சிறகை விரி... உலகை அறி-71: பிரிட்டன் வீதிகளில் சுதந்திரப் பயணம்

சிறகை விரி... உலகை அறி-71: பிரிட்டன் வீதிகளில் சுதந்திரப் பயணம்

பயணம் செல்வது எல்லோருக்கும் பிடிக்கும். ஜன்னலோர இருக்கையில் இடம் பிடித்த நாள் முதலாக, நம்மைப் பற்றிக்கொண்ட நேசம் அது. தலை சிலுப்பும் மரங்கள், வாசிக்கும் முன்பாகக் கடந்துவிடும் பெயர்ப் பலகைகள், நிலவு பூத்த வானம், இரவில் தெரியும் தொலைதூர வெளிச்சம், சிலிர்க்க வைக்கும் சாரல் எல்லாம் தொடக்க கால நினைவுகள்.

பிறர் தரும் உத்வேகம்

வயதும் அனுபவமும் அதிகரிக்கும்போது பயணம் செல்வதற்கான ஆர்வமும் ஒவ்வொருவருக்கும் வளர்கிறது. எனக்கும் அப்படித்தான். மெய்யியல் பேராசிரியர் ஒருவர், “ஒருமுறையாவது ஜப்பான் சென்று வாருங்கள்” என்று வகுப்பில் சொன்னார். அந்தக் குரல் ஊக்கம் கொடுத்தது. முதன்முதலில் ஜப்பானுக்குத் தனியாகச் சென்றேன். மேலும் பல ஆசிய நாடுகளுக்கும் பயணித்தேன்.

ஸ்பெயின் நாட்டு, சந்தியாகோ தே கம்போஸ்தெல்லாவுக்கு ஒரு மாதம் நடந்து திருப்பயணம் செய்ததாகக் குறிப்பிட்டு, அருள்தந்தை யூஜின் தந்த ஊக்கத்தால் ஐரோப்பிய பயணத்தைத் திட்டமிட்டு 9 நாடுகளுக்குச் சென்றேன்.

பிலிப்பைன்ஸில் இருந்தபோது, பக்கத்து அறை நண்பர் ஜோஜி, பிரிட்டன் சென்று வந்ததும், பிரிட்டன் கனவு எனக்குள் விழித்தது. இன்னும் சில ஆண்டுகள் போகட்டும் என நினைத்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம், பிரிட்டனில் பார்க்க வேண்டிய இடங்கள் குறித்து வாசிக்கத் தொடங்கினேன். அந்நேரத்தில், மற்றொரு நண்பர், பிரிட்டனில் உள்ள ஸ்டோன்ஹெஞ்ச் படத்தை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தார். அப்படம், பயணத்தை உறுதிப்படுத்தியது. பிரிட்டன் செல்ல திட்டமிட்டேன்.

கவனமான திட்டமிடல்

பிரிட்டன் செல்ல இந்தியர்களுக்கு விசா அவசியம். பிரிட்டன் விமான நிலையத்தில் இறங்கி வேறு நாட்டுக்குச் செல்வதானாலும், ட்ரான்சிட் விசா இருந்தால் மட்டுமே அனுமதிப்பார்கள். லண்டனில் வாழும், என் நண்பரின் நண்பர் ஒருவர் என்னை வரவேற்று கடிதம் அனுப்பியிருந்தார். கடிதம் கிடைத்ததும், இணையம் வழியாக மிகவும் கவனமாக விண்ணப்பித்தேன்.

ஏனென்றால், ஜோஜி பிரிட்டன் சென்றபோது, விண்ணப்பப் படிவத்தில் ஒரு தவறு செய்தார். அதாவது, 5 ஆண்டு விசாவுக்கு 850 ரூபாய் என நினைத்து பணம் செலுத்திவிட்டார். 850 பவுண்ட் என்பதைப் பிறகுதான் கவனித்தார். இன்றைய ரூபாய் மதிப்பில் 79 ஆயிரம். ஆனாலும், பிரிட்டன் விசா வைத்திருக்கும் இந்தியர்கள் விசா இல்லாமலேயே 28 நாடுகளுக்குப் பயணிக்கலாம் என மனதைத் தேற்றிக்கொண்டார்.

