சிறகை விரி உலகை அறி - 17

தெரிந்து தெளிதல் எனும் கலை!
அருங்காட்சியகத்துக்கு உள்ளே சூங் சிங்-லிங்
அருங்காட்சியகத்துக்கு உள்ளே சூங் சிங்-லிங்

அறியாமையிலும் அழகு உண்டு. குழந்தைகள் ரசிக்கும்படி ஆழ்கடலில் மந்திரக் கதைகளை அது கருத்தரிக்கும்; கானகத்தின் ஒத்தையடிப் பாதைகளில் வன தேவதையின் கால் தடம் காணச் செய்யும்; குகைகளில் கேட்கும் பேரோசையில் முனிவர்களின் இசைமொழியைச் சொல்லும்; அறிவுக்கு அப்பாற்பட்ட அனைத்தையும் ஐம்புலன்களுக்குள் சிறை வைக்கும்.

அறியாமையானது, மனிதர்களையும் பிற நாடுகளையும் குறித்து கட்டுக்கதைகளையும் வெறுப்பையும் வறண்ட மூளைக்குள் இட்டு நிரப்புகின்ற அநியாயமும் நிகழ்த்தும். அப்படித்தான், சீனா குறித்து, “ஊர்வன பறப்பன அனைத்தையும் தின்கிற நாடு”, “கிருமிகளை உற்பத்தி செய்யும் நாடு”, “ஆக்கிரமிக்கும் நாடு”, “ஜனநாயகமற்ற பூமி” என முதல் உலக நாடுகள் பரப்பும் எல்லா கதைகளையும் கேள்வி கேட்பாரின்றி மனம் ஏற்கிறது.

ஆடு, மாடு, பன்றி, ஈசல், காடை, கவுதாரி தின்கிறவர்கள் தமிழ்நாட்டிலும்தானே இருக்கிறார்கள் என்கிற தகவல், நினைவில் தப்பிப் போகிறது. அமெரிக்கா, 3-ம் உலக நாடுகளை ஆக்கிரமிக்கத் துடிப்பதையும், முதல் உலக நாடுகள் வியட்நாம் மீது போர் புரிந்ததே கம்யூனிச கருத்தியலுக்கு எதிராகத்தான் என்பதையும் அறிந்திருந்தாலும், சீனா என்றதும் நல்லுணர்வு உருவாக மறுக்கிறது. சரி, நேரடியாகச் சென்றுதான் பார்த்துவிடுவோமே என்று முடிவெடுத்து சீனாவுக்குப் புறப்பட்டேன்.

விசாவுக்கு விண்ணப்பித்தல்

விசா பெறுவதற்கு, இணையதளத்தின் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த பிரதியுடன் தங்குமிடத்தின் முன்பதிவு சான்று, பயணத் திட்டம், சென்று வருவதற்கான விமான பயணச்சீட்டு, நாம் வங்கிக் கணக்கு வைத்திருக்கிறோம் என்பதற்கான வங்கி மேலாளரின் சான்றாவனம், 3 மாதங்களுக்கான வரவு-செலவு அறிக்கை ஆகியவற்றுடன் விசா அலுவலரைச் சந்திக்க வேண்டும். சான்றாவனத்தில் நாம் கணக்கு தொடங்கிய தேதி, தற்போதைய பண இருப்பு உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டிருக்கும். விசா வாங்குவதற்காகவே திடீரென கணக்கு தொடங்கி அதிகமாக பணம் செலுத்தியுள்ளார்களோ? எனும் ஐயத்தை வரவு-செலவு அறிக்கை தெளிவுபடுத்தும்.

அதீத முன்தயாரிப்பு

சீனாவில் ஆங்கிலம் பேசுவோரைக் காண்பதும், அவர்களின் உச்சரிப்பைப் புரிந்துகொள்வதும் எளிதல்ல. ஏறக்குறைய 140 கோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு கோடி மக்களே ஆங்கிலம் பேசுவதால் ஆங்காங்கே கேட்டுக்கொண்டே பயணிப்பது சவால் மிகுந்தது. இதனால், விமான நிலையத்தில் இறங்கி எந்தத் தொடர்வண்டி எடுக்க வேண்டும், அது எந்த நடைமேடையில் நிற்கும், எத்தனையாவது நடைமேடைக்கு சென்று சேரும், தொடர்வண்டி நிலையத்தில் இறங்கிய பிறகு எந்த வாசல் வழியாக வெளியேறி சாலைக்கு வரவேண்டும், அங்கிருந்து நான் போகவேண்டிய இடத்துக்கு, எந்தத் திசையில் எத்தனை மீட்டர் தூரம் நடக்க வேண்டும் என அனைத்தையும் கூகுள் துணையுடன் கண்டறிந்து தட்டச்சு செய்து எடுத்துக்கொண்டேன்.

