வாழ்க்கையே நேசம்-39: விதிகள் இல்லாமல் ஒழுங்கை நிலைநாட்ட முடியுமா?

வாழ்க்கையே நேசம்-39: விதிகள் இல்லாமல் ஒழுங்கை நிலைநாட்ட முடியுமா?

வாழ்க்கையின் பெரும்பாலான காலத்தை கட்டாயங்களுக்கும் விதிகளுக்கும் வற்புறுத்தல்களுக்கும் தாரைவார்த்துவிடுகிறோம். சமூகமாகக் கூடி வாழும் போது வாழ்க்கையின் சீரான ஓட்டத்துக்கு சில விதிகளை எல்லோரும் கடைப்பிடக்கவேண்டியது அவசியமல்லவா என்ற கேள்வி எழலாம். ஆம் என்பதுதான் இந்தக் கேள்விக்கான விடை. என்றாலும் இதில் பல அடுக்குகள் இருக்கின்றன.

சமூகத்தில் எல்லோருடைய தேவையும் எளிதாக நிறைவேறுவதற்காக ஏற்பட்டவையே இந்த விதிகள். எடுத்துக்காட்டாக, சாலையின் எந்தப் பக்கம் வண்டியை ஓட்ட வேண்டும், எந்த வேகத்தில் செல்ல வேண்டும் போன்றவை எல்லோரின் பாதுகாப்புக்காகவும் ஏற்பட்ட விதி. பள்ளி, கல்லூரி, அலுவலகம் என ஒவ்வொரு இடத்திலும் இதுபோன்ற விதிமுறைகள் கல்வி கற்கவும் கற்பிக்கவும் பணிகளைச் செய்யவும் பெறவும் இணக்கமான சூழலை ஏற்படுத்துவதற்காக அமைந்தது. அமைப்பு சாராத நன்னடத்தை விதிகளும் இவற்றைப் போன்றதுதான். உணவகத்திலோ விருந்திலோ உணவுண்ணும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதும் அதைப் போன்றதே.

ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அன்றாட வாழ்வில் பல விதிகளும் கட்டாயங்களும் இருப்பதைப் பார்க்கிறோம். அதிகாலையில் எழுந்து கோலம் போட வேண்டும், கோயிலுக்குப் போக வேண்டும், பண்டிகை நாளை இப்படித்தான் கொண்டாட வேண்டும், இந்த உணவைத்தான் படைக்க வேண்டும், இத்தனை உணவு வகைகளை இப்படித்தான் சமைக்க வேண்டும் - எத்தனை கட்டளைகள், கட்டாயங்கள், வற்புறுத்தல்கள். கட்டாயத்தினால் ஒரு விஷயத்தில் ஈடுபட்டோமென்றால் மகிழ்ச்சியை இழந்துவிடுகிறோம். சிறுவயது முதல் பழக்கப்பட்ட விஷயமாக இருந்தால் ஒருவிதமான பரிச்சயப்பட்ட சூழலை உருவாக்க உதவுவதால் இதமளித்தாலும் இப்படிப்பட்ட செய்கடன்கள் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன என்பதுதானே உண்மை.

இதையெல்லாம் எங்கே யார் எப்போது வரையறுத்தார்கள், இவற்றைச் செய்யாவிட்டால் என்ன ஆகும் போன்ற கேள்விகளைக் கேட்கத் தொடங்கினால் யாராலும் பதில் சொல்ல முடியாது. காலங்காலமாக இப்படிச் செய்யும் வழக்கம் தடைப்படக் கூடாது என்றோ குடும்பத்துக்கு ஆகாது என்றோ விளக்கம் சொல்வார்கள். செய்யாவிட்டால் ஏதேனும் வம்பில் முடியப்போகிறதே என்ற பயத்தினால் நாமும் அதைச் செய்ய முனைவோம். ஆனால் அதில் கொஞ்சமும் மகிழ்ச்சியோ களிப்போ இருக்காது. பயத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு செய்யாமல் இருந்து பார்த்தால் உண்மை தெளிவாகிவிடும்.

