சிறகை விரி உலகை அறி - 67: ‘உலகின் எல்லை'யில் ஒரு நாள்!

சிறகை விரி உலகை அறி - 67:  ‘உலகின் எல்லை'யில் ஒரு நாள்!

இலையின் முனையில் வடியும் நீர், நெல்லின் நுனியில் அறுக்கும் கூர், சொல்லின் முனையில் சுடும் வலி அனைத்தும் அழகியலாகவும் அனுபவங்களாகவும் உள்ளத்தில் உறைந்திருக்க, உலகின் முனையைப் பார்க்க வழிகாட்டியுடன் புறப்பட்டோம்.

சின்ட்ரா மலையின் மரக்கிளைகளுக்குள் சூரியன் விரல் நீட்டத் தொடங்கியிருந்தது. அசையும் இலைகளுடன் விரல்களின் ஒளி நடனம் வனத்தை வனப்பாக்கியது. வண்ணப் பூக்கள் மின்னிக் கடந்தன. சிறு வண்டுகள் ஒளி வரிக்குள் மிதந்தன.

வழியில் மதிய உணவு சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து பயணித்தோம். மரங்களின் அரண்மனை கடந்து, கடலை மறைத்து நிற்கும் குன்றுகளில் பயணமானோம். நீலக் கடலின் நீண்ட உடலை, கரையை உதைக்கும் நீர் விரலை ரசித்துக்கொண்டே பயணித்தோம். கோலரஸ் கடற்கரையில் இறங்கினோம்.

கடலின் நீராலை

சின்ட்ரா நகராட்சியின் எல்லையில், பெரிய குன்றில் அமைந்திருக்கிறது கோலரஸ் நகரம் (Colares- Azenhas do Mar). குன்றைச் சுற்றிலும் கடல். கோலரஸ் தோ மார் என்றால், கடலின் நீராலை என்று பொருள். அஞ்சல் அட்டைகளில் இடம்பிடித்துள்ள இந்நகரத்தின் வெள்ளை வண்ணம் பூசப்பட்ட வீடுகளும், சிவப்பு கூரைகளும் தூரத்தில் இருந்து பார்க்கும்போதே கண்களுக்குள் ஓவியமாகின்றன. முன்பொரு காலத்தில், லிஸ்பன் மற்றும் சின்ட்ரா நகரத்து செல்வந்தர்கள் கோடைகால விடுமுறையைக் கொண்டாட இங்கே வீடு கட்டுவதைப் பெருமையாக நினைத்தார்கள். போர்ச்சுக்கல் கலை வடிவத்தில், பாரம்பரிய நீலம் மற்றும் வெள்ளை டைல்ஸால் வீட்டின் முகப்பு மற்றும் உட்புற மேற்கூரைகள் அமைந்த வீடுகள் பல இங்குள்ளன.

கோலரஸ் நகரம்
கோலரஸ் நகரம்

பாறைமேல் நின்று நகரைப் படமெடுத்த நாங்கள், இறங்கி கடற்கரைக்குச் சென்றோம். சிறிதளவே மணல் தெரிந்தது. அலைகள் அதிகமானால் அந்த மணலும் மறைந்துவிடும். கடலுக்கும் கரைக்கும் இடையே நீச்சல் குளம் கட்டியுள்ளார்கள். அலைகளாய் குளத்துக்குள் வரும் நீர் திரும்பிச் செல்வதில்லை. ஆழமற்ற அக்குளத்தில் மக்கள் பாதுகாப்பாக குளிக்கலாம். நீரில் கால் நனைத்துவிட்டுப் புறப்பட்டோம்.

உலகின் எல்லை

சின்ட்ரா மலையின் மேற்கு எல்லையில் அமைந்துள்ள ரோக்கா முனைக்குச் சென்றோம் (Capa da Roca). தூரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு நடந்தோம். கலங்கரை விளக்கம், சிலுவை மற்றும் நினைவுத் தூண் இங்குள்ளது. நினைவுத் தூணில், ‘நிலம் இங்கே முடிகிறது. கடல் இங்கே தொடங்குகிறது’ எனும் வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. ஆமாம், ரோக்கா முனை என்பது, ஆசிய மற்றும் ஐரேப்பிய கண்டங்களின் மேற்கு முனையாகும். ஒரு காலத்தில், இந்த இடம்தான் உலகின் எல்லை எனக் கருதப்பட்டது.

