சமூக ஊடக வானவில்-63: பட்டியல் போடத் தயாரா?

சமூக ஊடக வானவில்-63: பட்டியல் போடத் தயாரா?

பட்டியல் என்றதும் உங்களுக்கு ’டாப் டென்’ எனப்படும் முன்னணி பத்து விஷயங்களின் பட்டியல் நினைவுக்கு வரலாம். எனினும், ’செக் லிஸ்ட்’ எனப்படும் இன்னொரு வகைப் பட்டியலும் பிரபலமாக இருக்கிறது. செக் லிஸ்ட் என்பதை சரிபார்ப்புப் பட்டியல் எனப் புரிந்துகொள்ளலாம்.

வெளியூர் பயணம் செல்லும்போது எடுத்து வைக்க வேண்டிய[ பொருட்கள் அல்லது, அலுவகத்தில் மாதாந்திர சோதனையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் போன்றவை செக் லிஸ்ட் வகையில் சேர்கின்றன. இன்னும் பெரிதாகவே உதாரணங்களைப் பட்டியலிடலாம் என்றாலும், பொதுவாக சரிபார்க்க வேண்டிய விஷயங்கள் என்று கொள்ளலாம்.

செக் லிஸ்ட் போலவே, ’டு டூ லிஸ்ட்’ (To-Do lists ) எனும் இன்னொரு வகைப் பட்டியலில் பிரபலமாக இருக்கிறது. இதை ‘செய் பட்டியல்’ எனக் கொள்ளலாம். இன்று காய்கறி வாங்க வேண்டும் என்பதில் தொடங்கி, தேர்வுக்குப் படிக்க வேண்டிய பாடங்கள் வரை, நாம் செய்ய விரும்பும் விஷயங்களை செய் பட்டியலாக குறித்து வைக்கலாம். இந்த வகையில் ’பக்கெட் லிஸ்ட்’ அல்லது ’விஷ் லிஸ்ட்’ போன்ற பட்டியல்களும் இருக்கின்றன.

சரிபார்க்கும் பட்டியலும், செய் பட்டியலும் ஒன்றாக தோன்றினாலும், இரண்டுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. செய் பட்டியல் என்பது, செய்ய வேண்டும் என நினைக்கும் செயல்களின் பட்டியல். சரிபார்ப்புப் பட்டியல் என்பது ஏற்கெனவே உள்ள செயல்முறைக்கு ஏற்ப சரிபார்க்க வேண்டிய செயல்களின் பட்டியல், சரிபார்க்கும் பட்டியல் செய் பட்டியலாக விளங்குவதும் உண்டு.

இந்த வேறுபாடு ஒருபக்கம் இருந்தாலும், இரண்டு விதமான பட்டியல்களை உருவாக்க உதவும், இணையதளங்களும், செயலிகளும் இருக்கின்றன என்பதுதான் விஷயம். இவற்றில், சரிபார்ப்புப் பட்டியலை உருவாக்க உதவும், ’செக்லி’ (https://www.checkli.com ) இணையதளம் பற்றி இப்போது பார்க்கலாம்.

சரிபார்ப்புப் பட்டியல்களை உருவாக்குவதற்கான இணையதளங்கள் பல இருந்தாலும், இவற்றில் சமூக வலைப்பின்னல் அம்சம் கொண்டதாக் செக்லி அமைந்திருக்கிறது.

செக்லி தளத்தில், சரிபார்ப்புப் பட்டியல்களை எளிதாக உருவாக்கிக்கொள்ளலாம் என்பதோடு, மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம் என்பதும்தான் விஷயம். அது மட்டும் அல்ல, ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு பட்டியல்களையும் பார்வையிட்டு தேவை எனில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

அலுவலக செயல்பாடு தொடங்கி, நிறுவனத் தணிக்கை வரை பல வகையான சரிபார்ப்புப் பட்டியல்களை இந்தத் தளத்தில் பார்வையிடலாம். பல்வேறு துறைகள் மற்றும் பிரிவுகளின் கீழ் இந்த பட்டியல்களை அணுகலாம். இவற்றில் பொருத்தமானதை நகலெடுத்து பயன்படுத்தலாம். பட்டியல்களைக் குழுவுடன் பகிர்ந்துகொண்டு, முன்னேற்றத்தையும் கண்காணிக்கலாம்.