பதிவு செய்த படிவம், வங்கிச் சான்றிதழ், வங்கியில் 3 மாதத்திற்கான என் வரவு செலவு, பயண நிரல் ஆகியவற்றுடன் வேறு சில ஆவணங்களையும் நான் பிரிட்டன் தூதரகத்தில் கொடுத்தேன். விசா கிடைத்தது.

எரிமலைச் சாம்பல்

மணிலா விமான நிலையத்திலிருந்து காலை 5.30 மணிக்கு விமானம் என்பதால் விரைவாகத் தூங்கச் சென்றேன். கட்டிலில் படுத்ததும், பயணம் குறித்து பிலிப்பைன்ஸ் நண்பர் ஒருவருக்குக் குறுஞ்செய்தி அனுப்பினேன். உடனே அழைத்தார். “இன்று தால் (Taal) எரிமலை வெடித்தது. நகரம் முழுவதும் அதன் சாம்பல் படிந்துள்ளது. வெளியில் உள்ள மகிழுந்து சாம்பலால் மூடப்பட்டுள்ளது. விமானங்கள் நகருக்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. உங்கள் விமானம் குறித்த தகவல் ஏதாவது உண்டா?” என்று கேட்டார். எனக்கு எதுவுமே தெரியவில்லை. எழுந்தேன். இணையத்தில் தேடினேன். 70 கிலோ மீட்டருக்கு அப்பால் வெடித்த தால் எரிமலையின் சாம்பல் மணிலா நகர வெளியெங்கும் பரவிக் கிடந்தது. விமான நிறுவனத்தை நண்பர் அழைத்துப் பேசினார். தாமதமாக, காலை 10 மணிக்கு விமானம் புறப்படும் என்றார்கள். விமான நிலையம் சென்றேன். 10 மணி, மதியம் 12 மணியானது. பிறகு, மாலை 6 மணியானது. அடுத்து, இரவு 11 மணியானது. ஒருவழியாக, மறுநாள் அதிகாலை 1.30 மணிக்கு விமானம் புறப்பட்டது. என் பயணத்தில் ஒருநாள் குறைந்தது.

உற்சாகம் ஊற்றெடுக்கும் பொழுது

லண்டன் விமான நிலையத்தில் இறங்கும்போது இரவு மணி 7.30. ஜனவரி மாத குளிர், சதைத் துவாரங்களுக்குள் நுழையத் தொடங்கியது. முதல் முறை இப்படியான குளிருக்குள் நிற்பதால் மனதில் எழுந்த மகிழ்ச்சி உடலெல்லாம் பரவியது. விமான நிலையத்தில் இருக்கும் தொடர்வண்டிக்கு நடந்தபோது, மழைச் சாரலைக் கடந்தேன். வான் மழையின் தந்திகளில் விரல்களால் சுரமீட்டினேன். குழந்தைபோலானேன். தெறித்த நீர்களில் மனம் தெளிந்தேன்.

அடுத்த 1 மணி நேரத்தில் தங்குமிடம் சென்றேன். தனியறையில் தூங்கி காலையில் எழுந்தேன். பிரிட்டிஷ் அருங்காட்சியகம் 10 மணிக்குத்தான் திறக்கும் என்பதால், முதலில் புனித பவுல் பேராலயம் சென்றேன்.

சார்லஸ் – டயானா திருமணம்

தற்போது புனித பவுல் பேராலயம் இருக்கும் இடத்தில், கி.பி 604-ல் முதல் கோயில் அர்ப்பணிக்கப்பட்டது. 1087-ல் அக்கோயில் தீயில் எரிந்தது. இரண்டாவது கோயிலும் 1666-ல் தீயில் அழிந்தது. தற்போது, இருப்பது மூன்றாவது பேராலயம்.

