சிறகை விரி உலகை அறி- 16: கிராமம் எனும் ஞானநூல்!

சிறகை விரி உலகை அறி- 16:
கிராமம் எனும் ஞானநூல்!
அமிதாபா புத்தா

உங்களுக்குக் கிராமங்களைப் பிடிக்குமா? நிகழ்வுகளைக் கதைபோலச் சொல்லும் கதைசொல்லிகள், எல்லோரையும் ரத்த உறவில் இணைக்கும் உறவாளிகள், விவசாயம் நொடித்தும் நிலம் விட்டு விலகாத விவசாயிகள், உயிர் விழுங்கினாலும் கடலைப் பிரியாத மீனவர்கள்... இவர்கள் எல்லாம் கிராமங்களில்தான் அதிகம் சுவாசிக்கிறார்கள்.

வியட்நாம் நாட்டில் கிராமப்புறம் எப்படி இருக்கும்? நேரில் பார்க்க ஆசை துளிர்த்தது. மேக்காங் நதியின் கழிமுகத்தைப் (Delta) பார்ப்பதற்காக, ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்த சுற்றுலாக் குழுவுடன் புறப்பட்டேன்.

வியட்நாம் போர் 1975-ல் முடிந்துவிட்டது. வடக்கு தெற்கு என்றில்லாமல், 1976-ல் ஒரே வியட்நாம் உருவாகிவிட்டது. அமெரிக்காவும் வியட்நாமும் 1995-ல் நட்பு நாடாகிவிட்டன. ஆனால், நெருப்புக் குண்டுகளும் உயிரியல் போரும் ஏற்படுத்திய பேரழிவுகள் இன்றும் தொடர்வதை 2-ம் நாள் பயணத்திலும் சுற்றுலா வழிகாட்டி எங்களுக்குக் காட்டினார்.

முட்டைக் கூட்டில் கலைநயம்

நகரத்தைவிட்டு வெளியேறி, முட்டை ஓடுகளில் கலைப் பொருட்கள் செய்யும் தொழிற்கூடத்துக்குள் முதலில் சென்றோம். எல்லோரும் அமர்ந்து வேலை செய்துகொண்டிக்கிறார்கள். ஒரு பக்கம் முட்டையின் ஓடுகள் கிடக்கின்றன. கூர்மையான கத்தியினால் முட்டை ஓடுகளை நுண் துகள்களாகச் சிலர் நறுக்குகிறார்கள். இரண்டு மூன்று பேர் கல்லில் படம் வரைகிறார்கள். அது, கடப்பா கல் போன்றிருக்கிறது. இன்னும் சிலர், சிப்பியை பல்வேறு வடிவங்களில் அறுக்கிறார்கள். கல்லில் வரையப்பட்ட ஓவியக் கோடுகளின் மீது நறுக்கப்பட்ட முட்டை ஓடுகளை மிகக் கவனமாக ஒவ்வொன்றாக ஒட்டுகிறார்கள். முகம், கை, வியட்நாமியரின் தனித்துவமான தொப்பி, விசிறி போன்றவற்றுக்கு அறுத்த சிப்பியின் துகள்களை ஒட்டுகிறார்கள். ஓவியக் கோட்டைவிட்டு வெளியில் நீண்டிருக்கும் பிசிறுகளைக் கூர்மையான கத்தியால் நறுக்குகிறார்கள். கற்கள் அனைத்தையும் வேதிப்பொருட்கள் கலந்த தண்ணீருக்குள் ஊறப்போட்டு எடுக்கிறார்கள். மெருகேற்றுகிறார்கள். அற்புதமான படங்கள் கண்ணைக் கவர்ந்து பேரின்பம் தருகின்றன. மதம், இயற்கை, வியட்நாம் கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்ட கவித்துவமான படைப்புகளை அங்கே உருவாக்குகிறார்கள்.

அமெரிக்க டாலர் அல்லது கிரெடிட் கார்டு மட்டுமே கொடுத்து அந்தப் பொருட்களை வாங்க முடியும். வியட்நாம் பணத்தை அந்தக் குறிப்பிட்ட தொழிற்கூடத்தில் அவர்கள் ஏற்கவில்லை. நான் ஒரு படம் வாங்கினேன். இந்திய விலையில் 4,000 ரூபாய். வியட்நாம் பண மதிப்பில் 12.5 லட்சம் டாங். அது சரி! ஏன் அவர்கள் அமர்ந்தபடியே வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்? எல்லாருமே போரின் கொடூர விளைவுகளை உடலில் சுமந்து பிறந்தவர்கள். நினைத்துப் பார்க்க இயலாதவாறு உடல் உறுப்புகள் சிதைந்து பிறந்தவர்கள். ஆனாலும், அவர்களின் நம்பிக்கை மட்டும் சிதையவேயில்லை.

நின்று, படுத்து, சிரிக்கும் புத்தா!

