சிறகை விரி உலகை அறி-72: பிரமிக்கவைத்த பிரிட்டிஷ் அருங்காட்சியகம்

இரண்டாம் ராம்செஸ்
இரண்டாம் ராம்செஸ்

இரவெல்லாம் குளிரூட்டப்பட்ட சாலைகளை மழைத் துளிகள் தொட்டு விளையாடிக்கொண்டிருந்தன. இலைகள் அசையாத மரங்களில் பறவைகள் மெளனம் காத்தன. நீரோடிய சாலைகளில் ஓடோடி நடந்தேன். குளிரும் மழையும் மகிழ்ச்சியை மகத்துவமாக்கின.

ஓய்ஸ்டர் பயண அட்டை

பிரிட்டிஷ் அருங்காட்சியகம் செல்வதற்குத் தொடர்வண்டி நிலையம் தேடினேன். சிவப்பு நிற வட்டத்தின் குறுக்கே, நீல நிறப் பட்டி, அதில் வெள்ளை நிறத்தில் UNDERGROUND என்று எழுதியிருந்தது. ஓய்ஸ்டர் அட்டை (Oyster Card) பயன்படுத்தி தொடர்வண்டியில் அமர்ந்தேன்.

ஓய்ஸ்டர் என்பது, கிரெடிட் கார்டு அளவில் இருக்கும் பயண அட்டை. அட்டையைத் திரும்பக் கொடுத்து, மீதம் உள்ள பணத்தைப் பெறலாம் அல்லது, எப்போது லண்டன் சென்றாலும் அதே அட்டையைப் பயன்படுத்தலாம். லண்டனில் பயணிக்க, London travelcard-ம் உள்ளது. ஒரு நாள், 7 நாட்கள், ஒரு மாதம் மற்றும் ஒரு வருடத்துக்கு என வாங்கலாம். சுரங்கத் தொடர்வண்டி, சிவப்பு நிற உள்ளூர் பேருந்து, தொடர்வண்டி, குறிப்பிட்ட படகுச் சவாரி ஆகியவற்றில் இதைப் பயன்படுத்தலாம்.

காலையில் புனித பவுல் பேராலயத்துக்குத் தனியாகப் பயணச்சீட்டு வாங்கித்தான் சிவப்பு நிறப் பேருந்தில் சென்றேன். ஆனால், சாலைச் சந்திப்புகள் ஒவ்வொன்றிலும் பேருந்து நின்றதால், ‘பேருந்தில் ஏறுவது நமக்கு நேர விரயம். நல்லவேளை நேற்று, விமான நிலையத்திலேயே London travelcard வாங்காமல், ஓய்ஸ்டர் அட்டை வாங்கிவிட்டோம்’ என நிம்மதியானேன். (வாசகர்கள் உங்களின் தேவையைப் பொறுத்து முடிவெடுக்கலாம்).

சுரங்கத் தொடர்வண்டி

19-ம் நூற்றாண்டில் விரைவாக வளரும் நகரங்களுள் ஒன்றாகத் திகழ்ந்தது லண்டன். குதிரைகள், குதிரை வண்டிகள், பயணிகள் எனப் போக்குவரத்து நெருக்கடியில் தத்தளித்தது. வாகன நெருக்கடி இன்றி நகரத்தின் மையத்திலிருந்து மற்ற பகுதிகளுக்கு விரைவில் செல்வது எப்படி என சார்லஸ் பியர்சன் யோசித்தார். 1840-களில் சுரங்கத் தொடர்வண்டி அமைக்கத் திட்டமிட்டார். பலரிடம் பேசினார். பூமிக்கு உள்ளே தொடர்வண்டி பாதை அமைப்பதெல்லாம் சாத்தியமில்லாதது என்பதால் ஆதரவு கிடைக்கவில்லை. ஆனாலும், சில ஆண்டுகளில் சூழல் மாறியது. லண்டன் ‘மெட்ரோபோலிடன் ரயில்வே’ வேலையைத் தொடங்கியது. 1863 ஜனவரி 10-ம் தேதி உலகின் முதல் சுரங்கத் தொடர்வண்டி லண்டனில் ஓடியது. அந்நாளில் 30 ஆயிரம் மக்கள் பயணித்தார்கள்.

