வாழ்க்கையே நேசம் - 12: நம் தேவைகளைத் தெளிவாகச் சொல்கிறோமா?

வாழ்க்கையே நேசம் - 12: நம் தேவைகளைத் தெளிவாகச் சொல்கிறோமா?

வன்முறையற்ற தகவல் பரிமாற்றம் என்பது வாழ்க்கையைப் புதிய பார்வையோடு அணுக உதவும் ஒரு செயல்முறை. நாம் பார்ப்பதையும் உணர்வதையும் மற்றவர்களோடு பரிமாறிக்கொள்ள உதவுவதோடு நம் தேவைகளை எடுத்துச் சொல்லவும் உதவுகிறது. ஒருவரையொருவர் பரிவோடும் புரிதலோடும் நடத்துவதற்கான களத்தை உருவாக்குகிறது. நம் தேவைகளை முழுமையாக நிறைவேற்றிக்கொள்ள இவற்றோடு இன்னுமொரு விஷயத்தையும் சேர்த்துச் செய்வது அவசியம்.

வேண்டும் - வேண்டாம்: வேறுபாடு

நம் தேவைகளையும் கோரிக்கைகளையும் மற்றவர்களிடம் எப்படித் தெரிவிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்துகிறோமா? நாம் என்ன கேட்கிறோம் என்பதையும் அதை ஏன் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசுகிறோமா? என்ன ‘வேண்டும்’ என்பதை எடுத்துச் சொல்கிறோமா அல்லது என்ன ‘வேண்டாம்’ என்பதன்மேல் கவனத்தைக் குவிக்கிறோமா? ‘வேண்டாம்’, ‘கூடாது’ போன்ற எதிர்மறையான சொற்கள் கேட்போரைக் குழப்புவதோடு அநிச்சையான எதிர்ப்பைத் தூண்டுகின்றன என்பதைப் பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது வீடு, பணியிடம், பொதுவெளி என்று எல்லா இடத்துக்கும் பொருந்தும்.

பல நேரங்களில் எல்லா இடத்திலும் மாறுபட்ட கருத்தை எடுத்துவைப்பவர்களோடு தொடர்ச்சியான உரையாடலை நடத்த வேண்டியிருக்கும். முதல் சுற்றிலேயே இணக்கமான முடிவுக்கு வர முடியாமல் போகலாம். அப்படியொரு சூழலில் நடந்து முடிந்ததை அசைபோடும்போது அடுத்த முறை நம் அணுகுமுறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்போம். ஆனால் பாருங்கள், எதையெல்லாம் 'செய்யக் கூடாது' என்று பட்டியல் போடுகிறோமோ அதையே செய்வோம். நடந்து முடிந்த பிறகுதான் அதை உணர்வோம். அதற்குப் பதிலாக, எதைச் 'செய்ய வேண்டும்' என்பதை உருப்போட்டால் கொஞ்சமாவது பலனளிக்கும் என்பது அனுபவத்தில் கண்ட உண்மை.

நேர்மறையான சொற்களைப் பயன்படுத்துவதோடு தெளிவாகச் சுருக்கமாக குழப்பமின்றி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம். சொல் மயக்கம், பொருள் மயக்கம், பிழையின்றி பேசுதல் போன்றவை குறித்து பள்ளியில் மொழி இலக்கண வகுப்புகளில் கேட்டிருப்போம். அவற்றைத் திறம்பட கற்றுக்கொள்வது நல்ல மதிப்பெண்களை பெறுவதற்கு மட்டுமல்ல நல்வாழ்வுக்கும் அவசியம் என்பதை அந்த வயதில் புரிந்துகொண்டோமா என்பது நமக்கு மட்டுமே தெரியும். காலம் கடந்துவிட்டது என்று எண்ணாமல் இன்று முதல் கற்றுக்கொள்வேன் என்ற முடிவை எடுப்போம்.

பெற்றோரின் எதிர்பார்ப்பு என்ன?

