சமூக ஊடக வானவில் - 14: உங்களுக்கென ஒரு வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில் - 14: உங்களுக்கென ஒரு வலைப்பின்னல்

ஃபேஸ்புக் அறிமுகமாவதற்கு முன்னரே, இணையத்தில் சமூக வலைப்பின்னல் அலை வீசத் தொடங்கிவிட்டது. 1997-ல் அறிமுகமான, முதல் சமூக வலைப்பின்னல் சேவையான சிக்ஸ்டிகிரீஸைத் தொடர்ந்து சமூக வலைப்பின்னல் தளங்கள் பெரும்பாலும், அந்தத் தளம் போட்டுக்கொடுத்த பாதையிலேயே பயணித்தன. பிளாக்பிளேனட், பிரெண்ட்ஸ்டர், ரைஸ் என எல்லாம் இந்தக் காலத்தில் உருவான தளங்கள்தான். புத்தாயிரமாண்டின் தொடக்கத்தில் பயனாளிகள் களைத்துப்போகும் அளவுக்கு, சமூக வலைப்பின்னல் சேவைகள் உருவாகத் தொடங்கியிருந்தன.

நிங் செய்த புரட்சி

ஊடகங்களும்கூட, மேலும் ஒரு சமூக வலைப்பின்னல் சேவை எனும் விமர்சனக் குறிப்புடனேயே புதிய சமூக வலைப்பின்னல் சேவைகளை அறிமுகம் செய்தன. ஒவ்வொரு தளமும், தனித்தன்மையான ஒரு அம்சத்தில் கவனம் செலுத்தி மாறுபட்ட சமூக வலைப்பின்னல் சேவை என தங்களை வேறுபடுத்திக்கொள்ள முயற்சித்தன. இந்த அலைக்கு மத்தியில்தான் ஃபேஸ்புக் அறிமுகமான அதே ஆண்டில், நிங்.காம் (https://www.ning.com/ ) எனும் சமூக வலைப்பின்னல் தளம் அறிமுகமானது. பொதுமக்களுக்கான சேவையான ஃபேஸ்புக் விரிவடைந்து பிரபலமாவதற்கு முன்னரே, நிங் தளம் பரவலான எதிர்பார்ப்பையும், வரவேற்பையும் பெற்றிருந்தது.

மற்ற சமூக வலைப்பின்னல் தளங்கள் போல இல்லாமல், மாறுபட்டதாக இருந்ததே நிங் வரவேற்பைப் பெறுவதற்கான காரணமாக அமைந்தது. பயனாளிகள் ஒவ்வொருவரும், தங்களுக்கான சொந்த சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்கிக்கொள்ள வழிசெய்யும் சேவையாக நிங் அமைந்திருந்தது.

ஆம், பயனாளிகள் சமூக வலைப்பின்னல் சேவையில் இணைவதற்குப் பதிலாக, தாங்களே ஒரு சமூக வலைப்பின்னலை உருவாக்கிப் பராமரித்துக்கொள்ளலாம் என்றது. பயனாளிகள் சொந்தமாக இணையதளங்களை உருவாக்கிக்கொள்ளும் சேவையை, அதற்கு முன்னரே ஜியோசிட்டீஸ் போன்ற தளங்கள் வழங்கியிருக்கின்றன. ‘லைவ்ஜர்னல்’ எனும் வலைப்பின்னல் தளம் பயனாளிகள் தங்களுக்கான சொந்த வலைப்பதிவை உருவாக்கிக்கொள்ள வழி செய்திருந்தது. இந்த வரிசையில், பயனாளிகள் தங்களுக்கான சமூக வலைப்பின்னல் தளத்தை உருவாக்கிக்கொள்ள நிங் வழிவகுத்தது. அதில், மேலும் சிறப்பம்சங்களையும் சேர்த்தது.

பயனாளர்களுக்குச் சுதந்திரம்

பொதுவாக சமூக வலைப்பின்னல் தளங்களில் பயனாளிகள் உறுப்பினராகப் பதிவுசெய்துகொண்ட பின், தங்களுக்கான நட்பு வலையை உருவாக்கிக்கொண்டு கருத்துகளைப் பரிமாறிக்கொள்ளலாம் என்றாலும், அதன் அம்சங்களை அவர்களால் எந்தவிதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. இதற்கு மாறாக, நிங் பயனாளிகள் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிக்கொண்டு, அந்தப் பக்கத்தைத் தங்களுக்கான தனி வலைப்பின்னலாகப் பராமரித்துக்கொள்ள வழிசெய்தது.

பயனாளிகள் தங்கள் வலைப்பின்னலில் என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம். நண்பர்களைச் சேர்க்கலாம், அவர்களுடன் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடலாம், புகைப்படங்களை வெளியிடலாம். பயனாளிகள் விரும்பிய வகையில் தங்கள் தேவைக்கு ஏற்ப வலைப்பின்னலை வளர்த்துக்கொள்ளலாம். சமூக வலைப்பின்னல் தளங்களின் ஆற்றல் நன்றாக உணரப்பட்டிருந்த நிலையில், மேலும் மேலும் புதிய தளங்கள் இப்பிரிவில் உதயமாகிக்கொண்டிருந்த சூழலில், சொந்த வலைப்பின்னலை உருவாக்கிக்கொள்ளும் வகையில் அமைந்த நிங், இந்தப் பிரிவில் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம்.

