சமூக ஊடக வானவில்-64: பயணப் புத்தகங்களுக்கான வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில்-64: பயணப் புத்தகங்களுக்கான வலைப்பின்னல்

உங்களுக்குப் பயணம் செய்வதும் பிடித்திருந்து, புத்தகங்களை வாசிப்பதும் விருப்பமானதாக இருந்தால், ’டிரிப்பிக்‌ஷன்’ (https://www.tripfiction.com/) இணையதளத்தை நிச்சயம் விரும்புவீர்கள். அதோடு, பகிர்ந்துகொள்வதும் உங்களுக்குப் பிடித்தமானதாக இருந்தால் இந்தத் தளத்தை இன்னும் கூடுதலாக விரும்புவீர்கள். ஏனெனில் பயணங்களையும், புத்தகங்களையும் இணைக்கும் வகையில் இந்தத் தளம் அமைந்துள்ளது.

சிறப்பம்சங்கள்

பயணங்களின்போது வாசிக்க பொருத்தமான புத்தகங்களை இந்தத் தளம் பரிந்துரைக்கிறது. குறிப்பாக, நீங்கள் பயணம் செய்ய திட்டமிட்டுள்ள இடத்தில் உங்களை மூழ்கச் செய்யக்கூடிய புத்தகங்களைப் பரிந்துரைப்பதுதான் இந்தத் தளத்தின் நோக்கமாக இருக்கிறது.

பயணங்களை மேற்கொள்ளும்போது எல்லோருமே தாங்கள் செல்லும் நகரம் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விரும்புவார்கள். அதிலும் குறிப்பாக வெளியூர் அல்லது வெளிநாடுகளுக்குச் செல்லும்போது, அங்குள்ள நகரங்களில் தங்குமிட வசதி, சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள் உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

இப்படி புதிய நகரங்கள் பற்றிய முக்கியத் தகவல்களை தெரிந்துகொள்ள வழிசெய்யும் இணையதளங்களும், வலைப்பதிவுகளும் பல இருக்கின்றன. இவ்வளவு ஏன் பயணங்களை இணைந்து திட்டமிட உதவும் சமூக நோக்கிலான இணையதளங்களும்கூட இருக்கின்றன. இந்த இடத்தில்தான் முற்றிலும் புதுமையான இணையதளமாக ’டிரிப்ஃபிக்‌ஷன்’ வருகிறது. பயணம் செய்ய இருக்கும் நகரங்கள் சார்ந்து எழுதப்பட்ட புனைகதைகள் வாயிலாக அந்த நகரங்களை அறிந்துகொள்ள இந்தத் தளம் வழி செய்கிறது. அதாவது, பயணிகள் செல்ல இருக்கும் நகரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களை அடையாளம் காட்டுகிறது.

புனைவுப் பாதையில் பயணம்

புனைவுகள் வாயிலாக பயணங்களை மேம்படுத்திக்கொள்வதை உணர்த்தும் வகையில்தான் இந்தத் தளத்தின் பெயரும் அமைந்திருக்கிறது.

தஸ்தயேவ்ஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள்’ அல்லது ஜேம்ஸ் ஜாய்சின் ‘யுலிசிஸ்’ போன்ற நாவல்களை வாசித்தவர்கள், இந்த நாவல்களில் வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்கும், டப்ளின் நகரமும் ஒரு பாத்திரம் போலவே வருவதை உணர்ந்திருக்கலாம். அதே போல ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகளில் அவரது இல்ல முகவரியான பேக்கர்ஸ் தெரு வாசகர்களுக்கு நன்கறிந்த ஒன்றாகும். நம்மூரில் எடுத்துக்கொண்டால், தி,ஜானகிராமனின் ‘மோகமுள்’ வாசித்தவர்களுக்கு கும்பகோணம் நகரில் வலம் வந்தது போலவே இருக்கும்.

இப்படி உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இவை எல்லாம் இலக்கிய உலகில் சிகரம் தொட்ட படைப்புகள். பரவலாக நன்கறியப்பட்ட, அதிகம் வாசிக்கப்பட்ட ஆக்கங்கள். இதே போலவே, இன்னும் எண்ணற்ற உலக நகரங்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்தும் நாவல்கள் அநேகம் இருக்கின்றன அல்லவா? இந்த நாவல்கள் மூலம், அதன் மையமாக வரும் நகரம் பற்றி ரத்தமும் சதையுமாக அறிந்துகொள்ளலாம் அல்லவா? இதைத்தான் டிரிப்ஃபிக்‌ஷன் தளம் செய்கிறது.