இந்தப் பேராலயத்தில்தான் பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸ் – டயானா திருமணம் நடந்தது. மனித உரிமைப் போராளி, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், 1964-ல் 3,000-க்கும் மேற்பட்டோர் மத்தியில் இங்கு உரையாற்றியுள்ளார்.

கோயிலுக்குக் கீழே, கல்லறை வளாகம் உள்ளது. இறந்தவருக்கு இப்பேராலயத்தில் இறுதிச் சடங்கு நடத்துவது அல்லது இங்கேயே அடக்கம் செய்வது ஆகியவை மிகப்பெரிய கெளரவமாக இப்போதும் கருதப்படுகின்றன. பல்வேறு கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் மனிதநேய ஆர்வலர்களுக்கு இந்த கெளரவம் வழங்கப்பட்டிருக்கிறது.

பேராலய பேரின்பம்

பேராயத்துக்குள் சென்றேன். அதன் பேரழகில் அமைதியில் கலந்தேன். கிறிஸ்தவ புனிதர்கள் பலரின் சுரூபங்கள் இருந்தன. யாரையுமே என்னால் அடையாளம் காண முடியவில்லை. பிறகுதான் உணர்ந்தேன், அது கத்தோலிக்க ஆலயம் அல்ல. ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ ஆலயம். அங்குள்ள புனிதர்கள் அச்சபையைச் சேர்ந்தவர்கள்.

புனித பவுல் பேராலய பீடத்தின் முன்பாக
புனித பவுல் பேராலய பீடத்தின் முன்பாக

மைய பீடத்தின் முகப்பில் வழிபாட்டுக்குரிய பீடம் இருக்க, சற்று பின்னே மற்றொரு பீடம் இருந்தது. அதன் மேல் உயரமான இரண்டு மெழுகுத்திரி தாங்கிகளும் நடுவில் சிலுவையும் இருந்தன. அப்பீடத்தின் இடது பக்கம், ‘கடவுளின் மகிமைக்காகவும், காமன்வெல்த் தூதரக பிரதிநிதிகளின் மற்றும் போரில் உயிரிழந்த பேரரசரின் நினைவாகவும்’ என்று எழுதி கீழே 1914 -1918; 1939 - 1945 என்று பொறிக்கப்பட்டிருந்தது. இரண்டு உலகப் போர்களின் ஆண்டுகள் அவை.

Kotsovolos Panagiotis

நிமிர்ந்து பார்த்தேன். பேராலயத்தின் குவிந்த கூரை மிகுந்த கலைநுட்பத்துடன் அமைக்கப்பட்டிருப்பதை ரசித்தேன். உயரம் 366 அடிகள். மேலே செல்வதற்கு நூற்றுக்கணக்கான படிகள் உள்ளன. உலகில் உள்ள பெரிய குவி மாடங்களுள் இதுவும் ஒன்று.

நிறைய கலைப் பொருட்களைக் கண்டேன். அதில் ஒன்று, ஹென்றி மூர் செதுக்கிய, ‘தாயும் சேயும்’ சிற்பம். அட, என்னே நேர்த்தி! ஏதோ இயந்திரத்தால் செதுக்கப்பட்டதுபோல பளபளத்தது.

கொலை செய்யப்படும் காட்சி

பீடத்துக்கு அருகில், 4 தொலைக்காட்சிகள் ஒன்றாக இருப்பதுபோல அமைத்துள்ளார்கள். நான் சென்றபோது, காணொலி ஓடியது. ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒருவர் இருக்கிறார். காட்சியின் நேரம் 7.15 விநாடிகள்.

முதல் தொலைக்காட்சி: ஒருவர் நிற்கிறார். நிலத்தில் உள்ள மண்ணும் மணலும் சிறு சிறு துகள்களாக மேலேறிச் செல்கின்றன.

