சமூக ஊடக வானவில்-62: சமூக அம்சம்... சாகசப் பயணம்!

சமூக ஊடக வானவில்-62: சமூக அம்சம்... சாகசப் பயணம்!

சமூக வலைப்பின்னல் தளங்களின் நோக்கம் இணையம் வாயிலாக நட்பை ஏற்படுத்திக்கொள்ளவும், கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடவும் வழிசெய்வதுதான் என்றாலும், இவற்றின் தாக்கம் காரணமாக பயனாளிகள் பலரும் மெய்நிகர் பரிவர்த்தனைகளில் மூழ்கி நிஜ உலகத் தொடர்புகளைக் குறைத்துக்கொள்வதாக ஒரு விமர்சனம் இருக்கிறது. நெருக்கமானவர்கள் நேரில் சந்தித்துக்கொள்ளும்போது கூட, பரஸ்பரம் உரையாடலில் ஈடுபடுவதைவிட, தத்தமது செல்போன்களில் நிலைத்தகவல்களை பார்ப்பதில் மூழ்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.

சாகசப் பயணங்களுக்கான தளம்

சமூக ஊடகங்களின் இன்னல்களை இன்னும் பலவிதங்களில் பட்டியலிடலாம் என்றாலும், இதற்குத் தீர்வாக அமையக்கூடிய சமூக வலைப்பின்னல் சேவை ஒன்றைப் பார்ப்பது பொருத்தமாக இருக்கும். ஆல்டிரையல்ஸ் (https://www.alltrails.com/) எனும் இந்தத் தளத்தை வழக்கமான சமூக வலைப்பின்னல் தளம் என்று சொல்ல முடியாது. பயணங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் தளத்தை வழக்கமான பயணத் தளம் என்றும் கருதிவிட முடியாது. சமூக அம்சம் கொண்ட சாகசப் பயணங்களுக்கான வலைப்பின்னல் தளம் என்றே இந்தத் தளத்தை வர்ணிக்க வேண்டும்.

ஆல்டிரையல்ஸ் தளம் பற்றி மேற்கொண்டு பார்ப்பதற்கு முன், ஏற்கெனவே பார்த்த ‘மீட்டப்’ (https://www.meetup.com/) தளத்தை ஒருமுறை மீள்பார்வை பார்ப்பது நல்லது. இணையம் வாயிலாக நிஜ உலகச் சந்திப்புகளைத் திட்டமிட உதவும் புதுமையான வலைப்பின்னல் சேவையாக மீட்டப் இருப்பது போலவே, ஆல்டிரையல்ஸ் தளம், பயனாளிகளை வெளிப்புற நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

அடிப்படையில் ஆல்டிரையல்ஸ், ஹைக்கிங் என சொல்லப்படும் சாகச நடைப்பயணங்களுக்கான தளம். நடைப்பயணங்கள் மட்டும் அல்லாது, சைக்கிள் பயணங்கள், மலையேறுதல் உள்ளிட்ட வெளிப்புறச் செயல்பாடுகளுக்கான இடங்களையும் தகவல்களையும் இதன் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சமூகத் தொடர்புக்கான மையம்

ஆனால், நடைப்பயணங்களுக்கான இடங்களை அடையாளம் காட்டுவதோடு இந்தத் தளம் நின்றுவிடுவதில்லை. இந்த நடவடிக்கைகளை சமூகமயமாக்குகிறது. அதாவது நடைப்பயணம் போன்றவற்றில் ஆர்வம் கொண்டுள்ள சக உறுப்பினர்களுடன் நம்மை அறிமுகம் செய்துகொள்ளலாம். அவர்களைப் பின்தொடரலாம் மற்றும் நம்முடைய நடைப்பயண விவரங்களையும் இதன் வாயிலாக மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம்.

வழக்கமான விடுமுறைப் பயணங்களுக்கான மாற்றாக, இயற்கையை தரிசித்தபடி, நடைப்பயணங்கள் அல்லது சைக்கிள் பயணங்களை மேற்கொள்வதற்கான வழிகளை இந்தத் தளத்தின் வாயிலாகக் கண்டுகொள்ளலாம். அதிலும் மிக வசதியாக வரைபடங்களின் துணையுடன் இந்தத் தகவல்கள் அமைகின்றன.

