சமூக ஊடக வானவில்-66: ட்விட்டருக்கு இன்னொரு மாற்று

சமூக ஊடக வானவில்-66:  ட்விட்டருக்கு இன்னொரு மாற்று

சமூக ஊடக உலகில் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் ட்விட்டருக்கு மாற்றாக முன்வைக்கப்படும் சேவைகளில், ’டம்ப்ளர்’ (https://www.tumblr.com/) கவனத்தை ஈர்ப்பதை நீங்கள் உணர்ந்திருக்கலாம். இது ட்விட்டருக்கு மட்டும் அல்ல, ஃபேஸ்புக்குக்கும் மாற்றாக முன்வைக்கப்படும் சேவை என்பது இன்னொரு சிறப்பு!

அது ஒரு டம்ப்ளர் காலம் என்று சொல்லும் அளவுக்கு ஒரு காலத்தில் இணைய உலகில் பரபரப்பாகப் பேசப்பட்ட வலைப்பின்னல் இது. அடுத்தடுத்து வந்த சமூக வலைப்பின்னல் சேவைகளால் பின்னுக்குத் தள்ளப்பட்ட டம்ப்ளர் இப்போது, ட்விட்டரில் இருந்து வெளியேற விரும்புகிறவர்களைக் கவர்ந்திழுக்கும் சேவையாக மறு எழுச்சி பெற்றுள்ளது.

டம்ப்ளரின் மறு எழுச்சி அதன் அபிமானிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதோடு, மிகவும் பொருத்தமானதாகவும் அமைகிறது. ஏனெனில், டம்ப்ளர் மறுபதிவு வசதியால் எழுச்சி பெற்ற சேவையாகும். அதனால்தான் இப்போது குறும்பதிவு சேவையான ட்விட்டருக்குப் பொருத்தமான மாற்றாகப் பேசப்படுகிறது.

ஆனால், டம்ப்ளரை இன்னொரு குறும்பதிவு சேவை எனக் குறைத்து மதிப்பிட்டுவிடக் கூடாது. குறும்பதிவு சேவைகளில் முன்னோடி என்பதோடு, சமூக ஊடக உலகில் தனித்தன்மையானது. வலைப்பதிவின் தன்மையோடு, சமூக வலைப்பின்னல் அம்சத்தையும் டம்ப்ளர் கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் பிரபலமாகத் தொடங்கிய காலத்தில், ட்விட்டர் அறிமுகமான காலத்தில், வலைப்பதிவுகள் உச்சத்தில் இருந்த காலத்தில் டம்ப்ளர் இந்த மூன்று சேவைகளின் அம்சங்களையும் உள்ளடக்கியதாக அறிமுகமானது. அதன் காரணமாகவே இணையவாசிகளை ஈர்த்தது.

டம்ப்ளர் சேவையின் சிறப்பைப் புரிந்துகொள்ள, அதன் வரலாற்றைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

டேவிட் கார்ப் எனும் அமெரிக்க இளைஞர் தான் டம்ப்ளர் சேவையைத் தொடங்கினார். கார்ப் சிறு வயதிலேயே கணினி துறையில் ஆர்வம் கொண்டவர். தனது தீவிர முயற்சியால் கோடிங் கற்றுத்தேர்ந்தார். இதன் மூலம் அவருக்கு 17 வயதிலேயே வேலையும் கிடைத்தது. அதே நேரத்தில் சொந்தமாகத் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து நடத்த வேண்டும் என்ற வேட்கையும் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில், வலைப்பதிவுகள் புதிய சக்தியாக ஆங்கீகரிக்கப்பட்டு பலர் அந்த சாதனத்தைச் சிறப்பாகப் பயன்படுத்தி வலைப்பதிவு நட்சத்திரங்களாகி இருந்தனர். யூடியூப் அறிமுகமாகி ஒராண்டுக்கும் மேல் ஆகியிருந்தது. வலைப்பின்னல் சேவைகளான ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகியவை பிரபலமாகிக் கொண்டிருந்தன. அதற்கு முன்னர் இருந்த மைஸ்பேஸ் வலைப்பின்னல் தளம் செல்வாக்கை இழக்கத் தொடங்கியிருந்தது.

இந்தச் சூழலில்தான், டேவிட் கார்ப் புதிய சேவையை உருவாக்கும் தேடலில் ஈடுபட்டிருந்தார். அதோடு, இணையம் மூலம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமும் கொண்டிருந்தார். தனது, கருத்துக்களை வெளியிட வலைப்பதிவு சிறந்த வழி என்பதையும் அறிந்திருந்தார். ஆனால் வலைப்பதிவுக்காக நீளமான பதிவு எழுத வேண்டியிருந்தது மிரட்சியைக் கொடுத்தது. வலைப்பதிவுக்குள் நுழைந்ததும் காணப்பட்ட எழுத்துக்களை டைப் செய்வதற்கான பெரிய பெட்டியின் தோற்றத்தைக் கண்டதுமே கலக்கமாக உணர்ந்தார்.

வேர்ட்பிரஸ் மற்றும் பிளாகர் சேவை வாயிலாக எழுத முயற்சித்தும் அவருக்கு வலைப்பதிவு செய்வது கைவரவில்லை. இதனால் தான் எழுத்தாளர் இல்லை, தன்னால் எழுத முடியாது என்பதை உணர்ந்தார். அதே நேரத்தில், சொந்த எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான வழி தேவை என்பதையும் உணர்ந்தார்.

