சிறகை விரி உலகை அறி : 31 வரலாறு: உருவாக்கமும் சிதைவும்!

புரோபிலியா முகப்பு மற்றும் உட்புறம்
புரோபிலியா முகப்பு மற்றும் உட்புறம்

பழமையான சுவர்கள் - தலைமுறைக் கதைகளைத் தின்று வயிறு வெடித்தவை; வாழ்ந்தோரை அனுப்பிவிட்டு வக்கத்து நிற்பவை; நிறங்கள் உதிர்ந்தாலும் நிகழ்வுகளைக் கதைகளாக உச்சரிப்பவை... அக்ரோபோலிஸ் குன்றில் உள்ள தூண்களும் சுவர்களும் அப்படித்தான். வண்ணங்கள் மறைந்தாலும் சந்தன நிறத்தில் மூதாதையரின் எண்ணங்கள் உரைக்கின்றன.

நெற்றிச் சுருக்கத்தில் வியர்வை நிறைய வெப்ப அலையில் பார்வை மறைய கால்களை எட்டி வைத்து நடந்தேன். ஏறக்குறைய குன்றின் நடுப்பகுதிக்கு வந்தபின் உச்சிக்குச் செல்வதற்கான முதல் படியில் கால் வைத்தேன். 20 மீட்டர் அகலமுடைய படியில் 80 மீட்டர் உயரம் ஏறினால், புரோபிலியா (Propylaea) வரும். அதாவது, நகரத்தையும் புனித இடத்தையும் பிரித்துக் காட்டுகிற நுழைவாயில். சிதைந்த கற்களில் கால் ஊன்றி ஏறுகையில், ஏதென்ஸின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும்பங்காற்றிய சோலோன், பெய்சிஸ்ட்ராடஸ் (Peisistratus), கிளிஸ்தீனஸ் (Kleisthenes) பற்றிச் சொல்லுகிறேன். கேட்டுக்கொண்டே படி ஏறி வாருங்கள்.

சோலோன்

கி.மு. 594-ல் ஆர்க்கனாக தேர்வு பெற்றவர் சோலோன். சமூகங்களுக்கு இடையே நிலவிய பகைமையைக் களைய அதீத முயற்சிகள் எடுத்தார். நீதி அதிகாரத்தைப் பொறுப்புடன் பயன்படுத்தினார். பொதுப்பணிகளில் வேறுபாடுகளின்றி அனைவரும் உற்சாகமாக பங்கேற்க வழிவகுத்தார். சோலோன் தொடங்கிய மாற்றத்தின் பலனை 30 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த பெய்சிஸ்ட்ராடஸ் காலத்தில் மக்கள் கூடுதலாக அனுபவித்தார்கள்.

அக்ரோபோலிஸ் குன்றில் பார்த்தினோன்...
அக்ரோபோலிஸ் குன்றில் பார்த்தினோன்...

பெய்சிஸ்ட்ராடஸ்

கி.மு. 561/60-ல் ஆட்சிக்கு வந்த பெய்சிஸ்ட்ராடஸ், எளிய குடிகளைப் பாதுகாத்ததுடன், நடுத்தர வர்க்கத்தினருக்கு பலனளிக்கும் திட்டங்களை அறிவித்தார். செல்வந்தவர்களின் நட்பையும் பெற்றிருந்தார். கால்வாய்கள் அமைத்தல், கோயில்கள் கட்டுதல் உள்ளிட்ட மக்கள் நலன்சார் திட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தார். அக்ரோபோலிஸ் குன்றில் ஞானத்தின் பெண் தெய்வம் ஏதென்னாவுக்கும், அக்ரோபோலிஸின் தெற்கு சரிவில் டயனைசஸ் (Dionysos) கடவுளுக்கும் கோயில்களைக் கட்டினார். வாய்வழிப் பாரம்பரியமாகவே இருந்த ஹோமரின் கவிதைகளை எழுத்து வடிவில் கொணர்ந்தார். கிரேக்க மக்கள் வாசிக்கும்படியாக அதைப் பொது நூலகங்களில் வைத்தார். ‘கிரேக்கர்கள் அனைவருக்கும்’ எனப் பொருள்படும் பனாதெனியா (Panathenaea) விழாவை ஏற்படுத்தினார். இந்த விழாவில் ஹோமரின் கவிதைகளை வாசிக்க வைத்தார். 33 ஆண்டுகள் ஆட்சி செய்த இவரை, வரலாற்று ஆசிரியர்கள் டைரண்ட் (Tyrant) என அழைக்கின்றனர். டைரண்ட் என்றால், ஒற்றைத் தலைமை அல்லது உச்சபட்ச அதிகாரம் மிக்க ஆட்சியாளர் (Supreme Ruler) என்று பொருள். (சுயநலமிக்க ஆட்சியாளர்களால், டைரண்ட் என்பதன் அர்த்தம் கொடுங்கோன்மையாளர் என பிற்காலத்தில் மாறிவிட்டது.) கி.மு. 528/27-ல் பெய்சிஸ்ட்ராடஸ் இறந்தபிறகு தந்தையைப் பின்பற்றி மகன்களும் நல்லாட்சி செய்தார்கள்.

