சிறகை விரி உலகை அறி - 62: மனிதமும் புனிதமும்

புனித தெரசாவின் வலது கை உள்ள பெட்டி
புனித தெரசாவின் வலது கை உள்ள பெட்டி

உணர்வுகளில் கலந்த மனிதர்கள் வாழ்வை அழகுபடுத்துகிறார்கள். நட்பாக, காதலாக, தோழமையாக வாழ்வை வசந்தமாக்குகிறார்கள். அப்படியான ஒருவர், புனித தெரசா (Saint Therese of Lisieux). ‘சிறுமலர்’ , ‘இயேசுவின் குழந்தை தெரசா’ எனும் புனைப்பெயர்களும் இவருக்கு உண்டு. சிறுமலர் மேல்நிலைப் பள்ளியில் நான் படித்ததால், என் உணர்வுகளில் கலந்திருக்கும் சிறுமலரின் ஊரைப் பார்க்கச் சென்றேன்.

பெற்றோரும் தெரசாவும்

லிசியுக்ஸ் தொடர்வண்டி நிலையத்திலிருந்து, மலைப் பாதையில் சிறிது தூரம் நடந்தேன். கோயிலின் தகவல் மையத்தில் வரைபடம் வாங்கி, படிகள் பல ஏறினேன். கோயிலின் கீழ்தளம், புனிதர்களாக உள்ள தெரசாவின் பெற்றோருக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தம் குழந்தைகளை அறநெறியிலும், அன்புறவிலும் வளர்த்த பெற்றோரின் வாழ்க்கையை வாசித்து அறிந்தேன்.

தரைத்தளம், தெரசாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான ஓவியங்கள் மொசைக் கற்களால் அழகுபடுத்தப்பட்டுள்ளன. பீடத்தின் பின்புறம் ஆபிரகாம் தன் மகனை பலி கொடுக்கத் துணிவது, ரபேல் வானதூதரால் தொபியா வழிநடத்தப்படும் காட்சி. பாலைவனத்தில் திடப்படுத்தப்பட்ட எலியா, சிங்கத்தின் குகையில் தானியேல், கடவுள், நல்லாயன் இயேசு, அவருக்கு வலப்புறத்தில் அன்னை மரியா, இடப்புறம் தெரசா ஆகியோர் உள்ளனர்.

மைய பீடத்துக்கு அருகிலேயே மற்றொரு பீடம் உள்ளது. நடுவிலுள்ள சிறிய பெட்டியில், தெரசாவின் வலது கை எலும்புகள் வைக்கப்பட்டுள்ளன. நிறைய மெழுகுதிரிகள் எரிகின்றன. எரியாத திரிகளும் உள்ளன. திரி ஏற்ற விரும்புகிறவர்கள், அதற்குரிய யூரோவை உண்டியலில் போட்டுவிட்டு ஏற்றலாம்.

புனித தெரசாவின் வீடு
புனித தெரசாவின் வீடு

துறவு மடமும் வீடும்

தெரசா வாழ்ந்த மடத்துக்குச் சென்றேன். அவர் பயன்படுத்திய பொருட்களையும், புத்தகங்களையும், அவரின், ‘ஓர் ஆன்மாவின் வரலாறு’ தன் வரலாறு புத்தகத்திலிருந்த சில பகுதிகளையும் பார்த்தேன், வாசித்தேன்.

சிறு வயதில் திருப்பலியில் தெரசா பங்கேற்ற கோயிலுக்குச் சென்றேன். அது, 12-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டதாகும். அருள்தந்தையிடம் (Priest) வழக்கமாக தெரசா பாவ மன்னிப்பு பெற்ற இடத்தைப் பார்த்தேன். தெரசா மண்டியிட்டிருப்பது போன்று வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு ஞாயிறும் தன் குடும்பத்தினர் திருப்பலியில் பங்கேற்பதற்காக, கோயிலின் ஒரு பகுதியை தெரசாவின் குடும்பத்தினர் தங்கள் பொறுப்பில் வைத்திருந்ததை அப்படியே பராமரிக்கிறார்கள்.

