சமூக ஊடக வானவில்-71: ஊழியர்கள் ரகசியம் பேச ஒரு வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில்-71: ஊழியர்கள் ரகசியம் பேச ஒரு வலைப்பின்னல்

என்னதான் சமூக வலைப்பின்னல் என்றாலும் எல்லாவற்றையும் பொதுவெளியில் மனம்விட்டுப் பேசிவிட முடியாது. நமக்கு நாமே எல்லைகளை வகுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். வெளிப்படையாகச் சொல்ல முடியாத கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும், விவாதிக்கவும் ஒரு சமூக வலைப்பின்னல் தளம் இருந்தால் எப்படி இருக்கும்?

பிளைண்ட் (https://www.teamblind.com/) தளம் இத்தகைய சமூக வலைப்பின்னலாக விளங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள வர்த்தக நிறுவன ஊழியர்கள், இந்த தளத்தில் தங்கள் அடையாளத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், பணியிடம் சார்ந்த விஷயங்களை விவாதித்து வருகின்றனர். குறிப்பிட்ட நிறுவனம் தொடர்பான பணி கலாச்சாரம், வேலைவாய்ப்பு முறை, நிறை குறைகள் உள்ளிட்டவற்றை அறிந்துகொள்ள ஊழியர்கள் இந்தத் தளத்தை ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.

அதே நேரத்தில் நிறுவனங்களின் மேலதிகாரிகள், மனிதவள மேம்பாடு அதிகாரிகள் தங்கள் ஊழியர்கள் மனநிலை மற்றும் கருத்துக்களை அறிந்துகொள்ள இந்தத் தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகத் தொழில்முறை ஊழியர்கள் மத்தியில் இந்த வலைப்பின்னல் வேகமாகப் பிரபலமாகி வருகிறது.

தொழில்முறை நோக்கிலான பிரத்யேக சமூக வலைப்பின்னல் தளங்கள் பல இருப்பதை இந்தத் தொடரில் பார்த்திருக்கிறோம். இந்த வரிசையில் வந்தாலும், பிளைண்ட், அதன் அனாமதேய தன்மையால் மற்ற தொழில்முறை சமூக வலைப்பின்னல் தளங்களிலிருந்து மாறுபடுகிறது.

ஒருவிதத்தில் பார்த்தால், அனாமதேய தன்மை இணையத்தின் ஆதார அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. இணையம் எனும் வலைப்பின்னலில் உள்ள சேவைகளை, பயனாளிகள் விரும்பினால் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பயன்படுத்தலாம். ஆரம்ப காலத்தில் அரட்டை அறைகளில், அனாமதேய வசதி பெருமளவில் பயன்படுத்தப்பட்டது. சமூக வலைப்பின்னல் தளங்கள் அறிமுகமானபோதும், இந்த வசதி நீடித்தது.

ஆனால், ஃபேஸ்புக் சேவை நட்பு வலை விரிக்க பயனாளிகள் அவர்கள் நிஜப் பெயர்களுடன் பதிவுசெய்ய வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கியது. நண்பர்களைத் தேடிக்கொள்ள இது அவசியம் என்றாலும், பயனாளிகளிடம் இருந்து தரவுகளை அறுவடை செய்ய இது வழிவகுப்பதாக ஒரு விமர்சனமும் இருக்கிறது.

மற்ற சமூக வலைப்பின்னல்களில் வெவ்வேறு அளவிலான அனாமதேய வசதிகள் இருந்தாலும், தொழில்முறை சமூக வலைப்பின்னல் தளங்களில் அனாமதேய அம்சத்தை முக்கிய அம்சமாகக் கொண்டு பிளைண்ட் தளம் செயல்பட்டு வருகிறது.

வர்த்தக நிறுவனங்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்ள எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இந்த நோக்கில் தொழில்முறை தொடர்புகளை உருவாக்கிக்கொள்ள உதவும் சேவையான லிங்க்டுஇன் திகழ்கிறது.