கிளிஸ்தீனஸ்

உச்சபட்ச அதிகாரம் மிக்க ஆட்சி கி.மு. 510-ல் சிதைந்தது. உயர்குடியினர் - பணக்காரர்கள் மற்றும் ஜனநாயக விரும்பியான நடுத்தர வகுப்பினர் – கீழ்குடியினர் என 2 பிரிவுகளாகி ஒருவர் மற்றவரை பழிவாங்கத் தொடங்கினார்கள். ஜனநாயகத்தை விரும்பியவர்களை வழிநடத்திய கிளிஸ்தீனஸ், மீண்டும் சோலோன் சட்டதிட்டங்களை சில மாற்றங்களுடன் நடைமுறைக்குக் கொண்டுவந்தார். உயர்குடியினரின் அதிகாரத்தைக் குறைத்தார். வழிவழியாக அரசியலில் அதிகாரம் செலுத்திய இனங்களின் ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அனைத்து குடிமக்களும் அரசியலில் பங்கேற்கும் உரிமையை நிலைநாட்டினார். கிளிஸ்தீனஸ் உருவாக்கிய மாற்றங்கள் அத்தனேயன் அரசியலமைப்பை ஜனநாயக அமைப்பாக்கியது.

பெரிக்லஸ்

கிளிஸ்தீனஸ் ஆட்சிக்குப் பிறகும் உள்நாட்டுக் குழப்பங்கள், பாரசீகர்களின் படையெடுப்புகள் என நாடு பரபரப்பாகவே இருந்தது. இச்சூழலில் பாரசீகர்களை வென்று ஏதென்ஸின் தலைவரானார் பெரிக்லஸ் (Pericles). ஏதென்னாவின் கோயிலை மீண்டும் கட்டினார். அது பார்தினோன் (Parthenon) எனப்படுகிறது. கோயிலுக்கு அவர் எழுப்பிய படிகளில் ஏறிதான், நுழைவாயில் மண்டபத்தை நாம் கடந்திருக்கிறோம். மண்டபத்தின் சில தூண்களும் சுவர்களும் இப்போதும் நிற்கிறது பாருங்கள்.

பெரிக்லஸ்
பெரிக்லஸ்

ஏதென்னா நைக்

படி ஏறுகையில் வலது புறம் கவனித்தீர்களா? உயரமான பாறையில் சிறிய கோயில் இருந்ததே! அதன் பெயர், ஏதென்னா நைக் (Temple of Athena Nike). நைக் என்றால் வெற்றி. நைக் சிற்பங்கள் பொதுவாக இறக்கைகளுடன் செதுக்கப்படும். ஆனால், இக்கோயில் கட்டிய காலத்தில்தான் ஏதென்ஸ் வீரர்கள், பாரசீகர்களை வென்றிருந்ததால், ஏதென்னா இனி எப்போதும் நம்முடனே தங்கியிருப்பாள், வெற்றி நம்மை விட்டு விலகாது என்கிற கருத்தில், இறக்கை இல்லாமலேயே நைக் சிற்பத்தை வடித்திருக்கிறார்கள். இப்போதும் தூண்கள் நிற்கின்றன.

பார்த்தினோன் கோயில் உள்ளே ஏதென்னா...
பார்த்தினோன் கோயில் உள்ளே ஏதென்னா...