தொடர்வண்டிக்கு நேரமாகிவிட்டது. ஓட்டமும் நடையுமாக, தெரசாவின் வீட்டுக்குச் சென்றேன். தெரசாவின் அறை, புத்தகங்கள், பொருட்கள் அனைத்தையும் பார்த்தேன். ‘ஒவ்வொரு சிறிய செயலையும் கடவுளுக்காகச் செய்வது’ தெரசாவின் தனித்துவம்.

தமிழருடன் ஒரு பொழுது

தொடர்வண்டி நிலையத்தில் நம் நிறத்தில் ஒருவரைப் பார்த்தேன். அறிமுகமானேன். “என் பெயர் சாமி பெருமாள். சென்னை பல்கலைக்கழகத்தில் படித்தேன். மொரீஷியஸ் தீவில் வாழ்கிறேன். பணி காரணமாக, லிசியுக்ஸில் சில காலம் வாழ்ந்தேன். அவ்வப்போது, இக்கோயிலுக்கு வந்து மனம் அமைதியோடு திரும்புவேன்” என்றார். தொடர்வண்டியில் ஏறினோம். யாரிடமும் ஏமாந்துவிடக்கூடாது என்கிற அச்சமே மேலோங்கி இருந்தது. இறங்கவேண்டிய நிறுத்தத்தில் இறங்கினேன். பேருந்தில் ரீன்ஸ் நகர் புறப்பட்டேன். சாமி பெருமாள் சமூக செயற்பாட்டாளர் என்பதை ஃபேஸ்புக்கில் அறிந்தேன். நண்பர்களானோம்.

லூயி மரி லெவே
லூயி மரி லெவே

லூயி மரி லெவே

பிரான்சில் லால் கிராமத்தில் 1884-ல் பிறந்தார் லூயி மரி லெவே. இந்தியா வந்தார். குருவாக அருட்பொழிவு பெற்றார். முதல் பணியிடமாக, நான் பிறந்த ஆண்டாவூரணிக்கு 1921-ல் அனுப்பப்பட்டார். 22 ஆண்டுகள் பணியாற்றினார். இவர்தான், என் கிராமத்தில் சிறுமலர் தொடக்கப்பள்ளியும், ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்காக விடுதியும் தொடங்கியவர். பூச்சிகளும் எலிகளும் நெற்கதிர்களை நாசம் செய்தபோது, பனை ஓலையில் விவிலிய வார்த்தைகளை இவர் எழுதி கொடுத்ததாகவும், அதை வயலில் வைத்தபிறகு பாதிப்பு இல்லாது விளைச்சல் கிடைத்ததாகவும் இப்போதும் பெரியவர்கள் சொல்கிறார்கள். ராமநாதபுரத்தில் 13 ஆண்டுகளும் சருகணியில் கடைசி 17 ஆண்டுகளும் பணியாற்றினார். ஒருமுறைகூட தன் நாட்டுக்குத் திரும்பிச் செல்லவே இல்லை. இவரின் கல்லறையைத் தேடி வரும் மக்கள் புதுமைகள் பல பெறுகிறார்கள்.

லூயி மரி லெவே வீட்டுக்கு முன்
லூயி மரி லெவே வீட்டுக்கு முன்

கத்தோலிக்க திருச்சபையில், புனிதராக உயர்த்தப்படுவதற்கு முன்பு, இறை ஊழியர், வணக்கத்துக்குரியவர், அருளாளர் எனும் மூன்று நிலைகளைக் கடக்க வேண்டும். லூயி லெவே, இறை ஊழியராக உள்ளார்.

லெவே பிறந்த ஊருக்குச் சென்றேன். லெவே படித்த பள்ளிக்கூடம், அவரது பெற்றோரின் கல்லறை, அவர் பிறந்து வளர்ந்த வீடு, அவருக்கு பெயர் வைத்த கோயில், அவரின் கால்கள் ஓடி அளந்த வீதி அனைத்தையும் பார்த்தேன். குடும்பத்தினர் யாரும் அங்கில்லை. வீடும்கூட வேறொருவரிடம் உள்ளது. உள்ளே சென்று பார்க்க அவர்கள் அனுமதிக்கவில்லை.

