சிறகை விரி உலகை அறி-43: தீராத தேடல் தெவிட்டாத பயணம்!

புனித பவுஸ்தினா கோயில்
புனித பவுஸ்தினா கோயில்

முகங்களைப் பார்த்த அளவுக்கு யாரின் கால்களையும் நாம் பார்த்ததில்லை. முகங்கள் ரசிக்கச் செய்யும். முன்முடிவுகள் முளைக்கும். கால்களோ கதைகள் சொல்லும். கால்களில்தான் எத்தனை வகைகள். விரைந்து நடக்கும் முழுப்பாதம். விரைந்தோடும் முன் பாதம். சலனமற்று கடக்கும் பூப்பாதம். தத்திச் செல்லும் குறும் பாதங்கள்.

போலந்து செல்லும் தொடர்வண்டியில் அமர்ந்து, நிலையத்தில் நடக்கும் கால்களையேப் பார்த்துக்கொண்டிருந்தேன். மதியம் உணவருந்திய இடத்தில் ஹங்கேரி நாணயத்தில்தானே சில்லறை கொடுத்தார்கள்... வேறு நாட்டில் பயன்படுத்த இயலாதே! சில்லறைக்கு ஐஸ் கிரீம் வாங்கினேன். சாப்பிட்ட வாய் மரத்திருந்தது.

Eurail Global Pass மாதிரி
Eurail Global Pass மாதிரி

சிக்கனப் பயணம்

தொடர்வண்டிச் சலுகை அட்டையில் ஐரோப்பாவை சிக்கனமாகச் சுற்றிவரலாம். ஐரோப்பாவிலேயே இருப்பவருக்கு Interrail Pass. ஒரு நாட்டுக்கு மட்டும் பயணிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு One country pass. 33 ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணிக்க விரும்பினால் Eurail Global Pass. சலுகை அட்டையைத் தேர்வு செய்ய தீரா ஆவலும் தேடலும் அவசியம்.

1.எத்தனை நாள் பயணம்: இரண்டு மாதத்தில் 10 நாட்கள்; இரண்டு மாதத்தில் 15 நாட்கள்; ஒரு மாதத்தில் 4 நாட்கள்; ஒரு மாதத்தில் 5 நாட்கள்; ஒரு மாதத்தில் 7 நாட்கள்; ஒரு மாதத்தில் 15 நாட்கள் என சலுகை அட்டைகள் உள்ளன. இதை Flexipass என்பர். தொடர்ந்து 22 நாட்கள், 1 மாதம், 2 மாதம், 3 மாதங்களுக்கான அட்டைகளும் கிடைக்கின்றன. ஒவ்வொரு நகரத்திலும் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி சுற்றிப் பார்த்துவிட்டு பயணத்தைத் தொடர்வதால், எல்லா நாட்களும் தொடர் வண்டியில் நாம் பயணிப்பதில்லை. Flexipass என் தேர்வு. நான் இரண்டு மாதத்தில் 15 நாட்கள் சலுகை அட்டை வாங்கினேன்.

Eurail வரைபடம்
Eurail வரைபடம்

2. ஒரு நாள் கணக்கு: ஒரு நாள் என்பது அதிகாலை 12.00 மணி முதல் நள்ளிரவு 11.59 வரை. Eurail சலுகை அட்டையை ஏற்றுக்கொண்ட தொடர்வண்டியில், குறிப்பிட்ட நாளில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் எத்தனை தொடர்வண்டியில் வேண்டுமென்றாலும் பயணிக்கலாம். நான் சென்றபோது ‘மாலை 7 மணி விதி’ இருந்தது. இப்போது இல்லை. தற்போது உள்ள விதிப்படி, நள்ளிரவுக்கு முன் கிளம்பும் தொடர்வண்டியில் எப்போது வேண்டுமென்றாலும் புறப்பட்டு, தொடர்வண்டி மாறாமல் இறங்க வேண்டிய இடத்தில் இறங்கினால், புறப்பட்ட நாள் மட்டும் கணக்கில் சேரும். சென்றடைந்த நாள் கணக்கில் சேராது. ஒருவேளை, வேறு தொடர்வண்டியில் மாறினால், புறப்பட்ட நாள், சென்றடைந்த நாள் இரண்டும் கணக்கில் சேரும்.

