சமூக ஊடக வானவில் - 65: ட்விட்டருக்கு மாற்றாக எழுச்சி பெறும் மாஸ்டோடான்!

சமூக ஊடக வானவில் - 65: ட்விட்டருக்கு மாற்றாக எழுச்சி பெறும் மாஸ்டோடான்!

நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய சமூக வலைப்பின்னல் சேவை வரிசையில், மாஸ்டோடான் (Mastodon) குறித்து தெரிந்துகொள்ள இதைவிட பொருத்தமான நேரம் இருக்காது. ட்விட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கால் வாங்கப்பட்டதை அடுத்து எழுந்துள்ள சர்ச்சைகள், விவாதங்களுக்கு மத்தியில் ட்விட்டருக்கு மாற்றாக வேறு சமூக ஊடகங்கள் இருக்கின்றனவா எனும் தேடலும் தொடங்கியிருக்கிறது.

இந்தப் பின்னணியில் மாஸ்டோடான் இயல்பாகவே கவனத்தை ஈர்க்கிறது. ஏனெனில், குறும்பதிவு சேவையான ட்விட்டருக்கு மாற்றாக உருவானது தான் மாஸ்டோடான். 2016-ல் அறிமுகமான இந்தச் சேவை, ஏற்கெனவே அதற்கான அபிமானிகளைப் பெற்றுள்ள நிலையில் தற்போது ட்விட்டர் சர்ச்சையால் இணைய வெகுமக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மாற்று ஊடகமாக மாஸ்டோடான்

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு வாங்கியதை அடுத்து எலான் மஸ்க் எடுத்துவரும் நடவடிக்கைகள் ட்விட்டர் பயனாளிகளை பெருமளவில் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன. லாபத்தை நோக்கிய நடவடிக்கைகள் ட்விட்டரை எப்படியெல்லாம் பாதிக்கக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.

இனி ட்விட்டர் நமக்கு ஏற்றதாக இருக்காது என நினைப்பவர்கள், பொருத்தமான மாற்று சேவைக்கு மாறுவதைப் பரிசீலிக்கும் சூழலில், விஷயமறிந்த பலர் மாஸ்டோடானுக்கு மாறி வருகின்றனர். ‘மாஸ்டோடானுக்கு மாறுங்கள்’ எனும் கருத்தும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படுகிறது.

மாஸ்டோடானுக்கு மாறுவதாக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி, நீங்கள் மகத்தான இந்த மாற்று குறும்பதிவு சேவையைத் தெரிந்துகொள்வது அவசியம். ஏனெனில் மாஸ்டோடான், ட்விட்டருக்கு மாற்று என்பது மட்டும் அல்ல, ஃபேஸ்புக் போன்ற எந்த ஒரு பெரும் வர்த்தக நிறுவனத்தின் வசமாக இருக்கும் சமூக ஊடக சேவைக்கும் மாற்றாக விளங்குகிறது.

மாஸ்டோடான் சேவை குறித்த அறிமுகத்துக்கு முன்னதாக, அதன் பின் இருக்கும் லட்சிய கருத்தாக்கத்தை அறிந்துகொள்வது அவசியம். மையம் இல்லாதது என்பதும், திறவுமூல அடிப்படையிலானது என்பதும்தான் மாஸ்டோடான் பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டிய அம்சங்கள்.

விலைக்கு வாங்க முடியாது!

மையம் இல்லாதது என்பது ட்விட்டர், ஃபேஸ்புக் போல ஒரு மையமான சர்வர் அமைப்பைக் கொண்டு இயங்கும் சேவை அல்ல என்பதைக் குறிக்கிறது. இந்தத் தொழில்நுட்பக் கருத்தாக்கம் புரியவில்லை எனில், எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தின் கைகளிலும் இல்லாத பொதுவெளியிலான சேவை எனப் புரிந்துகொள்ளலாம்.

அதாவது, ட்விட்டர் இதற்கு முன் ஜேக் டோர்சிக்கு (!) சொந்தமாக இருந்து, இப்போது எலான் மஸ்க் கைகளுக்கு மாறியிருக்கிறது அல்லவா! மாஸ்டோடான் அப்படி அல்ல என்பதுதான் விஷயம். இது எந்த ஒரு வர்த்தக நிறுவனத்திற்கும் சொந்தமானது அல்ல. இதை வேறு எந்த ஒரு வர்த்தக நிறுவனமும் வாங்கவும் முடியாது.

