சிறகை விரி உலகை அறி-73: அருங்காட்சியகம் அல்ல, வரலாற்றுக் களஞ்சியம்!

ஒரே தட்டில் ஐந்து சிற்பங்கள்
ஒரே தட்டில் ஐந்து சிற்பங்கள்

ஒரு மரத்தில் பூ, காய், கனி ஒவ்வொன்றையும் முழுமையாகப் பார்க்கும் குழந்தையின் விழிகள் இயற்கையின் தூளிகள். பெருமழையின் துளியிலும், பேரோவியத்தின் சிறு முனையிலும், தொடுவான தொலைவிலும் அவர்களால் முழுமையைக் காண முடியும்.

பிரிட்டிஷ் அருங்காட்சியகத் தரையில் பள்ளிச் சிறுவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன், எகிப்திய மம்மியின் குடுவை இருந்தது. தங்கள் விழிகளுக்குள் குடுவையின் ஓவியங்களை உறிஞ்சி, தாளில் வரைந்தார்கள். சுற்றுலாவில் பார்க்கும் காட்சிகளை படமெடுப்பதும், காணொலியாகப் பதிவுசெய்வதும் நான் அறிந்த ஒன்று. ஆனால், பார்ப்பதை ஓவியமாக வரைந்து நினைவுகளைச் சேகரிக்கும் சுற்றுலா பயணிகளை முந்தைய ஐரோப்பிய பயணத்தில் கண்டேன். பள்ளி ஆசிரியர்களின் துணையுடன், சிறுவர்கள் வரையும் தேவலோகக் காட்சியை இப்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பார்த்தேன்.

பழங்கால சமூக முன்னேற்றம்

குழந்தைகளின் விழிகளில் மிதந்த ஆச்சரியங்களைப் பார்த்துக்கொண்டே, ‘தாலமிகள் மற்றும் எகிப்து’ பகுதிக்குள் நுழைந்தேன். வரலாற்றுக் குறிப்புகளை வாசித்தேன். ‘கி.மு. 332-ல் எகிப்தை வென்ற பேரரசர் அலெக்ஸாண்டர், அலெக்ஸாண்டிரியா நகரத்தை உருவாக்கினார். பேரரசர் இறந்ததும், மாசிடோனிய ஆளுநர் தாலமி எகிப்தைத் தன் ஆளுகைக்குள் கொண்டுவந்து கி.மு. 305-ல் அரசரானார்.

கி.மு. 3-ம் நூற்றாண்டில் அறிவு, அறிவியல் கண்டுபிடிப்புகள், நூலகம், கலங்கரை விளக்கம் அனைத்துடனும் அலெக்ஸாண்டிரியா நகரம் புகழ்பெற்றிருந்தது. அக்காலகட்டம், தாலமிகளது ஆட்சியின் உச்சமாகக் கருதப்படுகிறது. எகிப்திய கடவுள்களுடன் சேர்த்து ஒலிம்பியன் கடவுள்களையும் மக்கள் வணங்கியுள்ளனர். 2-வது மற்றும் முதல் நூற்றாண்டில் தாலமிகளின் அரசியல் அதிகாரம் குறைய ஆரம்பித்து, கி.மு. 31-ல் ஆக்டியும் போரில் 7-ம் கிளியோபாட்ரா இறந்ததும் முடிவுக்கு வந்தது.

மெய்யியலாளர்களின் சிற்பங்கள்
மெய்யியலாளர்களின் சிற்பங்கள்

சிற்பங்களின் வரலாறு

நீளமான கண்ணாடியின் மீது இருந்த 5 சிற்பங்களைப் பார்த்தேன்.

  • அம்பு வைக்கும் அம்பறாத்தூணியை முதுகில் சுமந்திருக்கும் சிறுவனின் சிற்பம் கி.மு. 50-30-ம் ஆண்டுகளில் செதுக்கப்பட்டது;

  • சுடு மண்ணாலான அஃப்ரோடைட் சிற்பம் கி.மு.150-100 காலகட்டத்தைச் சார்ந்தது;

  • டெமெடெர் (Demeter) மற்றும் அவரது மகள் பெர்செஃபான் (Persephone) ஆகியோரின் சிற்பங்கள் கி.மு.100-ல் சுடு மண்ணால் செதுக்கப்பட்டது;

  • கழுத்தணி அணிந்து (தற்போது இல்லை) அஃப்ரோடைட் ஒயிலாக நிற்கும் சுடுமண் சிற்பம் கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது.

