுத்த முறை இன்னும் விழிப்புணர்வோடு இருப்பேன் என்று உறுதிகொள்கிறேன். கூடவே வன்முறையில்லாமல் வாழ்வது எப்படி என்ற வாழ்க்கைத் தத்துவத்தைக் கற்றுத்தரும் சமகால  உளவியல் வல்லுநர்கள், மன நல மருத்துவர்கள், அமைதிப் புரவலர்கள், தத்துவ அறிஞர்களான ப்ரீனே பிரவுன், மார்ஷல் ரோசென்பர்க், ஜோனிஸ் வெப் போன்றோரின் எழுத்துக்களையும் காணொலிகளையும் படிக்கவும் பார்க்கவும் செய்கிறேன். குறிப்பாக, அன்றாட வாழ்வில் வாய்ப்பேச்சின் மூலம் வெளிப்படுத்தும் வன்முறையைத் தவிர்ப்பதற்காக  மார்ஷல் ரோசென்பர்க் வகுத்திருக்கும் வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையைப் பின்பற்றுவது குறித்த என் அனுபவங்களே இந்தத் தொடர் எழுதுவதற்கான உந்துதலாக இருந்தது. 

உணர்ச்சிகள், தேவைகள், வேண்டுகோள்கள் இவற்றைப் பற்றிய அறிவை வளர்த்துக்கொள்வது வாழ்க்கைக்குத் தேவையான பாடமாக இருக்கிறது. மற்றவரின் நலனுக்கு நம்மாலான உதவிகளைச் செய்யும்போது நட்புணர்வும் பிணைப்பும் வலுப்படுகிறது. தண்டனைக்குப் பயந்தோ குற்றவுணர்வினாலோ செயலாற்றாமல் நமக்குள் இருக்கும் மனிதத்தை உயிர்ப்போடு வைத்துக்கொள்ளச் செயலாற்றும்போது அமைதி நிலவுகிறது. ஒருவருக்கொருவர் புரிந்துணர்வையும் பரிவையும் கருணையையும் வெளிப்படுத்தும்போது மனம் நிம்மதியடைகிறது. என்னைச் சுற்றியுள்ளவர்கள் இந்த மாற்றத்தைக் கவனிக்கிறார்கள். இதன் தாக்கத்தால் அவர்களும் மாறுவது தெரிகிறது.

முரண்பாடுகளும் சச்சரவும் குழப்பமும் போரும் வன்முறையும் நிறைந்த இன்றைய உலகில் நாம் செய்யக்கூடிய குறைந்தபட்ச பங்களிப்பு இது என்று நினைக்கிறேன். நேசமும் புரிந்துணர்வும் பரிவும் இந்த உலகை இயக்கும் நாள் வருமென்ற உறுதியான நம்பிக்கை இருக்கிறது. சின்னச் சின்னச் செயல்களால் மனித மனங்களில் நம்பிக்கை ஒளியை ஏற்றிவைப்போம். இந்தப் புவியில் மூன்றில் இரண்டு பங்கைச் சூழ்ந்திருக்கும் கடலும் சிறு துளிகளால் நிறைந்ததுதானே!

(நிறைவுற்றது)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in