வாழ்க்கையே நேசம் - 29: தாழ்வான தன்மதிப்பும் அவமான உணர்வும் ஒன்றா?

வாழ்க்கையே நேசம் - 29: தாழ்வான தன்மதிப்பும் அவமான உணர்வும் ஒன்றா?

ஒருவரைச் சிறுமைப்படுத்தி இயல்பாக இயங்கவிடாமல் செய்யும் அவமான உணர்வினால் இந்தச் சமூகமே செயலற்று திகைத்துப்போய் நிற்கிறது என்று சொன்னால் அது மிகைப்படுத்தல் என்று நீங்கள் நினைக்கலாம். அவமான உணர்வு, அச்சம், குற்றவுணர்வு, ஒருவரோடு ஒருவர் ஆழமான தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள முடியாமல் போகும் நிலை இவையெல்லாம் இந்தச் சமூகத்தில் புரையோடி இருப்பதை நாம் உணரவே இல்லை.

பணியிடமோ வீடோ ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்றால் என்ன செய்கிறோம்? அதைச் சுட்டிக்காட்டி 'இதைக்கூடச் செய்ய முடியவில்லையா' என்கிறோம். இதில் அவமானப்படுத்தும் நோக்கம் பொதிந்திருப்பதை நம்மில் எத்தனை பேர் உணர்ந்திருப்போம்? அந்த அளவுக்கு அடுத்தவரை அவமானப்படுத்துகின்ற பேச்சும் செயலும் ஊறிப்போய்விட்டது.

வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்யும் எளிய பணி என்றே வைத்துக்கொள்ளலாம். எதனால் அந்தப் பணியைப் பணியாள் ஒழுங்காகச் செய்யவில்லை என்பதை யோசிக்க யாருக்கும் அவகாசம் இருப்பதில்லை. கூட்டுவதற்குப் பயன்படுத்தும் துடைப்பம் மழுங்கி இருக்கலாம். பணியாளரின் உடல் நலமின்றி இருக்கலாம். கண் பார்வை மங்கியிருக்கலாம். அறையில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருக்கலாம். காற்றடித்து குப்பை பறந்திருக்கலாம். இப்படி என்ன காரணம் என்று தெரிந்துகொள்வதை விடுத்து முன்முடிவோடு பணி செய்பவரின் திறனை அவமானப்படுத்தும் விதமாகப் பேசுவது இயல்பாகிவிட்டது. கூடவே, அவரிடம் நம்முடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை எந்தவிதமான மிகை உணர்வும் இல்லாமல் சொல்லலாம் என்பதுகூட நமக்குத் தெரியவில்லை.

எனக்குத் தெரிந்த பெண்மணி நிகழ்கால அரசியலில் ஆர்வமுள்ளவர். கணவரின் நண்பர்களோடும் உறவினர்களோடும் அரசியல் நிகழ்வு, போக்கு ஆகியவை குறித்து அலசி ஆராய்ந்து விவாதிப்பார். ஆனால் அவருடைய கணவருக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. "என் உறவினர் ஒரு பேராசிரியர், அரசியல் வல்லுநர், அவரிடம் விவாதித்து உன் முட்டாள்தனத்தைக் காட்டுகிறாயே. அவமான உணர்வில் கூனிக்குறுகிவிட்டேன்" என்று அந்தப் பெண் என்னிடம் சொன்னார். இதை என்னிடம் பகிர்ந்துகொள்கையில் உள வலி அவரின் உடல்மொழியில் தெளிவாக வெளிப்பட்டது.

தெரிந்தவர் ஒருவரின் மருமகள் குழந்தை பிறந்த பின்னர் வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். அது அவருடைய விருப்பம், திறன் ஆகியவற்றைச் சார்ந்த தனிப்பட்ட விஷயம் என்று யாரும் நினைப்பதில்லை. 'குழந்தையைப் பார்த்துக்கொள்ள முடியவில்லை என்றால் எதற்காகப் பெற்றுக்கொண்டாய்?', 'கணவனுக்குக் கிடைக்கும் ஊதியத்தில் குடும்பம் நடத்தத் தெரியாதா?' 'இத்தனை சுயநலமாக இருக்கிறாயே' என்று பலவிதமாகச் சாடினார்கள். எந்தக் குற்றவுணர்வும் இன்றி ஒரு பெண்ணின் தாய்மை உணர்வைக் கேள்விக்கு உட்படுத்தி அவமானப்படுத்தும் உரிமையை நாமே எடுத்துக்கொள்கிறோம். ‘மீண்டும் பணிக்குச் செல்ல முடிவெடுத்த நான் ஒரு நல்ல அம்மா இல்லையோ’ என்று காலம் முழுவதும் அந்தப் பெண் கூனிக்குறுகி முடங்கச் செய்கிறோம்.