நீள் பதிவுகளை எழுத முடியாவிட்டாலும், மின்னல் கீற்றுகள் போன்ற எண்ணச்சிதறல்களையும், மேற்கொள்களையும், இணைப்புகளையும் பகிர்ந்துகொள்ள விரும்பினார். கார்ப்பிற்கு மட்டும் அல்ல, வலைப்பதிவுகளின் பரபரப்பால் ஈர்க்கப்பட்டவர்களில், சரளமாக எழுத முடியாத குறையை உணர்ந்த பலருக்கும் இதே போன்ற எண்ணம் இருந்தது.

வலைப்பதிவுக்கான மெனெக்கடல் இல்லாமல், மிக எளிதாக மனதில் தோன்றும் எண்ணங்களை, போகிறபோக்கில் பதிவு செய்வதற்கான ஒரு எளிய வழியை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர்.

இந்தத் தேடலுக்கான பதிலாக தான் கார்ப், டம்ப்ளர் சேவையை உருவாக்கினார். டம்ப்ளர் முழு வீச்சில்லான வலைப்பதிவு சேவையாகவும் இல்லாமல், சமூக வலைப்பின்னல் தளமாகவும் இல்லாமல் இரண்டின் கலவையாக அமைந்திருந்தது. இதற்கு, டம்பிள்லாக் எனும் தளம் ஊக்கம் கொடுத்தது.

டம்பிள்லாக் அடிப்படையில் வலைப்பதிவு தளம்தான் என்றாலும், எளிமையான வடிவம் கொண்டிருந்தது. அதன் மையப் பகுதியில், டைம்லைன் பாணியில் உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தது. தளத்தின் இடப்பக்கத்தில் பழைய பதிவுகளின் தொகுப்புகள் தோன்றின. வலைப்பதிவை நிர்வகிப்பதற்கான டேஷ் போர்டு மிக எளிமையாக அமைந்திருந்தது. பயனாளிகள் சுதந்திரமாக எதை வேண்டுமானாலும் எழுதி வெளியிடும் வசதி இருந்தது. மேற்கோள்கள், இணைப்புகள், எழுத்து வடிவம் என எதையும் பகிர முடிந்தது. இவை எல்லாமே சுருக்கமாக இருந்தன.

இந்தத் தளத்தை அடிப்படையாகக் கொண்டு கார்ப் தனது டம்ப்ளர் சேவையை அறிமுகம் செய்தார். இதில் எழுத்து வடிவில் கருத்துக்களை வெளியிடும் வசதியை பட்டன் வடிவில் உருவாக்கியிருந்தார். வீடியோ, புகைப்படம், இணைய இணைப்புகள் என எல்லாவற்றுக்கும் ஒரு பட்டனை உருவாக்கினார். மற்ற சமூக ஊடகங்களில் பகிர்வதற்கான வசதியும் இருந்தது.

இந்தச் சேவையை மைய டேஷ்போர்டில் இருந்தே வெகு சுலபமாகக் கையாள முடிந்தது. டேஷ்போர்டில் நுழைந்தால் போதும். பயனர் பெயரைப் பதிவுசெய்து வலைப்பதிவு செய்யத் தொடங்கிவிடலாம். வேறு எந்தப் பராமரிப்பும் தேவைப்படவில்லை. இந்த எளிமையோடு சக பயனாளிகளைப் பின்தொடரும் வசதியும் இருந்தது. ஒரே விதமான கருத்து உள்ளவர்கள் உள்ளடக்கம் மூலமாக தொடர்புகொள்ளும் வலைப்பின்னல் வசதியாகவும் இது அமைந்தது.

2006-ல் முதல் கட்டமாகவும், அடுத்த ஆண்டு முழுவீச்சிலும் அறிமுகமான டம்ப்ளர் சேவை பயனாளிகளை வெகுவாகக் கவர்ந்திழுத்தது. ஆயிரக்கணக்கானோர் இதில் இணைந்து தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். அதன் சமூக வலைப்பின்னல் அம்சத்தையும் பயன்படுத்திக்கொண்டனர். தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் பதிவுகளை மறுபதிவு செய்யும் வசதி இந்தத் தளத்தை மேலும் பிரபலமாக்கியது.

டம்ப்ளர் உண்மையில் சிறு பதிவு சேவையாக அமைந்திருந்தது. அளவில் சிறிய பதிவுகளுக்கான இடமாக விளங்கியது. அதே நேரத்தில் சமூக வலைப்பின்னல் அம்சத்தையும் கொண்டிருந்தது. இதன் காரணமாக, முன்னணி சமூக ஊடகங்களில் ஒன்றாக உருவானது. ஒரு கட்டத்தில் யாஹூ நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டு பின்னர் வேர்டுபிரஸின் தாய் நிறுவனத்தின் வசமான டம்ப்ளர், இடையே வரம்பு மீறிய உள்ளடக்கத்திற்காக சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளானது. எல்லாவற்றையும் தாண்டி, பயனாளிகளுக்குச் சுதந்திரம் அளிக்கும் சேவையாக அறியப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் எண்ணற்ற இணையவாசிகள் டம்ப்ளர் மூலம் தங்களுக்கான அடையாளத்தைத் தேடிக்கொண்டுள்ளனர்.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களின் எழுச்சியால் டம்ப்ளர் பின்னுக்குத் தள்ளப்பட்டாலும் அதன் ஆதாரத் தன்மையை விரும்பிய அபிமானிகளைக் கொண்டிருந்தது. இப்போது, ட்விட்டருக்கு மாற்று தேடுபவர்களை கவர்ந்திழுக்கிறது.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in