ஏதென்னா ப்ரொமச்சோஸ்

அக்ரோபோலிஸ் குன்றின் உச்சிக்கு வந்திருக்கிறோம். ஒரு கையில் உயரமான ஈட்டியுடன் நிற்கும் ஏதென்னா ப்ரொமச்சோஸ் (Athena of Promachos) சிற்பம் இடது பக்கம் இருந்தது. ‘முன்வரிசையில் சண்டையிடும் ஏதென்னா’ என்பது பொருள். கடற்படை வீரருக்கு கலங்கரை விளக்கமாகவும் விளங்கியது இச்சிற்பம். பாரசீகர்களிடமிருந்து எடுக்கப்பட்ட வெண்கல ஆயுதங்களைக்கொண்டு பீடியாஸ் (Phidias) செதுக்கிய இந்தச் சிலை, அந்த இடத்தில் இருந்ததற்கான அடையாளம் ஏதும் தற்போது இல்லை.

எரக்தியோன்
எரக்தியோன்

எரக்தியோன்

அக்ரோபோலிஸ் குன்றின் உச்சியில் வடக்கே கி.மு. 421-405-ல் கட்டப்பட்ட எரக்தியோன் (Erechtheion) கோயில் உள்ளது. ஒரு பக்கத்தில், 6 பெண்களை தூண்களாக வைத்திருக்கிறார்கள். பாரம் சுமப்பதற்கு வசதியாக தலையில் சும்மாடு வைத்திருப்பதுபோல, ஒவ்வொருவரின் தலையின் மேலும் செதுக்கி, அதில் கட்டிடம் நிற்கிறது. தற்போது பயணிகள் பார்ப்பது சிற்பங்களின் மாதிரி மட்டுமே. உண்மையான ஒரு சிற்பம் லண்டனில் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் இருக்கிறது. மற்றவை, அக்ரோபோலிஸ் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன. எரக்தியோன் அருகில்தான் ஏதென்னா பழைய கோயில் இருந்தது.

பார்த்தினோன்

பழைய கோயிலின் அருகிலேயே, பெரிக்கிலஸ் எழுப்பிய பார்த்தினோன் உள்ளது. பார்த்தினோன் என்றால், கன்னி தெய்வங்களின் கோயில் என்று பொருள். ஏறக்குறைய 39 அடி உயரத்தில் தங்கத்தாலும் யானை தந்தத்தாலும் இச் சிலையை பீடியாஸ் செதுக்கினார். கி.மு. 447-438-ல் இக்கோயில் அர்ப்பணிக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி சித்திரவேலைத் தட்டுகள் (Metopes) இருக்கின்றன. முகப்பில், ஒலிம்பஸ் மலையில் வாழும் கடவுள்களுக்கும் அரக்கர்களுக்கும் இடையிலான சண்டைகள்; வடக்கே, ட்ராஜன் போர்; மேற்கே, ஏதென்ஸ் மக்களுக்கும் அமேசான்களுக்கும் இடையிலான போர்; தெற்கே, அரை-மனிதன் அரை-குதிரை படைப்பான சென்டார்ஸ்க்கு (Centaurs) எதிரான சண்டைகள் அனைத்தும் சித்திரவேலைத் தட்டுகளில் வடிக்கப்பட்டுள்ளன.

பார்த்தினோன் கோயில் வெளிப்புறம்
பார்த்தினோன் கோயில் வெளிப்புறம்

‘பல்சமய வழிபாட்டுத்தலம்’

கி.பி.6-ம் நூற்றாண்டின் இறுதியில் பைசாந்தியர்கள் கிரேக்கத்தைக் கைப்பற்றினார்கள். பார்த்தினோன் கோயிலைக் கிறிஸ்தவ ஆலயமாக மாற்றினார்கள். முதலில், கடவுளின் ஞானம் (Hagia Sophia) எனவும், பிறகு, ஏதென்ஸ் நகர கன்னி மரியாள் கோயில் எனவும் அழைத்தார்கள். கோயிலின் தலைவாசலை மாற்றி, கிழக்கத்திய திருச்சபை முறைப்படி மேற்கு திசை வழியாக மக்களை நுழைய வைத்தனர். 1204 முதல் 1456 வரையில் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயமாகவும் பார்த்தினோன் விளங்கியது. 1458-ல் ஏதென்ஸை கைப்பற்றிய துருக்கியின் ஆட்டமன் பேரரசு, இக்கோயிலை மசூதியாக மாற்றியது. ஏற்கெனவே இருந்த சுரூபங்களை அகற்றியது. தெய்வங்கள் குறித்த வரைபடங்களை அழித்தது. உயர்ந்த ஸ்தூபிகள், தொழுகைக்கு வழிநடத்துகின்ற தலைமை இமாம் நிற்கும் மின்பர் உள்ளிட்டவைகளை அமைத்தது.

