சமூக ஊடக வானவில்-61: தூண்டில் போடலாம் வாருங்கள்!

சமூக ஊடக வானவில்-61: தூண்டில் போடலாம் வாருங்கள்!

சென்னையைச் சுற்றி எங்கெல்லாம் மீன் பிடிக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா? அடையாறு, செம்பரம்பாக்கம், மாதவரம் அருகே உள்ள ஓட்டேரி, மால்லபுரம் அருகே உள்ள இடம் ஆகிய பகுதிகளில் மீன் பிடிக்கலாம் என்கிறது ’ஃபிஷ்பிரெய்ன்’ (https://fishbrain.com/) இணையதளம். வெறும் தகவல்கள் மட்டும் அல்ல... வரைபடத்தின் மூலம் இந்த விவரங்கள் எளிமையாக உணர்த்தப்படுகின்றன. மீன் பிடிக்கும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன!

எல்லாம் மீன்மயம்!

சென்னையைச் சுற்றி மற்றும் தமிழகத்தில் மீன் பிடிப்பதற்கான இடங்கள் இன்னும் பல இருக்கலாம். ஆனால், ஃபிஷ்பிரெய்ன் இவற்றை அடையாளம் காட்டும் விதம் அருமையானது. ஏனெனில், இந்தத் தளத்தில் இடம்பெறும் மீன்பிடிப் பகுதிகள் எல்லாம், அங்கு மீன் பிடித்தவர்கள் பகிர்ந்துகொண்டவை.

செம்பரம்பாக்கம் ஏரியிலும், அடையாற்றிலும் என்ன வகையான மீன்களைப் பிடிக்கலாம் என்றும், அண்மையில் இங்கு பிடிப்பட்ட மீன்கள் என்ன ரகத்தைச் சேர்ந்தவை என்பதையும்கூட இந்தத் தளத்தில் பார்க்கலாம். அருகில் உள்ள பகுதியில் கிடைக்கக்கூடிய மீன்களையும் தெரிந்துகொள்ளலாம்.

இப்படி ஒரு இணையதளமா என வியக்க வேண்டாம். ஃபிஷ்பிரெய்ன் மீன் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளமாக விளங்குவதால் இதில் எல்லாமே மீன்மயம் தான்.

சிறப்பம்சங்கள்

மீன் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் இந்தத் தளத்தில் உறுப்பினராக இணைந்து, தங்கள் மீன்பிடிச் செயல்பாடுகளை சக மீனவர்களுடன்(!) பகிர்ந்துகொள்ளலாம். பிடிபட்ட மீன்களைப் புகைப்படத்துடன் பகிர்ந்து மற்றவர்களிடம் ஆர்வத்தைத் தூண்டலாம். அதோடு, மீன்பிடிக் குறிப்புகளையும் பதிவுசெய்யலாம். இந்த விவரங்களை அடிப்படையாகக் கொண்டுதான் உறுப்பினர்கள் உள்ளே நுழைந்ததுமே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிடிபட்ட மீன் ரகங்களை இந்தத் தளம் சுட்டிக்காட்டுகிறது.

மற்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் உறுப்பினர்களைப் பின்தொடர்வது போல இந்தத் தளத்தில் மீன்பிடி இடங்களைப் பின்தொடரலாம். ஒவ்வொரு மீன்பிடி இடம் தொடர்பான அடிப்படை மற்றும் கூடுதல் தகவல்களையும் இந்தத் தளத்தில் தெரிந்துகொள்ளலாம். இருப்பிடம் பற்றிய சுருக்கமான அறிமுகத்துடன், அங்குள்ள வானிலை, கிடைக்கும் மீன் வகைகள், மீன் பிடிப்பதற்கு உகந்த நேரம் உள்ளிட்ட தகவல்களை அறியலாம். மேலும், அந்தந்தப் பகுதிகளில் மீன் பிடிப்பது தொடர்பான உள்ளூர் விதிமுறைகளையும் தெரிந்துகொள்ளலாம். மீன்களைப் பிடிக்க பயன்படுத்தப்பட்ட முறை, உத்திகள், கருவிகள் போன்ற விவரங்களையும் காணலாம். தண்ணீரின் ஆழம், மின்பிடிக் கணிப்பு உள்ளிட்ட தகவல்களையும் அறியலாம்.

