சமூக ஊடக வானவில்-76: நல்லெண்ண வலைப்பின்னல்!

சமூக ஊடக வானவில்-76: நல்லெண்ண வலைப்பின்னல்!

சமூக ஊடகப் பரப்பில் புதிதாக அறிமுகமாகியிருக்கிறது பிக்ஸ்டோரி. (https://www.pixstory.com/). ஏற்கெனவே எண்ணற்ற தளங்கள் நிறைந்திருக்கும் சமூக ஊடக உலகில் இந்தச் சேவை வரவேற்பைப் பெறுமா, நிலைத்து நிற்குமா எனத் தெரியவில்லை. ஆனால், பிக்ஸ்டோரி வெற்றிபெற வேண்டும் எனும் எண்ணத்தை ஏற்படுத்துகிறது. ஏனெனில், இது வழக்கமான சமூகவலைப்பின்னல் தளமாக இல்லாமல் மாறுபட்டதாக அமைவதோடு, சமூக ஊடக உலகின் முக்கியப் பிரச்சனைகளில் ஒன்றுக்குத் தீர்வுகாணும் முயற்சியாகவும் அமைந்திருக்கிறது.

பொய்ச் செய்திகள் மலிந்திருக்கும் சூழலில் நம்பகத்தன்மையைக் கொண்டுவரும் சமூகவலைப்பின்னல் சேவையாக பிக்ஸ்டோரி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த நோக்கத்திற்காகக் கவனத்தை ஈர்க்கிறது. இணையதளம் மட்டும் அல்லாமல் செயலி வடிவிலும் இந்தச் சேவையை அணுகலாம்.

பிக்ஸ்டோரியில் மற்ற சமூக ஊடகத் தளங்களில் இருப்பதுபோல நிலைத்தகவல்கள், விருப்பங்கள், நண்பர்கள் போன்ற அம்சங்கள் எதுவும் இல்லை. பின்தொடர்பாளர்கள் எண்ணிக்கை பற்றியும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்தத் தளத்தில் கதைகளைப் பகிர்ந்துகொள்ளலாம் என்றாலும், அவையும் வழக்கமானவை அல்ல. எல்லாமே ஆதாரங்கள் சார்ந்தவை, நம்பகத்தன்மையை வலியுறுத்தும் நோக்கம் கொண்டவை.

இந்தத் தளத்தில் உறுப்பினர்கள், தகவல் சார்ந்த விஷயங்களைப் புகைப்படக் கதைகளாகப் பகிர்ந்துகொள்ளலாம். 360 வார்த்தைகள் எனும் வரம்புக்குள், ஒன்று முதல் 12 படங்களுடன் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொள்ளலாம். இந்தத் தகவல்களை சக உறுப்பினர்கள் படித்துப் பார்ப்பதோடு, அவற்றுடன் உடன்படலாம் அல்லது அவற்றில் தகவல் பிழை இருப்பதாகக் கருதினால் மாறுடலாம். உடன்படுவது ஆதரவாகவும், மாறுபடுவது சவாலாகவும் கருதப்படும்.

தகவல்கள் பகிரப்படுவதற்கு முன், ஆபாசக் கருத்துகள் உள்ளிட்டவற்றுக்காகச் செயற்கை நுண்ணறிவு கொண்டு சோதிக்கப்படும். அதன் பின்னரே தகவல்கள் அனுமதிக்கப்படுகின்றன.

கதைகளை எழுத்து வடிவில் மட்டும் அல்லாமல், ஒலி வடிவிலும் பகிர்ந்துகொள்ளலாம். மற்ற சமூகவலைப்பின்னல் சேவைகளிலும் இவற்றைப் பகிரலாம்.