புதிய குடியிருப்புகள், கட்டிடங்கள், கடைகள் பெருகின. 20 ஆண்டுகளிலேயே போக்குவரத்தின் தேவை இன்னும் அதிகரித்தது. மேலும் ஆழமாகத் தோண்ட ஆரம்பித்தார்கள். அளவுகள் பல இடங்களில் மாறினாலும், பொதுவாக 25 மீட்டர் ஆழம் வரை தோண்டினார்கள். 1890-ல் உலகின் முதல் சுரங்க மின்சாரத் தொடர்வண்டி லண்டனில் ஓடத் தொடங்கியது. லண்டன் சுரங்கத் தொடர்வண்டி பாதையை ‘டியூப்’ என அழைக்கிறார்கள். ஓய்ஸ்டர் அட்டை வாங்கும்போதே டியூப் வரைபடம் தந்தார்கள். சிக்கலின்றி லண்டனில் பயணிக்க இது உதவியது.

சவாலே சமாளி

தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி, பிரிட்டிஷ் அருங்காட்சியகம் சென்றேன். 1759 முதல் மக்கள் பார்வைக்கு இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் 20 லட்சம் ஆண்டு மனித வரலாறு, கலை மற்றும் கலாச்சாரம் உள்ளது. ஆரம்பத்தில் பார்வையாளர்களிடம் கட்டணம் வசூலித்தார்கள். 1830 முதல் கட்டணம் இல்லை. தற்போதும், 60-க்கும் மேற்பட்ட காட்சிக் கூடங்களைக் கட்டணமின்றி பார்க்கலாம். மிக முக்கியமான சில காட்சிக் கூடங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும். அந்தப் பகுதிகளைப் பார்ப்பதற்காக நான் சுற்றுலா குழுவில் முன்பதிவு செய்திருந்தேன். விமானம் ஒருநாள் தாமதமானதால், மணிலாவில் இருக்கும்போதே சுற்றுலா தேதியை மறுநாளுக்கு மாற்றினேன்.

கண்ணாடி கூரையுடன் சதுக்கம்
கண்ணாடி கூரையுடன் சதுக்கம்

நீண்ட வரிசையில் நின்று அருங்காட்சியம் சென்றேன். உள்ளே இருக்கும் பெரிய சதுக்கத்தில் காத்திருந்தேன். சதுக்கத்தின் பெயர், ராணி இரண்டாம் எலிசபெத். சதுக்கத்தில் சிற்பங்கள், புத்தகக் கடைகள், உணவகங்கள் உள்ளன. நடுவில் இருக்கும் படிகளில் ஏறிச் சென்றால் வாசக அறை உள்ளது. ஒவ்வொன்றாகச் சுற்றிப் பார்த்தேன். அங்குள்ள சிங்கச் சிலை, துருக்கியில் கினிடோஸ் பகுதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. கி.மு. 370-350 காலத்தைச் சேர்ந்த சிங்கத்தின் எடை 7 டன்னுக்கும் அதிகம். கனடாவின் தென்மேற்குப் பகுதியில், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில், வடமேற்குக் கடற்கரை மக்களால் சிவப்பு செடார் மரத்தில் செதுக்கப்பட்ட சிற்ப கம்பத்தைப் பார்த்தேன். 12 மீட்டர் உயரமுள்ள கம்பத்தில் அவர்களின் நம்பிக்கைகளும், புராணங்களும் செதுக்கப்பட்டுள்ளன.

