சிறகை விரி உலகை அறி- 15: துணிந்து நில்... தொடர்ந்து செல்!

சிறகை விரி உலகை அறி- 15: துணிந்து நில்... தொடர்ந்து செல்!
ஹோ சி மின் நகரின் அஞ்சலகத்தில் உள்ள தொலைபேசி கூண்டும், கடிகாரங்களும்...

இலக்கியம், பாராட்டு, காதல், துயரம், நம்பிக்கை அனைத்தையும் சுமந்து வரும் ஆவணம்தான் கடிதம். கடிதங்கள் இலக்கியமாகின, இயக்கமாக்கின, வரலாறாகின, வாழ்வின் கடைசி காலத்தில் உயிர் காக்கும் நினைவுகளாகின. இதன் சாட்சியாக ஓர் அஞ்சலகம் ஹோ சி மின் நகரில் இயங்குகிறது.

அஞ்சலக அரண்மனை

பிரான்ஸ் நாட்டின் காலனியாகத் தெற்கு வியட்நாம் உருவான பிறகு, பிரான்ஸ் நாட்டு கட்டிடக் கலை நிபுணர் மரிய-ஆல்பிரட் ஃபவுல்ஹாஸ் வியட்நாமில் குடியேறினார். தலைமைக் கட்டிடக் கலை நிபுணராகப் பொறுப்பேற்றார். அவர் கடைசியாகக் கட்டிய மத்திய அஞ்சலகத்துக்குள் சென்றோம். கோதிக் மற்றும் மறுமலர்ச்சி கால கலைநுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த அஞ்சல் நிலையம்.

பிரம்மாண்டமான மைய மண்டபத்துக்குள் நுழைந்ததும், எதிரே உள்ள சுவரில் தொங்குகின்ற ஹோ சி மின் உருவப்படம் வரவேற்கிறது. இருபக்கச் சுவர்களிலும் 2 வரைபடங்கள் இருக்கின்றன. ஒன்று, 1892-ல் சைகோன் மாகாணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் குறித்த தகவல்களையும், மற்றொன்று, 1936-ல் வியட்நாம் மற்றும் கம்போடியாவில் இருந்த தந்தி மற்றும் அஞ்சல் பாதைகளையும் காட்டுகின்றன. வெளிநாடுகளுக்குப் பேசுவதற்காக 14 தொலைபேசிக் கூண்டுகள் இப்போதும் செயல்பாட்டில் உள்ளன. மாஸ்கோ, டோக்கியோ, பெய்ஜிங், சியோல், கலிஃபோர்னியா, லண்டன், பாரிஸ் நகரங்களின் நேரங்களைக் காட்டும் கடிகாரங்கள் தொங்குகின்றன.

ஹோ சி மின் உருவப் படத்துக்குக் கீழே அமர்ந்து, கடிதம் எழுதத் தெரியாதவர்களுக்கு எழுதிக்கொடுக்கும் வேலையை 28 ஆண்டுகளாக, 89 வயதிலும் (2019) செய்துகொண்டிருந்தார் ட்வாங் வான்கோ (Duong Van Ngo). இவருக்கு பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழிகளும் தெரியும். வியட்நாமின் ஓவியங்கள், கலைப்பொருட்கள், அஞ்சல் அட்டைகள், ஆடைகள் எனப் பல்வேறு பொருட்களை விற்கும் கடைகள் அஞ்சலகத்தைக் கவித்துவமாக்கியுள்ளன. சுற்றுலாப் பயணிகள் நினைவுப் பரிசுகளை வாங்குவதுடன், அஞ்சல் அட்டை எழுதி வெளிநாட்டில் வாழும் தம் குடும்பத்தினருக்கு அனுப்புவது அற்புத அனுபவம். பணம் மாற்றுவதற்கும் அங்கே கடைகள் உள்ளன.

வேதிமருந்தின் விளைவுகள்

அஞ்சலகத்தைப் பார்த்துவிட்டு, வழிகாட்டியுடன் கூ ச்சி மாவட்டத்துக்குப் புறப்பட்டோம். போர்க்களம் வலியவர்களுக்கானது என்கிற கற்பிதத்தை வியட்நாம் வீரர்கள் உடைத்த இடம் கூ ச்சி. வானை அளந்து வனத்தின் இலைகளைக் களைந்து அமெரிக்கா ஆர்ப்பரித்தபோதும், பூமியை அகழ்ந்து வடக்கு வியட்நாம் கொரில்லா படையினர் சமர் செய்த இடம். பயணத்தின்போது வரலாற்றின் மேலும் சில தகவல்களைச் சொன்னார் வழிகாட்டி.