  • அஃப்ரோடைட் வெண்கல சிற்பம் கி.மு. 200-100-ம் ஆண்டுகளில் செய்யப்பட்டது.

இச்சிற்பங்களின் அருகிலேயே, இடமிருந்து வலமாக, சாக்ரடீஸ், ஆண்டிஸ்தீனஸ், கிறிசிப்பஸ், எபிகியூரசு எனும் கிரேக்க மெய்யியலாளர்களது தலைகள் மட்டும் சிற்பங்களாகத் தூண்களின் மீது இருக்கிறன.

பழங்கால உலக அதிசயம்

‘ஹாலிகார்னாசஸ் கல்லறை மாடம்’ என்று தலைப்பிட்ட தகவலை வாசித்தேன். தென்மேற்கு ஆசியா மைனரில் உள்ள, காரியாவை ஆட்சிசெய்த ஹெகடோம்னிட் வம்சத்தைச் சேர்ந்தவர் மௌசோல்லொஸ் (Maussollos). மாவீரராக விளங்கிய மௌசோல்லொஸ் கி.மு. 371-ல் பொறுப்புக்கு வந்ததும் புதிய தலைநகரை ஹாலிகார்னாசஸ் (Halikarnassus) எனும் இடத்தில் உருவாக்கினார். தன் கல்லறையையும் கட்டத் தொடங்கினார். வேலை முடிவதற்கு முன்பே இறந்துவிட்டார். ஆனாலும், கி.மு.351 வரை வேலை நடந்திருக்கிறது. இவர் எழுப்பிய கல்லறை, பழங்கால உலகின் 7 உலக அதிசயங்களுள் ஒன்றாக இருந்தது. உரோமை எழுத்தாளர் பிளினி சீனியர், இந்தக் கட்டிடம் 140 அடி உயரம் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மௌசோல்லொஸ் வார்த்தையின் லத்தீன் வடிவத்திலிருந்தே தற்போது நாம் பயன்படுத்தும் கல்லறை மாடம் (mausoleum) என்கிற வார்த்தை வந்துள்ளது.

ஹாலிகார்னாசஸ் நினைவிடத்தில் கிடைத்த, ஆண், பெண் சிற்பங்களைப் பார்த்தேன். கி.மு. 350-ல் செதுக்கப்பட்ட இச்சிற்பங்கள், மௌசோல்லொஸ் மற்றும் அவரது மனைவி ஆர்ட்டெமிசியா என நம்பப்படுகிறது.

அருகிலேயே, கி.மு.350-ல் பென்டலிக் மார்பிளால் செய்யப்பட்ட பெர்சிய குதிரை வீரனின் பெரிய சிற்பம் இருக்கிறது. குதிரைக்குக் கால்கள் இல்லை. வீரனுக்குத் தலை இல்லை. ஆனாலும், அதைப் பார்க்கும்போதே குதிரை அதி வேகத்தில் போகின்ற உணர்வு ஏற்படுகிறது. ஹாலிகார்னாசஸ் நினைவிடத்தில் இருந்து எடுக்கப்பட்ட இச்சிற்பத்தில், குதிரை வீரனின் மேற்பகுதி தனியாகச் செய்துவைக்கப்பட்டதாகவும், இன்னும் கிடைக்கவில்லை என்றும் வாசித்தேன்.

