சிறகை விரி உலகை அறி - 57: நம் உரிமைகளின் முகவரி

உட்புறக் கூரையில் ஓவியம்
உட்புறக் கூரையில் ஓவியம்

வேடிக்கை பார்ப்பது சுகம். மரங்களும், அவற்றில் ஊறும் வண்டுகளும், காற்றோடு சுரமீட்டி கீழிறங்கும் இலைகளும், நிலம் மீது படரும் நீரும், தவ்வி எழும் தவளையும், பேசிக்கொண்டே திரியும் தாய்க்கோழியும் நிகழ்பொழுதை முழுமையாக்குபவை.

ஐநா சபைக் கட்டிடத்தின் ஒவ்வோர் அறையின் சிறப்புகளையும் விவரித்தார் எங்கள் வழிகாட்டி. அவர் சொன்னதைக் கவனிப்பதைவிட, அறைகளை வேடிக்கை பார்ப்பதிலும், சுவர்களில் இருந்த பொன்மொழிகளை வாசிப்பதிலும், ஓவியங்களை ரசிப்பதிலும் என் கவனம் சென்றது.

அறை எண் XX

அறை எண் 20 என்று முன்பு அழைக்கப்பட்ட ஓர் அறையின் மாடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றார். தற்போது, ‘மனித உரிமைகள் மற்றும் நாகரிகங்களின் கூட்டமைப்பு அறை’ என அது அழைக்கப்படுகிறது. ஸ்பெயின் நாட்டு நன்கொடையில் கட்டப்பட்டு, 2008 நவம்பர் 18-ல் திறக்கப்பட்ட இந்த அறையில் 754 இருக்கைகள் இருக்கின்றன.

16 ஆயிரம் சதுர அடியில், நீள் வட்ட வடிவத்தில் அறையின் உட்புறக் கூரை அமைக்கப்பட்டுள்ளது. முட்டை வடிவிலான கூரையில் 20 ஓவியர்களுடன் இரண்டு ஆண்டுகள் உழைத்து அற்புதமான ஓவியத்தைப் படைத்துள்ளார் ஸ்பெயின் நாட்டின் புகழ்மிக்க தற்கால ஓவியர் மைக்கேல் பார்தெல்லோ. ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கும் இடத்துக்கு ஏற்ப இதன் காட்சியும் பொருளும் வேறுபடும். 100 டன் வண்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகின் எல்லா நாடுகளில் இருந்தும் நிறமிகளைக் கொண்டுவந்திருக்கிறார்கள். பணியில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், சவால்களை எதிர்கொள்ள, கருத்தொற்றுமையை உருவாக்கத் தேவையான, கலந்துரையாடலையும் ஒற்றுமையையும் இந்த ஓவியம் பிரதிபலிக்கிறது.

கற்பனை செய்யுங்களேன்! நாம்தான் வானம். நம்மீது உலகத்தின் மரங்கள், மலைகள், மக்கள், கடல், பனி, விலங்குகள் அனைத்தும் அழிந்து, மெலிந்து, உருகி, வடிகிறது. இதுதான் அந்த ஓவியம். நாங்கள் சென்றபோது கூட்டம் நடந்துகொண்டிருந்தது. மாடத்தில் அமர்ந்து, முன்னே இருந்த ஒலி புகா கண்ணாடி வழியாக இந்தியாவின் பெயரைத் தேடினேன்; கண்டேன்.

மனித உரிமைப் பிரகடனம்

கீழிறங்கி, தாழ்வாரத்தில் நடந்தபோது, ஐநா மனித உரிமைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 30 பிரிவுகளை (Articles) விவரிக்கும் காட்சிகளைக் கவனித்தேன். ஒவ்வொரு பிரிவுக்கும் வலு சேர்க்கும் மனிதர்களின் படங்களை, அவர்களின் பங்களிப்பை, அப்படத்தை எடுத்த கலைஞரைப் பற்றிய குறிப்புகளுடன் வைத்திருந்தார்கள்.