வடக்கு வியட்நாம் கம்யூனிஸ தத்துவத்தில் பிடிப்பு உடையது. கம்யூனிஸ தத்துவங்களில் உடன்படாத அமெரிக்கா தெற்கு வியட்நாமுக்கு ஆதரவளித்தது. ஏஜென்ட் பிங்க், பச்சை, பர்ப்பிள், வெள்ளை, நீலம், ஆரஞ்ச், மற்றும் ஆரஞ்ச் II எனும் பல்வேறு வேதிமருந்துகளைத் தெளித்தது. ஏஜென்ட் ஆரஞ்ச் குறித்து, வியட்நாமிலும் மற்ற நாடுகளிலும் ஆய்வுகள் செய்யப்பட்டன. அதில், ஏஜென்ட் ஆரஞ்சானது, தோல் புற்றுநோய் ஏற்படுத்தும், கல்லீரல், சுவாசம், செரிமானம், நரம்புகள், நாளமில்லாச் சுரப்பிகள் அனைத்தையும் பாதிக்கும். உடலில் குரோமோசோம்களைப் பாதித்து குழந்தை பிறப்பைப் பாதிக்கும். பிள்ளைகளும் அவர்களின் வாரிசுகளும், முழுவதுமாக அல்லது பகுதியாக முடமாக, பார்வையற்றவர்களாக, பேச முடியாதவர்களாக, காது கேட்காதவர்களாக, மனநலம் பாதிக்கப்பட்டவர்களாக, புற்றுநோய் மற்றும் பிறப்புக்கோளாறு உள்ளவர்களாகப் பிறப்பார்கள் என தெரியவந்துள்ளது.

வேதிமருந்தானது, 30 லட்சம் முதல் தலைமுறையினரை, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட 2-ம் தலைமுறையினரை, 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 3-ம் தலைமுறையினரை இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட 4-ம் தலைமுறையினரைப் பாதித்துள்ளதாகச் சான்றுகள் கூறுகின்றன. 6 முதல் 12 தலைமுறை வரை பாதிப்பு தொடரலாம் எனச் சுற்றுப்புறச்சூழல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

கூ ச்சி சுரங்கப்பாதை

ஒன்றரை மணிநேரம் பயணித்து, கூ ச்சி மாகாண வனத்துக்குள் நுழைந்தோம். அடர்ந்த இந்த வனத்துக்குள்தான் வடக்கு வியட்நாம் கொரில்லா வீரர்கள் சுரங்கப்பாதை (Cu Chi Tunnels) அமைத்தார்கள். கூ ச்சி சுரங்க நகரம் என்பதே மிகச் சரியாகப் பொருந்தும். ஆங்காங்கே உள்ள பொந்துகளே சுரங்கத்துக்கு வாசல்கள். உடலைக் குறுக்கி முதுகு வளைத்து கைகளை ஊன்றி அல்லது ஊர்ந்தபடியேதான் செல்ல முடியும். முழு இருட்டு, வெப்பம், நசநசவென்ற ஈரம், குறைவான காற்று, முதுகு வலி அனைத்தையும் தாங்கிக்கொள்ள வேண்டும்.

தரையில் கிடக்கும் இலைகளைத் தள்ளினால், ஒரு பலகை கிடக்கிறது. பலகையைத் தூக்கினால் செங்குத்தாக ஒருவர் மட்டும் இறங்கக்கூடிய குழி இருக்கிறது. உள்ளே இறங்கிய பிறகு பலகையின் மீது இலைதழைகளைப் போட்டு, அப்படியே பலகையைத் தலைக்குமேல் வைத்து மூடிவிட்டு உடலைச் சுருக்கி அமர்ந்தால் ஒரு பொந்து தெரியும். அதன் வழியே ஊர்ந்து சுரங்கத்துக்குள் செல்ல வேண்டும். “யாராவது இறங்குகிறீர்களா?” என வழிகாட்டி கேட்டபோது, எங்கள் குழுவிலிருந்து நானே முதலில் இறங்கினேன். மறக்க முடியாத அனுபவம் அது.

சுரங்கப் பாதை வளைந்து நெளிந்து செல்கிறது. மொத்த நீளம் 250 கிலோமீட்டர். 3 அடுக்குகள் வரை உள்ளன. 10,000 பேர் வரை உள்ளே இருக்கலாம். சூரிய வெளிச்சம் பார்க்காமல் பல ஆண்டுகள் விழிகள் பல உள்ளே விழித்திருந்தன. அங்கேயே திருமணங்களும் நடைபெற்றுள்ளன. சமையல் செய்ய, உணவு உண்ண, நோயாளிகள் தங்கிட, கூட்டம் நடத்த, ஓய்வெடுக்க, பிள்ளைகளுக்குக் கற்பிக்க, ஆயுதங்கள் செய்ய, சேமிக்க எனப் பல்வேறு அறைகள் பூமிக்குள்ளேயே ஆங்காங்கே உள்ளன. இரவில் திடீரென தாக்கி அழித்துவிட்டு உள்ளே வந்துவிடுவர். ஒவ்வோர் அறைக்கும் செல்வதற்கும் வெளியேறுவதற்கும் பொந்துகள்தான் பாதை. தற்போது, சில அறைகளின் மேல்மண்ணை நீக்கிவிட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். அதைப் பார்ப்பவர்கள் ஆச்சரியத்தில் உறைந்துவிடுகிறார்கள்!