கலைக்கூடத்தில் இருந்து புறப்பட்டு, அடுத்ததாக வின் ட்ராங் பகோடா (Vinh Trang Pagoda) என்கிற கோயிலுக்குச் சென்றோம். இந்திய மற்றும் கிழக்காசிய நாடுகளில் பல அடுக்குகளுடன் உள்ள இந்து மற்றும் புத்த மதக் கோயில்கள் ‘பகோடா’ எனப்படுகின்றன. ஜப்பான், கொரியா, வியட்நாம், கம்போடியா போன்ற நாடுகளில் நிறைய பகோடாக்களைப் பார்க்கலாம். நாங்கள் சென்றபோது எங்களுக்கு முன்பே நிறைய வாகனங்கள் வந்திருந்ததாலும், அதில் பல பேருந்துகள் ஒரே மாதிரி இருந்ததாலும் அலைபேசியில் நான் சென்ற பேருந்தின் எண்ணை ஒளிப்படம் எடுத்துக்கொண்டேன்.

இந்தக் கோயிலை கீற்றுக் கொட்டகையில் முதலில் நிறுவியவர் பூய் காங் டாட். அதன்பிறகு, 1850-ல் மிகவும் வணக்கத்துக்குரிய புத்த துறவி திச் ஹியூ டாங்க் (Thich Hue Dang) தலைமையில் இக்கோயில் கட்டப்பட்டது. இவர்தான் வின் ட்ராங் பகோடா எனும் பெயர் வைத்தவர். போரினாலும் புயலினாலும் பலமுறை சிதைவுற்று புதுப்பிக்கப்பட்ட கோயில் இது. முகப்புப் பகுதி, மையப் பகுதி, வழிபாட்டுப் பகுதி மற்றும் பின் பகுதி என ஒன்றுக்கொன்று இணைந்து 4 பகுதிகளாக உள்ளது இக்கோயில். இதன் வடிவமைப்பு கிழக்கு மற்றும் மேற்கத்திய கட்டிடக் கலையைப் பிரதிபலிக்கிறது. 5 ஏக்கர் பரப்பளவில் எண்ணற்ற மரங்கள் சூழ்ந்து கண்ணுக்குள் பசுமை போர்த்துகிறது கோயில் வளாகம்.

செம்பு, மரம் மற்றும் மண்ணால் செய்யப்பட்ட மதிப்புமிகு சிலைகள் இருக்கின்றன. பலா மரத்தில் செய்யப்பட்ட 18 சிலைகள் உள்ளன. 18 பேரும் புத்த மதத்தில் ‘நிர்வாணா’ நிலை அடைந்த 18 துறவிகள் ஆவார்கள். கோயிலைப் பராமரித்த புத்தத் துறவிகளின் கல்லறைகள் ஆங்காங்கே இருக்கின்றன. மரியாதையுடன் அவற்றைப் பராமரிக்கிறார்கள். பக்கவாட்டில் உள்ள வாயில்களில், புத்தரின் வாழ்வை விவரிக்கும் கதைகள் அழகான பீங்கான் மொஸைக் கற்களால் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயிலை, வரலாறு மற்றும் கலாச்சார ஆவணமாக வியட்நாம் அரசு 1984-ல் அங்கீகரித்துள்ளது.

இவ்வளாகத்தில் மிகப்பெரிய 3 புத்த சிலைகள் இருக்கின்றன. (1) நிற்கின்ற அமிதாபா புத்தா (Amitabha Buddha) - முழுமையான பேரின்பத்தையும் இரக்கத்தையும் குறிக்கிறது. (2) அமர்ந்துள்ள சிரிக்கும் புத்தா - மகிழ்ச்சி, நற்பேறு, செல்வ வளம் ஆகியவற்றைக் குறிக்கிறது. (3) படுத்திருக்கும் கௌதம புத்தா - பரிநிர்வாண நிலையில் இருப்பதை விளக்குகிறது.

மேக்காங் நதியில் பயணம்
மேக்காங் நதியில் பயணம்

நதிக்கரை அனுபவம்

பயணத்தின் 3-வது இடமாக, மேக்காங் நதியின் கழிமுகத்தில் (Delta) இறங்கினோம். சிறிது தூரம் நடந்துசென்று இயந்திரப் படகொன்றில் ஏறினோம். எங்களை வரவேற்ற மற்றொரு வழிகாட்டி, “மேக்காங் நதி ஒரு ஜீவ நதி. திபெத் நாட்டில் பிறந்து சீனாவில் தவழ்ந்து மியான்மர், லாவோஸ், தாய்லாந்து, கம்போடியா நாடுகளில் நடைபயின்று வியட்நாம் மண்ணை மணக்க வைத்து கடலில் கலக்கிறது. 4,350 கிலோமீட்டர் தூரம் தரையில் நீந்திவரும் இந்த நதி, உலகின் 12-வது மற்றும் ஆசியாவின் 7-வது நீளமான நதி” என்றார்.