அந்த நண்பரின் மேலாளர், அலுவலக வேலையைத் தனிப்பட்ட வாழ்க்கை எந்த வகையிலும் பாதிக்கக்கூடாது என்ற கொள்கை கொண்டவர். அதனாலேயே மேலாளரிடம் தன்னைப் பற்றிய எந்த விஷயத்தையும் பகிர்ந்துகொள்வதில்லை நண்பர். இருந்தாலும் நண்பரின் தந்தை நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் இருந்தபோது அது குறித்துத் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இடையில் சில நாட்கள் விடுமுறை தேவைப்படலாம் என்பதும் ஒரு காரணம். ஆனால் மேலாளர் அலுவலகலக் கூட்டத்தில் எல்லோர் முன்னிலையிலும் குறிப்பிட்ட வேலையொன்றை முடிக்க நண்பரை நம்பிப் பயனில்லை என்ற பொருள்படப் பேசினார். இதை எதிர்பார்க்காத நண்பரோ என்ன செய்வது என்று புரியாமல் அவமான உணர்வில் உறைந்தார்.

அன்றாட வாழ்க்கை அலுவலகப் பணியையோ மற்ற வேலைகளையோ கடமைகளையோ பாதிக்கக்கூடாது என்று சொல்வது எத்தனை அபத்தமான சிந்தனை. அதுவும் குடும்பத்தில் ஒருவர் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது அக்கறையோடும் பரிவுணர்ச்சியோடும் நடந்துகொள்வதற்கு மாறாக அதைக் குத்திக்காட்டி அவமானத்தையும் அச்சத்தையும் ஊட்டுவது மனிதாபிமானம் அற்ற செயல். அந்த மேலாளர் மட்டுமல்ல, வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் இதுபோன்ற பல மனிதர்களைச் சந்தித்திருப்போம்.

இந்த நிகழ்வுகளில் இருக்கும் ஒற்றுமை என்ன என்பதைக் கூர்ந்து கவனித்தால் ஒரு விஷயம் புலப்படும். இவையெல்லாமே நம்முடைய திறமையின்மையால் நடக்கும் ஒரு விஷயம் என்றும் நம்முடைய தாழ்வான தன்மதிப்பால் இப்படி உணர்கிறோம் என்றும் மற்றவர்கள் நம்பச் செய்வார்கள். ஆனால் இது உண்மையில் இந்தச் சமூகத்தை பீடித்த அவமானப்படுத்தும் நோய் என்கிறார்கள் உளவியல் வல்லுநர்கள்.

தாழ்வான தன்மதிப்புக்கும் அவமான உணர்வுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? தன்மதிப்பு என்பது நம்முடைய பலம் பலவீனம் குறைபாடு இவற்றைத் தெரிந்துகொண்ட பிறகு நம்மை நாமே கணித்துக்கொள்வது. நம்முடைய தற்போதைய நிலை, நாம் எட்ட வேண்டிய இலக்கு இவை எல்லாம் தெளிவாகத் தெரியும்.

அவமானம் என்பது ஓர் உணர்வு; இது ஏற்படுகையில் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டது போலத் தோன்றும். இந்தச் சமூகம் சுட்டும் உச்சங்களை, வெற்றிகளை எட்ட முடியாமல் போனால் நம்மை திறனற்றவராக, தோல்வியாளராக உணரச் செய்யும். அவமானத்தில் துவளும்போது நம்முடைய பலம் குறைபாடு ஆகியவை குறித்தும் தெளிவாகச் சிந்திக்க முடியாது. நம் குறைகளும் பலவீனங்களும் மட்டுமே புலப்படும்.

மேலே சுட்டிய நிகழ்வுகளில் தாய்மை உணர்வு, குழந்தையை வளர்க்கும் பொறுப்பு, வேலை இடத்தில் நாம் வெளிக்காட்டும் பிம்பம், எல்லாவற்றையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்ற கட்டாயம், மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசுவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒருவரை அவமானப்படுத்தி நிலைகுலையச் செய்யும் உத்தி ஆகியவை வெளிப்படையாகத் தெரிகின்றன. குழந்தை வளர்ப்பு குறித்து பெற்றோரை, அதிலும் குறிப்பாக, தாய்மாரை அவமானப்படுத்துகிறோம். பணியிடத்தில் தனிப்பட்ட பிரச்சினைகளைப் பற்றி பேசவே கூடாது என்று பணியாளர்களை அவமானப்படுத்துகிறோம். பணியே வாழ்க்கையில்லை என்று ஒரு பக்கம் சொன்னாலும் இன்னொரு பக்கம் பணியே வாழ்க்கை முழுவதையும் ஆக்கிரமித்து இருக்கும் அவலத்தைப் பார்க்கிறோம். ஒருவரின் தோற்றம், பேச்சு, செயல் இவை எல்லாவற்றையும் அவமானம் என்ற உணர்வைத் தூண்டுவது மூலம் கட்டுப்படுத்த முயல்கிறோம்.

இங்கிதமில்லாமல் பேசுவதாலோ தாழ்வான தன்மதிப்பினாலோ ஏற்படுவது என்று விளக்கம் கூறி அவமானத்தை அவ்வளவு எளிதாக புறந்தள்ளிவிடக் கூடாது. நம் சமூகத்தைச் சிதைக்கும் ஒரு விஷயமாக அணுக வேண்டும்.

(புதன்தோறும் பேசுவோம்)

கார்குழலி, எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர். பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் கவிதைகளும் தொடர்களும் மொழியாக்கங்களும் வெளியாகி வருகின்றன. தொடர்புக்கு: karkuzhali.sreedhar@gmail.com

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in