விலங்குகளின் இறுதிச் சடங்கு

இறந்த மனிதர்களைப் போலவே, விலங்குகளையும் பதப்படுத்தி மம்மி முறைப்படி எகிப்தியர்கள் அடக்கம் செய்துள்ள தகவலை அறிந்தேன். முதலாம் மில்லேனிய காலத்தில், எகிப்திய சமய வழிபாடுகளில் விலங்குகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்துள்ளது. எகிப்தியர்கள் விலங்குகளைக் கடவுளின் இடைத்தரகர்களாகவே பார்த்துள்ளார்கள். விலங்குகளின் இனப் பெருக்கத்துக்காகக் கோயிலின் பெரும் நிலப்பரப்பு ஒதுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புனித விலங்கு கூட்டத்துக்கும் குருக்கள், உணவு கொடுப்பவர்கள், இறந்ததும் பதப்படுத்துகிறவர்கள் தனித்தனியாக இருந்துள்ளார்கள். கடவுள் மீதான தங்களது பக்தியின் வெளிப்பாடாகப் பதப்படுத்துவதற்கு திருப்பயணிகள் பணம் கொடுத்துள்ளனர். அகழாய்வின்போது, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் உள்ள பெரிய கல்லறைகளில் உள்ளூர் தெங்வங்களுக்கு உரித்தான, விலங்குகள் அல்லது பறவைகளின் மம்மிகள் பெருமளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இவைகளில் பூனைகளும், இபிஸ் (ibis) எனும் பறவையுமே அதிகம். வேண்டுமென்றே கழுத்தை நெரித்துக் கொன்று மம்மியாக அடக்கம் செய்துள்ளதும் மம்மிக்களின் எக்ஸ்-ரே மூலம் தெரியவந்துள்ளது.

குதிரை சிற்பம்
குதிரை சிற்பம்

ஜெபலின் மனிதர்

‘தொடக்க கால எகிப்து’ என்றொரு காட்சிக் கூடத்தில் நுழைந்தேன். அங்கே 5,500 ஆண்டுகளுக்கும் முந்தைய ஜெபலின் (Gebelein) மனிதரின் உடலைப் பார்த்தேன். அரச வம்சங்களுக்கெல்லாம் முன்பாக, கி.மு.3500-ல் இறந்த இம்மனிதரின் உடல், பாலைவனச் சூட்டில் இயற்கையாகவே மம்மியாக மாறி அழியாமல் உள்ளது. பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 100 ஆண்டுளுக்கும் மேல் உள்ளது. 2012-ல் இந்த உடலை சிடி ஸ்கேன் செய்தார்கள். அப்போது, இம்மனிதர் மிகவும் பலசாலி என்பதும், இடது தோள்பட்டையில் குத்தப்பட்ட காயத்தால் இறந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. மிகப் பழங்காலத்தில் நடந்த வன்முறையின் அரிதான ஆதாரமாகவும் இம்மனிதர் விளங்குகிறார்.

ஜெபலினின் உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. சிதைந்துவிடாமல் இருப்பதற்காக, பெட்டிக்கு உள்ளே இருக்கும் வெப்பத்தையும், அழுத்தத்தையும், ஹான்வெல் ரேடியோ டிரான்ஸ்மிட்டர் ஆய்வுசெய்து, ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் அருங்காட்சியக அலுவலருக்குத் தகவல் அனுப்புகிறது. ஒருவேளை, வெப்பமும் அழுத்தமும் அதிகமானால், தானியங்கி ஒலி எழுப்பும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

பாலைவன பசுமை

‘பாலைவனம் பசுமையாக இருந்தபோது’ (கி.மு. 8600 – கி.மு. 4400) என்ற அறைக்குள் நுழைந்தேன். பூமியில் மிகவும் வறண்ட பகுதி எதுவென்றால், உடனடியாக சகாரா நினைவுக்கு வருகிறது. ஆனால், அது எப்போதும் அப்படி இருந்ததில்லை. கடைசி பனிக் காலம் (ice age, ஏறக்குறைய கி.மு.10000) ஈரப்பதத்தை வெளியிட்டதும், மழை பொழிந்து, பருவகால நதிகள் உருவாகி மக்கள் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர்.

மிகவும் பசுமையாக இருந்த இப்பகுதியில், காலப்போக்கில் மழை குறைந்தது. கி.மு. 4400-ல் அந்த இடத்தைக் கைவிட்டு, பாலைவனத்தில் ஆங்காங்கே இருந்த பசுமைப் பகுதியிலும், வேறு ஆறுகளுக்கு அருகிலும் மக்கள் குடியேறினர். அங்கே விவசாயம் செய்தனர், புதிய கருவிகள் கண்டுபிடித்தனர், அவ்வாறாக, எகிப்திய நாகரிகம் கி.மு. 3100-ம் ஆண்டுவாக்கில் தொடங்கியது.