இங்குபோர்க்
இங்குபோர்க்

வேலை செய்வதற்கான உரிமை (பிரிவு 23): படத்தை எடுத்தவர் ஆர்னே வெசன்பெர்க். ஜெர்மனி முழுதும் பயணித்து, ஓய்வு பெற்றாலும் வேலை செய்துகொண்டிருந்தவர்களைச் சந்தித்து அதை 2011-ல் எடுத்தார். அதிலுள்ள இங்குபோர்க் (1928-2012), மழலையர் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றியவர். பணி ஓய்வுக்குப் பிறகு, வாரம் 30 மணி நேரம் என 28 ஆண்டுகளாக மெக்டொனால்டில் வேலை செய்திருக்கிறார். ‘தனியாக வீட்டில் இருப்பதைவிட மனிதர்களின் மத்தியில் இருப்பதை இங்குபோர்க் விரும்பினார்’ என்கிறது குறிப்பு.

கல்விக்கான உரிமை (பிரிவு 26)

படத்தை எடுத்தவர் கைக்கோ டைமென். குழந்தைகள் மற்றும் பதின்பருவத்தினரின் படங்களை எடுத்து ஆவணப்படுத்தும் பணியைப் பல ஆண்டுகளாகச் செய்கிறார். ஜெர்மனியின், ரூர் பகுதியில் பள்ளிகளிலும், காப்பகங்களிலும் உள்ளவர்களைப் படம்பிடிக்கும் இவர், “இந்தப் படங்கள் குழந்தைகள் மீதான கவனத்தைக் கோருகிறது. அவர்கள் தனித்துவமானவர்கள், மற்றும் கல்விப்புலத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதை உணர்த்துகிறது. படம்பிடிக்கப்படுவதால், தாங்கள் மதிக்கப்படுவதாக அவர்கள் உணர்கிறார்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கிறது” என்கிறார்.

பாஸ்டன்ஸ் பூங்கா

அடுத்ததாக, நகரின் மையத்தில் அமைந்துள்ள பாஸ்டன்ஸ் (Parc des Bastions) பூங்காவுக்குச் சென்றேன். இங்கேதான் ஜெனிவாவின் முதல் தாவரவியல் பூங்கா உருவானது. 64,968 சதுர மீட்டர் அளவுள்ள இந்தப் பூங்காவின் ஓரத்தில், ஜெனிவா பல்கலைக்கழகத்தின் மையக் கட்டிடம் அமைந்துள்ளது.

சதுரங்கம்
சதுரங்கம்

மரங்களால் போர்த்தப்பட்டுள்ள பூங்காவுக்குள் நுழைந்தவுடனேயே, பலபேர் சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்தேன். நாம் அறிந்துள்ளதுபோல சிறிய பலகையில் அல்ல. தரையில் பெரிய சதுரங்கக் கட்டங்கள் வரைந்து ஆங்காங்கே விளையாடுகிறார்கள். ராஜா, ராணி உள்ளிட்ட காய்கள் அனைத்தும் முழங்கால் அளவு உயரமாக இருக்கின்றன. நின்றபடி கையில் தூக்கி அடுத்தக் கட்டத்தில் வைக்கிறார்கள். அல்லது காலால் தள்ளி வைத்து ஆடுகிறார்கள். சிறிய பலகையில் ஒன்றிரண்டு பேர் மரத்தடியில் விளையாடியதையும் கவனித்தேன்.

அருகிலேயே மற்றொரு விளையாட்டும் (Checkers Game) விளையாடினார்கள். சதுரங்கக் கட்டம் போன்று இருந்தது. கேரம் காய்களின் வடிவத்தில் பெரிய காய்கள் இருந்தன. காலில் தள்ளி கறுப்பு கட்டங்களில் வைத்து விளையாடினார்கள்.