3.முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு: முதல் வகுப்பு பெட்டிக்கு சலுகை அட்டை வாங்கியிருந்தால், முதல் அல்லது இரண்டாவது வகுப்பில் பயணிக்கலாம். இரண்டாம் வகுப்பு அட்டைக்கு முதல் வகுப்பில் பயணிக்க இயலாது. இரண்டாம் வகுப்பே மிகவும் வசதியாகத்தான் இருக்கும்.

4. வாங்குதல்: இந்தியாவில் உள்ள முகவரிக்கோ, அல்லது ஐரோப்பாவில் தங்கும் முகவரிக்கோ அனுப்பச் சொல்லலாம். வாங்கிய தேதியில் இருந்து 11 மாதத்திற்குள் பயணிக்க வேண்டும். இயலாத சூழலில், திருப்பி கொடுத்தால் 85% பணம் கிடைக்கும். அடுத்தவருக்கு மாற்றிக் கொடுக்க விரும்பினால் கூடுதலாக 15 யூரோ கட்ட வேண்டும். வாங்கும்போதே, செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டாம். திருப்பிக் கொடுக்கவும் இயலாது. ஐரோப்பா சென்ற பிறகு செய்துகொள்ளலாம். (தற்போது Mobile pass கொடுக்கிறார்கள்).

5.செயல்பாட்டுக்குக் கொண்டு வருதல்: 33 நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில், தொடர்வண்டி நிலையத்திற்குச் செல்ல வேண்டும். உங்களைப் பற்றிய தகவல்களை அட்டையில் குறிப்பார்கள். கட்டாயம் அச்சு பதிந்து வாங்க வேண்டும். இதைக் குறித்து அறிந்திருந்ததால், புடாபெஸ்ட்டில், கையில் வாங்கியதும் பார்த்தேன். அச்சு பதிக்க மறந்துவிட்டார்கள். நினைவூட்டியபிறகு பதித்தார்கள்.

6. எப்படி பயன்படுத்துவது: ஒவ்வொரு முறையும் தேதி, எங்கிருந்து எங்கே போகிறோம், எத்தனை மணி தொடர்வண்டி போன்ற தகவலை அட்டையுடன் உள்ள படிவத்தில் குறிக்க வேண்டும். பரிசோதகர் அதில் கையெழுத்திடுவார். நாம் குறித்திராவிட்டால் தண்டனைக் கட்டணம் பெறும் உரிமை அவருக்கு உண்டு.

7.செயலி: Eurail/Interrail Rail Planner App தரவிறக்கம் செய்யுங்கள். இணையவசதி இல்லாவிட்டாலும் அட்டை செல்லுபடியாகும் தொடர்வண்டியின் பெயர், கால அட்டவணை அனைத்தையும் இதில் அறியலாம்.

8.முன்பதிவு: சில தொடர்வண்டிகளில், அட்டையைப் பயன்படுத்தி கண்டிப்பாக முன்பதிவு செய்ய வேண்டும். வேறுசில வண்டிகளில் விரும்பினால் முன்பதிவு செய்யுங்கள் என்பார்கள். முன்பதிவுக்கு கூடுதலாக சிறிது கட்டணம் கட்ட வேண்டும். மாறி மாறிச் செல்வதில் சிரமம் இல்லையென்றால் முன்பதிவு இல்லாமலேயே பயணிக்கலாம். முன்பதிவுக்கு பணம் கட்டினாலும் சலுகை அட்டை மிகவும் சிக்கனமே. அதிலும், கூடுதலான நாட்கள், நாடுகள், நகரங்கள் என திட்டமிட்டால் கொண்டாட்டமே.