பயணம் தொடங்கியது

சீன தலைநகரில் உள்ள, ‘பெய்ஜிங் கேப்பிடல் இன்டர்நேஷனல்’ விமான நிலையத்தில் இறங்கி தொடர்வண்டியில் ஏறினேன். கையில் இருந்த குறிப்புகளை மீண்டும் வாசித்தேன். ஜிஷுடன் (Jishuitan) நிலையத்தில் இறங்கி, Exit B வழியாக வெளியேற வேண்டும். அங்கிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரம் தென் கிழக்கு திசையில் நடந்தால், சூங் சிங்-லிங் முன்னாள் வசிப்பிடத்தைப் (Former Residence of Soong Ching-ling) பார்க்கலாம் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். திட்டமிட்டபடியே, ஜிஷுடன் நிலையத்தில் இறங்கினேன். படியேறி சாலைக்கு வந்தேன். பரபரப்பாக இருந்தது நகரம்.

அதெல்லாம் சரி, இதில் எந்த திசை தென்கிழக்கு? எந்தெந்த சாலைகளையும், வளைவுகளையும் கடந்து செல்ல வேண்டும்? ஒன்றுமே விளங்கவில்லை. ஒரு பெண்மணி வந்தார். இடத்தின் பெயரை மட்டும் சொல்லிக் கேட்டேன். அவருக்குப் புரியவில்லை. ஏனென்றால், இடத்தின் பெயரை நான் ஆங்கிலத்தில் குறிப்பிட்டேன். சீன மொழியில், அவர்களின் உச்சரிப்பில், ‘ஷுங் ஸிங்-லிங் கூச்சி’ என குறிப்பிட்டிருந்தால் அவருக்குப் புரிந்திருக்கும். இன்னொருவர் வந்தார், நான் விமான நிலையத்தில் இருந்து வருகிறேன். தொடர்வண்டி நிலையத்துக்கு அருகில் இருக்கும் சூங் சிங்-லிங் முன்னாள் வசிப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்பதை புரியவைக்க முயன்று, ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் என்றெல்லாம் சொன்னேன். ‘பாவம் யாரு பெத்த பிள்ளையோ’ என்று பார்த்தார். நான் சொன்னது ஆங்கில வார்த்தை. ஃபெய்ஜி ஜாங், கொச்சுவே ஜான் என சொல்லியிருந்தால் அவருக்குப் புரிந்திருக்கும்.

இதுவரையிலான வெளிநாட்டுப் பயணத்தில் முதல் இடத்திலேயே நான் தடுமாறியது இங்குதான். எந்த இடத்தையும் பார்க்காமலேயே இப்பயணம் முடிந்துவிடுமோ என சிறு கலக்கம் தொற்றியது. பலரையும் கேட்டேன். கையை மட்டும் நீட்டி ஒருவர் ஏதோ சொன்னார். நானாக ஒன்றைப் புரிந்துகொண்டு நடந்தேன். அது ஏரிப்பகுதி. மக்கள் வேலை செய்துகொண்டிருந்தார்கள். 200 மீட்டர் நடந்திருப்பேன். அது சரியான வழிபோல மனதுக்குப்படவில்லை. திரும்பி பழைய இடத்துக்கே வந்தேன். கடைகளிலும், வழியில் என்னைக் கடந்த பலரிடமும், சிறுகச் சிறுக சேகரித்த தகவல்களுடன் ஏறக்குறைய 2 மணி நேரம் சந்து பொந்தெல்லாம் நடந்து, வசிப்பிடத்தைக் கண்டடைந்து பெருமூச்சுடன் புன்னகைத்தேன்.

சூங் சிங்-லிங் முன்னாள் வசிப்பிடம்

நுழைவுக்கட்டணம் வாங்கி உள்ளே சென்றேன். 5 ஏக்கர் பரப்பளவில், சீன மற்றும் மேற்கத்திய கலைநயமிக்க கட்டிடங்களுடன், எண்ணற்ற மரங்களுடன் பசுஞ்சோலையாக வசிப்பிடம் கண் முன் விரிந்தது. தன் கடைசி 18 ஆண்டுகளை இங்குதான் சூங் சிங்-லிங் கழித்தார். சுத்தமான காற்று மனதைப் பிடித்து அழைத்துச் செல்கையில், 500 ஆண்டுகள் வயதான மரங்கள், இருநூறு முந்நூறு ஆண்டுகள் பழமையான பாறைகள், நீரோடை, எண்ணற்ற புறாக்கள் காட்சிகளைக் கவிதையாக்கின. உலக அமைதியையும் புறாக்களையும் நேசித்தவர் சூங். அந்தப் புறாக்கள் பறந்துவிடாமல் நம்முடன் குலாவுகின்றன. நினைவு அருங்காட்சியகத்தின் மையத்தில் சூங் கம்பீரமாக அமர்ந்திருக்கும் சிலை உள்ளது. அவரின் குழந்தைப்பருவம், பள்ளிப்பருவம், திருமணம், அரசியல் ஈடுபாடு சார்ந்த குறிப்புகள், திருமண ஒப்பந்தம், வெளிநாட்டு தலைவர்களுடனான சந்திப்புகள் அனைத்தும் வரலாறு சொல்லுகின்றன.