மறுமலர்ச்சி சுவர்

பாஸ்டன் பூங்காவில் மறுமலர்ச்சி சுவர் (Reformation Wall) இருக்கிறது. பிரான்ஸ் நாட்டில் பிறந்தவர் ஜான் கால்வின். 54 வயதில் ஜெனிவாவில் இறந்தார். இரண்டாம் தலைமுறை புராடெஸ்டான்ட் மறுமலர்ச்சியாளர்களுள் மிகவும் முக்கியமானவர் இவர். இவரின் மறுமலர்ச்சி சிந்தனை கால்வினியம் (Calvinism) எனப்படுகிறது. கால்வின் உருவாக்கிய இறையியல் கல்லூரியில் இருந்தே ஜெனிவாவின் முதல் பல்கலைக்கழகம் முகிழ்த்துள்ளது.

மறுமலர்ச்சி சுவரில் நடுவில் உள்ள சிலைகள்...
மறுமலர்ச்சி சுவரில் நடுவில் உள்ள சிலைகள்...

பல்கலைக்கழகத்தின் 350-ம் ஆண்டு மற்றும் கால்வினின் 400-ம் பிறந்த நாள் இரண்டையும் சிறப்பிக்க 1909-ல் இச்சுவர் திறக்கப்பட்டது. 325 அடி நீளத்தில், 30 அடி உயரத்துடன் இருக்கும் இச்சுவரில், புராடெஸ்டான்ட் மறுமலர்ச்சியின் நிகழ்வுகளும், ஆவணங்களும், முக்கிய மனிதர்களின் சிலைகளும் இடம் பெற்றுள்ளன. சுவரின் இடது புறம் தொடங்கி வலது புறம் வரை மொத்தம் 10 சிலைகள் உள்ளன. இடதுபுறம் (3) மற்றும் வலதுபுறம் (3) இருக்கும் 6 சிலைகளும் 3 மீட்டர் உயரமுடையவை. சிலைகளுக்கு அருகில், அவர்களுடன் தொடர்புடைய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

மறுமலர்ச்சி சுவர்
மறுமலர்ச்சி சுவர்

நடுவில் உள்ள, ஃபெரல், கால்வின், பெஷா, நாக்ஸ் (வலமிருந்து இடமாக) ஆகியோரின் சிலைகள் 5 மீட்டர் உயரமுடையவை. நடுவில் உள்ள சிலைகளின் மேலே மறுமலர்ச்சி மற்றும் ஜெனிவாவின் தாரக மந்திரம், ‘இருளுக்குப் பின் ஒளி’ (Post Tenebras Lux) பொறிக்கப்பட்டுள்ளது.

மாலைநேரம், வானின் அக்கினிப் பாதையில் சூடு தாங்காத மேகம் விரைந்தோடியபோது, தொடர்வண்டியில் ஏறி பெர்ன் திரும்பினேன். திறன்பேசியில் நான் எடுத்துவந்திருந்த படங்களைப் பார்த்த நண்பர், “ஐநா அலுவலகத்தின் உள்ளே சென்றீர்களா! வெளியில் மட்டும் படம் எடுத்துக்கொண்டு வருவீர்கள் என்று நினைத்தேன். நான் இல்லாமல் நீங்களாகச் சென்றதுதான் சரி” என்றார். சுவையான உணவுக்குப் பிறகு தூங்கினேன்.

அருவி

மறுநாள் குடும்பமாக எல்லோரும் கிளம்பினோம். நண்பர் கஜன் மகிழுந்து ஓட்ட, அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இசைநிலவன், அஸ்மிகா மூவரும் பின்னால் அமர்ந்திருந்தார்கள். தூங்கலாம் என நினைத்தேன். ஆனாலும், தினமும் வெகுசீக்கிரம் கிளம்பி வேலைக்குச் செல்லும் நண்பரும் போதிய தூக்கம் இல்லாதிருந்ததால், தூக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டேன்.

நண்பரின் குடும்பத்துடன்...
நண்பரின் குடும்பத்துடன்...