சதுக்கத்தில் சிங்கம்
சதுக்கத்தில் சிங்கம்

வெகுநேரம் காத்திருந்தேன். சுற்றுலா வழிகாட்டியைக் காணவில்லை. அருங்காட்சியக இலவச அருகலையைப் பயன்படுத்தி தொடர்புகொண்டேன். அன்றைய நாளுக்கான சுற்றுலா ரத்து செய்யப்பட்டதாகச் சொன்னார்கள். மின்னஞ்சலைப் பார்த்தேன். அவர்கள் ஏற்கெனவே தகவல் அனுப்பியுள்ளார்கள். எனவே, கட்டணமில்லால் பார்க்கும் பகுதிக்குள் நுழைந்தேன். பெரிய கல் கண்ணில் பட்டது.

ரோசட்டா கல்

1798-ல் பிரான்ஸ் அரசர் நெப்போலியன் படையணி எகிப்து நாட்டை வெற்றி கொண்டது. புதிதாக அரண் அமைத்தபோது, எழுத்துகள் பொறிக்கப்பட்ட பெரிய கல் ஒன்றை, 1799 ஜுலை மாதம், ரோசட்டா நகரில், வீரர் ஒருவர் கண்டுபிடித்தார். அப்போதே, 3,000 ஆண்டுகள் பழமையானது. பிரான்ஸ் படையணியை பிரிட்டன் வென்ற பிறகு, 1801-ல், அலெக்ஸாந்திரியா உடன்படிக்கையின் மூலம் இக்கல் பிரிட்டனுக்கு வந்தது. 1802-ல் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு வழங்கப்பட்டது.

ரோசட்டா கல்
ரோசட்டா கல்

மூன்று மொழிகள் ரோசட்டா கல்லில் பொறிக்கப்பட்டிருந்தன. முதலில், பழங்கால எகிப்தியரின் சித்திர எழுத்து. நடுவில், படித்த எகிப்தியர்கள் தினமும் பயன்படுத்திய டெமோடிக் (Demotic) மொழி. கீழே, அரசாங்கம் பயன்படுத்திய கிரேக்க மொழி.

எகிப்தியரின், சித்திர எழுத்துக்கள் கி.மு. 3500 முதல், கி.பி. 4-ம் நூற்றாண்டுவரை பயன்பாட்டில் இருந்து அதன் பிறகு அழிந்துவிட்டது. இப்போது சித்திர எழுத்துகளை எப்படி படிப்பது? ஆய்வாளர்கள் தடுமாறினார்கள். சித்திர எழுத்துகளில் நிபுணத்துவம் மிக்க, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் நாட்டு அறிஞர்கள் தாமஸ் யுங் (Thomas Young), சாம்பொலியன் (Champollion) இருவரும் கண்டுபிடித்தார்கள். கி.மு. 196, மார்ச் 27 தேதியிட்டு, அரசரான சிறுவன், ஐந்தாம் டாலமி எபிஃபானஸ், எகிப்திய கோவில்களுக்குச் செய்த சலுகைகளுக்கு நன்றியாக, அரசருக்கென தனியாக வழிபாட்டுமுறை தொடங்குவதற்கு எகிப்திய குருக்கள் முடிவு செய்ததற்கான சட்டக் குறிப்பு அக்கல்லில் இருக்கிறது.

அரசருக்கான கல்லறைக் கோவில்

இரண்டாம் ராம்செஸ் (King Ramesses II) அரசரின் மாபெரும் சிலையின் மேல் பகுதியைப் பார்த்தேன். இவரின் ஆட்சிக்காலம் ஏறக்குறைய கி.மு. 1279 – கி.மு. 1213. அருகில் இருந்த குறிப்பை வாசித்தேன். பழங்கால எகிப்திய பாரம்பரியத்தில், இறந்த அரசரை, கல்லறைக் கோயிலில் (Mortuary Temple) வழிபடும் பழக்கம் இருந்திருக்கிறது. இரண்டாம் ராம்செஸின் கல்லறைக் கோயில், ராம்செயும் (Ramesseum) என்று அழைக்கப்படுகிறது. கோயில் வாசலில் இரண்டு பக்கமும் வைக்கப்பட்டிருந்த ராம்செஸின் மாபெரும் சிலைகளுள் ஒன்றுதான் நான் பார்த்தது.

