சமூக ஊடக வானவில்-80: எப்படி இருக்கும் எதிர்காலச் சமூக ஊடகம்?

சமூக ஊடக வானவில்-80: எப்படி இருக்கும் எதிர்காலச் சமூக ஊடகம்?
Updated on
3 min read

சமூக ஊடகத்தின் சுருக்கமான வரலாற்றுடன் தொடங்கிய இந்தத் தொடரை ‘மெட்டாஃபில்டர்’ (MetaFilter) தளம் பற்றிய குறிப்புகளுடன் நிறைவுசெய்வது பொருத்தமாக இருக்கும். ‘மெட்டாஃபில்டர்’ எனும் பெயர் உங்களுக்குப் புதிதாக இருந்தாலும் இது பழைய தளம்தான். சொல்லப்போனால் மிகவும் பழமையான தளம். அடுத்த ஆண்டு வெள்ளி விழா கொண்டாட இருக்கும் தளம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆம், கடந்த நூற்றாண்டின் இறுதியில் தொடங்கப்பட்ட இந்தத் தளம் இன்னமும் இயங்கிக்கொண்டிருக்கிறது. ஃபேஸ்புக்குக்கு எல்லாம் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் தளம், பரவலாக அறியப்படாமல் இருந்தாலும், தனக்கான இணைய சமூகத்தைக் கொண்டிருக்கிறது.

மெட்டாஃபில்டர் துடிப்பான இணைய சமூகத்தைக் கொண்டிருப்பதோடு, சமூக ஊடகத்தின் ஆதார அம்சத்துக்கு அடையாளமாகவும் விளங்குகிறது. அந்த வகையில், இணையத்தில் நீண்ட காலமாகத் தொடரும் ஆன்லைன் சமூகமாகவும் விளங்குகிறது.

மெய்நிகர் பரப்பில் சந்தித்துக்கொள்பவர்கள், பொதுக் கருத்து மற்றும் தகவல் பகிர்வு மூலம் தங்களுக்கான பிணைப்பை உருவாக்கிக்கொள்ள வழி செய்யும் தளங்கள், இணைய சமூகங்களாகக் கொள்ளப்படுகின்றன. இத்தகைய இணைய சமூகங்களில் ஒன்றான 'வெல்' (Well), சமூக ஊடகம் எனும் கருத்தாக்கத்தின் ஆரம்பப் புள்ளிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இணையம் எனும் நுட்பம் பரவலாக அறிமுகம் ஆவதற்கு முன்னரே, ஆன்லைனில் அறிமுகமானவர்களுக்கான மெய்நிகர் சமூகமாக வெல் குழு கொடிக்கட்டி பறந்தது. வெல் சமூகம் பின்னர் வழக்கொழிந்து போனாலும், அதன் நீட்சியாக கருதக்கூடிய ‘மெட்டாஃபில்டர்’ இன்றளவும் தொடர்வது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்தான். மேத்யூ ஹாகே (Matthew Haughey) என்பவரால் இந்தத் தளம் தொடங்கப்பட்டது.

மேத்யூ ஹாகே
மேத்யூ ஹாகே

‘மெட்டாஃபில்டர்’ தளத்தில் அப்படி என்ன சிறப்பு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ’ஸ்லேஷ்டாட்’ தளத்தையும், ’ரெட்டிட்’ தளத்தையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஸ்லேஷ்டாட், லினக்ஸ் சார்ந்த தகவல்களைப் பகிர்வதற்காகத் தொடங்கப்பட்ட தளம் என்றாலும், பயனர்களே தகவல்களைப் பகிர்ந்துகொள்ளவும், அதை வாக்குகள் அடிப்படையில் முன்னிலை பெற வைக்கவும் வழி செய்த தளம் என்ற முறையில் ‘சமூகச் செய்தி’ எனும் புதிய வகைக்கு வித்திட்டது. ஸ்லேஷ்டாட், மெட்டாஃபில்டர் தளத்துக்கு முன்னதாகவே தொடங்கப்பட்ட தளம் என்றால், இணையத்தின் முகப்புப் பக்கம் எனும் சுய வர்ணணை கொண்ட ரெட்டிட் தளம், 2005-ம் ஆண்டுவாக்கில் ஆரம்பிக்கப்பட்டது.

பயனர்கள் இணைப்புகளைப் பகிர்ந்துகொள்வதையும், அவை சார்ந்த உரையாடலை மேற்கொள்ளவும் வழி செய்யும் ரெட்டிட், பல்வேறு தலைப்புகளில் குழுக்கள் மற்றும் துணைக் குழுக்களுடன் மாபெரும் இணைய சமூகமாக விளங்கிறது. ரெட்டிட்டில் ஒரு விஷயம் விவாதிக்கப்படுகிறது என்றால் அது இணையத்தின் கவனத்தை ஈர்க்கும் சாத்தியம் அதிகம்.

