சிறகை விரி உலகை அறி - 66: சிலிர்க்கவைக்கும் சின்ட்ரா!

பெனா அரண்மனை
பெனா அரண்மனை

நினைவுகளின் நீரோடையில் நீந்துகிறது மனது! தூதுவரும் இலை, இமை சொட்டும் மழை, பறந்த துகள்கள், வருடிய விரல்கள், திடீர் உதவிகள், தீராத உறவுகள், விழுந்த பொழுதுகள், எழுந்த அனுபவங்கள்... அனைத்தும் வாழ்தலை அர்த்தமாக்குகின்றன. வரும் நாட்களை வசந்தமாக்குகின்றன.

மாட்ரிட் விமான நிலையம் சென்றபோது இரவு மணி 8. மறுநாள் அதிகாலை 6.30 மணிக்கு என் விமானம். நகரத்தில் அறையெடுத்துத் தங்கினாலும், சில மணி நேரமே தூங்க முடியும் என்பதால், இரவு முழுவதும் விமான நிலையத்தில் தங்கியிருக்கத் திட்டமிட்டிருந்தேன். மனதுக்குப் பிடித்த ஓர் இடத்தில் அமர்ந்தேன். விமான அறிவித்தல்கள், பணியாளர்கள், விளம்பரங்கள், பயணிகள் என ஒவ்வொன்றாக வேடிக்கை பார்த்த பிறகு, திறன்பேசியில் உள்ள நிழற்படங்களைப் பார்க்கத் தொடங்கினேன். பார்சிலோனாவில் ‘வாக்கிங் டூர்’ நேரத்தில் நான் படமெடுத்த கட்டலோனியன் கவிஞரின் கம்பீரமான சிலை என்னைக் கவர்ந்தது. நினைவுகளை மனதோடு பகிர்ந்துகொண்டு இதழோரம் புன்னகைத்தேன்.

இனமான கவிஞர்

ஸ்பெயினில் சாந்தா குரூஸ் நகரத்தில் பிறந்தவர் ஏஞ்சல் கிமெரா. இவரது சிலையில், 1845 – 1924 என்று இவரது வாழ்நாள் குறிப்பிடப்பட்டுள்ளது. கிமெரா 7 வயதில் தன் பெற்றோருடன் கட்டலோனியன் பகுதியில் குடியேறினார். பார்சிலோனா நகரில் படித்தார். கவிஞர், பேச்சாளர், நாடக ஆசிரியர் எனும் பல்கலை வித்தகரானார். கட்டலோனியன் மொழி, கலாச்சாரத்தின் மறுமலர்ச்சிக்காக 1830-களில் தொடங்கி 1880-கள்வரை உயிர்த்துடிப்போடு இருந்த ‘மறுமலர்ச்சி’ (Renaizensa) இயக்கத்தின் மிகப்பெரும் ஆதரவாளராகத் திகழ்ந்தார். இவரின் பெரும்பாலான நாடகங்களும் கவிதைகளும் கட்டலோன் பிராந்தியத்தின் பண்டைய மொழி மற்றும் கலாச்சாரத்தில் நீண்டகாலமாகக் கலந்திருந்த பெருமைக்கு உயிரூட்டின. 1908-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. இவருடைய உரைகள், ‘தந்தை நாட்டுக்கான பாடல்’ எனும் தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது.