புனைவிலக்கியம் மட்டும் அல்லாமல், நினைவலைகள், பயணக் கட்டுரைகள் போன்ற புத்தகங்களையும் அடையாளம் காட்டுகிறது.

ஒவ்வொரு நகரையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவல்களை இந்தத் தளம் அடையாளம் காட்டுகிறது. இதன் மூலம் ஒருவர் தான் பயணிக்கும் நகரை மையமாகக் கொண்ட நாவல்களைக் கண்டறியலாம். அந்த நாவலை வாசிப்பதன் வாயிலாக அந்த நகரை மனக்கண் முன் கொண்டுவரலாம். பயணக் கையேடுகளைவிட, இது முற்றிலும் புதிய அனுபவத்தையும், புரிதலையும் அளிக்கலாம். பயணம் செய்ய இருக்கும் நகரை அறிந்துகொள்ள வழி செய்வதோடு, சிறந்த வாசிப்பு அனுபவத்தையும் பெறலாம்.

வாசிப்பு சார்ந்த வலைப்பின்னல்

பயணம் செய்ய இருக்கும் நகரின் பெயரைக் குறிப்பிட்டு தொடர்புடைய புத்தகத்தை இந்தத் தளத்தில் எளிதாகத் தேடலாம். புத்தகம் அல்லது நாவலாசிரியர் பெயர் கொண்டும் தேடலாம். புத்தகம் தொடர்பான தகவல்களோடு அதன் கதைச்சுருக்கம் உள்ளிட்டவற்றையும் தெரிந்துகொள்ளலாம்.

ஆக அடுத்த பயணம் மேற்கொள்வதற்கு முன் இந்தத் தளத்தை அணுகுவது பொருத்தமாக இருக்கும்.

பயணப் புனைவுகளை அறிந்துகொள்ள வழிசெய்யும் இந்த அம்சத்துடன், பயணிகள் தாங்கள் அறிந்த புத்தகங்களையும் பரிந்துரைக்கும் வசதி உள்ளிட்ட பகிர்வு அம்சங்களே இந்தத் தளத்தைப் புத்தகம் சார்ந்த சமூக வலைப்பின்னல் தளமாகக் கொள்ள வைக்கிறது.

ஆம், இந்த தளத்தில் உறுப்பினராக இணைந்தால், இதன் பட்டியலில் இருப்பிடம் சார்ந்த புத்தகங்களைப் பரிந்துரைக்கலாம் என்பதோடு, இதில் உள்ள புத்தகங்களுக்கான விமர்சனங்களையும் எழுதி சமர்ப்பிக்கலாம். இப்படி சக உறுப்பினர்களின் விமர்சனங்களை வாசிப்பது சமூக அனுபவமாக அமையும்.

இத்தாலியில் எழுதப்பட்ட நாவல் அல்லது போஸ்னியாவில் எழுதப்பட்ட நாவல் எனும் பரிந்துரையும் இந்தத் தளம் அடையாளம் காட்டும் புத்தகங்கள் முற்றிலும் புதிய அனுபவமாக இருப்பதையும் உணரலாம்.

டினா ஹார்டஸ் (Tina Hartas) என்பவர் ஆஸ்திரியாவின் வியன்னா நகருக்குச் சென்றபோது, அந்நகரம் தொடர்பான நாவலைத் தேடிப்பார்த்தபோது, தான் ஏற்கெனவே வாசித்த நாவல் தவிர வேறு புத்தகங்களைக் கண்டறிய முடியாமல் தவித்தார். அப்போதுதான் இப்படி ஒரு தளத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு வந்தது.

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களை மையமாக கொண்ட நாவல்களைக் கொண்ட இந்தத் தளத்தின் ஹைலைட்டான அம்சம், இருப்பிடம் சார்ந்த நாவல்களை உலக வரைபடத்தின் மீது எளிதாக அடையாளம் காட்டும் வசதியையும் கொண்டிருப்பது தான்!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in