மெட்டாஃபில்டரும் இதே பாணியிலான சமூக ஊடகத் தளம்தான். இணையத்தில் வலைப்பதிவுகள் பிரபலமாகத் தொடங்கிய காலத்தில் அறிமுகமான மெட்டாஃபில்டர், ஒரு வலைப்பதிவு சேவையாகவே உருவானது. ஆனால், வழக்கமான வலைப்பதிவு சேவையாக அல்லாமல், கூட்டு வலைப்பதிவு சேவையாக அமைந்திருந்தது. அதாவது ஒரு தனிநபரின் வலைப்பதிவாக அல்லாமல், உறுப்பினர்கள் பலரும் வலைப்பதிவு செய்யும் தன்மையை மெட்டாஃபில்டர் கொண்டிருந்தது.

எவர் வேண்டுமானாலும், உறுப்பினராகி பதிவைப் பகிர்ந்துகொள்ளலாம் எனும் தன்மை மெட்டாஃபில்டர் தளத்தை இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக்கியது. இதில் பகிரப்படும் பதிவுகளின் மீது சக உறுப்பினர்கள் கருத்து தெரிவிக்கும் வசதியும் இருந்தது. உறுப்பினர்கள் இணையத்தில் தாங்கள் கண்டறியும் சுவாரசியமான விஷயங்களுக்கான இணைப்பையும் இங்கு பகிர்ந்துகொள்ளலாம்.

யார் வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம் என்பது வலைப்பதிவுகளின் தனித்தன்மையாக அமைந்திருந்த நிலையில், தனி வலைப்பதிவு தொடங்காமல், விரும்பிய கருத்தைப் பதிவாகப் பகிர வழி செய்த மெட்டாஃபில்டர் தளம் பலரைக் கவர்ந்திழுத்தது.

உறுப்பினர்கள் தெரிவிக்கும் கருத்துகள் அடிப்படையில், குறிப்பிட்ட பதிவுகள் தளத்தின் முகப்புப் பக்கத்தில் முன்னிலை பெற்றன. இணைய சமூகத்தின் கூட்டு மனசாட்சி போல அமைந்திருந்த இந்தத் தளத்தை அதன் உறுப்பினர்கள் ‘மிஃபீ’ (MeFi) எனச் சுருக்கமாக அழைக்கத் தொடங்கினர். தொடர்ந்து இந்தத் தளத்தில், உறுப்பினர்களுக்கான கேள்வி பதில் பகுதியும் தொடங்கப்பட்டது. மெட்டாஃபில்டர் ஒரு இணைய சமூகமாக உருவாக இந்த வசதி மேலும் வலு சேர்த்தது. எந்தத் தலைப்பு பற்றியும் சுதந்திரமாக விவாதிக்கக்கூடிய இடமாக மெட்டாஃபில்டர் உருவானது. எனினும், இதில் தெரிவிக்கப்படும் கருத்துகள் மட்டுறுக்கப்பட்டன.

ஒரு கட்டத்தில் மெட்டாஃபில்டரில் 5 டாலர் உறுப்பினர் கட்டணம் கொண்டுவரப்பட்டது. சுய விளம்பரத்துக்கான பதிவுகள் பகிரப்படுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் இது அமைந்திருந்தது.

தனி வலைப்பதிவுகள் பிரபலமான காலத்தில் கூட்டு வலைப்பதிவாக மெட்டாஃபில்டர் இணையத்தின் கவனத்தை ஈர்த்தது. ஆர்வம் உள்ள விஷயங்களைக் கண்டறிவதற்கான, விவாதிப்பதற்கான இடமாக இந்தத் தளம் அமைந்தது. புத்தாயிரமாண்டுக்கு பிறகு யூடியூப், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடக சமூக சேவைகள் அறிமுகமான நிலையில் மெட்டாஃபில்டர் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும் தனக்கான இணைய சமூகத்தைக் கொண்டிருந்தது.

இன்றைய காலகட்டத்திலும் மெட்டாஃபில்டரின் பயணம் தொடர்கிறது. சமூக ஊடகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும் எனும் கேள்வி பலமாகக் கேட்கப்படும் காலத்தில் மெட்டாஃபில்டர் தளம் கவனத்தை ஈர்ப்பதோடு, சமூக ஊடக தளத்தின் ஆதார அம்சங்கள் என்னவாக இருக்க வேண்டும் என்பதற்கான பதிலாகவும் அமைகிறது.

(நிறைவடைந்தது)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in