நண்பரின் வீட்டில் வருடாவருடம் செய்யும் நோன்பு ஒன்றை ஒரு வருடம் செய்ய மறந்துவிட்டார்கள். மறுநாளோ ஓரிரு நாட்களோ கழித்துத்தான் நினைவுக்கு வந்தது. 'இதை எப்படி மறந்து போனோம்,' என்று சிரித்துக்கொண்டோம் என்றார். இதற்கு மேல் என்ன செய்யமுடியும்?

பண்டிகை நாட்களில் மொத்த குடும்பமும் கேலி பேசிக்கொண்டும் தொலைக்காட்சியில் பட்டிமன்றம் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டும் இருக்கையில் சமையலறையில் பலவிதமான பண்டங்களைச் சமைத்துக்கொண்டிருக்கும் பெண்களைப் பற்றி நிறைய எழுதியாகிவிட்டது. அவர்களுக்கு விருப்பப்பட்டு செய்கிறார்களா, கட்டாயத்தின் பேரில் செய்கிறார்களா, அல்லது வேறு வழியின்றி அதன்மீது விருப்பத்தை ஏற்படுத்திக்கொண்டார்களா என்ற விவாதத்தை விட்டுவிடலாம். குடும்பத்தில் ஒரு சிலருக்கு மகிழ்ச்சியையும் ஒரு சிலருக்கு பதற்றத்தையும் அசதியையும் தந்தால் அதைச் சரிசெய்வது அந்தக் குடும்பத்தில் இருக்கும் எல்லோரின் பொறுப்பும் அல்லவா!

ஒன்றை மட்டும் எல்லோரும் நினைவில் வைத்துக்கொண்டால் போதும் - 'எனக்கு விருப்பமானதை என்னால் இயன்ற வரையில் செய்வேன். முடியாதவற்றை விருப்பமில்லாதவற்றைச் செய்யமாட்டேன்’. வரும் பண்டிகை அல்லது திருவிழா நாளன்று முடிந்தவற்றை மட்டுமே சமைத்தால் போதும். முடியவில்லை என்றால் வெளியில் வாங்கிகொள்ளலாம் அல்லது பழங்களைப் படைக்கலாம் என்று முடிவெடுத்துச் செயல்படுங்கள். மனம் எத்தனை இலகுவாக இருக்கிறது என்பதை உணர்வீர்கள். இந்த விடுதலை உணர்வை அனுபவித்த பிறகு எந்தக் கட்டாயப்படுத்தலுக்கும் உட்படமாட்டீர்கள். இப்படி அன்றாட வாழ்வின் தளைகளில் இருந்து நம்மை நாமேதான் விடுவித்துக்கொள்ள வேண்டும். இதனால் நாம் மட்டுமல்ல குடும்பத்தினரும் மன நிம்மதி பெறுவார்கள்.

இன்னுமொரு விஷயத்தையும் பேசுவோம். வேண்டுகோள், கோரிக்கை, வலிறுத்தல், வற்புறுத்தல், கட்டாயப்படுத்தல் இவை எல்லாமே அடுத்தவரிடம் நம் தேவையை நிறைவேற்றச் சொல்லி நாம் கேட்பதைக் குறிக்கும் சொற்கள். வேண்டுகோளைத் தெளிவாகவும் உறுதியான மொழியிலும் வெளிப்படுத்தக் கற்றுக்கொள்வது அவசியம். அதைப் போலவே வேண்டுகோளுக்கும் வலியுறுத்தலுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறையில் வற்புறுத்தல், கட்டாயப்படுத்தல் ஆகியவற்றுக்கு இடமில்லை.

'சாப்பிட்டதும் பாத்திரங்களைத் தேய்த்துவிடுங்கள்,' என்பது வேண்டுகோளா வற்புறுத்தலா? மரியாதையான தொனியில் நல்லவிதமாகக் கேட்பதை வைத்து வேண்டுகோளா வற்புறுத்தலா என்பதைச் சொல்ல முடியாது. வேறு எப்படித் தெரிந்துகொள்வது என்கிறீர்களா? நாம் கேட்டுக்கொண்டதைச் செய்யவில்லை என்றால் எப்படி நடந்துகொள்கிறோம் என்பதை வைத்துத்தான் முடிவுசெய்ய வேண்டும். ஏனென்றால் வேண்டுகோளை நிறைவேற்றலாம் அல்லது நிறைவேற்றாமலும் இருக்கலாம். அதற்கான வெளியை அடுத்தவருக்கு வழங்குதல் அவசியம்.

