சிறகை விரி உலகை அறி - 68: நம்பிக்கையின் பாதையில் ஒருநாள்!

நற்கருணை ஆலயம்
நற்கருணை ஆலயம்

எதிர்பாராத நிகழ்வுகள் வாழ்வில் வண்ணம் பூசும் வல்லமை மிகுந்தவை. மனிதர்கள், விலங்குகள், இயற்கை, கடவுள் என யார் வேண்டுமானாலும் ஆச்சரியம் கொடுக்கலாம். போச்சுக்கல் பயணத்தில் பல்வேறு வியப்புகளை நண்பர்கள் தந்தார்கள்.

போர்ச்சுக்கல் வருகிறேன் என்று சொன்னபோதே, சான்டரெய்ம் செல்ல வேண்டும் என்று நண்பர் பவுலோவிடம் சொல்லியிருந்தேன். மாலையில் வாகனத்தில் பயணித்தபோதுதான், “நாங்கள் சான்டரெய்ம் நகரில்தான் வாழ்கிறோம்” என்று பவுலோ ஆச்சர்யம் தந்தார். அன்றிரவு பேசிக்கொண்டிருந்தபோது, “இந்நகரில் நற்கருணை புதுமை நடந்த கோயிலுக்குச் செல்ல வேண்டும்” என்றேன். “இதே தெருவில்தான் இருக்கிறது. ஒரு நிமிடம் நடந்தால் போதும்” என்றார். “அப்படியா!” என்று வியந்தேன்.

நூற்றாண்டுகள் கடந்த நம்பிக்கை

காலையில் எழுந்தேன். நண்பர்கள் வேலைக்குக் கிளம்பும் முன்பாகக் கோயிலுக்குப் புறப்பட்டேன். ஐந்து வீடுகள் தாண்டியதும் கோயிலைக் கண்டேன். முகப்புச் சுவரில் பதாகை தொங்கியது. அதில், ‘770 ஆண்டுகள் (1247-2019)’ என்று எழுதப்பட்டிருந்தது.

சமூகத்திலும், சமய வழிபாடுகளிலும் நிலவிய அடிப்படைவாதங்களைத் துணிந்து கேள்வி கேட்டவர் இயேசு. சிலுவையில் தான் கொல்லப்படுவற்கு முந்தைய நாள், தம் சீடர்களுடன் இயேசு உணவருந்தினார். அப்பத்தை எடுத்து அதைப் பிட்டு பகிர்ந்தளித்து, “இதை என் நினைவாகச் செய்யுங்கள்” என்றார். அதன் நினைவுகூரல்தான் கத்தோலிக்க ஆலயங்களில் நடக்கும் திருப்பலி.

சதுக்கமும் கோயிலும்
சதுக்கமும் கோயிலும்

‘நற்கருணையில் இயேசு இருக்கிறார்’ என்றும், ‘சில இடங்களில் இது தொடர்பான புதுமைகள் நடக்கிறது’ என்றும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அத்தகையதொரு புதுமை சான்டரெய்ம் நகரத்தில் 1247-ம் ஆண்டு வாழ்ந்த ஒரு கிறிஸ்தவப் பெண்ணுக்கு நடந்தது.

