சமூக ஊடக வானவில் - 67: வலைப்பதிவு பாதி, குறும்பதிவு மீதி!

சமூக ஊடக வானவில் - 67: வலைப்பதிவு பாதி, குறும்பதிவு மீதி!

தேடியந்திர உலகில் புதிய தேடியந்திரம் அறிமுகம் ஆகும்போது, அடுத்த கூகுள் என வர்ணிக்கப்படுவதே வழக்கமாக இருந்திருக்கிறது. இப்படி கூகுளுக்கு மாற்றாக முன்னிறுத்தப்பட்ட எண்ணற்ற தேடியந்திரங்கள் நிலைத்து நிற்க முடியாமல் போயிருக்கின்றன. எனினும், இதையும் மீறி அடுத்த கூகுள் அல்லது மாற்று கூகுளுக்கான தேவை இருக்கவே செய்கிறது. தேடியந்திர உலகிலும் இதே போக்கைக் காணலாம் என்றாலும், இரண்டுக்கும் முக்கிய வேறுபாடுகள் உள்ளன.

முதல் வேறுபாடு தேடியந்திர உலகைவிட சமூக ஊடக உலகம் பரந்து விரிந்திருக்கிறது (இந்தத் தொடரின் நோக்கமும் அதை உணர்த்துவதுதான்). தேடியந்திர உலகில் கூகுள் ஆதிக்கம் செலுத்துவது போல,சமூக ஊடக உலகில் ஃபேஸ்புக்கும், ட்விட்டரும் ஆதிக்கம் செலுத்தினாலும், மேலும் பல சேவைகள் முன்னிலை பெற்றிருப்பதோடு, அடுத்த ஃபேஸ்புக், அல்லது அடுத்த ட்விட்டர் என்று சொல்லக்கூடிய எண்ணற்ற சமூக வலைதளங்கள் அறிமுகமாகிக்கொண்டுதான் இருக்கின்றன.

இரண்டாவது முக்கிய வேறுபாடு, மாற்று கூகுளாக முன்வைக்கப்பட்ட சேவைகளில் பெரும்பாலானவை அடுத்த கூகுளாக உருவாக வேண்டும் என்ற நோக்கமும் நம்பிக்கையும் கொண்டிருந்தன. ஆனால், சமூக ஊடக உலகில் ஃபேஸ்புக் அல்லது ட்விட்டருடன் ஒப்பிடப்படும் சேவைகளில் பல, அவற்றுக்கு மாற்றாக உருவாகும் நோக்கம் கொண்டவையே தவிர, ஃஅடுத்த பேஸ்புக் அல்லது அடுத்த ட்விட்டர் எனும் இடத்தைப் பிடிக்கும் நோக்கம் கொண்டவை அல்ல.

மாற்று சமூக ஊடக சேவைகள், ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் போல் இல்லாமல், பயனாளிகளுக்கான சுதந்திரத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டுள்ளனவே தவிர அவை அடுத்த ஃபேஸ்புக் அல்லது அடுத்த ட்விட்டராக விரும்புவதில்லை.

உண்மையில், மாற்று சமூக வலைப்பின்னல் தளங்கள் பெருநிறுவனமாக விளங்காமல் தங்கள் அளவில் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும் என்றே விரும்புகின்றன.

இந்தப் போக்கிற்கு உதாரணமாக ’கோஹோஸ்ட்’ (https://cohost.org/rc/welcome) சமூக ஊடகச் சேவையைச் சொல்லலாம். ட்விட்டருக்கு மாற்று என முன்வைக்கப்படும் சேவைகளில் ஒன்றான கோஹோஸ்ட், தோற்றத்திலும், உள்ளடக்கத்திலும் ட்விட்டர் போலவே இருந்தாலும் அடுத்த ட்விட்டராகும் நோக்கம் கொண்டிருக்கவில்லை.

காலின் பேயர் (Colin Bayer), ஜே கப்லான் (Jae Kaplan) ஆகிய மென்பொருளாளர்கள் இணைந்து இந்தத் தளத்தை உருவாக்கியுள்ளனர். மாற்று சமூக ஊடக சேவைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஆன்டிசாஃப்ட்வேர்கிளப் (https://antisoftware.club/about.html) எனும் நிறுவனத்தை இவர்கள் நடத்தி வருகின்றனர்.