சரிபார்க்கும் பட்டியல்களுக்கான வடிவமைப்புகளும் பட்டியலிடப்பட்டுள்ளன. தேவையான பட்டியலைத் தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது. ஒவ்வொரு பட்டியலும் எத்தனை முறை பார்வையிடப்பட்டுள்ளன மற்றும் நகலெடுக்கப்பட்டுள்ளன என்ற விவரத்தையும் அறியலாம். பட்டியல்களைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் அல்லது பிடிஎஃப் வடிவில் பெறலாம். பட்டியல்களைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பாகப் பயன்படுத்தலாம். உறுப்பினராக இணைந்தால் கூடுதல் அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம். சரிபார்ப்புப் பட்டியல்களை வெளியிடும் வசதியும் இருக்கிறது. புதிய மற்றும் பிரபலமான பட்டியல்களையும் எளிதாக அடையாளம் காணலாம்.

முழுவீச்சிலான சமூக வலைப்பின்னல் அம்சங்களைக் கொண்டிருக்காவிட்டாலும், சரிபார்க்கும் பட்டியல்களை சமூகமயமாக்குவதற்கு தேவையான அடிப்படை அம்சங்களைக் கொண்டுள்ள தளம்.

தொழில்நுட்பப் பிரிவில் பார்த்தால், இமெயில் இணைப்புகளில் இருந்து தரவுகளை எக்செல் கோப்பிற்குத் தரவிறக்கம் செய்வது எப்படி அல்லது எஸ்.இ.ஓ அமலாக்கத்தில் செய்ய வேண்டியவை போன்ற பட்டியல்களைக் காணலாம். சுற்றுலா, கல்வி, பயணம் என பல்வேறு வகைகளில் பட்டியல்கள் இடம்பெற்றுள்ளன. சரிபார்க்கும் பட்டியல்களின் நூலகமும் இருக்கிறது.

சரிபார்க்கும் பட்டியல்களை உருவாக்குபவர்களை பின்தொடரும் (Following) வசதியும் இருக்கிறது. உறுப்பினர்கள் உருவாக்கிய பட்டியல்கள், அவர்களின் பாலோயர்கள், பட்டியல்கள் தரவிறக்கம் தொடர்பான எண்ணிக்கை போன்ற விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம். அந்த வகையில் முற்றிலும் மாறுபட்ட சமூக வலைப்பின்னல் தளம் என்பதையும் உணர்ந்துகொள்ளலாம்.

இத்தகைய சமூக வலைப்பின்னல் அம்சங்கள் இல்லாத எளிய சரிபார்ப்புப் பட்டியல் தளம் தேவை என்றால், லிஸ்ட்மோஸ் (https://listmoz.com) தளத்தை அணுகலாம். இந்தத் தளத்தின் மூலம் சரிபார்ப்புப் பட்டியலை எளிதாக உருவாக்கிக்கொள்ளலாம் என்பதோடு, அந்தப் பட்டியலின் இணைய முகவரியை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். இந்தப் பக்கத்தை புக்மார்க் செய்யும் வசதியும் அளிக்கப்படுகிறது. நாம் உருவாக்கும் பட்டியலைத் திருத்திக்கொள்ளலாம் அல்லது மேம்படுத்திக்கொள்ளலாம். பட்டியலில் உள்ள விஷயங்களை மாற்றி அமைக்கலாம்.

இணையத்தைச் செயல்திறன் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு கைகொடுக்கும் தளங்களாக இவை அமைகின்றன.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in