அதாவது, திருமணமான ஒரு பெண், கணவர் தன்னை நேசிக்கவில்லை என்று மந்திரவாதி ஒருவரைச் சந்தித்தார். ‘நற்கருணையைக் கொண்டுவந்து கொடு. உன் கணவர், உன்னைச் சுற்றி வரும்படி செய்கிறேன்’ என்றார் மந்திரவாதி. கோயிலுக்குச் சென்ற அப்பெண் நற்கருணையை வாங்கி துணியில் மறைத்தார். வெளியே சில அடிகளே எடுத்து வைத்தார். நற்கருணையிலிருந்து ரத்தம் வடிந்தது. பயந்தவர், விரைவாக வீட்டுக்குச் சென்று பாத்திரத்தில் மூடி மறைத்தார். இரவு நேரம். அறை வெளிச்சமாக இருந்ததால் தூங்கிக்கொண்டிருந்த கணவர் விழித்தார். பாத்திரத்திலிருந்து ஒளி வீசியது. கணவருக்குப் புரியவில்லை. மனைவி உண்மையைச் சொன்னார். மறுநாள், நடந்ததை அருள்தந்தையிடம் சொன்னார்கள். நற்கருணையை முறைப்படி பவனியாகக் கொண்டுவந்த அருள்தந்தை, ஒரு குடுவையில் பாதுகாப்பாக வைத்தார். பிறகொருநாள் அதைப் பார்த்தபோது, நற்கருணை அழியாமல் ரத்தமும் சதையுமாக இருப்பதைக் கண்டார். பல்வேறு ஆய்வுகளுக்குப் பிறகு, திருச்சபை அப்புதுமையை ஏற்றுக்கொண்டது.

கோயிலுக்குள் சென்ற நான், எனக்குத் தெரிந்த பலருக்காகவும் ஜெபம் செய்தேன். புறப்படும் முன்பாக, என்னருகில் வந்த உதவியாளர் ஒருவர், சிறிய தாள் கொடுத்தார். ஜெபம் இருந்தது. வாசித்ததும் புல்லரித்தது. மேலும் இரண்டு நாட்கள் அதே தெருவில்தான் தங்கியிருந்தேன். முதல்நாள் பெற்ற உணர்வை அப்படியே வைத்துக்கொள்ள விரும்பியதால் மறுபடியும் அந்தக் கோயிலுக்குள் செல்லவில்லை.

இடையர்களைத் தேடி!

வீட்டுக்கு அருகில் இருந்த கடையில் காலை உணவு சாப்பிட்டோம். வேலைக்குப் புறப்பட்ட நண்பர்கள், பேருந்து நிலையத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். பாத்திமா நகரம் செல்வதற்குப் பயணச்சீட்டு வாங்கிக் கொடுத்தார்கள். வீட்டுச் சாவியையும் கொடுத்து, “விரைவாக வந்துவிட்டால், நீங்களே சென்று ஓய்வெடுங்கள்” என்று சொல்லிச் சென்றார்கள்.

பாத்திமா சென்றதும், நண்பரின் மகன் வரவேற்றார். பையனின் பெரியம்மாவும் சேர்ந்துகொண்டார். முதலில் கல்லறைத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஒரு கல்லறையைக் காட்டி, “11 வயதில் இறந்த பிரான்சிஸ்கோ (1908 -1919) மற்றும் 10 வயதில் இறந்த ஜெசிந்தா (1910 -1920) இருவரையும் இங்குதான் முதலில் புதைத்தார்கள். பிறகு, கோயிலுக்குள் அடக்கம் செய்தார்கள்” என்றார். இருவரும் உடன்பிறந்த சகோதர சகோதரிகள்.

அங்கிருந்து, மிகப்பெரிய சதுக்கத்துக்கு என்னை அழைத்துச் சென்றார்கள். இதே சதுக்கத்துக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் வருகை தந்தபோது, நண்பர் பவுலோ, நகரத்தின் மேயராக இருந்து வரவேற்றிருக்கிறார்.

சதுக்கத்தின் முடிவில், மையமாக பெரிய கோயில் அமைந்துள்ளது. அதன், இடது ஓரத்தில் உள்ள சிறிய கொட்டகையில் வழிபாடு நடந்துகொண்டிருந்தது. அருகில் சென்றதும் பெரியம்மா சொன்னார், “இந்த இடத்தில்தான், சிறுவர்களான பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா மற்றும் லூசியா மூவரும் வழக்கமாக ஆடு மேய்ப்பார்கள். 1917 மே 13 அன்று ஆடு மேய்த்தபோது மதிய நேரத்தில் ஆங்காங்கு கிடந்த கற்களைச் சேகரித்து வீடுகட்டி விளையாடினார்கள். திடீரென பேரொளி வந்து மறைந்தது. வீட்டுக்குச் செல்ல சிறுவர்கள் புறப்பட்டபோது மறுபடியும் மின்னல் போன்ற ஒளி. ஓக் மரத்தின் மீது அன்னை மரியாள் தோன்றினார். தொடர்ந்து 5 மாதங்கள் அதே நாளில் இந்த இடத்துக்கு வர வேண்டும் எனவும், ஜெபமாலை ஜெபிக்க வேண்டும் எனவும் சிறுவர்களிடம் சொன்னார். அதோ, கொட்டகைக்குள் ஒரு தூண் இருக்கிறது பாருங்கள். அதில் அன்னை மரியா சுரூபம் இருக்கிறதே தெரிகிறதா! அந்த இடத்தில்தான் ஓக் மரம் இருந்தது” என்றார்.