ஏஞ்சல் கிமெரா சிலை
ஏஞ்சல் கிமெரா சிலை

பாதுகாப்பு மிக அவசியம்

களைப்பினால், திறன்பேசி பார்ப்பதை நிறுத்தினேன். தூங்குவதற்கு முன், பையை அருகில் வைத்துக்கொண்டேன். ஏனென்றால், நான் பயணம் தொடங்குவதற்கு முன்பாக, பலமுறை ஐரோப்பாவுக்குச் சென்றுள்ள என் நண்பர் ஒருவரிடம், “ஐரோப்பாவில் பொருட்கள் திருடு போகுமா?” என்று கேட்டேன். “நிச்சயமாக. அதிலும், பார்சிலோனாவில் அதிக கவனம் தேவை” என்று சொல்லிவிட்டு அவரது அனுபவத்தைப் பகிர்ந்தார். “அமெரிக்க பெண் ஒருவர், பார்சிலோனாவில் விடுதி வரவேற்பறையில் காத்திருந்தார். அப்போது, வரவேற்பு மேசையில் இருந்த பெண் அழைத்ததால், பையை இருக்கையில் வைத்துவிட்டுச் சென்றார். ஒரு நிமிடத்தில் திரும்பினார். பையைக் காணவில்லை. தேடினாலும் கிடைக்கவில்லை. பையில் கடவுச்சீட்டு இருந்ததால், செய்வதறியாது குழம்பினார்.

கடவுச்சீட்டின் முதல் மற்றும் கடைசிப் பக்கங்கள், விசா பக்கம் உள்ளிட்டவற்றின் நகல்கள் அவரது மின்னஞ்சலில் இருந்ததால், அதை எடுத்துக்கொண்டு அமெரிக்கத் துதரகம் சென்றார். போனவருக்கு அதிர்ச்சி. இவரைப்போலவே, கடவுச்சீட்டு திருடு போய்விட்டதாக பலர் வரிசையில் நின்றார்கள்” என்றார் நண்பர். எனவே கவனமாக இருந்தேன். நிம்மதியாகத் தூங்கினேன்.

லிஸ்பன்

காலையில் விமானம் ஏறி, போர்ச்சுக்கல் நாட்டின் லிஸ்பன் நகரில் இறங்கினேன். விமான நிலையத்திலேயே பல் விலக்கி, முகச்சவரம் செய்து கிளம்பினேன். சுற்றுலாவுக்கு முன்பதிவு செய்திருந்ததால், தொடர்வண்டியில் ஏறி, குறிப்பிட்ட நிறுத்தத்தில் இறங்கினேன். சூரியன் முகம் காட்டாத காலைநேர பகலை ரசித்துக்கொண்டு, பரந்து விரிந்த சாலையில் பச்சைத் தோகை விரித்திருந்த மரங்களைக் கடந்து காத்திருந்தேன். வேறு சிலரும் வந்தார்கள். 8.45 மணிக்கு, லிஸ்பன் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில், சின்ட்ரா நகரத்து மலையில் இருக்கும் பெனா தேசிய அரண்மனைக்கு (Palacio De Pena) மகிழுந்தில் புறப்பட்டோம். இலைகளைச் சிலுப்பிய காற்றை ஜன்னல் வழியாக ரசித்துக்கொண்டிருந்தேன். வழிகாட்டி வரலாறு சொல்லத் தொடங்கினார்.

மனம் தொடும் தூரத்தில் வரலாறு

“நாம் பார்க்கச் செல்லும் இடத்தின் வரலாறு, கி.பி.12-ம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. முதன் முதலில், பெனே மரியாள் என்னும் பெயருடன் கத்தோலிக்க கோவில் இங்கே கட்டப்பட்டது. பிறகு, அதே இடத்தில் அரசர் முதலாம் மனுவேல் துறவு மடம் கட்டினார். 1755-ல் லிஸ்பன் நகரத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம், துறவுமடத்தை ஏறக்குறைய முற்றிலுமாக உருக்குலைத்தது. அதற்கு மத்தியிலும் துறவிகள் தொடர்ந்து வாழ்ந்தார்கள். 1834-ல் போர்ச்சுக்கல் நாட்டில் துறவிகளுக்கும் துறவு மடங்களுக்கும் தடை வந்தபோது, இந்த இடம் முக்கியத்துவத்தை இழந்தது.

பெனா அரண்மனை
பெனா அரண்மனை

1836-ல் போர்ச்சுக்கல் அரசி இரண்டாம் மரியா, ஜெர்மன் இளவரசர் இரண்டாம் பெர்டினாண்ட் என்பவரைத் திருமணம் செய்தார். பெர்டினாண்ட் பன்மொழி வித்தகர். இசை மற்றும் ஓவியத்தில் தேர்ந்தவர். தன் வாழ்நாள் முழுவதும், ஓவியராக, கலைப் பொக்கிஷங்களைச் சேகரிப்பவராக அல்லது பொருளுதவி செய்கிறவராக வாழ்ந்தார்.