புதிய முயற்சி

நிங் சேவையை உருவாக்கியவர் மார்க் ஆண்டர்சன். இவர், வலையின் முதல் வெகுஜன பிரவுசராக அமைந்து இணைய யுகத்தைத் தொடங்கிவைத்த ‘நெட்ஸ்கேப் பிரவுசர்’ நிறுவனத்தை உருவாக்கியவர் என்பதால், இந்தத் தளத்தின் புதுமையான கருத்தாக்கத்தில் வியப்பதற்கு எதுவும் இல்லை. நெட்ஸ்கேப் வெற்றியால் பெரும் செல்வாக்கு பெற்றிருந்த ஆண்டர்சனால், வெகு எளிதாக முதலீட்டையும் ஈர்க்க முடிந்திருந்தது. இதனால், முற்றிலும் புதிய விதமான சமூக வலைப்பின்னல் சேவையை அவர் உருவாக்கியிருந்தார்.

நிங் சேவையானது, இலவசம் மற்றும் கட்டணச் சேவை இரண்டையும் வழங்கியது. உறுப்பினர்கள் தங்களுக்கான வலைப்பின்னலை இலவசமாக அமைத்துக்கொள்ளலாம். ஆனால், விளம்பரங்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும். விளம்பரங்கள் வேண்டாம் என்றால் கட்டணச் சேவையை நாடலாம்.

சமூக வலைப்பின்னல் சேவையில் கட்டுப்பாட்டை எதிர்பார்த்த தனிநபர்கள், பிராண்டுகள், செல்வாக்கு மிக்கவர்கள், வர்த்தக நிறுவனங்கள் என பல தரப்பினரும் நிங் தளத்தின் மூலம் தங்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்கிக்கொண்டனர். கல்வி நிறுவனங்களுக்கு இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்ததால், கல்வி நிறுவனங்கள் பலவும் மாணவர்களுடன் தொடர்புகொள்ள நிங் தளத்தைப் பயன்படுத்திக்கொண்டன.

ஒருகட்டத்தில் நிங் தளம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சமூக வலைப்பின்னல் சேவைகளைக் கொண்டதாக வளர்ந்திருந்தது. இதே காலகட்டத்தில் ‘டிரைப்.நெட்’ (tribe.net) எனும் சமூக வலைப்பின்னல் சேவையும் அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றிருந்தது. பொதுவான சேவையாக அல்லாமல், இனக்குழு அடிப்படையில் பயனாளிகள் தங்களுக்கான இனக்குழுவை உருவாக்கிக்கொள்ள இந்தத் தளம் வழி செய்தது.

தேக்கம்

ஆனால், தவறான நிர்வாக அணுகுமுறை மற்றும் தவறான பயன்பாடு தொடர்பான சர்ச்சைகளால் டிரைப் தளம் பிரச்சினைக்குள்ளான நிலையில், இணைய ஜாம்பவானான சிஸ்கோ நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்டது. சிஸ்கோ நிறுவனமும் சமூக வலைப்பின்னல் பிரிவில் ஆர்வம் காட்டியது. தனிநபர்கள் முதல் நிறுவனங்கள் வரை, தங்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவையை உருவாக்கிக்கொள்ள உதவும் வகையிலான வர்த்தக வலைப்பின்னல் தளங்களே அடுத்த கட்டம் எனவும் பேசவைத்தது.

இந்தக் கணிப்புக்கு மாறாக, சமூக வலைப்பின்னல் பரப்பில் ஃபேஸ்புக் அலை வீசத் தொடங்கியது. நிங் தளம் அளித்த பல வசதிகளை ஃபேஸ்புக் தளம் இலவசமாக வழங்கவே, பயனாளிகள் மத்தியில் ஃபேஸ்புக் பிரபலமானது. இதனிடையே நிங் தளமும் நிர்வாக நோக்கில் குழப்பமான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், வளர்ச்சி வேகத்தைக் கோட்டைவிட்டது.

இணையத்தின் முன்னணி வலைப்பின்னல் சேவையாக நிங் போன்ற தளங்கள் நிலை பெறுவதற்குப் பதிலாக, ஃபேஸ்புக் பெரும் வெற்றி பெற்றது எப்படி எனும் கேள்வி ஆழமான ஆய்வுக்கு உரியது. இடையே வேறு ஒரு நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிங், இன்றளவும் வர்த்தக நிறுவனங்கள் வலைப்பின்னல் அம்சங்கள் கொண்ட தளத்தை உருவாக்கிக்கொள்வதற்கான சேவையை வழங்கிவருகிறது.

(தொடரும்)

பெட்டிச் செய்தி

சமூக ஊடக அதிபர்

சொந்த வலைப்பின்னல் சேவை என்பது இணையத்தில் முக்கியக் கருத்தாக்கமாக உருவெடுத்ததன் விளைவாக, 2007-ல் ஆஸ்திரேலிய பாப் பாடகி கெய்லி மினோக் தனக்கும் ரசிகர்களுக்குமான தனி வலைப்பின்னல் சேவையை ‘கெய்லிகனெக்ட்’ எனும் பெயரில் உருவாக்குவதாக அறிவித்தார். பிரபலங்கள் எல்லாம் சமூக வலைப்பின்னல் தளங்களில் ஐக்கியமாகிக்கொண்டிருந்த நிலையில், தனக்கான சொந்த வலைப்பின்னல் சேவையை உருவாக்கிய முதல் பாடகியாக கெய்லி கருதப்படுகிறார். கெய்லி மட்டும் அல்ல, பாரக் ஒபாமாவும், 2008 அதிபர் தேர்தலுக்கு தயாரானபோது, தனக்கான தனி சமூக வலைப்பின்னல் தளத்தை ‘பாரக் ஒபாமா.காம்’ (barackobama.com) எனும் பெயரில் அமைத்திருந்தார். அவரது தேர்தல் வெற்றியில் இந்தத் தளமும், சமூக ஊடகப் பயன்பாடும் முக்கியப் பங்காற்றியதாகக் கருதப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in