சிறப்பம்சங்கள்

இந்த தளத்தில் நுழைந்ததுமே, உறுப்பினர்களின் இருப்பத்திற்கு ஏற்ப அருகாமையில் உள்ள நடைப்பயண இடங்கள் அடையாளம் காட்டப்படுகின்றன. இடத்திற்கான வரைபடத்துடன், பயணத்திற்கான நேரம், அதற்கான தொலைவு போன்ற தகவல்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. ஏற்கெனவே இந்தப் பயணங்களை மேற்கொண்ட உறுப்பினர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களையும் பார்க்கலாம். அவர்களது கருத்துக்களையும் வாசிக்கலாம்.

இருப்பிடங்களில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், பயணம் எந்த அளவுக்குக் கடினமானது என்பது போன்ற தகவல்களையும் அறியலாம். இந்தப் பயணங்களில் தொழில்முறையாக வழிகாட்டுபவர்களையும் அணுகலாம். நமக்கு எந்த வகை இருப்பிடம் தேவை என குறிப்பிட்டு தேடிப்பார்க்கும் வசதியும் இருக்கிறது.

நடைப்பயணங்களுக்கான வரைபடத்தையும் அச்சிட்டுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது. உறுப்பினர்கள் பகிர்ந்துகொண்ட கருத்துகள் அடிப்படையில், பயணங்கள் எத்தகைய அனுபவத்தை அளிக்கக்கூடும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். அருகில் உள்ள பயண இடங்களையும் எளிதாகக் கண்டுகொள்ளலாம். அவற்றுக்கான தகவல்களுடன் புகைப்படங்களையும் காணலாம்.

தகவல்களைத் தெரிந்துகொள்வதோடு, சாகசப் பயணங்களைப் பதிவுசெய்யவும் இந்தத் தளம் வழி செய்வதால், தொடர்ந்து இத்தகைய பயணங்களை மேற்கொள்வதற்கான ஊக்கத்தைப் பெறலாம். மேலும் மற்றவர்களின் பயணங்களைப் பின்தொடரவும் செய்யலாம். நம்முடைய கருத்துகளைப் பகிர்வதோடு, ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களில் உள்ல நட்புகளையும் இந்தத் தளத்தின் வாயிலாக அழைக்கலாம் அல்லது தொடர்புகொள்ளலாம்.

உறுப்பினர்கள் தங்களுக்கு விருப்பமான நடைப்பயணங்களைப் பதிவு செய்துகொள்வதோடு, மேற்கொள்ள விரும்பும் பயணங்களையும் குறித்துவைக்கலாம். நடைப்பயணங்களுக்கான வரைபடத்தையும் இந்தத் தளம் வாயிலாக உருவாக்கிக்கொள்ளலாம். முகாமிடுதல், மீன் பிடித்தல், பறவைகள் பார்த்தல், மலையேறுதல், நடைப்பயணம், குதிரையேற்றம் என பலவகையான செயல்களுக்கு ஏற்ற இடங்களையும் இந்தத் தளத்தில் அடையாளம் காணலாம்.

இந்தியா உள்ளிட்ட உலகின் நூற்றுக்கும் மேலான நாடுகளில் உள்ள சாகசப் பயணங்களுக்கான இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை இந்தத் தளம் பட்டியலிடுகிறது. நாடுகள், நகரங்கள் எனத் தனித்தனியே அணுகலாம். அருகில் உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளைப் பார்ப்பதோடு, உலகின் பல்வேறு நகரங்களில் உள்ள பயண இடங்களையும் இந்தத் தளம் வாயிலாகப் பார்த்து மகிழலாம்.

இந்தத் தளத்தை இலவசமாகப் பார்வையிடலாம் என்றாலும் மேம்பட்ட வசதிகளை அளிக்கும் கட்டணச் சேவையும் இருக்கிறது. நகர நெருக்கடியில் இருந்து விடுபட என்றாலும் சரி அல்லது இயற்கையை தரிசிக்க விரும்பி வெளிப்புற நடவடிக்கைகளில் ஈட்டுபட விரும்பினாலும் சரி, இந்த சாகச நடைப்பயண வலைப்பின்னல் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். நேரம் இருக்கும்போது முயற்சித்துப் பாருங்கள்!

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in