பவுஸ்தினாவின் அறைக்கு வெளியே ஜன்னலில் மலர்கள்
பவுஸ்தினாவின் அறைக்கு வெளியே ஜன்னலில் மலர்கள்

பயணம் தொடங்கியது

தொடர்வண்டியில் எனக்கருகே இங்கிலாந்து இளைஞர் அமர்ந்திருந்தார். சலுகை அட்டை வைத்திருந்தார். “முன்பதிவு செய்துள்ளீர்களா?” என கேட்டேன். “இல்லை. இடையிடையே இறங்கிச் செல்வேன். முன்பதிவு செய்யாமலேயே அதிக நாடுகளைப் பார்ப்பேன்” என்றார். முதல்முறை சென்றதாலும், இரவில் தடுமாறக்கூடாது என்பதாலும் நான் முன்பதிவு செய்திருந்தேன். ஆழ்ந்து தூங்கி காலை 7 மணிக்கு, போலந்து நாட்டின் கிராக்கோ நகரத்தில் இறங்கினேன்.

போலந்திலும் ஒருநாள் பயணமே என் திட்டம். “தொடர்வண்டி நிலையத்துக்கு அருகிலுள்ள ஹோட்டலில் காத்திருங்கள். 8.30-க்கு அழைத்துச் செல்கிறோம். போலந்து பணம்தான் (zloty) தர வேண்டும்” என சுற்றுலா நிறுவனத்தினர் ஏற்கெனவே மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்கள். தொடர்வண்டி நிலையத்தில், பல் துலக்கி, ஹோட்டல் முற்றத்தில் காத்திருந்தேன். 8.45 ஆனது. யாரும் வரவில்லை. இலவச அருகலையைப் பயன்படுத்தி அழைத்தேன். சாலையோரம் என்னை தேடிக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். வெளியில் சென்றேன் வாகனம் நின்றது. அன்றைய நாளில், குறிப்பிட்ட அந்த சுற்றுலாவிற்கு முன்பதிவு செய்திருந்தவன் நான் ஒருவன்தான். எனவே, சொந்த வாகனத்தில் செல்வதுபோல ஓட்டுநருடன் பயணித்தேன்.

புனித பவுஸ்தினாவும், வெள்ளைப் பெட்டியில் அவரது எலும்புகளும்.
புனித பவுஸ்தினாவும், வெள்ளைப் பெட்டியில் அவரது எலும்புகளும்.

மரிய பவுஸ்தினா

போலந்தில் 1925 ஆகஸ்ட் 25-ல் பிறந்தவர் மரிய பவுஸ்தினா. தொடக்கப்பள்ளியில் 3 ஆண்டுகள் மட்டும்தான் படித்தார். இளம் வயதில் துறவு மடத்தில் சேர்ந்தார். இயேசு கிறிஸ்து, இறை இரக்க ஆண்டவராக பவுஸ்தினாவுக்கு பலமுறை காட்சி கொடுத்தார். தோட்டம், சமையலறை, வாயிற்காப்பாளர் போன்ற எளிய வேலைகளைச் செய்த பவுஸ்தினா, காசநோயினால் 33 வயதில் இறந்தார். அவர் கடைசி காலத்தில் கிராக்கோவில் வாழ்ந்த இடத்துக்குச் சென்றேன். கல்லறையைப் பார்த்தேன். அதில் அவரின் உடல் இல்லை. எலும்புகளைச் சேகரித்து, ஒரு பெட்டியில் கோயிலுக்குள் வைத்துள்ளார்கள்.

அவர் வாழ்ந்த அறையை மடத்துக்குள் சென்று பார்க்க இயலாது. எனவே, இரண்டாவது மாடியில் அவரின் அறைக்கு வெளியே மலர்களால் அலங்கரித்துள்ளார்கள். ஜெபிக்கவும், தன்னையே வருத்திக்கொள்ளவும் அவர் பயன்படுத்திய பொருட்களை திருப்பயணிகள் பார்ப்பதற்காகத் தனி அறையில் வைத்திருக்கிறார்கள். பார்த்தேன்.