வர்த்தக நிறுவன ஊழியர்களுக்கான மெசேஜிங் சேவையாக ’ஸ்லேக்’ திகழ்வதையும் பார்த்திருக்கிறோம். நிறுவனங்களின் பணி கலாச்சாரம் உள்ளிட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான சேவையாக கிளாஸ்டோர் (Glassdoor) பிரபலமாக இருப்பதையும் நீங்கள் அறிந்திருக்கலாம்.

கிளாஸ்டோரை நினைவுபடுத்துவதாக அமைந்தாலும், அனாமதேய தன்மையுடன் பகிரப்படும் தகவல்கள் தொடர்பான நம்பகத்தன்மையுடன் அமைவதாக பிளைண்ட் தன்னை வர்ணித்துக்கொள்கிறது. அதாவது, இந்தத் தளத்தில் ஊழியர்கள் தங்களை அடையாளம் காட்டிக்கொள்ளாமல் தகவல்களைப் பகிரலாம் என்றாலும், அவர்கள் ஊழியர்கள்தானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

பிளைண்ட் தளத்தைப் பயன்படுத்த விரும்பும் ஊழியர்கள் தங்கள் வர்த்தக இமெயில் மூலம் பதிவு செய்ய வேண்டும். நிறுவன ஊழியர் என்பதை உறுதிப்படுத்த இது உதவுகிறது. ஆனால், ஊழியர்களின் அடையாளம் ரகசியமாகவே இருக்கும். மின்னஞ்சல் உள்ளிட்ட எந்த விவரமும் யாருடனும் பகிர்ந்து கொள்ளப்படாது என்று பிளைண்ட் தெரிவிக்கிறது.

ஆக, இந்தத் தளத்தில் உறுப்பினரானதும், ஊழியர்கள் தங்களுக்கான நிறுவனக் குழுவைக் கண்டறிந்து அங்கு நடைபெறும் உரையாடலை கவனிக்கலாம். இதன் மூலம் நிறுவன உள் விஷயங்கள் பற்றி தெரிந்துகொள்ளலாம் என்பதோடு, தங்கள் மனக்குறைகளையும் பகிர்ந்துகொள்ளலாம். குறைகளைத் தெரிவிப்பதோடு மட்டும் அல்லாமல், மற்றவர்களிடம் இருந்து நிறுவன விஷயங்களில் ஆலோசனை கேட்கலாம். பணி முன்னேற்றம் குறித்து வழிகாட்டுதல்களைக் கோரலாம். இவை தனிப்பட்ட உரையாடல்களுக்கானது.

மேலும், பொதுவான உரையாடலுக்கான பகுதியும் இருக்கிறது. இந்தப் பகுதியில் ஊழியர்கள் அல்லாதவர்களும் நிறுவனச் செயல்பாடுகள் தொடர்பான கருத்துகளைத் தெரிந்துகொள்ளலாம். வர்த்தக நிறுவனங்களின் பணி கலாச்சாரம், பணி வாய்ப்பு, தனித்தன்மைகள், குறைகள், விமர்சனங்கள் போன்றவற்றை இதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நிறுவன ஊழியர்களின் மனநிலையை அறியவும் இந்தத் தளத்தை மேலதிகாரிகள் பயன்படுத்தலாம். உறுப்பினர்கள் தங்களுக்குள் தனி அரட்டை அறை மற்றும் குழுக்களையும் ஏற்படுத்திக்கொண்டு, ஆர்வம் உள்ள தலைப்புகளில் உரையாடலாம். ஊழியர்கள் எந்த கேள்வியையும் கேட்கலாம். கேள்விகளுக்கான பதில்களுக்கு விருப்பக்குறி இடலாம்.

உலகம் முழுவதும் உள்ள மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் ஊழியர்கள் இந்தத் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். முன்னணி நிறுவனங்களுக்கான சேனல்களை இந்தத் தளத்தில் பார்க்கலாம். நிறுவன ஊழியர்கள் மற்றும் அவர்கள் உரையாடல்கள் வர்த்தக உலகுக்கான சாளரமாக அமைகின்றன.

பல்வேறு நிறுவனங்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களும் இந்த வலைப்பின்னலைப் பயன்படுத்தலாம். இதற்கான செயலி வடிவமும் இருக்கிறது.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in