குடும்பத்தில் பெற்றோர் குழந்தைகளுக்கு இடையேயும் இணையர்களுக்கு இடையேயும் இதுபோன்ற குழப்பம் அதிக அளவில் ஏற்படுகிறது. “கொஞ்சம் பொறுப்போடு இருக்க வேண்டும்" - பிள்ளைகளின்மீது பெற்றோருக்கு இருக்கும் வழக்கமான குற்றச்சாட்டு இதுதான். ஆனால் கொஞ்சம் தோண்டித் துருவினால் பிள்ளைகள் தங்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும், சொல்வதை எல்லாம் கேட்க வேண்டும் என்பதே பெரும்பாலான பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

வீட்டில் குழந்தைகளிடம் 'அதைச் செய்யாதே', 'இதைச் செய்யாதே' என்று தடைசொல்வது அவர்களின் திறன்களை மட்டுப்படுத்துகிறது, தன்னம்பிக்கையை குலைக்கிறது, வெளியைச் சுருக்குகிறது. அதை விடுத்து, என்னென்னவற்றை ‘செய்யலாம்’ என்று விளக்குவது தனக்கு இருக்கும் மாற்றுவழிகளைக் குழந்தை அறிந்துகொள்ள உதவுகிறது.

இணையர் தனக்குப் பிடித்தாற்போல நடந்துகொள்வது இல்லை என்பதே பெரும்பாலான கணவன் அல்லது மனைவியின் குற்றச்சாட்டாக இருக்கும். எதைச் செய்தாலும் கண்டுகொள்ளாமல் இருப்பதை விரும்பவில்லை என்பதையும் கூடவே சிறிது முகமலர்ந்து சிரிப்பது, கைகளை இதமாக பிடித்துக்கொள்வது போன்ற செய்கைகளை எதிர்பார்க்கிறார்கள் என்பதையும் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் புரிந்துகொள்ளலாம்.

ஆனால் இதை வாய்விட்டு குழப்பமில்லாமல் சொல்ல கற்றுக்கொண்டோமா என்றால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். இணையர் என்பதால் நம் விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் முழுமுற்றாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பது சரியல்லவே.

இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்? முதலில் சொன்னது போல குழந்தைப் பருவம் முதல் எல்லோருக்கும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் அடுத்தவரின் முகம் கோணாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று உருப்போட வைக்கிறார்கள். நமக்கு என்ன வேண்டும் என்பது நமக்கே தெரிவதில்லை, அப்புறம்தானே எடுத்துச் சொல்வதற்கு!

தெளிவு அவசியம்

நல்லவர்களாக இருப்பதென்றால் தேவைகளைச் சுருக்கிக்கொள்வது, மறைத்துக்கொள்வது என்று நினைப்பதால் நிறைவேறாத ஆசைகளோடு வாழ்க்கையை வாழ்ந்து முடித்தவர்களின் தியாகக் கதையைச் சொல்லிச் சொல்லி நம்மையும் உசுப்பேத்துவார்கள். நாமும் அதையே வாழ்க்கையின் லட்சியமாகக் கொள்வோம். இதனால் நம்மில் பெரும்பாலானோர் மன அழுத்தத்தோடு வாழ்க்கையை ஓட்டுவோம். நல்லவர்களாக இருப்பதற்கு கிடைக்கும் பரிசு மன அழுத்தம்.

மன நிறைவு வேண்டுமென்றால் தேவைகளை தெளிவாக எடுத்துச்சொல்ல பழகுவது அவசியம். மற்றவர்கள் நம்முடன் அன்போடு பழக வேண்டும் என்பது மனிதர்கள் எல்லோருக்கும் பொதுவான விழைவு. ஆனால் என்ன செய்கைகளைச் செய்தால் அவர்கள் உங்களிடம் அன்போடு இருப்பதாக உணர்வீர்கள் என்பதைச் சொல்ல வேண்டும் அல்லவா.

நமக்கு என்ன வேண்டும் என்பதே தெரியாத காரணத்தால் பல சமயங்களில் துயரத்தோடும் மன அழுத்தத்தோடும் அவதிப்படுகிறோம். சில நேரம் ‘எப்படி வெளிப்படையாகச் சொல்வது’ என்ற தயக்கமும் சங்கடமும் வெட்கமும் நம்மைத் தடுக்கலாம். எதிர்பார்ப்பு இருக்கிறது ஆனால், என்ன வேண்டுமென்று வெளிப்படையாகச் சொல்லவில்லை. அப்படியானால், நமக்குப் பிடிக்காததைச் செய்யும் சாத்தியமும் இருக்கிறதே. அதனால் என்ன வேண்டுமென்பதைச் சொல்லாமல் இருப்பது இன்னும் அதிகமான துயரத்தை ஏற்படுத்தலாம். இதனால் தெளிவாகவும் வெளிப்படையாகவும் குழப்பமில்லாமலும் நம்முடைய தேவைகளை எடுத்துச் சொல்வது அவசியமாகிறது.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in