சமூக ஊடக வானவில்- 34: இசைமயமான வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில்- 34: இசைமயமான வலைப்பின்னல்

இணையம் வரி மயமாகத் தொடங்கி ஒளிமயமானது. அதாவது, ஆரம்ப கால இணையத்தில் எழுத்து வடிவிலான தகவலே பிரதானமாக இருந்தது. பின்னர் புகைப்படங்களை இணைப்பதும், வரைகலை சேர்ப்பதும் சாத்தியமானது. தொழில்நுட்ப வளர்ச்சியில் வீடியோ எனும் காணொலியை இணைப்பதும் எளிதானது. இந்தப் போக்கின் அடையாளமாகவே, புகைப்படங்கள் பகிர்வையும், காணொலி பகிர்வையும் எளிதாக்கிய ஃப்ளிக்கர், யூடியூப், விமியோ போன்ற சேவைகள் உருவாகின. எனினும், ஒலி விஷயத்தில் இணையம் சற்று பின் தங்கியிருந்ததாகவே கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில், புகைப்படங்களை எளிதாகப் பகிர்வது போல, காணொலிகளை எளிதாகப் பகிர்வது போல, ஒலி வடிவிலான கோப்புகளை எளிதாகப் பகிர்வதற்கான சேவைகள் இணையத்தில் அதிக சேவைகள் உருவாகவில்லை. எம்பி3 வடிவில் இசைக் கோப்புகளைப் பகிர்வதற்கான இணையதளங்கள், கோப்புப் பகிர்வு சேவைகள் பல இருந்தாலும், காப்புரிமை பிரச்சினை பெரும் தடையாக இருந்தது.

ஒலிகளுக்கான யூடியூப்

இந்தப் பின்னணியில் தான், 2007-ல் ஒலிக் கோப்புகளைப் பகிர்வதற்கான சேவையாக ‘சவுண்ட் கிளவுட்’ (https://soundcloud.com/) அறிமுகமானது. சவுண்ட் கிளவுட் ஒலிகளுக்கான யூடியூப் என வர்ணிக்கப்பட்டதில் இருந்தே அதன் தன்மையைப் புரிந்து கொள்ளலாம். யூடியூப் எப்படி காணொலிப் பகிர்வை எளிதாக்கியதோ, அதே போல ஒலி கோப்புகளைப் பகிர்வதற்கான வசதியுடன் சவுண்ட் கிளவுட் உருவாக்கப்பட்டிருந்தது. சொல்லப்போனால், யூடியூப் மற்றும் ஃபிளிக்கர் போன்ற ஒரு சேவை ஒலிகளுக்காகத் தேவை என உணர்ந்தே அலெக்ஸ் ஜங் (Alex Ljung) இந்தச் சேவையை உருவாக்கியிருந்தார். ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸ் ஜங்குக்குச் சிறு வயதில் இருந்தே இசையில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதோடு தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்ததால் எதிர்காலத்தில் ஒலிப் பொறியாளராக வேண்டும் என விரும்பினார்.

இசை உருவாக்கத்தில் தேர்ச்சியும் இருந்ததால், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே அவர் சொந்தமாக ஆல்பத்தையும் உருவாக்கியிருந்தார். இதன் பயனாக ஒலிப்பதிவு நிலையத்தில் வேலையும் கிடைத்தது. எனினும் உயர் கல்வியை முக்கியமாகக் கருதி, ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் இன்ஸ்டிடியூட் அப் டெக்னாலஜியில் சேர்ந்து படிக்கத் தொடங்கினார்.

இசை மீது ஆர்வம்

கல்லூரியில் எரிக் வால்பிராஸ் (Eric Wahlforss) எனும் மாணவர் நண்பரானார். இருவரும் யூனிக்ஸ் இயங்குதளம் மற்றும் இசை ஆர்வம் கொண்டிருந்ததால் நெருக்கமானார்கள். இந்தக் காலத்தில் இருவரும் இணைந்து பல திட்டங்களில் ஈடுபட்டனர். அதில் ஒன்றுதான் சமூக ஊடக முன்னோடிகள் தொடர்பான புத்தகம் எழுதுவது, இந்தப் புத்தகத்திற்கான நேர்காணலில் ஈடுபட்டிருந்தபோதுதான், ஸ்டார்ட்-அப் எனும் கருத்தாக்கம் அவர்களைக் கவர்ந்தது.

அலெக்ஸ் ஜங்கும், எரிக்கும் இணைந்து ஸ்டார்ட்-அப் நிறுவனம் ஒன்றைத் தொடங்க தீர்மானித்தனர். இசை மீது இருந்த ஆர்வம் காரணமாக, இணையத்தில் ஒலியை அணுகுவதற்கான மாறுபட்ட சேவையை உருவாக்க விரும்பினர். இணையத்தில் அப்போதுதான் சமூக வலைப்பின்னல் அலை வீசத் தொடங்கி, ஃப்ளிக்கர் உள்ளிட்ட சேவைகள் பிரபலமாகியிருந்தன. ஃபிளிக்கர் மற்றும் வலைப்பதிவு தொடங்குவதை எளிதாக்கிய வேர்ட்பிரஸ் ஆகிய சேவைகளால் ஈர்க்கப்பட்டு இதே போன்ற சேவையை ஒலிக் கோப்புகளுக்காக உருவாக்கத் திட்டமிட்டனர். இப்படித்தான் சவுண்ட் கிளவுட் சேவை அறிமுகமானது.