உலகின் எல்லை எனப்பட்ட இடத்தில்
உலகின் எல்லை எனப்பட்ட இடத்தில்

பாறையில் அமர்ந்து கடலைப் பார்த்தேன். அட்லான்டிக் பெருங்கடலும், வானமும் ஒரே நிறத்தில் தெரிந்தது. பேரெழுச்சியுடன் செங்குத்துப் பாறைகளில் மோதும் தண்ணீரின் ஓசை உடலை சிலிர்க்கச் செய்தது. நீருக்குள் பரவிய சாரல் எம் முகத்தைக் குளிர வைத்தது. பாறை மீதுள்ள பாசத்தில், ஆக்ரோஷமாகப் பற்றிப் பிடிக்கும் அலைகளைப் பார்த்துவிட்டுக் கிளம்பினேன்.

இளைப்பாறும் பொழுது

காஸ்காய்ஸ் (Cascais) நகரக் கடற்கரைக்குச் சென்றோம். கடலில் குளித்து வெயிலில் காய்ந்துகொண்டிருந்தார்கள் சுற்றுலா பயணிகள். மணலில் நடந்து, மக்களைப் பார்த்து, நீரில் நனைந்து கடைத் தெருவுக்குத் திரும்பினோம். பாரம்பரிய தெருக்களில் சுற்றித் திரிந்தோம். குழுவில் இருந்த இளைஞரும், அவரது காதலியும், நானும் ஐஸ் கிரீம் சாப்பிட்டோம்.

குழுவில் அமெரிக்கா, மெக்சிகோ, சிங்கப்பூர் உள்ளிட்ட நாட்டினர் இருந்தார்கள். சிங்கப்பூரில் இருந்து வந்தவர், “நான் தனிப் பயணி. எந்த நாட்டுக்குச் சென்றாலும், ஒயின் குடிப்பேன். சுவையை வைத்தே அது, என்ன ஒயின் என்பதை என்னால் சொல்ல முடியும்” என்றார். மேலும், கடலில் ஸ்கூபா டைவிங் செய்வது அவரது பொழுதுபோக்கு என்றும், முறைப்படி பயின்று சான்றிதழ் வைத்திருப்பதாகவும் சொன்னார். எனக்குள்ளும் ஆசை வளர்ந்தது. 2022-ல் தான் ஆசை நிறைவேறியது.

லிஸ்பன் திரும்பினோம். குழுவினருக்கு நன்றி சொல்லிவிட்டு, லிஸ்பன் நகரின் 3,000 ஆண்டு வரலாறு புதைந்திருக்கும் கோயிலுக்குச் சென்றேன்.

தொல்பொருள் பேராலயம்
தொல்பொருள் பேராலயம்

தொல்பொருள் பேராலயம்

லிஸ்பன் நகரை உரோமையர்கள், விசிகோத்ஸ், மூர் இனத்தவர்கள் அடுத்தடுத்து ஆட்சி செய்துள்ளார்கள். போர்ச்சுக்கீசின் முதல் அரசர், முதலாம் அஃபோன்சோ ஹென்ரிக்கஸ் மூர் இனத்தவர்களை 1147-ல் வென்றார். லிஸ்பனில் பேராலயம் கட்டும் பணியை ஆரம்பித்தார். 13-ம் நூற்றாண்டின் கடைசியில், கோயிலோடு சேர்த்து, மக்கள் எளிதில் செல்ல முடியாத கிளாய்ஸ்டர் (Cloisters) பகுதியை உருவாக்கினார். கிளாய்ஸ்டர் பகுதியில் தற்போது அகழாய்வு நடக்கிறது. கிளாய்ஸ்டர் கட்டப்படுவதற்கு முன்பாக, அங்கே மசூதியும், அதற்கு முன்பாக அதே இடத்தில் விசிகோத்ஸ் கட்டிய கிறிஸ்தவ ஆலயமும் இருந்ததை அகழாய்வில் கண்டுபிடித்துள்ளார்கள்.