இரண்டாவது தொலைக்காட்சி: கைகள் இரண்டையும் தலைக்குமேலே ஒருவர் உயர்த்தியிருக்கிறார். கைகள் கட்டப்பட்டுள்ளன. கால்களும் கட்டப்பட்டிருக்க அந்தரத்தில் தொங்குகிறார். அறை ழுவதும் சுழற்காற்று வீசுகிறது. அந்தரத்தில் சுழல்கிறார்.

மூன்றாவது தொலைக்காட்சி: நாற்காலியில் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவரைச் சுற்றிலும் நெருப்பு கொழுந்துவிட்டு எரிகிறது.

நான்காவது தொலைக்காட்சி: கால்கள் கட்டப்பட்ட நிலையில் ஒருவர் தலைகீழாகத் தொங்குகிறார். எல்லா திசைகளில் இருந்தும் தண்ணீர் பீச்சி அடிக்கப்படுகிறது.

ஊக்கம் தரும் வாழ்க்கை

அருகில், மறைசாட்சிகள் (Martyr) எனும் தலைப்பிட்ட குறிப்பை வாசித்தேன். ‘எவ்வளவு ஆபத்துகள் வந்தாலும், இயேசுவின் மீது தாங்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் பலர் உறுதியாக இருந்தார்கள். இயேசுவைப் பின்பற்றியதால், எப்படியெல்லாம் துன்புறுத்தப்பட்டார்கள், கொலை செய்யப்பட்டார்கள் என்பதை இந்தக் காட்சிகள் சொல்கின்றன.

Martyr என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கு ‘சான்று பகர்தல்’ என்று பொருள். இன்றைய காலத்தில், மற்றவர்களின் துன்பங்களுக்கு சாட்சியாக நம் எல்லோரையும் ஊடகங்கள் மாற்றியிருக்கின்றன. செயலற்ற நம்முடைய நிகழ்கால வாழ்வுக்கு, செயலூக்கம் மிகுந்த இந்த மறைசாட்சிகளின் வாழ்க்கையால் ஒளியூட்ட முடியும்.

ஒவ்வொருவரும், தங்களின் விழுமியங்கள், நம்பிக்கைகள், மற்றும் கொள்கைகளில் உறுதியுடன் இருக்க துன்பம், பகை, ஏன் இறப்பைக்கூட தாங்கிக்கொள்ளும் வல்லமை மனிதர்களுக்கு இருக்கிறது என்பதை இவர்கள் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள்.

நீங்கள் பார்க்கும் இந்தக் காட்சி, மனோபலம், பொறுமை, விடாமுயற்சி, செயல்படத் தூண்டும் எண்ணம் மற்றும் தியாகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது’ என்று எழுதியிருந்தது. மனோபலத்துடன் வெளியில் வந்தேன்.

(பாதை விரியும்)

ஹோரஷியோ நெல்சன் கல்லறை
ஹோரஷியோ நெல்சன் கல்லறை

கல்லறை எனும் அங்கீகாரம்

புனித பவுல் பேராயலத்தின் கீழே உள்ள கல்லறை வளாகத்தில் நிறைய கல்லறைத் தொட்டிகள் உள்ளன. முதலில் இங்கு வைக்கப்பட்ட நபர், பேராலயக் கட்டிடக்கலை வல்லுநர் கிறிஸ்டோபர் ரென். வளாகத்தின் நடுவில், பிரிட்டனின் மிக முக்கியக் கடற்படை வீரர் ஹோரஷியோ நெல்சன் வைக்கப்பட்டிருக்கிறார். சுவரில், சர் அலெக்சாண்டர் பிளெமிங், புளோரன்சு நைட்டிங்கேல் உள்ளிட்ட பலருக்கு நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன. நைட்டிங்கேல் படத்துக்கு மேலே, ‘இரக்கமுடையோர் பேறு பெற்றோர்’ என்று எழுதப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in