
இன்ஸ்டாகிராம் என்பது புகைப்படங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான செயலி மட்டும் அல்ல, அதில் புத்தகங்களின் படத்தோடு, வாசிப்புக் குறிப்புகளையும் பகிர்ந்துகொள்ளலாம். இன்ஸ்டாகிராம் மேடையில் புத்தகம் சார்ந்த கணக்குகள் ‘புக்ஸ்டாகிராம்’ எனத் தனியே குறிப்பிடப்படுகின்றன. இதே போல, யூடியூபில் புத்தக அறிமுகம் மற்றும் விமர்சனம் செய்பவர்கள் ‘புக்டியூபர்’ என அழைக்கப்படுகின்றனர். ட்விட்டரில் இப்படி தனிப்பெயர் இல்லை என்றாலும், புத்தகங்கள் தொடர்பான குறும்பதிவுகள் அதிகம் பகிரப்படவே செய்கின்றன.
நிற்க, பொதுவான சமூக வலைப்பின்னல் தளங்களில் புத்தகங்கள் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்துகொள்வதற்குப் பதிலாக, இதற்கென்றே தனியே ஒரு வலைப்பின்னல் செயலி இருந்தால் எப்படி இருக்கும்? லிட்ஸி (https://www.litsy.com/) இத்தகைய சேவையாக அமைகிறது.
புத்தகங்களுக்கான இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டர் என வர்ணிக்கப்படும் லிட்ஸி, புத்தகங்களை நேசிப்பவர்களுக்கான சமூக வலைப்பின்னல் சேவை ஆகும். புத்தகங்கள் சார்ந்து நட்பு வளர்க்கும் தளங்களாக, குட்ரீட்ஸ்(Goodreads), லைப்ரரிதிங்(librarything) போன்றவை இருந்தாலும், லிட்ஸி அவற்றிliருந்து மாறுபட்ட புத்தக வலைப்பின்னலாக விளங்குகிறது.
குட்ரீட்ஸ் தளமும், லைப்ரரிதிங் தளமும், வாசித்த புத்தகங்கள், வாசிக்க விரும்பும் புத்தகங்கள் உள்ளிட்ட தகவல்களைப் பட்டியலிட்டு, புத்தகங்கள் தொடர்பான விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்ள வழி செய்கின்றன. லிட்ஸி தளத்தில் புத்தகங்களை மையமாகக் கொண்டே கருத்துப் பகிர்வு நிகழ்கிறது.
லிட்ஸி தளத்தில் புத்தகங்கள்தான் எல்லாம். இந்தத் தளத்தில் உறுப்பினர்கள் தாங்கள் வாசித்த அல்லது வாசிக்க விரும்பும் புத்தகம் தொடர்பான கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளலாம். புத்தக விமர்சனம் அல்லது மேற்கோள் அல்லது புத்தகம் பற்றிய சுருக்கமான அறிமுகம் என மூன்று விதமாகக் கருத்துகளை வெளியிடலாம். புத்தக அட்டைப்படம் அல்லது மேற்கோள் படத்தை இணைக்கும் வசதியும் இருக்கிறது.
ஆனால், அதிகபட்சம் 300 வார்த்தைகளில் கருத்துகளை வெளியிட வேண்டும். சக உறுப்பினர்களின் கருத்துகள் வாயிலாக புதிய புத்தகங்களை அறிமுகம் செய்துகொள்வதோடு, பலரது வாசிப்பு அனுபவத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
இவை தவிர, உறுப்பினர்கள் கருத்துக்கு விருப்பம் தெரிவிக்கலாம், பதில் கருத்து தெரிவிக்கலாம். ஆர்வம் உள்ள உறுப்பினர்களைப் பின்தொடரவும் செய்யலாம். இவை எல்லாம் பொதுவாக சமூக வலைப்பின்னல் தளங்களில் காணக்கூடிய அம்சங்கள் என்றாலும், லிட்ஸியில் என்ன சிறப்பு என்றால், அனைத்து நிலைத்தகவல்களும் புத்தகங்களை மையமாகக் கொண்டே அமைந்திருக்கும் என்பதுதான்!
குறிப்பிட்ட புத்தகத்தை க்ளிக் செய்தால், அந்தப் புத்தகம் தொடர்பான கருத்துப் பரிமாற்றங்களைக் காணலாம். புத்தகம் தொடர்பான உறுப்பினர்கள் கருத்துகளைப் படிக்கும்போது, நூலகத்திலோ அல்லது புத்தகப் புழுக்கள் நிறைந்த அறையிலோ இருப்பது போல உணரலாம்.
அதிகம் பேசப்படும் புத்தகங்களின் பட்டியலைப் பார்ப்பதோடு, புத்தக விவாதங்கள் தொடர்பான பல்வேறு ஹேஷ்டேகுகளையும் காணலாம்.
உறுப்பினராகாமலே இந்தத் தளத்தைப் பயன்படுத்தலாம் என்றாலும், விருந்தினர்கள் புத்தகம் சார்ந்த குறிப்புகளை மட்டுமே வாசிக்க முடியும். கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள அல்லது உரையாடலில் பங்கேற்க உறுப்பினராகப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இந்தத் தளத்தின் உறுப்பினர்களுக்கு அவர்களின் இலக்கிய செல்வாக்குப் புள்ளிகளும் அளிக்கப்படுகின்றன. ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் டைம்லைன் போலவே இந்தத் தளத்தில் பதிவாகும் நிலைத்தகவல்களையும் அணுகலாம்.
புத்தகப் பிரியர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்று விளங்கும் இந்தத் தளம் உருவான கதை சுவாரசியமாகவே இருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டாட் லோட்டன் (Todd Lawton) அவரது நண்பர் லிபிலான்க் (LeBlanc) ஆகியோர் அவுட் ஆஃப் பிரின்ட் (https://outofprint.com) எனும் புத்தக டிஷர்ட் இணையதளத்தை நடத்தி வந்தனர். டிஷர்ட்கள் என்றதும், அவற்றில் இடம்பெறக்கூடிய விதவிதமான வாசகங்கள் மற்றும் வடிவமைப்புதான் நினைவுக்கு வரும் அல்லவா? இந்த இருவரும், டிஷர்ட் வடிவமைப்பை இலக்கியமயமாக்கினர்.
அதாவது, பிரபலமான புத்தகங்கள் அட்டைப்படம் மற்றும் அவற்றின் உள்ளடக்கத்தைப் பிரதிபலிக்கும் வகையில் புத்தக டிஷர்ட்களை உருவாக்கி இந்தத் தளம் வாயிலாக இவர்கள் விற்பனை செய்கின்றனர். டால்ஸ்டாயின் ‘வார் அண்ட் பீஸ்’ (போரும் அமைதியும்) டிஷர்ட், காஃப்காவின் ‘தி கேஸில்’ (கோட்டை) டிஷர்ட் எல்லாம் இந்தத் தளத்தில் உருவாக்கப்படுகின்றன.
இந்த இலக்கிய டிஷர்ட்களுக்கு வாசகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, அவர்களில் பலரும் தங்களுக்குள் உரையாடலில் ஈடுபடுவதைப் பார்த்த லோட்டனும், அவரது நண்பரும் புத்தகங்கள் சார்ந்த நட்பு உரையாடலை மேற்கொள்வதற்கான இணைய சமூகத்தை உருவாக்க விரும்பினர். அப்படித்தான் லிட்ஸி உருவானது. 2016-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தத் தளம், 2019-ல் லைப்ரரிதிங் தளத்தால் கையகப்படுத்தப்பட்டது.
(தொடரும்)