பல்வேறு நிலநடுக்கங்களில் சேதமுற்றாலும், ஒவ்வொரு முறையும் பேராலயம் புனரமைக்கப்பட்டுள்ளது. பேராலயத்துக்குள் சென்றேன். ரோமன், விசிகோத்ஸ், மூர் இன கட்டிடக் கலையின் தாக்கம் இருப்பதை வாசித்து அறிந்தேன். மத்தியகால சுரூபங்களையும் கலை வேலைப்பாடுகளையும் பார்த்தேன். அரசர் நான்காம் அஃபோன்சோவின் கல்லறை உள்ளிட்ட முக்கியமானவர்களின் கல்லறைகளைத் தரிசித்தேன். முக்கியமான ஆவணங்கள், வெள்ளிப் பொருட்கள், சிற்பங்கள், விலைமதிப்பற்ற கற்கள் அனைத்தையும் முதல் மாடியில் கண்டேன்.

அந்தோனியார்

இந்து சமயத்தில் குலதெய்வ வழிபாடு இருப்பதுபோல, சில கிறிஸ்தவ குடும்பங்கள் தங்களுக்கென சில புனிதர்களை குல தெய்வங்களாக வைத்திருக்கிறார்கள். குல தெய்வங்களுள் முக்கியமானவர் புனித அந்தோனியார். புனித அந்தோனியாரின் கோயிலில், கிடா வெட்டுவது, 13 நாட்கள் அல்லது 13 வாரங்கள் தங்கியிருப்பது, அவர் அணிந்த நிறத்தில் 13 மாதங்கள் ஆடை அணிவது, அந்தோனியார் மொட்டை (தலையைச் சுற்றிலும் வட்டமாக முடி வைத்து மற்ற இடங்களில் சிரைப்பது), முக்குடும்பி (காதுகளுக்கு மேல் இரண்டு, பின்னந்தலையில் ஒன்று என 3 பொட்டுகள் வைத்துவிட்டு மற்ற இடங்களில் சிரைப்பது) போன்ற வழக்கங்கள் உண்டு.

அந்தோனியார் வீட்டின் மீது கட்டப்பட்டுள்ள கோயில்
அந்தோனியார் வீட்டின் மீது கட்டப்பட்டுள்ள கோயில்

லிஸ்பன் நகரில் 1195-ல் மிகவும் வசதியான குடும்பத்தில் அந்தோனியார் பிறந்தார். துறவியாக இத்தாலி நாட்டில் பதுவா நகரில் இறந்தார். அதனால், பதுவை அந்தோனியார் என்று அழைக்கப்படுகிறார். லிஸ்பன் பேராலயத்தில்தான், அவருக்குப் பெயர் சூட்டினார்கள். நான் கோயில் படியில் ஏறிச் செல்லும்போது, ‘இந்த இடத்தில் அந்தோனியாரை சாத்தான் சோதித்தது. சுவரில் சிலுவை அடையாளம் வரைந்தார். சாத்தான் ஓடிவிட்டது. சிலுவை அடையாளம் சுவரோடு பதிந்துவிட்டது’ என்று எழுதியிருந்தது. பேராலயத்துக்கு முன்னால் உள்ள சாலையின் அந்தப்பக்கம் மற்றோர் ஆலயம் இருக்கிறது. அங்கும் சென்றேன்.