இதே போல உலகம் முழுவதும் உள்ள மீன்பிடி இடங்கள் தொடர்பான தகவல்களை இந்தத் தளம் அளிக்கிறது. அதோடு, மீன் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்களை நண்பர்களாக்கிக்கொள்ளவும். மீன்பிடித் தகவல்கள் மற்றும் நுட்பங்களைப் பரிமாறிக்கொள்ளவும் வழி செய்கிறது. மற்றவர்களிடம் இருந்து மீன் பிடிக்கும் உத்திகளையும் கற்றுக்கொள்ளலாம். பிடிபட்ட மீன் என்ன வகையைச் சேர்ந்தது என்பதையும் இந்தத் தளத்தின் மூலம் அறியலாம்.

ஒரு கோடி மீன்பிடி ஆர்வலர்கள்

இந்தத் தளம் கட்டணச் சேவையும் கொண்டிருக்கிறது. கட்டணச் சேவை எனில் மீன் பிடிப்பதற்குத் தேவையான தொழில்முறை தகவல்கள் மற்றும் பிரத்யேக அறிக்கைகளைப் பெறலாம். மீன் பிடிப்பதற்குத் தேவையான கருவிகள், உபகரணங்களையும் இந்தத் தளம் மூலம் வாங்கலாம். மீன்பிடி கருவிகளுக்கான விமர்சனக் குறிப்புகளையும் அறிந்துகொள்ளலாம்.

உலகம் முழுவதிலும் இருந்து ஒரு கோடிக்கும் அதிகமான மீன்பிடி ஆர்வலர்கள் இந்தத் தளத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னையில் இருந்தும் பலர் உறுப்பினர்களாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. இணையதளம் மற்றும் செயலி வடிவிலும் இந்தச் சேவையை அணுகலாம்.

இணைய நிறுவனங்களைத் தொடங்குவதில் ஆர்வமும், ஈடுபாடும் கொண்ட ஜோஹன் ஆட்பை (Johan Attby) 2011-ல் இந்த வலைப்பின்னல் தளத்தைத் தொடங்கினார். அமெரிக்காவில் இருந்து ஸ்வீடனுக்குக் குடிபெயர்ந்த நிலையில் அந்நாட்டில் இருந்து இந்தத் தளத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இந்தத் தளம், மீன்பிடி ஆர்வலர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வளர்ந்துள்ளது.

ஃபேஸ்புக் போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் நடைபெறும் உரையாடல்கள் மிகவும் மேலோட்டமாக இருப்பதாக உணர்ந்ததால், ஈடுபாடு சார்ந்த சமூகத் தொடர்பை உண்டாக்க வழி செய்யும் சமூக வலைப்பின்னல் தளத்தை உருவாக்க விரும்பி, மீன் பிடித்தலைத் தேர்வு செய்ததாக ஜோஹன் கூறியிருக்கிறார்.

ஜோஹன் ஆட்பை
ஜோஹன் ஆட்பை

ஸ்வீடனைப் பூர்விகமாகக் கொண்ட ஜோஹன் சிறு வயதில் இருந்தே மீன்பிடித்தலில் ஈடுபட்டு வந்ததும், இந்தத் தளத்திற்கு ஊக்கமாக அமைந்துள்ளது. ஆர்வலர்கள் முதல் தொழில்முறை நபர்கள் அனைத்துத் தரப்பினருக்குமான வலைப்பின்னலாக ஃபிஷ்பிரெய்ன் விளங்குவதாக அவர் கூறுகிறார். இந்தத் தளத்தில் உள்ள வரைபட வழிகாட்டுதல் மூலம் மீன்பிடி வளங்கள் உள்ளிட்டவற்றை எளிதாகத் தெரிந்துகொள்ளலாம் என்கிறார்.

இதே போல ஃபிஷிடி (https://www.fishidy.com/) தளமும் மீன்பிடி ஆர்வலர்களுக்கான மற்றொரு சமூக வலைப்பின்னல் தளமாக விளங்குகிறது. ஃபிஷ்பைண்டர் (https://www.fishfriender.com/) தளமும் இதே ரகத்தைச் சேர்ந்ததுதான். ரிப்டன் (https://www.rippton.com/) செயலியும் இதே போன்ற சேவையை வழங்குகிறது. ஆங்லிங்மாஸ்டர்ஸ் (Angling Masters) இந்தப் பிரிவில் தொடங்கப்பட்ட முதல் தளங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. ஃபிஷ் ஆங்லர் (https://www.fishangler.com/) செயலியையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம்.

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in