இசைக் கலைஞர்களுக்கான தளம்

2007-ல் ஸ்வீடனில் தொடங்கப்பட்ட நிறுவனம் அதே ஆண்டு ஜெர்மனியின் பெர்லின் நகரில் பதிவு செய்யப்பட்டது. சவுண்ட் கிளவுட் சேவை பிரதானமாக, இசைக் கலைஞர்கள் தங்கள் ஆக்கங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்வதற்கான மேடையாக அமைந்தது. அதே நேரத்தில் இசை ஆர்வம் கொண்டவர்கள் இவற்றைக் கேட்டு ரசிக்கவும் வழி செய்யப்பட்டிருந்தது. எனவே, புதிய இசையைக் கண்டறிவதற்கான வழியாகவும் இது அமைந்தது. இந்த அம்சம், கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சவுண்ட் கிளவுட் சேவையைப் பிரபலமாக்கியது.

இசைக் கலைஞர்கள், தங்களுக்கான அறிமுகப் பக்கத்தை உருவாக்கி, புதிய பாடல்களைப் பதிவேற்ற முடிந்தது. இவ்வாறு பகிரப்படும் பாடல்களை ரசிகர்கள் கேட்டு மகிழலாம். பாடல் பிடித்திருந்தால் ரசிகர்கள் பின்னூட்டம் வாயிலாகத் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். அதிலும் குறிப்பாக, பாடல் ஆல்பத்தில் எந்தப் பகுதி பிடித்திருந்ததோ அந்தப் பகுதியில் கருத்து தெரிவிக்கும் வசதி சிறப்பமாக அமைந்தது.

புதிய மற்றும் வளரும் இசைக் கலைஞர்கள் தங்களது இசையைப் பகிர்ந்துகொள்வதற்கான மேடையாக சவுண்ட் கிளவுடைக் கருதினர். ரசிகர்களும், புதிய இசையைக் கண்டறியும் உத்வேகத்துடன் இந்தத் தளத்தை பயன்படுத்தினர்.

மேலும் ரசிகர்கள் தங்கள் ஆர்வத்துக்கு ஏற்ற இசையைத் தேடும் வசதியும் இருந்தது. விரும்பிய பாடல்களை இசைப் பட்டியலாகச் சேமிக்கும் வசதியும் அளிக்கப்பட்டிருந்தது. பிடித்த பாடல்களுக்கு விருப்பம் தெரிவிப்பதோடு அவற்றை இணையத்திலும் பகிர்ந்துகொள்ளலாம். அதே போல, இசை கலைஞர்கள் இங்கு பாடல்களைப் பகிரும்போது அதற்கான பிரத்யேக இணைய முகவரி உருவாக்கி அளிக்கப்படும். இதைக் கொண்டு அவர்கள் விரும்பிய எந்த இடத்திலும் இந்த இணைப்பைப் பகிர்ந்துகொண்டு தங்கள் இசையைப் பிரபலமாக்க முடிந்தது.

ரசிகர்களைப் பொறுத்தவரை, குறிப்பிட்ட பாடல் அல்லது இசை வகை சார்ந்த குழுக்களை அமைத்துக்கொண்டு சக உறுப்பினர்களோடு உரையாடவும் முடிந்தது. பாடல்கள் தவிர ஒலி வடிவிலான எந்தக் கோப்பையும் இந்தத் தளத்தில் பகிர முடிந்தது. இதன் காரணமாக ஒலிப்பிரியர்கள் மத்தியில் சவுண்ட் கிளவுட் பெரும் வரவேற்பைப் பெற்றது.

பின்னர் இணைய வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையில், இசை ஸ்டிரீமிங் மற்றும் பாட்காஸ்டிங் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டன. இதன் விளைவாக ஒலி கோப்பு சார்ந்த சமூக வலைப்பின்னல் சேவையாக சவுண்ட் கிளவுட் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

(தொடரும்)

மறக்க முடியாத மைஸ்பேஸ்

சமூக வலைப்பின்னல் வரலாற்றில் மைஸ்பேஸ் தளத்துக்கு முக்கிய இடம் இருக்கிறது. ஆரம்ப கால சமூக வலைப்பின்னல் தளங்களில் ஒன்றான மைஸ்பேஸ், ரசிகர்களால் இசைக் கோப்புகளைப் பகிர்ந்துகொள்ளவும், விவாதிக்கவும் அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதன் காரணமாக, இசைக் கலைஞர்கள் பலர் மைஸ்பேஸில் அறிமுகமாகி ரசிகர்களுடன் உரையாடினர். மைஸ்பேஸ் செல்வாக்கு காரணமாகவே பல கலைஞர்கள் புகழ் பெற்றனர். மைஸ்பேஸால் புதிய இசைக் கலைஞர்களும் கண்டறியப்பட்டனர். பெரும் செல்வாக்குடன் விளங்கிய இந்தத் தளம், பின்னர் மெல்லச் சரிவைச் சந்தித்தது. மைஸ்பேஸ் பாதையில் சவுண்ட் கிளவுட் உதயமாகி இசைப் பிரியர்களுக்கான வலைப்பின்னலானது அதன் பிறகுதான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in