பிறந்த வீட்டின் மீது ஆலயம்

ஆலய படியேறும் இடத்திலுள்ள தகவல் பலகையில், ‘அந்தோனியார் பிறந்த மற்றும் அவரது பெற்றோர் வாழ்ந்த வீடு இருந்த இடத்தில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 15-ம் நூற்றாண்டிலிருந்தே இங்கு சிறிய கோயில் இருந்திருக்க வேண்டும். இருப்பினும், அதே நூற்றாண்டு அரசர் இரண்டாம் ஜான், இந்த இடத்தில் பெரிய கோயில் ஒன்று கட்டத் தொடங்கினார். அது 16-ம் நூற்றாண்டில் அரசர் முதலாம் மனுவேல் காலத்தில் நிறைவுற்றது. 1755-ம் ஆண்டு நிலநடுக்கத்தில் கோயிலின் ஒரு பகுதி அழிந்தது. 1767-ல் மறுபடியும் கட்டத் தொடங்கி 20 ஆண்டுகள் கட்டினார்கள். 1787-ல் திறந்தார்கள். பழைய கோயிலின் ஒரு பகுதி இக்கோயிலின் கீழே உள்ளது. பழைய கோயில், அந்தோனியாரின் வீட்டின் மீது கட்டப்பட்டது என்கிறது பாரம்பரியம்’ என்று எழுதியிருந்தது. கோயிலுக்குள் சென்றேன். ஆன்மிக அமைதியை அனுபவித்தேன். கோயிலின் கீழே சென்று மீதமிருக்கும் பழைய கோயிலைப் பார்த்தேன்.

கோயிலுக்குக் கீழே... அந்தோனியார் பிறந்த இடம்
கோயிலுக்குக் கீழே... அந்தோனியார் பிறந்த இடம்

நட்பின் நாகரிகம்

ஒளியை இருள் உண்ணத் தொடங்கியது. போர்ச்சுக்கல் நண்பரைத் திறன்பேசியில் அழைத்தேன். பாங்காக் பயணத்தில் கிடைத்த நட்பு இது (கட்டுரை 11). லிஸ்பனில் வேலை செய்த நண்பர்கள் பவுல் – சான்ரா இருவரும், 85 கிலோமீட்டர் தூரத்தில் சான்டரெய்ம் (Santarem) நகரத்தில் வாழ்கிறார்கள். வீட்டுக்குச் சென்றோம். கூடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, நண்பர்கள் இருவரும் இ-சிகரெட் புகைத்தார்கள். சுவாசிக்க இயலாமல் செருமிக்கொண்டே இருந்தேன். அவர்களிடம் சொல்லவும் விரும்பவில்லை. 10 நிமிடம் கடந்திருக்கும், அவர்களாகவே, “மன்னித்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, கண்ணாடி கதவுக்கு அந்தப் பக்கம் சென்று புகைத்தார்கள். நான் தங்கிய இரண்டு நாட்களும் அப்படியே செய்தார்கள்.

(பாதை விரியும்)

சிக்கன சிம் கார்டு!

போர்ச்சுக்கல் நண்பரை அழைக்க எந்த சிம் பயன்படுத்தினேன் என நீங்கள் நினைக்கலாம். Eurail pass வாங்கும்போதே Eurail SIM Card முன்பதிவு செய்திருந்தேன். ஐரோப்பாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கூடுதல் கட்டணமின்றி இந்த சிம் கார்டைப் பயன்படுத்தலாம். இணையம் வழியாகப் பணம் செலுத்த வேண்டும். நான் தாமதமாக முன்பதிவு செய்திருந்ததால், பயணம் புறப்படும்வரை சிம் கார்டு வந்து சேரவில்லை. வாடிக்கையாளர் உதவி மையத்தைத் தொடர்புகொண்டு, ஏதென்ஸில் நான் தங்கும் விடுதிக்கு அனுப்பச் சொன்னேன். அனுப்பினார்கள். சிம் கார்டு ஏதென்ஸ் வருவதற்குள் நான் அங்கிருந்து கிளம்பும் நாள் வந்தது. மறுபடியும் உதவி மையத்தை நாடி, “10 நாட்கள் கழித்து ஜெர்மனி வருவேன். அங்கே அனுப்ப இயலுமா?” என்று கேட்டேன். அனுப்பினார்கள். பெற்றுக்கொண்டேன். மனநிறைவான வாடிக்கையாளர் சேவை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in