இரண்டு மணி நேரம் பயணித்து ஸ்விட்சர்லாந்தில் புறப்படும் ரைன் நதி, அருவியாகப் பொங்கி வழியும் பகுதியை (Neuhausen am Rheinfall) அடைந்தோம். மகிழுந்து கதவைத் திறந்தபோதே, நீர் கச்சேரி கேட்டது. நதி எழுதிய இசைக் குறிப்புகளைப் பாறைப் பிளவுகளும், முகடுகளும் சரியாக வாசித்தன. நுழைவுச் சீட்டு எடுத்து, பாறைகளின் கூரிய நகங்களைத் தொட்டுத் தடவி கீழிறங்கினோம். நீர்ச் சாரல் முகங்களைக் கழுவி பரவசப்படுத்தின. வெகுதூரம் ஓடிவந்து மடாரென்று விழுந்து எழுந்து ஓடும் நதியின் அழகை மரங்களெல்லாம் தலையசைத்து வழியனுப்பின.

அருவி
அருவி

படகில் ஏறினோம். குறுக்குவெட்டாக நதியைக் கிழித்து மறுகரையில் இறங்கினோம். அங்கிருந்து மற்றொரு படகில் ஏறி நீரை எதிர்த்து சமர் புரிந்து நடுவில் நிற்கும் உயர்ந்த குன்றடிக்குச் சென்றோம். குன்றின் மீதேறி, சுற்றிச் சுழன்றடிக்கும் நதியின் வேகத்தில் மகிழ்ந்தோம். சாரல் துடைத்த நுரையீரலுடன் வீட்டுக்குப் புறப்பட்டோம்.

உயிர் காத்த பொழுது

7 அல்லது 8 வாகனங்கள் ஒரே நேரத்தில் செல்லக்கூடிய பெரிய சாலை அது. கண்ணைக் கசக்கிக்கொண்டே தூக்கத்தைக் கட்டுப்படுத்தினேன். அப்போது, சாலையைப் பார்த்தபடியே, “என்ன கஜன் வண்டி ஒரு பக்கமாகப் போகுது?” என்றேன். உடனே வண்டியைச் சரிசெய்த நண்பர், “மன்னிச்சிடுங்க தூங்கிட்டேன்” என்று பதறினார். அவ்வளவுதான். பின் இருக்கையில் தூங்கிக்கொண்டிருந்த அவரின் மனைவி கண் விழித்தார். “கடவுளாகக் காப்பாற்றினீர்கள். வண்டி போகும் வேகத்தில், லேசாக உரசினால்கூட மிகப் பெரும் விபத்து நேர்ந்திருக்கும். நான் இனி தூங்கவே மாட்டேன்” என்றார். ஓரிடத்தில் இறங்கி சாப்பிட்டோம். புறப்பட்டபோது, நான் தூங்கினேன். அவரின் மனைவி தூங்கவே இல்லை.

மறுநாள் பிரான்ஸ் புறப்பட்டேன். தொடர்வண்டி நிலையத்துக்கு அழைத்துச் சென்ற நண்பர், வண்டியை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு எங்கோ சென்றார். திரும்பி வந்ததும், யூரோ கொடுத்து, அனுப்பி வைத்தார்.

(பாதை விரியும்)

பெட்டிச் செய்தி:

ஓவியத்தின் கரு

‘மனித உரிமைகள் மற்றும் நாகரிகங்களின் கூட்டமைப்பு அறை’யின் கூரையில் அமைந்துள்ள ஓவியத்துக்கான கரு எங்கே கிடைத்தது என்பதை, மைக்கேல் பார்தெல்லோ இவ்வாறு குறிப்பிடுகிறார், ‘மிகவும் வெப்பமான ஒரு நாள், ஆப்பிரிக்காவின் சாஹேல் பகுதியில் நின்றேன். உலகமானது, வானத்தை நோக்கி சொட்டுச் சொட்டாகச் சென்றதைக் கானல் நீரின் தெளிவோடு நினைத்துப் பார்க்கிறேன். மரங்கள், குன்றுகள், கழுதைகள், பல வண்ண உயிரினங்கள்… துளித் துளியாக அனைத்தும் விழுங்கப்பட்டன.’

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in