மரியாள் காட்சி கொடுத்த இடம்
மரியாள் காட்சி கொடுத்த இடம்

பிறகு, பெரிய கோயிலுக்குள் அழைத்துச் சென்றார். “அன்னை மரியாள் ஜெபமாலை ஜெபிக்கச் சொன்னதால், இது ஜெபமாலை மாதா ஆலயம் எனப்படுகிறது. கோயிலுக்குள் 15 பீடங்கள் உள்ளன. மரியாவின் வாழ்வில் நிகழ்ந்த 15 மறை உண்மைகளை அப்பீடங்கள் பிரதிபலிக்கின்றன” என்றார். மைய பீடத்தின் பின்புறத்தில் பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா மற்றும் லூசியாவின் கல்லறைகளைக் காட்டினார். லூசியா, அருட்சகோதரியாக வாழ்ந்து, 97 வயதில் 2005-ம் ஆண்டு இறந்தார்.

ஜெசிந்தா மற்றும் லூசியாவின் கல்லறைகள்
ஜெசிந்தா மற்றும் லூசியாவின் கல்லறைகள்

வாழ்ந்த வீட்டுக்குள் பயணியாக!

அடுத்ததாக, பிரான்சிஸ்கோ மற்றும் ஜெசிந்தா இருவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டை ஒட்டிய சுவரில், ‘மூன்று சிறுவர்களும் நின்று நிழற்படம் எடுத்த சுவர்’ எனும் குறிப்பு இருந்தது. பிரான்சிஸ்கோவும், ஜெசிந்தாவும் சிறு வயதிலேயே இறந்துவிட்டதால், அந்த நிழற்படம், முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமைந்துவிட்டது.

லூசியா, பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா
லூசியா, பிரான்சிஸ்கோ, ஜெசிந்தா

வீட்டின் முகப்பில் 1888 என குறிப்பிடப்பட்டிருந்தது. வீட்டுக்குள், சமையல் அறை, சிறுவர்கள் இருவரும் பிறந்த அறை, படுத்துறங்கிய கட்டில், பயன்படுத்திய குடை, ஆடுகளுக்குத் தண்ணீர் வைத்தத் தொட்டி உள்ளிட்டவை இருந்தன. ஒரு குறிப்பிட்ட அறையில், மண் குதிர்களும், கூடைகளும், மேசை மற்றும் தொட்டியும் இருந்தன. உள்ளே சென்றதும், தொட்டியின் மீதிருந்த பெயர் பலகையை மேசையின் மீதும், மேசையில் இருந்ததை தொட்டியின் மீதும் மாற்றி வைத்த பெரியம்மா, “தவறாக வைத்திருக்கிறீர்கள்” என்று அங்கிருந்த பொறுப்பாளரிடம் சொன்னார்.

பெரியம்மாவின் முகத்தைப் பார்த்தேன். “எனக்கு எப்படி தெரியும் என நினைக்கிறீர்களா? இது எங்களுடைய வீடு. நாங்கள் இங்குதான் பிறந்து வளர்ந்தோம்” என்று சொல்லிக்கொண்டே வீட்டுக்குப் பின்னால் சென்றார். “இந்த மரத்தில்தான் ஊஞ்சல் ஆடினோம். இந்த கிணற்றில்தான் தண்ணீர் இறைத்தோம். கோயில் நிர்வகம் கேட்டதால் வீட்டைக் கொடுத்துவிட்டோம்” என்றார். சொல்லும்போதே முகத்தில் சோகம் தெரிந்தது.