அதே நேரம், வேண்டுகோளை வலியுறுத்தலாகப் புரிந்துகொள்ளும் மனிதர்களும் இருக்கிறார்கள். சிலர் முடியாது என வெளிப்படையாகச் சொல்லிவிடுவார்கள். சிலர் செய்கிறேன் என்று சொல்லிவிட்டுச் செய்யாமல் இருப்பார்கள். இன்னும் சிலர் செய்யாவிட்டால் என்ன நடக்குமோ என்ற பயத்தில் செய்வார்கள். ஆனால் அந்தப் பயம் விட்டுப்போனாலோ இல்லையென்றாலோ செய்யமாட்டார்கள்.

ஒரு விஷயத்தை ஏன் செய்யச் சொல்லி வேண்டுகோளை வைக்கிறோம் என்பதை விளக்கமாகச் சொல்லவேண்டும். கூடவே அதுகுறித்து மற்றவர்களின் கருத்துகளையும் அந்த வேண்டுகோளை நிறைவேற்ற முயலும் போது அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ள இடமளிக்க வேண்டும். மாற்றுக் கருத்துக்களைத் தயக்கமில்லாமல் சொல்ல வாய்ப்பளிக்க வேண்டும். பிறகு இருவரும் சேர்ந்து அந்த வேண்டுகோளை நிறைவேற்ற என்ன செய்யலாம் என்பது குறித்துச் சிந்தித்து முடிவுக்கு வரலாம்.

ஓர் எளிய விஷயத்தைச் செய்துமுடிக்க இத்தனை பாடா என்று தோன்றுகிறதா? குற்றவுணர்வு, அவமானம், கடமை, நன்றிக்கடன், தண்டிக்கப்படுவோம் என்று பயம் ஆகியவற்றால் நாம் கேட்டுக்கொண்ட செயலை ஒருவர் செய்தாரென்றால் அதற்கான விலையை நாம் கொடுக்கவேண்டி வரும். எங்கெல்லாம் கட்டாயம், கடமை என்ற பெயரில் அதிகாரத்துக்குக் கட்டுப்பட வைக்கிறோமோ அங்கெல்லாம் மக்களின் உள வலிமை குலைகிறது, அமைப்பை எதிர்க்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள், வன்முறை தலைதூக்குகிறது என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்

எனவே நம் எல்லோருக்குள்ளும் இருக்கும் மனிதத்தோடு ஏற்படும் பிணைப்பினால் அந்த வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் அடுத்தவர்களுக்கு ஏற்பட வேண்டும். இந்தப் பிணைப்பு உதவி கேட்பவரையும் நிறைவேற்றுபவரையும் மகிழ்ச்சியோடு செய்யவைக்கிறது. அதைத்தான் வன்முறையற்ற தகவல் பரிமாற்றச் செயல்முறை பரிந்துரைக்கிறது.

விதிகளும் வலியுறுத்தல்களும் இல்லையென்றால் ஒழுங்கு சீர்குலைந்துவிடுமே... இந்த மனிதர்கள் யாரும் சொல்வதைக் கேட்கமாட்டார்களே என்ற தயக்கமும் அச்சமும் நமக்கு ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் நடைமுறையில் குற்றம்சாட்டுவதை நிறுத்தி அதிகாரத்தை எல்லோரோடும் பகிர்ந்துகொண்டு, முடிவுகள் எடுப்பதில் எல்லோருக்கும் பங்குண்டு என்பதைத் தெளிவாக்கினால் குடும்பம், சமூகம், நாடு போன்ற அமைப்புகள்  சிறப்பாகச் செயல்படும் என்பதை கடந்த கால வரலாறும் நிகழ்கால ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

 (அடுத்த புதனோடு நிறைவுறும்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in