ஃபேஸ்புக் போன்ற முன்னணி நிறுவனங்களின் தகவல் அறுவடை, தனியுரிமை மீறல், அல்கோரிதம் தலையீடு, விளம்பர நோக்கம் போன்றவை எல்லாம் இல்லாமல், தூய்மையான சமூக வலைப்பின்னல் சேவை அளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாக இருக்கிறது. இதைத் தெளிவாகவும் இந்தத் தளம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தளத்தில் விளம்பரங்கள் கிடையாது எனவே, பயனர்கள் தரவுகளைத் திரட்டுவதும் இல்லை எனத் தெரிவிக்கப்படுள்ளது. பயனாளிகளைக் கண்காணிப்பதும் இல்லை, பயனாளிகள் எந்தத் தகவல்களைப் பார்க்க வேண்டும் என்பதை அல்கோரிதம் கொண்டும் தீர்மானிப்பதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பர நோக்கம் இல்லாததால் வருவாய்க்குப் பயனாளிகள் அளிக்கும் சிறிய தொகையை மட்டுமே நம்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சேவை இலவசமானது என்றாலும், பயனர்கள் விரும்பினால் கட்டணச் சேவையைத் தேர்வு செய்யலாம். கட்டண சேவையில் கூடுதல் அம்சங்கள் கிடைக்கும் என்பதைவிட, பயனர்கள் தெரிவிக்கும் தார்மிக ஆதரவு என்ற அளவிலேயே இது அமைகிறது.

இனி இந்தத் தளத்தின் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம். ட்விட்டருக்கு மாற்று என்ற அளவில் இந்தத் தளம் குறும்பதிவு அம்சம் கொண்டிருந்தாலும், வலைப்பதிவின் தன்மையையும் கொண்டிருக்கிறது. அதாவது ட்விட்டர் போலவே இதிலும் பதிவுகளை வெளியிடலாம் என்றாலும், அதற்கு வரம்பு கிடையாது. அந்த வகையில் இது வலைப்பதிவு போன்றது. ஆனால் பதிவுகள் ட்விட்டரில் உள்ள டைம்லைன் பாணியில் வெளியாகும்.

உறுப்பினர்கள் சக உறுப்பினர்களைப் பின்தொடரலாம் என்பதோடு, பதிவுகளுக்குப் பதிலும் அளிக்கலாம், விருப்பம் தெரிவிக்கலாம். பதிவுகளைப் பார்வையிடுபவர்கள் விவரங்களை மறைக்கும் வசதியும் இருக்கிறது. விருப்பங்களையும் மறைக்கலாம். ஒரே உறுப்பினர் பல்வேறு பொருட்களில் பதிவுகளை உருவாக்கிக்கொள்ளலாம். மற்றவர்களுடன் இணைந்தும் பதிவுகளை உருவாக்கலாம். இவை எல்லாம் இந்தத் தளத்தின் புதுமையான அம்சங்கள்.

பதிவுகளை வெளியிடுவதும், பார்வையிடுவதும் முற்றிலும் பயனாளிகளின் விருப்பம் சார்ந்தது. இதில் எந்த அல்கோரிதத்தின் குறுக்கீடும் கிடையாது.

உண்மையில், பல்வேறு சமூக ஊடகத் தளங்களின் முக்கிய அம்சங்களை ஒருங்கிணைத்து இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகப் பதிவுகளின் வீச்சு தொடர்பான எண்ணிக்கை விளையாட்டைவிட, சமூகப் பகிர்வு அம்சம் முதன்மையாக இருக்கும் வகையில் இந்தத் தளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன் அறிமுகப் பகுதி குறிப்பிடுகிறது.

இந்தத் தளத்தைப் பயன்படுத்த விரும்பினால், நீங்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், இதைப் பயன்படுத்த அழைப்பு பெற்றிருக்க வேண்டும். தளத்தில் உறுப்பினராகப் பதிவுசெய்த பின் அழைப்புக்குக் காத்திருங்கள் என தெரிவிக்கப்படுகிறது. நீங்களும் முயன்று பார்க்கலாம்!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in