சமூக ஊடக வானவில்- 58: பெண்களுக்கான வலைப்பின்னல்

சமூக ஊடக வானவில்- 58: பெண்களுக்கான வலைப்பின்னல்

’எல்பா’ (https://elpha.com/) - பெண்களுக்கான இந்தப் பிரத்யேகத் தளம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பெண்களுக்காக பெண்களால் உருவாக்கப்பட்ட வலைப்பின்னல் தளம் என்று இதை வர்ணிப்பதே பொருத்தமாக இருக்கும். இந்த நம்பிக்கையில்தான், காட்ரன் கோவன்சேஜ் எல்பா சேவையை உருவாக்கினார்.

ஒரு பொறியாளர் என்ற முறையில், பெண்களுக்கான ஒரு சேவை, முற்றிலும் பெண்களால் உருவாக்கப்பட வேண்டும் என்று விரும்பியதாக அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

“மற்ற சேவைகள் எல்லாம் ஆண்களால் உருவாக்கப்பட்ட நம் கலாச்சாரத்தில் இரண்டற கலந்திருக்கின்றன. ஆனால், ஆரம்பம் முதல் பெண்களால் தீர்மானிக்கப்படும் கலாச்சாரத்தையே விரும்புகிறேன்” என்று கூறியிருப்பவர், இத்தகைய இடம் இணையத்தில் இல்லாததால் எல்பாவை உருவாக்கியதாகப் பதிவுசெய்திருக்கிறார்.

சிறப்பம்சங்கள்

எல்பா சேவையைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், லிங்க்டுஇன் தளத்துடன் அதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பரவலாக அறியப்பட்டது போல, லிங்க்டுஇன் தொழில்முறையிலான சமூக வலைப்பின்னல் சேவை. தொழில்முறைப் பிரமுகர்கள் துறை சார்ந்த உறவுகளையும், தொடர்புகளையும் ஏற்படுத்திக்கொள்வதற்கான மேடையாக லிங்க்டுஇன் திகழ்கிறது.

சமூக வலைப்பின்னல் உலகில் பேஸ்புக்குக்கும் மூத்த சேவையாகக் கருதப்படும், லிங்க்டுஇன் தளம் வேலைவாய்ப்பு நோக்கிலான வலைப்பின்னல் என்றும் கருதப்படுகிறது. லிங்க்டுஇன் சேவை இருபாலருக்குமானது என்றாலும், பெண்களுக்கு என்று பிரத்யேகமான தொழில்முறை வலைப்பின்னல் தேவை என்பதை உணர்ந்த கோவன்சேஜ், மேலும் இரண்டு பெண்களுடன் இணைந்து எல்பா வலைப்பின்னலை பெண்களுக்கான சமூக மேடையாக உருவாக்கினார்.

பெண்களின் நிலை

எல்பா நிறுவனர்கள் மூவருமே தொழில்நுட்ப உலகில் முக்கியப் பதவிகளில் இருந்தவர்கள். கோவன்சேஜ், ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான பள்ளி என வர்ணிக்கப்படும் ஒய் காம்பினேட்டர் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டிருந்தார். தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டிருந்தாலும், இதே போன்ற ஆர்வம் கொண்ட பெண்களுடன் பேசுவது எளிதாக இருக்கவில்லை. மேலும், ஆண் அதிகாரிகளைவிட பெண் அதிகாரிகளுக்குக் குறைவான சம்பளம் அளிக்கப்பட்டது, பதவி உயர்வு வழி பற்றி விவாதிக்க வழி இல்லாதது போன்ற குறைகளையும் உணர்ந்தார். இன்னொரு இணை நிறுவனரான காவுன் லுவோ, தனது நிறுவனத்தில் தலைமைப் பதவியில் தன்னைத்தவிர ஒரே ஒரு பெண் மட்டுமே இருந்ததாக உணர்ந்துள்ளார்.

இந்த அனுபவத்தின் விளைவாகவே பெண்கள் தொழில்முறையிலான உரையாடலில் ஈடுபடுவதற்கான மேடை தேவை என உணர்ந்தனர். முதல் கட்டமாக லீப் எனும் பெயரில் பெண்களுக்கான இணைய வெளியை அமைத்தனர். பின்னர் இதுவே எல்பா வலைப்பின்னலாக மாறியது.