அன்றிரவு ஃபிளிக்ஸ் பேருந்தில் நான்டெஸ் சென்று தங்கினேன். காலையில், தொடர்வண்டியில் சோலெட் சென்றேன். சோலெட்டிலிருந்து, செயின்ட்-லாரண்ட் தே செவ்ரஸ்க்கு வாடகை வண்டிதான் நடைமுறை சாத்தியம். ஆனால், நிலையத்தில் வண்டி ஏதுமில்லை. அருகிலிருந்த பெண், “சுவரிலிருக்கும் எண்ணுக்கு அழையுங்கள்” என்றார். என் சூழ்நிலைப் புரிந்து அவரே அழைத்தார். வண்டி வந்தது. “போவதற்கு 50 யூரோ. அதே வண்டியில் திரும்புவதாக இருந்தால், போக வர 60 யூரோவுக்குக் கேளுங்கள்” என்பதை கூகுளில் ஏற்கெனவே வாசித்திருந்தேன். கேட்டேன். ஓட்டுநர் சம்மதித்தார்.

புனித மான்போர்ட்,  அருளாளர் மரிய லூயிஸ் கல்லறை
புனித மான்போர்ட், அருளாளர் மரிய லூயிஸ் கல்லறை

புனித மான்போர்ட்

பிரான்சில் பிறந்தவர் லூயிஸ் தே மான்போர்ட். கத்தோலிக்க குருவான இவர், ஏழைகளுக்கும், கைவிடப்பட்டவர்களுக்கும் பணியாற்ற துறவற சபை தொடங்கினார். ஒவ்வொருவரும் தம்மையே அன்னை மரியாவுக்கு அர்ப்பணிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தினார். ஏழைகளையும் நோயுற்றோரையும் கவனிக்க மரிய லூயிஸ் டிரிசெட் எனும் அருட்சகோதரியுடன் இணைந்து ‘ஞானத்தின் புதல்வியர் சபை’ தொடங்கினார். இருவரின் கல்லறையும் செயின்ட்-லாரண்ட் தே செவ்ரஸில் உள்ளது.

ஓட்டுநரிடம் 20 நிமிடங்களில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு கோயிலுக்குள் சென்றேன். ஞாயிறு வழிபாடு தொடங்கிவிட்டதால், முடியும்வரை காத்திருந்து ஜெபம் செய்துவிட்டு திரும்பினேன். 1 மணி நேரம் தாமதமானதால் ஓட்டுநர் மகிழ்ச்சியாக இல்லை. சூழ்நிலை குறித்து விளக்கிய பிறகு சாந்தமானார். பேசினதைவிட கூடுதலாக கொடுத்தேன். சோலெட்டிருந்து நான்டெஸ் திரும்பி, லியோன் நகருக்கு தொடர்வண்டியில் இரவு பயணித்தேன்.

பிரான்சில் கடைசிநாள். ஆர்ஸ் மற்றும் பரே-லே-மோனியல் பார்க்க வேண்டும். இரண்டும் வெவ்வேறு திசைகளில் உள்ளன. போக்குவரத்து வசதிகளும் நினைத்த நேரத்தில் இல்லை. லியோன் நகரில் வசிக்கும் ஜோஸ்பின் அவர்களைத் தொடர்புகொண்டேன். சம்மதித்தார். தன் மகிழுந்தில் ஆர்ஸ் கிராமத்துக்கு அழைத்துச் சென்றார்.

ஜான் மரிய வியான்னி

1786-ல் பிறந்தவர் வியான்னி. பிரெஞ்சுப் புரட்சியின்போது, அருள்தந்தையர்களும் அருள்சகோதரிகளும் தங்கள் உயிரைத் துச்சமென நினைத்து பணியாற்றியது இவருக்கு உத்வேகத்தைக் கொடுத்தது. தானும் அருள்தந்தையாகிட விரும்பினார். பல்வேறு சோதனைகளைக் கடந்து அருள்தந்தையானார். ஆர்ஸ் கிராமத்துக்கு அனுப்பினார்கள். மக்களின் பாவங்களைக் கேட்டு, பாவ மன்னிப்பு அளிக்கும் பணியில் தன்னையே அர்ப்பணித்தார். தினமும் 12 - 15 மணி நேரங்கள் கேட்டார்.

