சமூக ஊடக வானவில்-60: பொறியியல் பழகலாம் வாருங்கள்!

சமூக ஊடக வானவில்-60: பொறியியல் பழகலாம் வாருங்கள்!

மருத்துவத் துறையினருக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் தளங்கள் இருப்பது போலவே, பொறியியல் துறையினருக்கான பிரத்யேக சமூக வலைப்பின்னல் தளங்களும் இருக்கின்றன. பொறியியல் சார்ந்த வலைப்பின்னல் தளங்கள் நட்பு வளர்ப்பதைவிட துறை சார்ந்த தகவல் பகிர்வையே அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. இவை பொறியாளர்களுக்கான இணைய சமூகமாகவும் விளங்குகின்றன.

முன்னோடி தளம்

பொறியியல் வலைப்பின்னல் தளங்களில் முதலில் தொடங்கப்பட்ட தளங்களில் ஒன்றாக ’எலிமென்ட்14’ (https://community.element14.com/ ) விளங்குகிறது. வழக்கமான சமூக வலைப்பின்னல் சேவைகளில் பார்க்கக்கூடிய டைம்லைன் பதிவுகள், நண்பர்கள் எண்ணிக்கை போன்றவற்றை இந்தத் தளத்தில் பார்க்க முடியாது என்றாலும், பொறியாளர்களைக் கவரும் வகையில் இந்தத் தளம் அமைந்திருக்கிறது.

பொறியாளர்கள் மட்டும் அல்லாமல், உருவாக்குனர்கள், டெவலப்பர்கள் மற்றும் பொருட்களைத் தருவிப்பவர்கள் உள்ளிட்ட பிரிவினரை இணைக்கும் வகையில் இந்தத் தளம் செயல்படுகிறது. இதில் உறுப்பினர்களாக இணைந்தால், துறை சார்ந்த வல்லுநர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளலாம் என்பதோடு, பொறியியல் நுட்பம் சார்ந்த செய்திகள், கட்டுரைகளையும் அணுகலாம். அதோடு, பொறியியல் போட்டிகள் மற்றும் பயிலரங்குகளிலும் பங்கேற்கலாம்.

உறுப்பினர்கள் இந்தத் தளத்தைப் பலவிதமாக அணுகலாம். தொழில்நுட்பம் எனும் பகுதியின் கீழ், முப்பரிமான அச்சு உள்ளிட்ட நவீன நுட்பங்கள் சார்ந்த கட்டுரைகள், விவாதங்களை அணுகலாம் என்பதோடு, இது தொடர்பான பதிவுகளையும் எழுதி சமர்ப்பிக்கலாம். முக்கியக் கேள்வி இருந்தால் அது தொடர்பான விவாதத்தையும் தொடங்கலாம். ஏற்கெனவே நடைபெற்ற விவாதச் சரடுகளையும் பார்க்கலாம். நிகழ்ச்சிகள், ஆவணங்கள், கருத்துக் கணிப்புகள், கோப்புகள் என பல துணைத் தலைப்புகளில் தொடர்புடைய தகவல்களை அணுகலாம்.

சிறப்பம்சங்கள்

இதே போல ‘கற்றல்’ பிரிவின் கீழ், பயிலரங்குகள், மின் புத்தகங்கள், பயிற்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை அணுகலாம். தீவிர பொறியாளர்கள் என்றால், ’போட்டிகள் மற்றும் திட்டங்கள்’ பகுதி இன்னும் ஈர்ப்புடையதாக இருக்கும். இந்தப் பகுதியில் வடிவமைப்புப் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகளுக்கான நீளமான அட்டவணையும் இருக்கிறது. தொடர்புடைய விவாதங்களும் நடைபெறுவதைப் பார்க்கலாம். மாதாந்திர போட்டிகளும் நடைபெறுகின்றன.

இவை தவிர, பொருட்களுக்கான தனிப் பிரிவும் இருக்கிறது. முகப்புப் பக்கத்திலேயே உறுப்பினர்களின் முக்கிய விவாதங்களை அணுக வழி இருப்பதோடு, உறுப்பினர்கள் கேள்விகளைக் கேட்பதற்கான வசதியும் இருக்கிறது. கேள்வி கேட்கும் முன்னணி உறுப்பினர்கள் பட்டியலையும் பார்க்கலாம். இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கான தனிப் பிரிவும் இருக்கின்றன. பொறியியல் சார்ந்த நிகழ்வுகளையும் தெரிந்துகொள்ளலாம்.