ஏறக்குறைய 20 டன் எடையுள்ள ஒரே கல்லாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். 200 கிலோமீட்டர் தூரத்திலிருந்து பனிச்சறுக்கு வண்டியில் தரையிலும், இதற்கென்று கட்டப்பட்ட படகில் நைல் நதியிலும் கொண்டுவந்திருக்கிறார்கள். கோயில் வாசலில் நிறுவிய பிறகு, இறுதி வேலைகள் நடந்துள்ளன. எல்லா எகிப்திய சிலைகளுக்கும் உள்ளதுபோலவே, வர்ணம் பூசியுள்ளார்கள். அதன் எச்சங்களாக, கருவிழியில் கருப்பு, தோலில் சிவப்பு, தலையில் உள்ள துணியில் மஞ்சள், நீலம் உள்ளிட்ட நிறங்கள் சாட்சியம் சொல்கின்றன.

சர்கோன் அரண்மனை

‘இந்தப் பகுதியில், கோர்சபாத் (Khorsabad) நகரம் மற்றும் அரண்மனையில் இருந்து கொண்டுவரப்பட்ட சிற்பங்கள் உள்ளன’ என்கிற குறிப்பை வாசித்தேன். கோர்சபாத் நகரம் அசீரிய அரசர் இரண்டாம் சர்கோன் (Sargon II, கி.மு. 721-705) என்பவருக்காகக் கட்டப்பட்டதாகும்.

மந்திரப் பாதுகாவலர்கள்
மந்திரப் பாதுகாவலர்கள்

கோர்சபாத் கோயில் வாசலில் இரண்டு பக்கமும் இருந்த இரண்டு பெரிய சிலைகளைப் பார்த்தேன். சுவர் என்றாலும் பிழையல்ல. மனிதத் தலையும் இறக்கை உள்ள காளை மாடும் உள்ள இச்சிலை, துரதிஷ்டத்துக்கு எதிரான, மாயாஜால மந்திர பாதுகாவலராகக் கருதப்பட்டுள்ளது.

அப்பல்லோ மற்றும் கித்தாரா
அப்பல்லோ மற்றும் கித்தாரா

‘கித்தாரா’ (Kithara) எனும் பழங்கால கிரேக்க இசைக்கருவியைப் பிடித்துக்கொண்டு, அப்பல்லோ சிற்பம் இருப்பதைக் கண்டேன். இது, கி.மு. 200 – கி.மு. 150-ம் ஆண்டுகளில், சிரேன் (Cyrene) நகரத்தில் இருந்த சிலையை நகலெடுத்து, கி.பி. 2-ம் நூற்றாண்டில் உரேமையர்கள் உருவாக்கியதாகும். மிகவும் தத்ருபமாகச் செதுக்கியுள்ளார்கள். இருவரின் குறியீடுகள் இதில் உள்ளன. கித்தாரா அப்பல்லோவைக் குறிக்கிறது. மேலாடை சரிந்து கிடப்பதும், உடல் வனப்பும் டயனைசஸ் (Dionysos) எனும், மதுவின் கடவுளைக் குறிக்கிறது.

வாசித்துக்கொண்டே, பழங்கால வரலாறுகளுடன் அடுத்த பகுதிக்குள் சென்றேன்.

(பாதை விரியும்)

ராணி இரண்டாம் எலிசபெத் சதுக்கம்

பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தற்போது சதுக்கம் அமைந்துள்ள பகுதியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான திட்ட வரைவுக்காகப் போட்டி நடத்தப்பட்டது. அதில், பங்கேற்ற 130-க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுள், Foster and Partners தேர்வு பெற்றனர். 100 மில்லியன் பவுண்ட் செலவில் உருவாக்கினர். அதிகபட்ச உயரம் 26.3 மீட்டர். ஐரோப்பாவில், பொதுமக்களுக்கான கூரை வேயப்பட்ட பெரிய சதுக்கம் இதுதான். இச்சதுக்கத்தை 2020 டிசம்பர் 6-ல் ராணி இரண்டாம் எலிசபெத் திறந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in