புனித வியான்னிக்கு வழி சொல்லும் சிறுவன்
புனித வியான்னிக்கு வழி சொல்லும் சிறுவன்

ஆர்ஸ் சென்றோம். சுற்றிலும் வயல்கள். நடுவே வளைந்து நெளிந்து ஒரு பாதை. இக்கிராமத்துக்கு வழி தெரியாமல் வியான்னி தவித்தபோது, ஆடு மேய்த்துக்கொண்டிருந்த சிறுவனிடம், “நீங்கள் எனக்கு ஆர்சுக்கு வழிகாட்டினால், நான் உங்களுக்கு சொர்க்கத்துக்கு வழி காட்டுவேன்” என்று சொன்னாராம். அவ்விடத்திலுள்ள நினைவிடத்தில் படமெடுத்தோம். கோயிலில் இருக்கும் வியான்னியின் அழியாத உடலையும், தனி பெட்டியிலுள்ள அவரின் இதயத்தையும், விவிலியம் வாசிக்கும் மேசையைச் சுற்றி அவரது வாழ்க்கை செதுக்கப்பட்டிருப்பதையும் பார்த்தோம். வியான்னி வாழ்ந்த அறை, அணிந்த ஆடை, பயன்படுத்திய குடை, கைத்தடி, கட்டில் ஆகியவற்றையும் பார்த்தோம்.

இயேசுவின் திரு இருதயம்

லியோன் திரும்பியதும், தொடர்வண்டியில் பரே-லே-மோனியல் சென்றேன். அங்குள்ள துறவு மடத்தில் வாழ்ந்த மார்க்கிரேட் மேரி அலகாக் அருள்சகோதரிக்கு இயேசு பலமுறை காட்சியளித்தார். தன் இதயத்தைத் திறந்து காட்டினார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை.

புனித கொலம்பியாரே
புனித கொலம்பியாரே

நான் கோயிலுக்குச் சென்றபோது வழிபாடு தொடங்கவிருந்தது. சேர்ந்துகொள்ள விரும்பினேன். மறுத்துவிட்டார்கள். அருள்சகோதரி ஒருவர், என் அருகில் வந்து, மற்றொரு கோயிலுக்கு அழைத்துச் சென்றார். எல்லா ஏற்பாடுகளையும் செய்தார். மார்க்கிரேட்டின் ஆன்ம குருவாக இருந்த புனித கொலம்பியாரே என்பவரின் கோயில் அது. வழிபாடு முடித்துவிட்டு, முந்தைய கோயிலுக்குள் மறுபடியும் சென்றேன். அவர்களின் வழிபாடு முடியாமல் தொடர்ந்தது. நல்ல வேளை அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. இல்லாவிட்டால் தொடர்வண்டியை தவறவிட்டிருப்பேன்.

லியோன் திரும்பினேன். ஜோஸ்பின் காத்திருந்தார். இரவு உணவு வாங்கிக் கொடுத்ததுடன் விமான நிலையம்வரை வந்து வழியனுப்பினார். நான் ஸ்பெயினுக்குப் பறந்தேன்.

(பாதை விரியும்)

லூயி மரி லெவே படித்த பள்ளி
லூயி மரி லெவே படித்த பள்ளி

பெட்டிச் செய்தி:

மன்னிக்கும் வழி

தன் வரலாறு நூலில், “புனிதமான சகோதரி ஒருவர் என்னை எப்போதும் எரிச்சல்படுத்திக்கொண்டே இருந்தார். இதை அவராகச் செய்யவில்லை. அவர் வழியாக சாத்தான் செய்தான். எனவே, (1) அருள்சகோதரியைப் பார்க்கும்போதெல்லாம் நான் புன்னகைத்தேன். (2) வேலைகளில் உதவி செய்தேன். (3) அவருக்காக ஜெபித்தேன். சில நாட்கள் கழித்து, அந்தச் சகோதரி என்னிடம் வந்து, ‘என்னைப் பார்க்கும்போதெல்லாம் புன்னகைக்கிறீர்களே. நான் அவ்வளவு அழகாகவா இருக்கிறேன்?’ என்று கேட்டார். அச்சகோதரியின் இதயத்தில் இருக்கும் இயேசுவைப் பார்த்து நான் புன்னகைத்தேன் என்பதை எப்படிச் சொல்வது!” என்று புனித தெரசா எழுதியுள்ளார். இந்த மூன்று வழிமுறைகளை நானும் பின்பற்றியுள்ளேன். பலன் கிடைத்தது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in