லேப்ரூட்ஸ்

பொறியாளர்களுக்கான சமூக வலைப்பின்னல் தளங்கள் வரிசையில் அடுத்ததாகக் கவர்ந்திழுப்பது லேப்ரூட்ஸ் (https://www.labroots.com/). முழுக்க முழுக்க பொறியியல் சார்ந்த நிகழ்வுகள், செய்திகள், போட்டிகள் என பொறியியல்மயமாகக் காட்சியளிக்கும் தளமாக இது விளங்குகிறது. துறை சார்ந்த அண்மைச் செய்திகளைத் தெரிந்துகொள்ள வழி செய்வது இந்த தளத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக அமைகிறது. செய்திகள் தொடர்பான விவாதத்திலும் பங்கேற்கலாம். செய்திகளை மற்றவர்களுடன் பகிரவும் செய்யலாம்.

பல்வேறு தலைப்புகளில் தொழில்நுட்ப செய்திகளை அணுக வழி இருப்பதோடு, வீடியோக்கள் மற்றும் இன்போகிராபிக் எனும் தகவல் வரைபடங்களை அணுகுவதற்கான வாய்ப்பும் உள்ளன.

செய்திகள் தவிர, பொறியியல் சார்ந்த மெய்நிகர் நிகவுகள் மற்றும் இணைய பயிலரங்குகளுக்கான தனிப்பகுதிகளும் இடம்பெற்றுள்ளன. பொறியியல் நிறுவனங்களை அறிந்துகொள்ளலாம் என்பதோடு, விவாதங்களிலும் பங்கேற்கலாம். பொறியாளர்களுக்கான ஊக்கத்தொகை திட்டங்களை அறியவும் வாய்ப்புள்ளது.

பிற தளங்கள்

’சிஆர்4’ (https://cr4.globalspec.com/ ) இணையதளமும் இதே வகையில் அமைந்துள்ளது. இந்தத் தளம் முழுவதுமே, பொறியியல் துறை செய்திகள் மற்றும் விவாத சரடுகள் ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. ஆர்வம் உள்ள விவாதக் குழுவில் நுழைந்து தகவல் பரிமாற்றத்தைக் கவனிக்கலாம் என்பதோடு பயனாளிகளும் தங்கள் கருத்தைத் தெரிவிக்கலாம். இது தவிர, தனியே கேள்வி கேட்டு விவாதத்தைத் தொடங்குவதற்கான வசதியும் இருக்கிறது. பொறியியல் சார்ந்த பல்வேறு உட்பிரிவுளில் செய்திகளையும் விவாதங்களையும் அணுகலாம்.

மேலும் பயனர் குழு கையேடு, வலைப்பதிவு கையேடு, விவாதக் குழு கையேடு உள்ளிட்ட தனிப் பகுதிகளும் இருக்கின்றன. இந்தத் தளமும் பொறியியல்மயமாக இருப்பதை எளிதாக உணரலாம்.

இன்ஜினியர்போர்ட்ஸ் (https://engineerboards.com/) தளம், பொறியாளர்களுக்கான தகவல் பலகைகளின் சங்கமமாக இருக்கிறது. பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் விவாதக் குழுக்களில் இணையும் வசதியும் அளிக்கிறது. இன்ஜினியர்ஸ் எட்ஜ் (https://www.engineersedge.com/engineering-forum/forum.php) தளத்தையும் இந்த வரிசையில் சேர்த்துக்கொள்ளலாம். இன்ஜினியரிங் எக்ஸேஞ்ச் (https://engineeringexchange.com/ ) தளமும் இந்த வரிசையில் வருகிறது.

பொறியாளர்கள் போன்ற தொழில்முறைப் பிரிவைச் சேர்ந்தவர்கள், ஃபேஸ்புக்கைவிட, லிங்க்டுஇன் போன்ற தொழில்நுட்ப வலைப்பின்னல் சேவைகளைப் பயன்படுத்தலாம். எனினும், இதுபோன்ற துறை சார்ந்த வலைப்பின்னல் தளங்கள் இன்னும் பயனுள்ளதாக அமைகின்றன என்பதே நிதர்சனம்!

(தொடரும்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in