விவாதத்துக்கான தளம்

எல்பா தொழில்முறை நோக்கிலான வலைப்பின்னலாக மட்டும் அல்லாமல், தொழில்நுட்ப ஆர்வம் கொண்ட பெண்களுக்கான சமூக வெளியாகவும் இருக்கிறது. முக்கியமாக பெண்கள் விவாதிப்பதற்கான பாதுகாப்பான இடமாகவும் இருக்கிறது. உறுப்பினர்களுக்கு என்று தனி நெறிமுறைகள் இருப்பதால், துவேஷ நோக்கிலான கருத்துக்கள் இந்தத் தளத்தில் தலைதூக்காமல் இருக்கின்றன.

இந்தத் தளத்தின் இடைமுகமும் மாறுபட்டதாகவும், எளிமையாகவும் இருக்கிறது. ஃபேஸ்புக், லிங்க்டுஇன் போன்ற தளங்கள் போலவே டைம்லைன் வசதி இருந்தாலும், எல்பாவில் எல்லாமே வித்தியாசமாக அமைந்துள்ளன.

உறுப்பினர்கள், லிங்க்டுஇன் அல்லது மின்னஞ்சல் கணக்கு மூலம் இதில் இணையலாம். புதிய உறுப்பினர்கள் எனில், 24 மணி நேர சரி பார்த்தலுக்கு பிறகே முழு அம்சங்களையும் பயன்படுத்த முடிகிறது. புதிய உறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்துகொண்டு, முதல் பதிவை எழுதி இந்தச் சமூகத்தில் இணையலாம். உறுப்பினர்கள் தங்களுக்கான அறிமுகப் பக்கத்தையும் அமைத்துக்கொள்ளலாம்.

பெண்களுக்கான தனித்துவ மையம்

தளத்தின் மைய பகுதியில் தோன்றும் டைம்லைனில் உறுப்பினர்கள் பதிவுகளைக் காணலாம். பதிவுகளை வாசிப்பதோடு, விருப்பம் தெரிவிக்கவும், கருத்து தெரிவிக்கவும் வழி இருக்கிறது. இது தவிர, எல்பாவில் உள்ள பல்வேறு சமூகங்களில் நுழையலாம். பணி வளர்ச்சி, ஊதியம், குடும்பம்- உறவுகள், செய்தி, வேலைவாய்ப்பு, வாழ்வியல் என பல்வேறு சமூகங்கள் இருக்கின்றன. இவற்றில் இணைந்து கருத்துக்களைப் பகிரலாம். பெண்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளவும், மனதில் உள்ள சந்தேகங்களுக்குப் பதில் பெறவும் இந்த விவாதங்கள் வழி செய்கின்றன.

இவை தவிர ஆலோசனை சமூகத்தில் நேரடியாகக் கேள்வி கேட்டு பதில் பெறலாம். கேள்விக்கான தனிப்பகுதியும் இருக்கிறது. அறிவிப்புப் பகுதியிலும் பயனுள்ள தகவல்கள் பகிரப்படுகின்றன. குழந்தை வளர்ப்பு, பணம், அலுவலக நேரம், செயல்திறன் என மேலும் பல சமூகங்களும் செயல்படுகின்றன. தொழில்முறை நோக்கில் பெண்களுக்கான வளங்களும் பகிரப்படுகின்றன.

உறுப்பினர்கள் தங்கள் மனக்குறைகளைப் பகிர்ந்துகொள்வதற்கான சமூகமும் இருக்கிறது. உறுப்பினர்களுக்கான பரிசுக் கோப்பைகளும் வழங்கப்படுகின்றன. நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளைக் கண்டறிவதற்கான தனிப்பகுதியும் இருக்கிறது. மின்னஞ்சல் மூலம் விரும்பிய பதிவுகளைப் பெறும் வசதியும் இருக்கிறது.

தொழில்முறை ஆர்வம் கொண்ட பெண்கள்... குறிப்பாக தொழில்நுட்ப ஈடுபாடு கொண்டவர்களுக்கு, இது தங்களுக்கான இடம் எனும் உணர்வை அளிக்கும் வகையில் எல்பா அமைந்துள்ளது.

(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in