சூங் சிங்-லிங்

சீன அரசியலில் 20-ம் நூற்றாண்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்திய சூங் வம்சத்தில் நன்கு படித்த, செல்வமும் செல்வாக்கும் மிகுந்த, கிறிஸ்தவ பெற்றோருக்கு 1893, ஜனவரி 27-ல் பிறந்தவர் சூங் சிங்-லிங். 14 வயதிலேயே அமெரிக்கா சென்று கல்வி கற்றார். ஏகாதிபத்திய அரச வம்ச ஆட்சிக்கு எதிராகப் போராடிய புரட்சிகர இயக்கங்களுக்கு பண உதவி செய்த தந்தையின் தீரமும், வெளிநாட்டுக் கல்வியும் மன தைரியத்தையும், விசால பார்வையையும் இவருக்கு வழங்கியது. பெண்களின் சுதந்திரம் சமத்துவம் குறித்து 18 வயதிலேயே பேசத் தொடங்கியவர், கட்டுப்பாடுகள் மிகுந்த காலத்திலேயே சீனாவின் புரட்சிகரத் தலைவர் சன் யாட்-சென் என்பவரை காதல் திருமணம் செய்தார்.

‘சீன குடியரசின் தந்தை’ என அழைக்கப்படும் சன் யாட்-சென் 1925-ல் இறந்த பிறகு, சீன குடியரசின் தேசிய தலைவராக ராணுவ தளபதி ஜியாங் காய்-செக் (Chiang Kai-shek) பொறுப்பேற்றார். இவர், சூங் சிங்-லிங்கின் தங்கை கணவராவார். தேசிய கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இருந்த கூட்டணி திடீரென முறிந்ததும், கம்யூனிஸ்டுகளை ஜியாங் காய்-செக் மிகக் கொடூரமாக கொன்றொழித்ததால், உள்நாட்டு கலவரம் வெடித்தது. குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க ஜப்பான் படையெடுத்து வரத் தொடங்கியது. ‘உங்கள் சண்டையை விடுங்கள், ஜப்பானை விரட்டுங்கள்’ என்ற மக்களின் குரல் ஆட்சியாளர்களின் காதில் விழவில்லை. இச்சூழலில், “எல்லோரும் இணைந்து வாழும் ஒரு நாட்டைதான் சன் யாட்-சென் கனவு கண்டார். அதை நான் முன்னெடுத்துச் செல்வேன” என களமிறங்கினார் சூங். அதிகாரத்தையும், ராணுவத்தையும் கைவசம் வைத்திருந்த கொழுந்தனுக்கு எதிராக மக்கள் பலத்துடன் போராட்டத்தை முன்னெடுத்தார் சூங். வெற்றியும் கண்டார். தோல்வியுற்று 1949-ல் தைவானுக்குச் சென்ற ஜியாங் காய்-செக் சீனாவுக்குள் திரும்பவேயில்லை.

(பாதை நீளும்)

பெட்டிச் செய்தி:

மூன்று சகோதரிகள்

அமெரிக்கா சென்று படித்த முதல் 3 சீன பெண்கள் சூங் சிங்-லிங் மற்றும் அவரின் 2 சகோதரிகளே ஆவர். இவர்களைப் பற்றிய The Soong Sisters திரைப்படம் யூ-டியூப்பில் இருக்கிறது. மூன்று சிறுமிகளும் ஊஞ்சலாடுகையில் படம் தொடங்குகிறது. அப்போது, ‘ஒருவர் செல்வத்தை நேசித்தார், ஒருவர் அதிகாரத்தை நேசித்தார், ஒருவர் தன் நாட்டை நேசித்தார்’ என வருகிறது. ஆம், குடும்பத்தின் முதல் சகோதரி சூங் ஆய்-லிங், பேங்க் ஆஃப் சீனா-வின் இயக்குநரை மணந்தார். 3-வது சகோதரி சூங் மேய்-லிங், ராணுவ தளபதியாக இருந்து, சீன குடியரசின் தலைவராக உயர்ந்த ஜியாங் காய்-செக்கை மணந்தார். நடுக் குழந்தையான 2-வது சகோதரி சூங் சிங்-லிங், சீன குடியரசை நிறுவிய புரட்சியாளர் சன் யாட்-சென்னை மணந்து நாட்டுக்காக வாழ்ந்து, ‘நவீன சீனாவின் தாய்’ என சீன மக்களால் பாசத்தோடு அழைக்கப்படுகிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in