வெற்றிக்கான போர் தந்திரம்

வடக்கு வியட்நாம் கொரில்லா வீரர்கள் பின்பற்றிய 3 தந்திரங்களை வழிகாட்டியின் மூலம் அறிந்தேன். (1) புகையில்லாமல் சமைத்தார்கள்: மூடுபனியில் பூமி மூர்ச்சையாகி இருக்கும் அதிகாலை வேளையில் சமைத்தார்கள். தரையில் வாய் திறந்து இருக்கும் புகைபோக்கி புகையை வெளியேற்றியது. அது பனியா அல்லது புகையா எதிரிகள் அறியார். (2) தடம் இல்லாமல் நடந்தார்கள்: டயர்களில் செருப்பும் டியூப்களில் வாரும் செய்தார்கள். வடக்கு நோக்கி நடந்தால் தெற்குப் பக்கம் சென்றது போல் தடம் பதியும்படி செருப்பின் அடிப்பாகத்தைச் செய்தார்கள். எதிரிகள் குழம்பினார்கள். (3) சத்தம் இல்லாமல் பேசினார்கள்: மெல்லப் பேசினார்கள். சைகைகளாலும் பேசினார்கள்.

எதிரிகளைக் கொல்ல அவர்கள் பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தினார்கள். உதாரணமாக, செவ்வக வடிவில் ஆழமான ஒரு குழி. அதன் அடியில் கூர்மையான எண்ணற்ற மூங்கில் கழி. சீசா பலகையால் குழியை மூடியுள்ளார்கள். பலகை மீது இருக்கும் மண்ணில் புல் வசீகரிக்கிறது. அவ்வழியாக வரும் எதிரிகள் புல்தரைதான் என நினைத்து, பலகையின் ஒருபக்கத்தில் கால் வைத்தால் அடுத்த விநாடி குழிக்குள் விழுந்து இறப்பார்கள். நிலைக்கதவு, மடக்கு நாற்காலி, ஜன்னல் கதவுகள் ஆங்காங்கே உள்ளன. அவற்றைத் திறப்பவர்களையும், அமர்கிறவர்களையும் கூரான ஆயுதம் தாக்கிக் கொல்லும்.

சுரங்க அனுபவம்

சுற்றுலாப் பயணிகள் 100 மீட்டர் துரம் சுரங்கப் பாதைக்குள் செல்லலாம். சுரங்கத்துக்குள் தற்போது மின் விளக்கு வசதி செய்துள்ளார்கள். சுரங்கத்தையும் சிறிது பெரிதாக்கியுள்ளார்கள். சுரங்கத்துக்குள் இறங்கினேன். முழங்கால் படியிட்டு, கைகளை ஊன்றிக்கொண்டே சென்றேன். முழங்காலிட்டபடி நிமிர்ந்தாலே தலை இடித்தது. 20 அடிதூரம்கூட செல்ல இயலவில்லை. மூச்சு முட்டியது. நா வறண்டது. வியர்த்துக் கொட்டியது. எப்படித்தான் வீரர்கள் உள்ளே பல ஆண்டுகள் இருந்து போர் செய்தார்களோ! நினைத்தாலே பதறுகிறது.

தொடர்ந்து உள்ளே செல்ல இயலாதவர்களுக்காக ஒவ்வொரு 20 அடி தூரத்திலும் வெளியேறுவதற்கான படி இருக்கிறது. படியேறி வெளியே வந்தபோது, ஒரு காலப் பயணம் சென்றுவந்த உணர்வு என்னைத் தொற்றிக்கொண்டது!

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி:

வியட்நாமின் பண மதிப்பு

வியட்நாம் கரன்ஸியின் பெயர் டாங். 100, 200, 500, 1,000 என ஆரம்பித்து ஒரு லட்சம், 2 லட்சம், 5 லட்சம் வரையிலான பண மதிப்பில் டாங் கிடைக்கிறது. 1,600 இந்திய ரூபாய், 5 லட்சம் டாங்குக்குச் சமம். அதிக மதிப்பில் பணம் அச்சடிக்கிறார்கள் என்றால், பொருளாதாரம் அதலபாதாளத்தில் இருக்கிறது என்று அர்த்தம். பணம் மாற்றச் சென்றபோது, 1,000, 2,000 நோட்டெல்லாம் சும்மா அப்படியே மேசை மேல் கிடந்ததைக் கவனித்தேன். குழந்தைகள் விளையாடும் வண்ண நிற ரூபாய் நோட்டுகள் போலவே இருந்தன. குதூகலமான இளம் வழிகாட்டி சொல்லிச் சிரித்தார், “கோடீஸ்வரன் ஆக வேண்டும் என்பது என் கனவு. ஆனால், வியட்நாம் பணத்தில் அல்ல அமெரிக்க டாலரில்!”

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.