இதே தேதி... முக்கியச் செய்தி: எழுத்தாளர் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி நினைவுதினம்

யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி
யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி

வாழ்நாள் முழுவதும் சமூக ஏற்றத்தாழ்வுக்கு எதிராகவும் மதச்சார்பின்மைக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்த அந்த எழுத்தாளர் மறைந்தபோது, சிலர் அதைக் கொண்டாடித் தீர்த்தனர். அந்த அளவுக்கு அவரது சிந்தனைகளும் எழுத்தும் மத அடிப்படைவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தன. அவர் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி.

1932 டிசம்பர் 21-ல் கர்நாடகத்தின் ஷிமோகா மாவட்டத்தில் தீர்த்தஹள்ளி தாலுகாவின் மேளிகே எனும் ஊரில் கன்னட பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி. தான் ஆங்கில இலக்கியம் பயின்ற மைசூரு பல்கலைக்கழகத்திலேயே ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர் அவர். பின்னர் பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இந்தியா திரும்பிய பின்னர் ஆங்கிலப் பேராசிரியர், துணை வேந்தர், சாகித்ய அகாடமி தலைவர், நேஷனல் புக் ட்ரஸ்ட் தலைவர், இந்தியத் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் தலைவர் எனப் பல்வேறு பதவிகளை அலங்கரித்திருக்கிறார்.

சோஷலிஸ சிந்தனையாளர் டாக்டர் ராம் மனோகர் லோஹியாவின் தாக்கம் அவருக்கு உண்டு. சாந்தவேரி கோபால கெளடா தலைமையிலான ககோடு இயக்கமும் அவருக்குப் பெரும் தாக்கம் தந்தது. தான் சந்தித்த சமூகப் போராளிகளைத் தனது படைப்புகளில் உயிரோட்டத்துடன் படைத்துக் காட்டினார்.

அவர் எழுதிய முதல் நாவலான ‘சம்ஸ்காரா’ (1965), சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத்தாழ்வு, மத அடிப்படையிலான சிக்கல்கள் எனப் பல்வேறு விஷயங்களைப் பேசியது. அதனாலேயே பெரும் சர்ச்சைகளும் வெடித்தன.

அந்த நாவலை பட்டாபி ராம ரெட்டி திரைப்படமாக எடுத்தார். கன்னட சினிமாவின் புதிய அலையைத் தொடங்கிவைத்த படமாக அது அமைந்தது. அந்த வகையில் கன்னட இலக்கியத்தில் மட்டுமல்லாமல், கன்னட சினிமாவிலும் புதுப் பாய்ச்சலை நிகழ்த்தினார் யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி. இப்படத்தின் வசனங்களை எழுதி முக்கியப் பாத்திரத்தில் நடித்தவர் கன்னடக் கலையுலகின் இன்னொரு நட்சத்திரமான கிரிஷ் கர்னாட்.

யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி எழுதிய ‘பாரதிபுரா’ (1973) நாவலும் பெரும் கவனம் ஈர்த்தது. நவீன வாழ்க்கையில் சாதி மற்றும் வர்க்கம் சார்ந்த தாக்கங்கள் குறித்துப் பேசிய நாவல் அது. ‘அவஸ்தே’, ’பவா’, ‘திவ்யா’ போன்ற நாவல்களும், ஏராளமான சிறுகதைத் தொகுப்புகளும் அவரது படைப்பாற்றலைப் பறைசாற்றின.

ஆங்கிலப் பேராசிரியர் எனும் முறையில் மாணவர்களுக்கு உலக இலக்கியங்களை வாசித்து தன்னைச் செதுக்கிக்கொண்டார். அவற்றை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். கன்னட இலக்கிய உலகின் மேம்பாட்டுக்கு அவையெல்லாம் உதவின. கன்னட அறிவுலகத்தையும்தான்!