மேலும், “அன்னை மரியாள் காட்சி கொடுத்த சிறுவன் பிரான்சிஸ்கோவின் அம்மா இறந்ததால். அவரின் அப்பா இன்னொரு திருமணம் செய்தார். அந்த இன்னொரு திருமணத்தில் பிறந்தவர் என்னுடைய அப்பா. எனவே, என் அப்பாவும், பிரான்சிஸ்கோவும் ஒன்றுவிட்ட சகோதர்கள்” என்றார். வியப்பின் உச்சம் இது! யாருக்கும் கிடைக்காத ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

லூசியா பிறந்த வீட்டையும், வேறு சில இடங்களையும் காட்டிவிட்டு சான்டரெய்ம் செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்தார். வீட்டுக்குச் சென்று குளித்துவிட்டு நண்பர்களுக்காகக் காத்திருந்தேன். வந்தவுடன், இரவு உணவு சாப்பிட்டோம். பவுலோவும் நானும் நகர வீதிகளில் நடந்தோம்.

பிரான்சிஸ்கோவின் வீட்டில் ஆடு அடைத்த பட்டி
பிரான்சிஸ்கோவின் வீட்டில் ஆடு அடைத்த பட்டி

தொட்டிப் பாலம்

மறுநாள் காலையில், எல்லோரும் புறப்பட்டோம். லிஸ்பனுக்குள் நுழைந்ததும் உயரமான தொட்டிப் பாலம் நீண்ட தூரம் செல்வதைப் பார்த்தேன். நண்பரிடம் கேட்டேன். “லிஸ்பனில், குறிப்பாக மேற்கு பகுதியில் ஒருகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை நிலவியது. எனவே, சின்ட்ராவில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்காக பரோக் கட்டிடக்கலை வடிவத்தில் இந்த தொட்டில் பாலத்தைத் திட்டமிட்டார்கள். 1731-ல் தொடங்கி 1799-ல் கட்டி முடித்தார்கள். 58 கிலோமீட்டர் நீளத்துக்கு 5 நகராட்சிகளைக் கடந்து தண்ணீர் வந்தது. மொத்தம் 109 தூண் வளைவுகள். அதிகபட்சம் 65 மீட்டர் உயரம். தூண்களின் சுற்றளவு 28 மீட்டர். 1755-ம் ஆண்டு நிலநடுக்கத்தையும் தாங்கி நிற்கிறது. 2012-ல் யுனெஸ்கோ புராதன சின்னமாகத் தேர்வு பெற்றது” என்றார். “இப்போதும் தண்ணீர் வருகிறதா?” என்று கேட்டேன். “1967-க்குப் பிறகு தண்ணீர் வரவில்லை” என்றார். தொட்டிப் பாலத்தைப் பார்த்துக்கொண்டே சென்றேன்.

(பாதை விரியும்)

நட்பின் நம்பிக்கை

பாத்திமா சென்று திரும்பிய இரவில் சாப்பிடும்போது, “என் நண்பர்கள் எல்லாரும் மிகவும் ஆச்சரியமாகக் கேட்டார்கள்” என்று சான்ரா ஆரம்பித்தார். “என்ன?” என்று கேட்டேன். “அதெப்படி, பாங்காக்கில் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்து, பழகிய ஒருவரை நம்பி, வீட்டுச் சாவியைக் கொடுத்துவிட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள்” என்றார். அதற்கு, சான்ரா என்ன பதில் சொல்லியிருப்பார் என்று அறிய ஆவலானேன். அவரின் முகத்தையேப் பார்த்தேன். புன்னகைத்தார். புன்னகையில் என் மீதான, நட்பின் மீதான நம்பிக்கை நிறைந்திருந்தது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in