மாஸ்டோடான் முகப்புப் பக்கத்தில், விலைக்கு வாங்க முடியாத சமூக வலைப்பின்னல் சேவை என்பதே அதன் அறிமுக வாசகமாக வரவேற்கிறது. டைம்லைனில் அல்கோரிதம்களின் தலையீடும் கிடையாது என்பதும் முக்கிய அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையே வேறுவிதமாகச் சொல்வது என்றால், வர்த்தக நிறுவனத்திடம் அல்லாமல் பயனாளிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் சேவை எனலாம். ஆம், மாஸ்டோடானில் பயனாளிகள் எல்லாவற்றையும் தீர்மானித்துக்கொள்ளலாம். எதையும், எப்போதும் அவர்கள் மீது நிர்வாகம் திணிக்க முடியாது என்பதும் மாஸ்டோடானின் தனித்தன்மையாக இருக்கிறது.

இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது என்றால், அடிப்படையில் மாஸ்டோடான் திறவுமூல தன்மை கொண்டிருப்பது என்பதால்தான். தொழில்நுட்ப நோக்கில் மையமில்லாத உள்கட்டமைப்பு வசதியைக் கொண்டிருக்கும் மாஸ்டோடான், செயல்பாட்டு நோக்கில் திறவு மூலத் தன்மை கொண்டிருக்கிறது. ஆகவே மாஸ்டோடானில் எல்லாமே வெளிப்படையானது.

இவை எல்லாவற்றையும்விட மாஸ்டோடான், லாப நோக்கிலானது இல்லை. எனவே முதலீட்டாளர்கள் நெருக்கடியோ, விளம்பரக் கவலைகளோ அதற்குக் கிடையாது. முழுக்க முழுக்க பயனாளிகளுக்கான சேவை அது.

யார் சிந்தனை செய்த சேவை?

யூஜென் ரோக்கோ (Eugen Rochko) எனும் மென்பொருளாளர், தனது 24-வது வயதில் 2016-ம் ஆண்டில் மாஸ்டோடான் சேவையை உருவாக்கினார். எந்த ஒரு வர்த்தக நிறுவனத்தாலும் கட்டுப்படுத்தப்படாமல் பயனாளிகள் கைகளில் இருக்கும் சேவை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப, யாருடைய முதலீட்டையும் கோராமல், இணையவாசிகளிடம் இருந்தே நிதி திரட்டி இந்த சேவையை உருவாக்கினார் (பேடர்ன் எனும் புதுமையான சமூக நிதி தளத்தை இதற்காகப் பயன்படுத்திக்கொண்டார்).

யூஜென் ரோக்கோ
யூஜென் ரோக்கோ

மாஸ்டோடான், மையம் இல்லாத சர்வர்களைக் கொண்டது என்பதால், பயனாளிகள் விரும்பினால் இதில் தங்களுக்கான சர்வரையும் உருவாக்கிக்கொள்ளலாம். மாஸ்டோடான் சேவைக்கு எனப் பொதுவான விதிகள் எதுவும் கிடையாது. சர்வர்களை நிர்வகிக்கும் பயனாளிகளே தங்களுக்கான பொது விதிகளை உருவாக்கிக்கொள்ளலாம்.

இப்படி எல்லாம் ஒரு சமூக வலைப்பின்னல் சேவை இருக்குமா எனும் வியப்பை ஏற்படுத்தும் மாஸ்டோடான், பெடிவர்ஸ் (fediverse) எனப்படும் இணைக்கப்பட்ட சர்வர்களின் கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகிறது.

வர்த்தகத் தன்மையும், லாப நோக்கமும், சமூக ஊடகங்களின் ஆதாரத் தன்மையைப் பாதிப்பதை விருப்பாதவர்கள், பெடிவர்ஸ் கருத்தாக்கம் சார்ந்த திறவுமூல சமூக வலைப்பின்னல் சேவைகளை மனதார ஆதரிக்கின்றனர். மாஸ்டோடான் இதற்கு அருமையான உதாரணம்.