வியப்பில் விரிந்திருந்த காது மடல்களில் பட்டாம்பூச்சி போல் மெல்லிசை வருடியது. கால் நனையாமல் கரையில் இறங்கி இசை வந்த திசையில் நடந்தோம். அனுபவங்களை தோல் சுருக்கங்களில் தேக்கி வைத்திருக்கும் பெரியவர்களைக் கண்டோம். தெற்கு வியட்நாமின் நாட்டுப்புற இசையைத் தங்கள் பாரம்பரிய இசைக் கருவிகளின் வழியாக மீட்டினார்கள் அவர்கள். பாரம்பரிய பாடல்களைப் பாடினார் மற்றொரு பெண். பாரம்பரிய இசையை இசைப்பதன் வழியாக தம் மூதாதையர்களின் ஞானத்தைப் பாதுகாக்கும் பெட்டகமாகத் திகழ்ந்தார்கள்.

திடீரென்று முகத்துக்கு முன்பு தேன் குளவிகள் ரீங்கரித்தன. இசை குடிக்க தேனீக்கள் வருகின்றனவோ என புன்னகையுடன் திரும்பினேன். அங்கே ‘தேனீ இல்லம்’ எனும் பெயரைக் கண்டேன். பலகையில் கூடு கட்டி அதில் தேன் சூடிய தேனீக்கள் அங்கே இருந்தன. தேனீக்கள் நிறைந்த பலகையைக் கைகளில் தாங்கி, தேனீ வளர்ப்பு குறித்த விளக்கங்கள் கொடுத்தார்கள். தேனீயுடன் பலகையை ஏந்தி நிழற்படம் எடுத்தேன். தேன் தேனீர் தந்தார்கள். சுவைத்தோம். வெப்பமண்டல நாடுகளில் விளையும் பழங்கள் கொடுத்தார்கள். ருசித்தோம்.

தென்னை மரக்காடு

அங்கிருந்து புறப்பட்டுச் சென்று சிறு படகில் ஏறினோம். துடிப்பான பெண் ஒருவர் துடுப்பு போட்டு சதுப்பு நிலத்தின் வழியே எங்களை அழைத்துச் சென்றார். ‘தண்ணீர் தென்னை மரங்கள்’ (Water coconut trees) இருபுறமும் குடை விரித்திருக்க, வியட்நாமியர்களின் தனித்துவமான தொப்பி அணிந்து பயணித்தேன். இயற்கையின் புத்துணர்ச்சி மண்டலத்தினுள் நுழைந்து கரையேறினேன். கறையேறிய இடத்தின் பெயர் ‘பென் டிரே’. ‘தென்னை மரக்காடு’ என்பதே பொருத்தமாக இருக்கும். ‘தேங்காய் மிட்டாய்’ தயாரிக்கும் சிறுதொழில் அங்கே நடைபெறுகிறது.

தேங்காய் உரித்து, பால் பிரித்து, சூடுபடுத்தி, திரவத்தைத் திடமாக்கி, சிறு சிறு மிட்டாய்களாக வெட்டி, தாள் சுற்றி விற்பனைக்கு அனுப்புதல்வரை ஒவ்வொன்றாகப் பார்த்து வியந்தேன். பண்ணையில் இருந்து பெரிய பாம்பு ஒன்றைக் கொண்டுவந்தார்கள். அதை என் கழுத்தில் சுற்றிப்போட்டு ஒளிப்படம் எடுத்து மகிழ்ந்தேன். நிறைவாக, வானம் போல் விரிந்து கிடக்கும் மேக்காங் நதியில் பயணித்தோம். ஆங்காங்கே நதியோரத்தில் இறங்கிச் சென்று, சில இடங்களைப் பார்த்துவிட்டு நதிப்பயணத்தைத் தொடர்ந்தோம். அனைத்தையும் பார்த்து மகிழ்ந்த பிறகு, பேருந்தில் ஹோ சி மின் நகருக்குத் திரும்பினோம். நான் இந்தியாவுக்குப் புறப்பட்டேன்.

(பாதை நீளும்)

இருசக்கர வாகன நெரிசல்
இருசக்கர வாகன நெரிசல்

பெட்டிச் செய்தி

இருசக்கர வாகனம்

கோ சி மின் நகரில் எங்கெங்கு காணினும் இருசக்கர வாகனங்கள் ஓர் ஒழுங்கில்லாமல் செல்கின்றன. 98 லட்சம் பேர் வாழும் நகரில் ஏறக்குறைய 80 லட்சம் இருசக்கர வாகனங்கள் இருக்கின்றன. 2017-ல் 79 சதவீத வியட்நாமியர்கள், தினந்தோறும் இருசக்கர வாகனம் பயன்படுத்துவதாகச் சொல்லியுள்ளார்கள். விற்பனை மற்றும் இறக்குமதி வரியால் மகிழுந்தின் விலை மிக அதிகமாக இருப்பதாக வழிகாட்டி குறிப்பிட்டார். உதாரணமாக, டொயோட்டா இன்னோவாவின் ஆரம்ப விலை (தற்போதைய நிலவரப்படி) 75 கோடி டாங்.

மேலும் வாசிக்க விருப்பமா?

இந்த கட்டுரை தங்களுக்குப் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி. மேற்கொண்டு வாசிக்க சந்தாதாரர் ஆகுங்கள்.

Already have an account? Sign In

Related Stories

No stories found.