பவுஸ்தினாவின் கல்லறை
பவுஸ்தினாவின் கல்லறை
பவுஸ்தினாவின் அறையில் இருந்தவை
பவுஸ்தினாவின் அறையில் இருந்தவை

புத்தகம் என்ன செய்யும்?

மரத்தடியில் திருப்பயணிகள் அமர்ந்திருந்தார்கள். அருகில் சென்றேன். பவுஸ்தினாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லத் தொடங்கிய ஓர் அருட்சகோதரி, “பவுஸ்தினாவுக்கு, இறை இரக்கத்தின் ஆண்டவராக இயேசு பலமுறை காட்சி கொடுத்திருக்கிறார். அப்போது, தன் இறை இரக்கத்தை உலகம் முழுவதும் பரப்பும்படி சொன்னார். பவுஸ்தினாவும் ஒப்புக்கொண்டார். காசநோயால் துன்புற்ற, துறவு மடத்தில் இருந்த அருட்சகோதரியால் எப்படி உலகம் முழுவதும் இப்பணியைச் செய்ய இயலும்?” என கேட்டார்.

யாரிடமும் பதிலில்லை. “புத்தகத்தின் வழியாக இயலும். தொடக்கப்பள்ளிகூட முழுவதும் முடிக்காத பவுஸ்தினா தான் கண்ட காட்சிகள் அனைத்தையும், தன் ஆன்மிக உள்ளுணர்வையும் எழுதி வைத்தார். அது Diary: Divine Mercy in My Soul எனும் தலைப்பில் புத்தகமாக வெளியாகியுள்ளது. புத்தகம் வழியாக, உலகம் முழுவதும் பவுஸ்தினா அறிவிக்கிறார்” என்றார்.

கொஞ்சம் சிரிங்க பாஸ்

நேரமாகிவிட்டதால் ஓட்டுநரின் முகமே சரியில்லை. “அடுத்த இடத்தில் நுழைவுச்சீட்டு வாங்கியுள்ளேன். 12 மணிக்குள் செல்ல வேண்டும். 33 கி.மீ. பயணிக்க வேண்டும். நீங்கள் தாமதம்” என்றார். இருவர் மட்டுமே இருக்கும் இடத்தில் பதில் கருத்து பாதகமே என்பதால், அமைதி காத்தேன். சிறிது நேரம் கழித்து, பவுஸ்தினா பற்றியும், அவரின் புத்தகத்தில் வாசித்ததைப் பற்றியும் ஓட்டுநரிடம் சிலாகித்துப் பேசினேன். எங்கள் ஊர் பெண்ணைப் பற்றி உங்களுக்கு இவ்வளவு தெரிந்துள்ளதே என வியந்தார். அவரின் புன்னகைக்கு வழிவிட்டு வருத்தம் பறந்துபோனது.

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி:

பதிலற்ற கேள்விகளுக்கொரு பதில்!

நமக்கு தாங்கொண்ணா துயரம் நேர்கின்றபோது, ‘ஏன் எனக்கு மட்டும் இப்படி?’ என்கிற கேள்வி எழும். சில இழப்புகளுக்கு பதிலோ, ஆறுதலோ நம்மால் சொல்லவும் இயலாது. அவ்வேளைகளில், பவுஸ்தினாவின் நாட்குறிப்பில் உள்ள ஒரு வரி எனக்கு ஆறுதல் உரைக்கும். தன் காசநோய் பற்றிச் சொல்லும் பவுஸ்தினா, “ஓர் ஆன்மாவைத் தூய்மைப்படுத்த தனக்குப் பிடித்தமான ஏதாவதொரு வழியைக் கடவுள் பயன்படுத்துகிறார்” என எழுதியுள்ளார். அதாவது, நம்மைப் பக்குவப்படுத்த, தனக்குப் பிடித்த ஏதோ ஒரு வழியை காலமும் அல்லது கடவுளும் தருகிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in