பயன்படுத்துவது எப்படி?

மாஸ்டோடான் ட்விட்டர் போன்ற குறும்பதிவு சேவை என்றாலும், இரண்டுக்கும் இடையே பொதுவான அம்சங்களும், முக்கிய வேறுபாடுகளும் இருக்கின்றன. ட்விட்டர் போலவே இதிலும் குறும்பதிவுகளை வெளியிடலாம் என்றாலும், மாஸ்டோடானில் 500 எழுத்துகள் வரை கொண்ட பதிவுகளை பகிரலாம். மாஸ்டோடானில் பதிவுகள் ’டூன்ஸ்’ எனப்படுகின்றன. மறுபதிவுகள் ’பூஸ்ட்’ எனப்படுகின்றன. இதில் பாலோயர்கள் உண்டு.

ஆனால், ட்விட்டர் போல மாஸ்டோடானில் ஒரே மைய டைம்லைன் கிடையாது. மேலும் புதிய உறுப்பினர்கள் இணையும்போது, மைய தளத்தில் இணையாமல் அவர்களுக்கான சர்வர்களில் இணைய வேண்டும். மாஸ்டோடான் மொழியில் சர்வர்கள் இன்ஸ்டன்சஸ் எனப்படுகின்றன.

பல வகையான கருப்பொருளில் சர்வர்கள் அமைந்துள்ளன. அவற்றில் விரும்பிய சர்வரில் இணையலாம். அதன் பிறகு குறும்பதிவுகளை வெளியிடலாம், உரையாடலில் பங்கேற்கலாம். ஒவ்வொரு சர்வரும் அதன் பயனாளிகள் சமூகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பவை.

இப்படி எண்ணற்ற சர்வர்களின் தொகுப்பாக இருந்தாலும், மாஸ்டோடான் உறுப்பினர்கள் ஒரு சர்வரில் இருந்து வேறு எந்த சர்வரில் உள்ள உறுப்பினர்களோடும் தொடர்புகொள்ளலாம். இமெயில் எனும் பொது உள் கட்டமைப்பு மூலம் வெவ்வேறு மெயில் சேவைகளுக்கு இடையே பரிமாற்றம் செய்வது போல இது அமைகிறது.

மாஸ்டோடான் பதிவுகளிலும் பயனாளிகளுக்குக் கட்டுப்பாடு அம்சம் அதிகம். ஒரு பதிவை, குறிப்பிட்ட நபர்கள் மட்டும் படிக்கும் வகையில் அல்லது பாலோயர்கள் பார்வைக்கு மட்டும் பகிரலாம் அல்லது பொது வெளியிலும் பகிரலாம். மைய டைம்லைனையும் பார்வையிடலாம்.

எழுத்து வடிவம் தவிர, புகைப்படம், வீடியோவையும் பகிரலாம்.

மாஸ்டோடானுக்கு என மையமான தளம் இல்லை என்றாலும், மாஸ்டோடான் சோஷியல் (https://mastodon.social/explore) , மாஸ்டோடன் ஆன்லைன் (https://mastodon.online/explore), ஜாயின்மாஸ்டோடான் (https://joinmastodon.org/) போன்ற தளங்கள் உதவியாக இருக்கும்.

முற்றிலும் புதுமையான இந்தச் சேவை முதல் பார்வைக்கு குழப்பத்தை அளிக்கலாம். ஆனால் அதன் ஆதார அம்சத்தைப் புரிந்துகொண்டால், அதைப் பயன்படுத்துவது எளிதாக அமையும்.

மாஸ்டோடான் பற்றிய முக்கியக் குறிப்பு: இந்திய பயனாளிகளுக்கு இந்தச் சேவை ஏற்கெனவே அறிமுகமானதுதான். சில ஆண்டுகளுக்கு முன் இந்திய ட்விட்டர் பரப்பில் சாதிய பாகுபாடு தொடர்பான சர்ச்சை வெடித்து, ‘ட்விட்டரில் இருந்து வெளியேறுங்கள்’ ஹாஷ்டேக் பிரபலமானபோது, மாஸ்டோடான் தான் மாற்று சேவையாக முன்வைக்கப்பட்டது!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in