சமூக ஊடக வானவில்-73: அர்த்தம் உள்ள உரையாடலுக்காக ஒரு தளம்!

சமூக ஊடக வானவில்-73: அர்த்தம் உள்ள உரையாடலுக்காக ஒரு தளம்!

அந்தக் கால மகிமையைப் பேசுவது போல, ‘அந்தக் காலத்தில் சமூக ஊடகத் தளங்கள் எப்படி இருந்தன தெரியுமா?’ எனும் கேள்வியோடு பழைய சமூக வலைப்பின்னல் தளங்களின் நினைவுகளில் மூழ்குபவர்கள் ‘போஸ்ட்.நியூஸ்’ (https://post.news/) சமூக வலைப்பின்னல் தளத்தைக் குறித்து வைத்துக்கொள்ளலாம். அதற்காக, இதை ஏதோ பழைய சமூக வலைப்பின்னல் சேவை என்று நினைத்துவிடக்கூடாது.

அந்தக் காலத்து சமூக வலைப்பின்னல் தளங்களின் தன்மையோடு புதிதாக அறிமுகமாகியிருக்கும் சேவை இது.

போஸ்ட் நியூஸ் மீட்டுத்தர முற்படும் அந்தக் கால சமூக ஊடகத் தன்மையைப் புரிந்துகொள்ள அதன் நிறுவனரான, நோம் பார்டின் (Noam Bardin) இந்தச் சேவை பற்றி கூறுவதை அறிந்துகொள்வது உதவியாக இருக்கும்.

‘சமூக ஊடகம் சுவாரசியமானதாக, பெரிய எண்ணங்களை, சுவாரசிய மனிதர்களை அறிமுகம் செய்யும் இடமாக, உங்களை மேலும் புத்திசாலியாக மாற்றக்கூடியதாக இருந்த காலம் நினைவில் உள்ளதா? சமூக ஊடகம் உங்கள் நேரத்தை வீணடிக்காததாக, உங்களைச் சோகமாக உணர வைக்காததாக இருந்த காலம் நினைவில் உள்ளதா?’ என்றெல்லாம் கேட்கும் பார்டின், அச்சுறுத்தல் அல்லது அவமானத்துக்கு உள்ளாகாமல், ஒருவருடன் முரண்படுவது சாத்தியமாக இருந்த காலத்தையும் நினைவுபடுத்துகிறார்.

இவை எல்லாவற்றையும் மீண்டும் கொண்டுவரும் நோக்கத்துடன் போஸ்ட் சேவையைத் தொடங்கியிருப்பதாகக் கூறுகிறார்.

இஸ்ரேலைச் சேர்ந்தவரான பார்டின், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற முன்னணி சமூக வலைப்பின்னல் சேவைகளுக்கு மாற்றாக இந்தச் சேவையை ஆரம்பித்திருக்கிறார். துவேஷக் கருத்துக்களுக்கு இடமில்லாத சேவையாக இந்தத் தளம் விளங்கும் என்றும் கூறுகிறார். முக்கியமாக இந்தத் தளத்தில் எல்லா பயனாளிகளும் சமமானவர்களாக மதிக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அறிமுகமான இந்தச் சேவையைப் பயன்படுத்த வேண்டும் என்றால், அதற்காக விண்ணப்பித்து அழைப்புக்காகக் காத்திருக்க வேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் ஏற்கெனவே உறுப்பினர்களாக இணைந்துள்ள நிலையில், காத்திருப்போரின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்தத் தளத்தில் உறுப்பினர்களாகச் சேர்ந்தவர்களில், பத்திரிகையாளர்களும், அறிவுஜீவிகளும் அதிகம் உள்ளனர்.

ஃபேஸ்புக்கின் டைம்லைன் தன்மையோடு அமைந்திருக்கும் இந்தத் தளம், ட்விட்டரின் முக்கிய அம்சங்களையும் கொண்டிருக்கிறது. எனினும் இதில் பதிவுகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எத்தனை நீளமான பதிவுகளையும் வெளியிடலாம். ட்விட்டர் போலவே, பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்கலாம், பதில் அளிக்கலாம். பதிவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வசதியும் இருக்கிறது.

