சமூக ஊடக வானவில்-72: கருத்துகளுக்கான வலைப்பின்னல் களஞ்சியம்!

சமூக ஊடக வானவில்-72:  கருத்துகளுக்கான வலைப்பின்னல் களஞ்சியம்!

சமூகத்துக்கு ஃபேஸ்புக் ஆபத்தானதா எனும் கேள்வி பலரிடம் இருக்கிறது. இந்தக் கேள்விக்கான பதிலைவிட, அதற்கான புரிதலில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் ’பார்லியா’ (https://www.parlia.com/o/facebook-is-dangerous-for-society) சமூக வலைப்பின்னல் சேவை உங்கள் மனதுக்கு நெருக்கமாகலாம்!

ஃபேஸ்புக்கின் சமூகத் தாக்கம் தொடர்பான கேள்வி மட்டும் அல்ல, உலகில் உள்ள எந்த விஷயம் குறித்தும் நமக்குத் தோன்றக்கூடிய கேள்விகளுக்கான பதில்கள் தொடர்பான புரிதலை அளிக்கக்கூடிய தளமாக பார்லியா விளங்குகிறது.

பார்லியா என்றதும் நாடாளுமன்றத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லின் சுருக்கமாகத் தோன்றுகிறதா? உங்கள் ஊகம் சரிதான். நாடாளுமன்றம் போலவே, பல்வேறு விஷயங்கள் பற்றிய இணைய விவாதத்துக்கான மேடையாக இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தத் தளத்தைக் கருத்துகளுக்கான விக்கிப்பீடியா என்று குறிப்பிடலாம். தளத்தின் நிறுவனரும் முன்னாள் பத்திரிகையாளருமான டூரி முன்தே (Turi Munthe) அப்படித்தான் சொல்கிறார்.

விவாதங்களுக்கு வழிவகுக்கும் பிரத்யேக சமூக வலைப்பின்னல் சேவைகள் ஏராளமாக இருக்கின்றன. ரெட்டிட் (Reddit) இந்தப் பிரிவில் முதலில் நினைவுக்கு வரலாம். சொல்லப்போனால், கருத்து பரிமாற்றமும், உரையாடலும்தான் சமூக ஊடகங்களின் ஆதார அம்சங்களில் ஒன்றாக இருக்கிறது.

எனினும், மற்ற விவாதத் தளங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக பார்லியா அமைகிறது. பார்லியாவின் நோக்கம்தான் இதற்குக் காரணம். சார்பு நிலை இல்லாமல், மக்களின் பார்வையைப் புரிந்துகொள்ள உதவுவதே இதன் பிரதான நோக்கமாக அமைகிறது.

ஒவ்வொரு விஷயத்திலும் ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கலாம். அதை வெளிப்படுத்துவதிலும் தவறில்லை. சமூக ஊடக யுகத்தில் இதற்கான வழிகளும் ஆயிரம் இருக்கின்றன. ஆனால், பிரச்சினை என்னவென்றால், சமூக ஊடகங்களில் அவரவர் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும் வகையில் கருத்துகளைப் பதிவுசெய்யும்போது, அவரவர் தங்கள் கருத்தை மட்டுமே முக்கியமாக நினைப்பதால் விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிடுகிறது.

திறந்த மனதுடனான விவாதத்துக்கு வழியில்லாதபோது, ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்குச் சார்பாக அணி திரள்வதால், எங்கும் எதிலும் ஒரு சார்பு நிலையே மேலோங்குகிறது. இணையத்தின் ஜனநாயகம் இப்படி தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கு மாற்றாக, அனைவரும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து, எந்த ஒரு விஷயம் தொடர்பாகவும் கருத்து நிலையைப் புரிந்துகொள்ள உதவும் இணைய மேடையாக பார்லியா உருவாகியிருக்கிறது.

ஒவ்வொரு பிரச்சினை தொடர்பாகவும் எண்ணற்ற வழிகளில் விவாதிக்கலாம் என்றாலும், குறிப்பிட்ட எந்த ஒரு விஷயம் தொடர்பான விவாதத்தையும், விரல் விட்டு எண்ணிவிடக்கூடிய கருத்துகளாக வகைப்படுத்தி விடலாம். மற்றவை எல்லாம் அவற்றை வெட்டியோ, ஒட்டியோதான் இருக்கும். எனில், இத்தகைய மையக் கருத்துகளை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்துகொள்ள முடிந்தால், ஒரு விஷயத்தின் பல்வேறு பக்கங்களையும் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?

இந்த நம்பிக்கையில்தான் பார்லியா செயல்படுகிறது. இந்தத் தளத்தில், முக்கியப் பிரச்சினைகள் தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்ளலாம். பயனாளிகள் அதற்குப் பதில் கருத்தும் தெரிவிக்கலாம். இப்படி பகிர்ந்துகொள்ளப்படும் பல வகையான கருத்துகளைத் தெரிந்துகொள்ளும்போது, அந்தப் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்வது சாத்தியமாகலாம்.

பார்லியா தளத்தில் நுழைந்ததுமே, ஃபேஸ்புக் போன்ற டைம்லைன் பாணியில், முக்கிய பிரச்சினைகள் பற்றிய கருத்துகளைக் காணலாம். அவற்றுக்கு, ஏற்பு, இல்லை, நடுநிலை என்பது உள்பட ஐந்துவிதமாக ஆதரவு தெரிவித்து பதில் கருத்து தெரிவிக்கலாம். இந்தக் கருத்துப் பதிவை நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளலாம்.

செய்திகள், கலாச்சாரப் போர்கள், பொழுதுபோக்கு உள்ளிட்ட பலவிதத் தலைப்புகளில் கருத்துகளைப் பார்க்கலாம். பயனாளிகள் பங்கேற்பின்படி முன்னிலை பெறும் கருத்துகளும் முகப்புப் பக்கத்திலேயே அடையாளம் காட்டப்படுகின்றன. அதிகம் கருத்து தெரிவிக்கும் பயனாளிகளின் பங்களிப்பையும் பார்க்கலாம்.

பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணமே சிறந்தது எனத் தொடங்கி, மேற்கத்திய நாடுகளில் அனைவருக்கும் அடிப்படைச் சம்பளம் அறிமுகம் செய்யப்பட வேண்டும் என்பதுவரை பல்வேறு விதமான தலைப்புகளில் கருத்துகளை இந்தத் தளத்தில் பார்க்கலாம்.

இணையத்தில் மேலோங்கும் ஒரு பக்கச் சார்பு நிலையால் அதிருப்தி அடைந்து அதற்கான தீர்வாக பார்லியா தளத்தை ஆரம்பித்ததாக டூரி முன்தே குறிப்பிடுகிறார். தொடக்கத்தில் விக்கிப்பீடியா பாணியில் கருத்துகளுக்கான தன்னார்வத் தொகுப்பாக அமைந்த இந்தத் தளம் தற்போது, ரெட்டிட் பாணியில் நிர்வகிக்கப்படுகிறது.

‘உங்களுக்கான சுய கண்டறிதல் சேவை’ என தன்னை வர்ணித்துக்கொள்ளும் இந்தத் தளம், காத்திரமான விவாதங்களை நிகழ்த்தும் திறன் கொண்டவர்களுக்குச் சரியான களம்!

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in