போர்ச்சுக்கல் வந்த பெர்டினாண்ட், சின்ட்ராவின் அழகில் மயங்கினார். பெனாவில் இருந்த பழைய கட்டிடத்தைப் புனரமைத்து கோடை காலத்தில் தங்குவதற்குரிய இடமாக்க விரும்பினார். எனினும், கலை ஆர்வத்தால் ஏற்கெனவே இருப்பதை விரிவுபடுத்துவதுடன், அரண்மனையும் கட்ட முடிவெடுத்தார். பொறுப்பை பரோன் வில்ஹெல்ம் லுட்விக் வான் எஸ்ச்வேஜ் என்பவரிடம் ஒப்படைத்தார். மூரிஸ், பரோக், கோதிக், மறுமலர்ச்சி மற்றும் மனுவல் காலக் கட்டிடக் கலையின் கலவையாக அரண்மனை எழுந்தது. சிவப்பு, மஞ்சள், நீல நிறங்களால் கட்டிடம் மிளிர்ந்தது. அரண்மனையைச் சுற்றியுள்ள 85 ஹெக்டேர் பரப்பளவுள்ள பெனா பூங்காவில் அனைத்து கண்டங்களிலிருந்தும் மரம் - செடிகளைக் கொண்டுவந்து நட்டார்.

அரண்மனைக்கு முன்பாக
அரண்மனைக்கு முன்பாக

இவர்களுக்குப் பிறகு, முதலாம் கார்லோஸ், அரசி அமலியா ஆகியோர் இந்த அரண்மனையில் வாழ்ந்தார்கள். 1910 அக்டோபர் 5-ல் மக்கள் புரட்சி போர்ச்சுக்கல் மன்னராட்சியை வெற்றிகொண்டபோது, அரசி அமலியா இந்த அரண்மனையில்தான் இருந்தார். தற்போது, தேசிய நினைவுச் சின்னமாகவும், யுனெஸ்கோ புராதன சின்னமாகவும் பெனா அரண்மனை திகழ்கிறது” என்று சொல்லி நிறுத்தினார் வழிகாட்டி.

மறுபடியும் ஜன்னல் வழியாக இயற்கையின் இதயத்தைத் தேடி அலைந்தது மனது. “அதோ பாருங்கள், பெனா அரண்மனை” என்று விரல் நீட்டினார் வழிகாட்டி. அவரிடம் இருந்த உற்சாகம் எங்களுக்குள்ளும் தொற்றிக்கொண்டது. குனிந்து கண்ணாடி வழியாகப் பார்த்தோம், அலை கழுவிய கரைபோல் தெளிவாகப் பளிச்சென்றிருந்தது அரண்மனையின் வனப்பு. வனம் கட்டிய மாங்கல்யம்போல் மஞ்சள் நிறம் கவனம் ஈர்த்தது.

அரண்மனைக்குப் போகும் வழி_
அரண்மனைக்குப் போகும் வழி_

இயற்கையெனும் கவியரசி

வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இறங்கினோம். அரண்மனையை நோக்கி மலைப் பாதையில் நடந்தோம். பெரும் வனத்துக்குள் செல்வது போலவே இருந்தது. இரவைக் கதகதப்பாக வைத்திருந்த பனிப் போர்வை இன்னும் மடிக்கப்படவில்லை. பனியில் குளித்த இலைகளை சூரியன் இன்னும் துடைத்துவிடவில்லை. உடல் சூட்டை சதையோடு அழுத்தியது குளிர் காற்று. மூக்கில் நுழைந்த குளிர்ந்த காற்று வாய்வழியே உடலின் வெப்பத்தை வெளிக் கொணர்ந்தது. துள்ளிக் குதித்து, செடிகளின் தலைகளைத் தடவி, விரிந்த மலர்களின் உடலுக்குள் ஊடுருவிப் பார்த்து, இயற்கையெனும் இளம் கவியிடம் என்னை இழந்தேன்.