பகிர்வுகளுக்குக் கிடைக்கும் ஆதரவுக்கு ஏற்ப அவற்றைப் பகிர்ந்தவர்களுக்குப் புள்ளிகள் அளிக்கப்படும். அதன் அடிப்படையில் அந்தப் பகிர்வுகளின் நம்பகத்தன்மை மதிப்பிடப்படும். தகவல் பிழைகளுக்காகச் சவால் தெரிவிக்கப்பட்டால், வல்லுநர்கள் உதவியோடு அவை சரிபார்க்கப்படும். பிழைத் தகவல்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டால்  அந்தப் பதிவு நீக்கப்படும். இந்த முறையில் சரியான தகவல்கள் முன்னிறுத்தப்படும்.

உறுப்பினர்கள் பகிரும் தகவல்களுக்கு ஏற்ப அவர்களுக்கு நம்பிக்கைப் புள்ளிகள் அளிக்கப்படும். அதிக நம்பிக்கைப் புள்ளிகள் கொண்டவர் பகிரும் தகவல்களுக்கு அதிக கவனிப்பு இருக்கும். நம்பகத்தன்மையைப் பெறுவதற்காக உறுப்பினர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

உறுப்பினர்கள் பங்கேற்புத் தன்மைக்கு ஏற்ப அவர்களுக்கு நட்சத்திரப் பயனாளிகள், வல்லுநர்கள், பொதுமக்கள் மனிதர் போன்ற பதக்கங்களும் அளிக்கப்படுகின்றன.

ஆக, விவாதத்திற்கான களமாக இருப்பதோடு, பொய்த் தகவல்களை நீக்கி நம்பிக்கையை உண்டாக்கும் தளமாகவும் விளங்கும் நோக்கம் கொண்டுள்ளது. அதேபோல, வெறுப்புக் கருத்துக்களுக்கும் இடமளிக்காத வகையில் செயல்படும் நோக்கம் கொண்டுள்ளது. கால்பந்து போட்டியில் ரசிகர்கள் மத்தியில் நல்லெண்ணப் பகிர்தலை ஊக்குவிப்பதற்காக இந்தத் தளம் ஆர்சனல் குழுவுடனும் இணைந்து செயல்படுகிறது.

இணைய விவாதத்தில் நம்பகத்தன்மையைக் கொண்டுவரும் நோக்கம் கொண்ட இந்தத் தளம், உறுப்பினர்கள் தரப்பில் பொறுப்பேற்பின் அடிப்படையில் இதைச் சாத்தியமாக்க விழைகிறது. இதை நம்பிக்கைப் புள்ளிகள் கொண்டு செயல்படுத்த முயற்சிக்கிறது. ஒருவிதத்தில் இது சமூகவலைப்பின்னல் பரப்பின் பழைய உத்திதான்.

சமூகச் செய்தி தளங்களின் முன்னோடியாகக் கருதப்படும் ஸ்லேஷ்டாட் தளத்தில், உறுப்பினர்களின் பகிர்வுக்கு ஏற்ப ‘கர்மா’ புள்ளிகள் அளிக்கப்படும். இந்தப் புள்ளிகள் அடிப்படையிலேயே உறுப்பினர்களுக்கு நிர்வாகிகள் அந்தஸ்தும் அளிக்கப்படும். சக உறுப்பினர்களின் கருத்து அடிப்படையில் இந்தப் புள்ளிகள் அமையும். ஸ்லேஷ்டாட் தளத்தில் ஜனநாயக முறையில் தகவல்கள் முன்னிறுத்தப்பட இந்த முறை கைகொடுத்தது. பிக்ஸ்டோரியும் இதேபோன்ற முறையைப் பின்பற்றுகிறது.

பாதுகாப்பான, நம்பகமான சமூகவலைப்பின்னல் தளமாக விளங்க வேண்டும் எனும் நோக்கம் கொண்ட இந்தத் தளத்தை இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் பத்திரிகையாளரும், பொருளாதார வல்லுநருமான அப்பு சுரேஷ் (AppuEsthose Suresh) நிறுவியுள்ளார். சர்வதேசப் பிரபலங்கள் இடம்பெற்றுள்ள இதன் இயக்குநர் குழுவில் தொலைத்தொடர்புத் துறை முன்னாள் செயலாளர் அருணா சுந்தர்ராஜன் உள்ளிட்டோரும் இடம்பெற்றுள்ளனர்.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in