ஞானபீட விருது, பத்மபூஷண் விருது எனப் பல்வேறு விருதுகளை அலங்கரித்தவர் அவர். தெற்கு ஆசிய இலக்கிய விருதான ‘டிஎஸ்சி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது. படைப்புலகத்தில் அவரது பங்களிப்பை அங்கீகரிக்கும் 2013-ல் மேன் புக்கர் பரிசுக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், அமெரிக்க எழுத்தாளரான லிடியா டேவிஸுக்கு அந்த விருது வழங்கப்பட்டது. எனினும், அந்த விருதுக்கு இறுதிச்சுற்று வரை சென்ற 10 இந்திய எழுத்தாளர்களில் அவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் விடுதலை, மகளிர் உரிமைகள் என சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகத் தனது எழுத்தாற்றலை ஆயுதமாகப் பயன்படுத்திய யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி, அமைப்புகளில் அங்கம் வகிப்பதைக்காட்டிலும் சுயாதீனமாகச் செயல்படவே விரும்பினார். எனினும், பல்வேறு சர்வதேச இலக்கிய அமைப்புகளில் அங்கம் வகித்தார்.

மத அடிப்படைவாதத்துக்கு எதிரான கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்த யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி, பாஜகவைக் கடுமையாக விமர்சித்துவந்தார். குறிப்பாக, மோடி பிரதமரானால் இந்தியாவில் தொடர்ந்து வசிக்கப்போவதில்லை என்று அவர் கூறியது பாஜகவினரைக் கொந்தளிக்கவைத்தது. காங்கிரஸையும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தையும் அண்டி வாழ்ந்தவர் என பாஜகவினர் அவரை விமர்சித்தனர். இதற்கு முன்னர் நேரு, இந்திரா காந்தி போன்ற தலைவர்களையும் தான் விமர்சித்ததுண்டு; ஆனால் இந்த அளவுக்கு எதிர்ப்புகளைச் சந்தித்ததில்லை என அவர் கூறியிருந்தார். “காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மக்கள்விரோத அரசு அல்ல என்றாலும் ஊழல் மலிந்த அரசு. அது தண்டிக்கப்பட வேண்டும்” என்று கூறிய அவர், அதற்காக மோடி போன்ற ஒருவர் பிரதமராவதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிட்டிருந்தார்.

2014 மக்களவைத் தேர்தலின் வாக்குக் கணிப்புகள் (எக்ஸிட் போல்ஸ்) மோடி பிரதமராவது நிச்சயம் எனத் தெரிவித்ததையடுத்து, ஆனந்தமூர்த்திக்கு அழுத்தம் அதிகரித்தது. அவர் பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி ’நமோ பிரிகேட்’ எனும் மோடி ஆதரவுக் குழு அவருக்கு இலவச டிக்கெட் அனுப்பியது. மோடி வெல்வது உறுதி எனத் தெரிந்ததும் தனது நிலைப்பாட்டைச் சற்றே மாற்றிக்கொண்ட ஆனந்தமூர்த்தி, உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறு கூறிவிட்டதாகவும் இந்தியாவைவிட்டு வேறு நாட்டுக்குச் செல்லும் எண்ணம் இல்லை என்றும் கூறினார். அதேசமயம், இந்தியா ஒரு வலிமையான நாடாக மாறுவதைக் காட்டிலும், இணக்கமான நாடாக இருக்க வேண்டும் என்றே விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.

2014 ஆகஸ்ட் 22-ல், யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அப்போது அவரது மரணத்தை பாஜகவினர் கொண்டாடினர். மங்களூரு, சிக்மகளூர் பகுதிகளில் அவரது மரணத்தைக் கொண்டாடும் விதமாக வெடி வெடித்ததாக பாஜகவினர் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

அவரது மரணத்துக்கு கர்நாடக அரசு 3 நாட்களுக்குத் துக்கம் அனுஷ்டித்தது. பிரதமர் மோடியும் அவரது மறைவுக்கு அனுதாபம் தெரிவித்தது கவனிக்கத்தக்கது.

ஆகஸ்ட் 22: யூ.ஆர்.ஆனந்தமூர்த்தி நினைவுதினம்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in