அத்தகைய பருவகால ஏரிகளுள் மிகவும் பெரியது, எகிப்தின் தெற்கே அமைந்த நப்தா பிளாயா. இந்த ஏரிக்கரையில் ஏறக்குறைய 4,000 ஆண்டுகளுக்கு மேல் நாடோடி மக்கள் இங்குமங்குமாக வாழ்ந்ததை அகழாய்வுகள் சொல்கின்றன. ஆரம்ப காலத்தில் இங்கு குடியேறியவர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து மண் பாண்டங்கள் கொண்டுவந்ததையும், நன்கு பழகிய கால்நடைகளைக் கொண்டுவந்து அதன் பால், ரத்தம், மற்றும் இறைச்சியைப் பயன்படுத்தியதையும் அகழாய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.

பலிபீட பூமி

பருவகால ஏரிக்கு நீர் கொடுக்கும் பள்ளத்தாக்குப் பகுதி, ‘பலி செலுத்தப்படும் பள்ளத்தாக்கு’ என்று அழைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், கி.மு. 4600-4400 ஆண்டுகளில் தொடர்ந்து மழை பொய்த்தபோது, பாலைவனத்தில் பல்வேறு இடங்களில் சிதறிக் கிடந்தவர்கள் ஒன்றுகூடி பலி செலுத்தும் இடமாக இப்பகுதி இருந்துள்ளது.

மௌசோல்லொஸ் மற்றும் ஆர்ட்டெமிசியா
மௌசோல்லொஸ் மற்றும் ஆர்ட்டெமிசியா

இங்கே மிகப்பெரும் கல்லால் ஆன நினைவுச் சின்னம் உள்ளது. வளமை மற்றும் தெய்வீக ஆசிரைப் பெறுவதற்கான அம்மக்களின் முயற்சியை அது வெளிப்படுத்துகிறது. கற்கள் நிமிர்ந்து நிற்பதுபோல வட்டமாக வைத்து, கோடைகால சங்கிராந்தியில் சூரிய உதயத்தைக் கண்டறிய பெரிய கற்பலகைகளை அதன் மேல் வைத்துள்ளனர். இது, மழைக்காலத்தின் ஆரம்பம் அல்லது விழாவின் தொடக்கத்தைக் குறிக்கிறது. வடக்கே உள்ள கல் மேடுகள், விலங்குகள் பலியிடப்பட்டதைச் சொல்கிறது. தென்திசையில் உள்ள நீளமான கல்பலகைகள் வானியல் முன்னறிதலுக்காகவும், அவற்றுக்கு அருகிலேயே, கொத்தாக உள்ள பெருங்கற்கள், இறந்த மூதாதையர்களை நினைவுகூரவும் வைக்கப்பட்டிருக்கலாம்.

ஓவியம் வரையும் மாணவர்கள்
ஓவியம் வரையும் மாணவர்கள்

சடங்குகளுடன் கூடிய இந்த அமைப்பு, கட்டமைக்கப்பட்ட சமூகத்தைப் பிரதிபலிக்கிறது. சடங்குகளை வழிநடத்த குருக்கள் அல்லது ஆவியுடன் தொர்புகொண்டு அதிசயம் நிகழ்த்துகிறவர்கள் மற்றும் தொழிலாளர்களுக்குக் கட்டளையிட தலைவர்கள் ஆகியோர் இருந்ததையும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

(பாதை விரியும்)

ஈரான் நகரங்கள்

‘முதல் நகரங்கள்’ எனும் தலைப்பிட்ட காட்சிக்கூடத்தின் முகப்பில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது - ‘ஈரானின் முதல் நகரங்கள் கி.மு.3000-ல் உருவாகின. ஏறக்குறைய அந்த காலத்தில்தான் அங்கு எழுதத் தொடங்கினார்கள். மேலும், தொலைதூர வர்த்தகம் மற்றும் அண்டை மாகாணங்களுடன் தொடர்பும் அதிகரித்தது. ஈரானின் வளமையான பொருட்களுள் முக்கியமானது உலோகங்களும் காண்போரை ஈர்க்கும் கற்களுமாகும். இதனால் உருவான ஆயுதங்கள், முத்திரைகள், நகைகள், கல்லில் செதுக்கப்பட்ட பெட்டிகள் மற்றும் வண்ண மணிகள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டன’.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in