எலான் மஸ்க் நிர்வாகத்தின் கீழ் வந்த பிறகு ட்விட்டருக்கான மாற்று சேவைகள் கவனத்தை ஈர்த்துள்ளன. இவற்றில் பிரதானமான மாஸ்டோடான், மையமில்லா தன்மையைக் கொண்டிருந்தாலும், அதன் சிக்கலான அம்சங்கள் சராசரிப் பயனாளிகளைக் குழப்பத்தில் ஆழ்த்தலாம். ஆனால், போஸ்ட் சேவை மிகவும் எளிமையாக எந்தவித குழப்பமும் இல்லாமல் இருப்பது பலரைக் கவர்ந்துள்ளது.

இந்தத் தளத்தில் பகிரப்படும் தனிப்பட்ட கட்டுரைகளை, சிறு தொகை செலுத்தி வாசிக்கும் வசதி உள்ளிட்ட பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு தளங்களில் வெளியிடப்படும் உள்ளடக்கத்தை ஒரே இடத்தில் வாசிக்கும் வசதியைக் கொண்டுவரும் திட்டமும் உண்டு.

நண்பர்கள், அறிமுகம் இல்லாதவர்கள், தலைவர்கள் எனப் பலதரப்பட்ட மனிதர்களோடு அர்த்தம் உள்ள உரையாடலில் ஈடுபடுவதற்கான மேடையாக இந்தத் தளம் இருக்கும் என்றும் அதன் அறிமுகப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘எங்கள் கொள்கை பிடித்திருந்தால் காத்திருப்புப் பட்டியலில் இணையவும்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. புத்தாண்டில் இந்தத் தளம் எந்த அளவு பயனாளிகளைக் கவர்கிறது எனப் பார்க்கலாம்.

புத்தகங்களைத் தேட...

புத்தாண்டில் இன்னொரு சமூக வலைப்பின்னல் சேவையையும் அறிமுகம் செய்துகொள்ளலாம். அது புத்தகக் கண்டறிதலுக்கு உதவும் புக்ஸ்வரி தளம் (www.bookscovery.com). புத்தகப் பரிந்துரை அம்சத்துடன், புத்தக வலைப்பின்னல் சேவையான குட்ரீஸ்ட் தளத்தின் அம்சங்களையும் இந்தத் தளம் கொண்டிருக்கிறது.

இந்தத் தளத்தில் புத்தகப் பிரியர்கள் தாங்கள் ஏற்கெனவே வாசத்துள்ள புத்தகங்களின் அடிப்படையில் புதிதாக வாசிப்பதற்கான புத்தகங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதை மிகவும் சுவாரசியமான முறையில் இந்தத் தளம் சாத்தியமாக்குகிறது.

இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தில் பட்டியலிடப்பட்டுள்ள புத்தகங்களில் விருப்பமானதைத் தேர்வு செய்தால், ‘புத்தகம் பிடித்திருக்கிறது’, ‘பிடிக்கவில்லை’, ‘படித்துவிட்டேன்’, ‘ஆர்வம் இல்லை’ எனப் பலவிதமான வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த வாய்ப்புகளில் ஒன்றை கிளிக் செய்வதன் மூலம், தொடர்புடைய புத்தகப் பரிந்துரைகளைப் பார்க்கலாம்.

பரிந்துரைக்கப்படும் புத்தகங்கள் தொடர்பான சுருக்கமான அறிமுகத்தைத் தெரிந்துகொள்வதோடு, விரும்பினால் அவற்றை ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

பல்வேறு தலைப்புகளில் ஆங்கிலப் புத்தகங்கள் முன்வைக்கப்படுவதோடு, பருவநிலை மாற்றம், பெருந்தொற்று வாசிப்பு போன்ற பொருள்களிலும் புத்தகங்கள் பட்டியலிடப்படுகின்றன. புத்தகப் பிரியர்கள் ஒரு புத்தகத்திலிருந்து இன்னொரு புத்தகம் எனத் தாவிக்கொண்டே இருக்கலாம். உறுப்பினராகச் சேர்ந்தால், படித்த புத்தகங்களைக் குறித்து வைப்பதோடு, புத்தக விமர்சனங்களையும் இடம்பெற வைக்கலாம்.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in