ப்ரொமச்சோஸ் மற்றும் பார்த்தினோன்
ப்ரொமச்சோஸ் மற்றும் பார்த்தினோன்

வராலாற்றுச் சிதைவு

இந்நிலையில், ஆட்டமன்களுக்கும் வெனீசியர்களுக்கும் இடையே 1687-ல் போர் தொடங்கியது. வெடி மருந்துகளையும் போர் தளவாடங்களையும் பாதுகாக்க நினைத்த ஆட்டமன் தலைவர், அனைத்தையும் பார்த்தினோன் கோயிலுக்குள் வைத்தார். போரின் உச்சத்தில், வெனீஸ் படைத் தளபதி பிரான்செஸ்கோ மொரோசினி வீசிய குண்டு, கோயிலில் விழுந்தது. மொத்த வெடிபொருட்களும் வெடித்துச் சிதறின. கோயில் ஏறக்குறைய 60 விழுக்காடு எரிந்து சிதைந்து விழுந்தது.

பார்த்தினோன் கோயில் தற்போது...
பார்த்தினோன் கோயில் தற்போது...

கான்ஸ்டான்டிநோபுளின் இங்கிலாந்து நாட்டு தூதுவராக இருந்த தாமஸ் புரூஸ் (Thomas Bruce), 1806-ல் பார்த்தினோன் மீது மீண்டுமொரு பெருங்கொடுமையை நிகழ்த்தினார். கோயிலின் பிரம்மாண்டமான உத்திரங்கள், தூண்கள், சிற்பங்கள் அனைத்தையும் லண்டனுக்கு அள்ளிச் சென்றார். அக்ரோபோலிஸ் குன்றைக் காவல்புரிந்த துருக்கிய வீரர்களுக்கும் இத்தாலிய கலைஞர் ஜி.பி. லுசேரியின் (Giovanni Battista Lusieri) பணியாளர்களுக்கும் லஞ்சம் கொடுத்து புரூஸ் அள்ளிச்சென்ற பொக்கிஷங்கள் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் இருக்கின்றன.

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி:

ஓட்டில் ஒரு ஓட்டு!

கிளிஸ்தீனஸ் காலத்தில், குற்றம் அல்லது பழி சுமத்தி ஒருவரை நகரைவிட்டு வெளியேற்ற வேண்டும் அல்லது ஊரில் இருந்து ஒதுக்கிவைக்க வேண்டும் என்றால், நினைத்த மாத்திரத்தில் செய்துவிட முடியாது. ஏதென்ஸ் மக்கள் சந்தைவெளியில் கூடுவார்கள். ஒவ்வொருவருக்கும் ஓடு (Shell) கொடுக்கப்படும். யாரை அனுப்ப வேண்டுமோ அல்லது விலக்கி வைக்க வேண்டுமோ அவரின் பெயரை ஓட்டில் எழுதி, பொதுவில் உள்ள பெட்டியில் போட வேண்டும். சம்மதம் இல்லை என்றால் பெயர் எழுதாமலேயே போட வேண்டும். 6 ஆயிரம் பேருக்கு மேல், பெயரை எழுதியிருந்தால் மட்டுமே அந்நபரை வெளியேற்றினார்கள் அல்லது விலக்கி வைத்தார்கள். ஓடு என்பதற்கு கிரேக்க மொழியில் ஓஸ்ட்ரகோன் (Ostrakon) என்பது பெயர். இதிலிருந்துதான், ஓஸ்ட்ரசைஸ்டு (Ostracized) அதாவது, ‘ஒதுக்கி வைத்தல்’ எனும் வார்த்தை வந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in