ட்ரைட்டான்
ட்ரைட்டான்

அரண்மனை அதிசயம்

10 நிமிடங்கள் நடந்து, அரண்மனை வாசலில் நின்றோம். வாசலுக்கு மேல் ட்ரைட்டான் (Triton) சிலை இருந்தது. சிப்பியில் அமர்ந்து தன்னுடைய மீன் கால்களை விரித்து, விரிந்த மார்புடன், கைகள் இரண்டையும் பின்னால் கொண்டுசென்று, கொம்புகளைப் பிடித்தபடி, வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார் ட்ரைட்டான். கிரேக்க கடவுள் பொசைதியோனின் மகனான இவர், கடலின் கடவுளாவார். இவருக்கு மனிதருக்குரிய தலையும் உடலும் இருக்கும். கால்களுக்குப் பதிலாக மீனின் வால் இருக்கும். ட்ரைட்டான் அமர்ந்திருந்த சிப்பிக்கு அருகில் மேலும் இரண்டு சிப்பிகளும், கடல் கற்களும் பதிக்கப்பட்டிருந்தன.

அரண்மனைக்குள் சென்றோம். தம் மனைவியும் அரசியுமான இரண்டாம் மரியாவுக்காக அரசர் இரண்டாம் பெர்டினாண்ட் ரசித்துக் கட்டிய படுக்கையறையைப் பார்த்தோம். ஆனால், இதைக் கட்டி முடிக்கும் முன்பே அரசி இறந்துவிட்டார். துறவிகள் பயன்படுத்திய சாப்பாட்டு அறைக்குள் நுழைந்தோம். ஒரே நேரத்தில் 24 பேர் சாப்பிடலாம். அரச குடும்பத்தினரும் இங்குதான் சாப்பிட்டார்கள். அவர்கள் பயன்படுத்திய மேசை, நாற்காலிகள், பீங்கான் பாத்திரங்கள் இருந்தன. அரசி அமலியாவின் அலுவலக அறையையும், அவர் பயன்படுத்திய பொருட்களையும் பார்த்தோம். அரச குடும்பத்தினரின் பொழுதுபோக்கு அறையைச் சுட்டிக்காட்டிய வழிகாட்டி, “அரண்மனையில் இதுதான் பெரிய அறை. இங்கே பில்லியாட்ஸ் மேசைகள் இரண்டு இங்கிருந்தன” என்றார்.

அரண்மனையின் உட்புறம்...
அரண்மனையின் உட்புறம்...

மொட்டை மாடிக்குச் சென்றோம். மரங்களின் தலையைப் போர்த்தியிருந்த பஞ்சுமிட்டாய் மேகங்களையும், இலைகளில் தவழ்ந்த நீர்த்திவலைகளையும் பார்த்தோம். வழி தெரியாமல் பலமுறை அரண்மனைக்குள் அலைந்தாலும், ஓரிடத்தில் ஒன்று சேர்ந்தோம். கடையில் தேநீர் அருந்தி, பிரட் சாப்பிட்டு கிளம்பினோம்.

(பாதை விரியும்)

பாக்ஸ்

பாதுகாப்பு முக்கியம்

பயணத்தின்போது பையை மட்டுமல்ல கடன் அட்டையையும் (Credit card) திருடர்களிடமிருந்து நாம் பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால், நம்மைக் கடந்து செல்லும் திருடர்கள், தங்களிடம் உள்ள கருவியில் நமது கடன் அட்டைத் தகவல்களைச் சேகரித்து விடுவார்கள். நமக்குத் தெரியாமலேயே, நம் பணப்பையை எடுக்காமலேயே நமது பணத்தைத் திருடிவிடுவார்கள். இதற்கு, எலக்ட்ரானிக் பிக்பாக்கெட்டிங் என்று பெயர். எனவே, RFID பாதுகாப்பு உள்ள பணப்பை பயன்படுத்துவது அவசியம். எலக்ட்ரானிக் பிக்பாக்கெட்டிங்ல் இருந்து, RFID நம் கடன் அட்டையைப் பாதுகாக்கும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in